புதன், 25 மார்ச், 2015

ட்ராபிக் ராமசாமியை கொல்வதற்கு சதி நடந்திருக்கிறது! வீரபாண்டியாரை போலீஸ் வானில் அலைகழித்து....போல அதேபாணியில்?

நான்கரை மணிநேர அலைக்கழிப்பு காரணமாக சிறைக்குப் போன சில நிமிடங்களுக்குள்ளேயே மயக்கமடைந்துவிட்டார். மருத்துவமனைக்கு கொண்டு போனபோதும் அங்கும் அவரை நிம்மதியாக இருக்கவிடவில்லை. ஆனாலும் அசராத டிராபிக் ராமசாமி, என்னை கைது செஞ்சதுக்காக நான் கவலைப்படலை. வயசான காலத்துல கடவுளா பார்த்து எனக்கு கொடுத்த ரெஸ்ட்னு நினைச்சுக்குறேன். என்னை என்ன வேணும்னாலும் செய்யட்டும்... இந்த ராமசாமி ஓய மாட்டான் என்று அந்த நிலையிலும் கூறினார். அரசியல் எதிரிகளை கைது செய்வது, அவர்களை நாள் கணக்கில் போலீஸ் வேனில் சுற்ற விட்டு, உடல் நலக் குறைவை ஏற்படுத்தி, கதையை முடிப்பது என்பது அப்பட்டமான மனித உரிமை மீறல். இதை இந்த அரசு ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தி வருகிறது.
நம்ம தமிழ்நாட்டு போலீஸ் இதுவரை இத்தனை வேகமாக வேலை பார்த்து யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். அதிகாலையில கைது செஞ்சு, ஆறரை மணிக்கு நீதிபதி வீட்டுல் ஆஜர்படுத்தி, அடுத்த ஒரு மணிநேரத்தில் புழல் ஜெயில்ல அடைக்கிற அளவுக்கு அவர் செய்த தவறு என்ன என்பதுதான் அனைவரின் கேள்வியாக உள்ளது.

இந்த கைதுக்கு நீதிபதியின் கடுமையான கண்டனத்திற்கு ஆளாகினர் காவல்துறையினர். அதோடு மட்டுமல்லாது காவல்துறையினரை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்துவிட்டனர். போதாகுறைக்கு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், டிராபிக் ராமசாமியை கைது செய்ய இன்ஸ்பெக்டருக்கு மலர் கொத்து கொடுத்து ''வாழ்த்து'' தெரிவித்து தங்களின் பங்குக்கு வேறு விதமாக கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
கடந்த 8-ஆம் தேதி பட்டாபிராம் அருகே, விளம்பரப் பலகை ஒன்றை அகற்ற முயன்ற ராஜேஷ் என்கிற இளம் காவலர், மின்சாரம் தாக்கிப் பலியானார். அந்தச் சம்பவம் தொடர்பாக டிராபிக் ராமசாமி புகார்களை அனுப்பியுள்ளார். அந்தப் புகாரில் 'சென்னை மாநகர கமிஷனர் ஜார்ஜ் அவர்களும் ராஜேஷின் மரணத்துக்குப் பொறுப்பேற்று பதில் சொல்ல வேண்டும்' எனக் குறிப்பிட்டு, தபால் மூலமும் இமெயில் மூலமும் தமிழக அரசு மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியிருக்கிறாராம். அந்தப் புகார் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என இருந்த போதுதான் ஒரு போலி குற்றச்சாட்டை அவர் மீது சுமத்தி, நள்ளிரவில் கைது செய்துள்ளது போலீஸ். இதனால் கமிஷ்னர் ஜார்ஜ் தான் தனது கைதுக்கு காரணம் என்கிறார் ராமசாமி.
எப்படியாவது அந்த ஆபரேசனை வெற்றிகரமா முடிச்சிட்டா நல்ல பேர் வாங்கிடலாம். இன்னைக்கு எப்படியும் பொறி வச்சு பிடிச்சிடணும். அப்படியே அரெஸ்ட் பண்ணி சுத்தல்ல விடணும்... இது எந்த படத்தின் வசனம் என்று யோசிக்கிறீத்களா? கடந்த 11ஆம் தேதியன்று இரவு வேப்பேரி காவல்நிலையத்தில் பேசப்பட்ட வசனங்கள்தான் இவை. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வைத்த தீவிரவாதியை கைது செய்ய போடப்பட்ட திட்டம் அல்ல இது. நகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றிய சமுகப் போராளி டிராபிக் ராமசாமியை அரெஸ்ட் செய்ய போடப்பட்ட திட்டம்தான் இது. சட்ட விரோதமாகவும், விதிமுறைகளுக்கு எதிராகவும் டிஜிட்டல் பேனர்கள், கட்அவுட்டுகளை வைக்க கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை. இதையடுத்து, அரசு மீதும் மாநகராட்சி மீதும் டிராபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த 2 வாரமாக சட்டவிரோதமாக சாலைகளில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்களையும், கட்டவுட்டுகளையும் தானே நேரில் சென்று அகற்றும் வேலையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி இறங்கினார். ஜெயலலிதா வீட்டுக்கு செல்லும் வழியிலும், அண்ணா மேம்பாலம் அருகிலும் உள்ள பேனர்களை அகற்றினார். சமீபத்தில், புரசைவாக்கம் டாக்டர் அழகப்பா சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்படும் பேனர்கள் குறித்து, தனியார் தொலைக்காட்சிக்கு டிராபிக் ராமசாமி நடுரோட்டில் பேட்டி அளித்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த வேப்பேரியைச் சேர்ந்த தொழிலதிபர் வீரமணி என்பவருக்கும், டிராஃபிக் ராமசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதைத் தொடர்ந்து, டிராபிக் ராமசாமி தனது காரை உடைத்து தகராறில் ஈடுபட்டதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வேப்பேரி போலீசில் வீரமணி புகார் கொடுத்தார். (ஆனால், வீரமணி என்பவர் அந்த இடத்திலேயே இல்லை என்று ராமசாமி கூறியுள்ளார்). அதாவது ஆஜானுபாகுவாக உள்ள வீரமணியை அவரது உடல் சைசில் பாதி அளவு கூட இல்லாத, வயதான, சரியான பார்வை கூட இல்லாத பெரியவரான டிராபிக் ராமசாமி அடித்துக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டினாராம். இதை போலீசாரும் ஏற்று வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையொட்டி டிராபிக் ராமசாமி மீது கொலை மிரட்டல், அவதூறாக பேசுதல், காரை உடைத்தல் உள்ளிட்ட 4 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கடந்த 12ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் அவரை கைது செய்தனர். வேப்பேரி காவல்நிலையத்தின் ‘வீரமிகு' இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில்தான் இந்த ‘ஆபரேசன்' வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. 82 வயது முதியவர்...அதுவும் சிறுநீராக கோளாறினால் பாதிக்கப்பட்ட, ஜீரணசக்தி பாதிக்கப்பட்டுள்ள ஒருவரை அசந்து தூங்கும் அதிகாலை 3.30 மணிக்கு சற்றும் ஈவு இறக்கம் இன்றி அள்ளிப் போட்டுக்கொண்டு வந்திருக்கிறது சென்னை மாநாகர காவல்துறை. டிராபிக் ராமசாமிக்கு கண் பார்வை சற்று குறைவு. அதனால் அவருடனே அவரது கண்ணாடியும் இருக்கும். அவர் தங்கியிருந்த அறையின் கதவை அதிகாலையில் தட்டி, அவரது தூக்கத்தை வலுக்கட்டாயமாக கலைத்து, நடப்பது என்ன என்பதை உணரும் முன்பே அவரை இழுத்துக் கொண்டு போனது போலீஸ். அத்தியாவசியத் தேவையான சட்டையோ, கண்ணாடியோ கூட அணியவிடாமல் வேனில் ஏற்றியிருக்கிறது. ஏதாவது எதிர்த்துப் பேசினால் மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்து விடுவதாக மிரட்டிய காவல்துறையினர், அதை விபத்தாக முடித்துவிடுவோம் என்றும் கூறினர் என்கிறார் ராமசாமி. அதிகாலை 3.30 மணிக்கு கைது செய்த ஒருவரை அங்கே இங்கே என சுமார் 4.30 மணிநேரம் அலைக்கழித்த பின்னரே நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். உணவாக நீராகாரம் மட்டும் குடிக்கும் அவருக்கு ஒரு வாய் தண்ணீர் கூட கொடுக்க மனமில்லை. காக்கிச்சட்டை அணிந்துவிட்டால் காவல்துறையினர் மனசாட்சியை கழற்றி வைத்து விடுவார்களா? அவர்களுக்கு பெற்றவர்கள் இருப்பார்கள் என்பதையோ? டிராபிக் ராமசாமியைப் போல உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒரு தந்தை அவர்களுக்கு இருந்தால் இப்படித்தான் நடந்து கொள்வார்களா? அட்டாக் பாண்டி உள்ளிட்ட எத்தனையோ குற்றவாளிகளை தப்பவிட்ட தமிழ்நாட்டு காவல்துறைக்கு ஒரு வயதான சமூகப் போராளியை நள்ளிரவு கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது என்பதே அனைவரின் முன் நிற்கும் கேள்வியாகும். அதுவும் நள்ளிரவு கைது என்பது அதிமுக ஆட்சியின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.

/tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக