வெள்ளி, 6 மார்ச், 2015

அசிங்கம் அம்பலமாகிவிடும் என பயந்த அரசு: டில்லி மருத்துவ மாணவியின் தந்தை பகிரங்க பேட்டி

புதுடில்லி: ''டாட்டர் ஆப் இந்தியா' என்ற அந்த டாக்குமென்டரி படத்தில், நிறைய வல்லுனர்கள், வழக்கறிஞர்கள், சமூக அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ''அந்த படம் வெளியானால், சமூகத்தின் உண்மை நிலை துளியும் மாறவில்லை என்பது அம்பலமாகும் என்பதால் தான், அதை அரசு தடை செய்து விட்டது,'' என, கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட, டில்லி மருத்துவ மாணவியின் தந்தை பத்ரிநாத் கூறினார்.டில்லியில், 2012 டிசம்பர், ஓடும் பஸ்சில், ஆறு பேர் கொண்ட கும்பலால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட, 23 வயது மருத்துவ மாணவியின் தந்தை, பத்ரிநாத் சிங்கின் பேட்டி: என் மகளை கெடுத்த கயவன் முகேஷ் சிங்கின் பேட்டி அடங்கிய, பி.பி.சி., டாக்குமென்டரி படத்தை, இந்திய அரசு தடை செய்திருக்கக் கூடாது. அந்த படத்தில், ஏராளமான அசிங்கங்கள் ஒளிந்திருப்பதாலும், என் மகளுக்கு நேர்ந்தது போன்ற கொடுமை, இன்னும் பல பெண்களுக்கும், சிறுமியருக்கும் நடைபெற்று வருகிறது என்ற அசிங்கத்தை, அந்த டாக்குமென்டரி வெளிக்காட்டி விடும் என்பதால் தான், அதை அரசு தடை செய்துள்ளதாகக் கருதுகிறேன். தூக்கு தண்டனை குற்றவாளி முகேஷ் சிங் அளித்த பேட்டி என, பத்திரிகைகளில் வெளியாகியுள்ள செய்தியில், ஒன்று தெளிவாகத் தெரிகிறது; பெண் குழந்தைகள் வெளியே நடமாடவே கூடாது என, அவன் கருதுகிறான். அவன் கூறுவது படி பார்த்தால், எந்தப் பெண்ணை, யாராவது ஒரு கயவன் கெடுக்க முற்பட்டால், அதற்கு அந்தப் பெண் இடம் கொடுக்க வேண்டும்; அதற்கு இணங்க வேண்டும். எதிர்த்தால், கொடூரமாக சித்ரவதை செய்து கொன்று விடுவான். படிப்பறிவில்லாதவர்கள் என்று இல்லாமல், படித்தவர்கள், வசதியான குடும்பங்கள் போன்றவற்றிலும் இப்படிபட்ட ஆண்கள் தான் அதிகமாக உள்ளனர். அவர்களின் மனப்போக்கு, என் பெண்ணுக்கு நேர்ந்த கதிக்குப் பின்னரும் மாறவில்லை. நான் சொல்ல விரும்பு வது என்னவென்றால், ஆண் குழந்தைகளை வைத்துள்ளவர்கள், தங்கள் ஆண் குழந்தைகளுக்கு எது சரி, எது தவறு என்பதை சரிவர சொல்லிக் கொடுங்கள். இறுதியாக, நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். என் மகளுக்கு நேர்ந்த கொடூரம் மூலம், இந்த சமூகத்தின் யதார்த்தம் வெளிப்பட்டுள்ளது. அவளை நாங்கள் நல்ல பெண்ணாகத் தான் வளர்த் தோம். அவள் இப்போது, இந்த நாட்டின் உண்மையான முகமாக உள்ளாள். இவ்வாறு, அவர் பேட்டி அளித்துள்ளார்.
பி.பி.சி.,க்கு 'நோட்டீஸ்': 'டில்லி மருத்துவ மாணவியை கற்பழித்ததால், தூக்கு தண்டனை பெற்றுள்ள முகேஷ் சிங்கின் பேட்டியை, இந்தியாவில் ஒளிபரப்ப மாட்டோம்' என, மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்துள்ள, பிரிட்டனின் பி.பி.சி., செய்தி நிறுவனம், அந்த ஆவணப் படத்தை, பிற நாடுகளில் ஒளிபரப்பி விட்டது. 'இந்தியா மட்டுமின்றி, உலகின் பிற நாடுகளிலும் அந்த ஆவணப் படத்தை ஒளிபரப்ப வேண்டாம் என, பி.பி.சி., நிறுவனத்திடம் கேட்டுக் கொள்வோம்' என, நேற்று முன்தினம், பார்லிமென்டில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருந்தார். இதுகுறித்து, உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:


மத்திய அரசு விதித்த தடையை மீறி, பிரிட்டனின், பி.பி.சி., செய்தி நிறுவனம் ஆவணப் படத்தை ஒளிபரப்பியுள்ளது. இதன்மூலம், 'இந்த ஆவணப் படத்தை வர்த்தக நோக்கத்துக்காக வெளியிடுவது இல்லை' என்ற ஒப்பந்தத்தை அந்த நிறுவனம் மீறியுள்ளது. 'ஒப்பந்தத்தை மீறியதற்காக, உங்கள் மீது ஏன் சட்ட நடவடிக்கை எடுக்க கூடாது' என, விளக்கம் கேட்டு, அந்த நிறுவனத்துக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளோம். அவர்கள் அளிக்கும் பதிலுக்கு பின், அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 'யூ டியூப்'புக்கு கிடுக்கிப்பிடி: பி.பி.சி., நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படம், வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும், 'யூ டியூப்' இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, சர்ச்சைக்குரிய அந்த ஆவணப்படத்தை அகற்றும்படி, 'யூ டியூப்' நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் இந்த ஆவணப்படத்தை உடனடியாக நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு அறிவுறுத்தியுள்ளார். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக