ஞாயிறு, 22 மார்ச், 2015

ரேணுகா சௌத்ரி எம்எல்ஏ சீட்டுக்கு ஒரு கோடி லஞ்சம் வாங்கினாரா?

புதுடெல்லி: எம்எல்ஏ சீட் ஒதுக்கித் தருவதாக கூறி, ரூ.1.10 கோடி பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக, காங்கிரஸ் எம்பி ரேணுகா சவுத்ரி மீது புகார் எழுந்துள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்பியாக இருப்பவர் ரேணுகா சவுத்ரி. இவர் காங்கிரஸ் ஆட்சியின்போது, மத்திய இணை அமைச்சராகவும் இருந்துள்ளார். ஒருங்கிணைந்த ஆந்திரா இருந்தபோது, மாநிலத்தின் செல்வாக்கு மிக்க காங்கிரஸ் தலைவராகவும் ரேணுகா இருந்தார். இந்நிலையில், தனது கணவருக்கு எம்எல்ஏ சீட் வாங்கி தருவதாகக் கூறி, ஒரு கோடி ரூபாயை பெற்றுக் கொண்டு மோசடி செய்து விட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ராம்ஜி நாயக் என்பவரது மனைவி கலாவதி, ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.



அந்த மனுவில், ஒருங்கிணைந்த ஆந்திராவில் கடந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. அதில், கம்மம் மாவட்டத்தில் உள்ள வைரா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட சீட் வாங்கித் தருகிறேன். அதற்காக ரூ.1.10 கோடியை எனக்கு தரவேண்டும் என்று, என் கணவர் ராம்ஜி நாயக்கிடம் ரேணுகா சவுத்ரி உறுதி அளித்தார். அந்த தொகை, 2013, மே 30ம் தேதி ரேணுகாவிடம் அளிக்கப்பட்டது. ஆனால் சொன்னபடி, என் கணவருக்கு அவர் எம்எல்ஏ சீட் வாங்கி தரவில்லை. பணத்தை மோசடி செய்து விட்டார். அத்துடன் கடன் சுமை தாங்க முடியாமல் என் கணவர் மனமுடைந்து இறந்து போனார். எனவே, சம்பந்தப்பட்ட ரேணுகா சவுத்ரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என் கணவர் கொடுத்த பணத்தை திருப்பி வாங்கித் தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


இந்த புகார் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீசுக்கு உத்தரவிட்டது. அதன்பேரில், எம்பி ரேணுகா சவுத்ரி மீது மோசடி (420), எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ், தெலங்கானா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சட்டப்படி வழக்கை சந்திப்பேன் இது குறித்து ரேணுகா சவுத்ரி அளித்த பேட்டியில், எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உண்மையானது அல்ல. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக உள்ளது. இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுத்து வருகிறது. என் மீதான புகார்களை நான் சட்டப்படி எதிர்கொள்வேன்Ó என்று கூறினார். எம்எல்ஏ சீட் வாங்கித் தருவதாக, ரேணுகா சவுத்ரி உறுதி அளித்ததாகக் கூறப்படும் வைரா சட்டசபை தொகுதியில், முதல்வர் சந்திரசேகர ராவின் டிஆர்எஸ் கட்சி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக