சனி, 14 மார்ச், 2015

இந்தியாவை நம்புங்கள்: தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களிடம் மோடி உறுதி

இலங்கையில் சுற்றுப் பயணம் செய்யும் பிரதமர் மோடி நேற்று இரவு கொழும்பில் தங்கி இருந்தார். முன்னதாக மாலை 6 மணிக்கு மோடி தங்கி இருந்த தாஜ் ஓட்டலுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் சென்றனர். அங்கு பிரதமர் மோடியை சந்தித்து இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து எடுத்துக் கூறினார்கள்.
இலங்கையில் நிலவும் இனப் பிரச்சினையால் வடக்கு கிழக்கு இணைப்பு என்பது ஒரு முக்கிய விஷயம். இது தான் தமிழர்களின் தாயகம், வடக்கு – கிழக்கு இணைப்பு இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை ராஜபக்சே தலைமையிலான அரசு இல்லாமல் செய்துவிட்டது.
வட, கிழக்கு இணைப்பு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது. எனினும் பின்னர் மஹிந்த ராஜபக்சே தலைமையில் அந்த ஒப்பந்தம் இல்லாமல் செய்யப்பட்டது. தவிர வட, கிழக்கு என்பது தமிழ் மக்களுடைய வரலாற்று பூர்வமான தாயகப் பிரதேசம்.
ஆகவே இனப்பிரச்சினை தீர்வுக்கு வட, கிழக்கு இணைப்பு என்பது முக்கியம்.
சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் முழுமையாக குடியேற்றப்பட வேண்டும். ஆனால் சொற்ப அளவிலேயே மக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர். இன்றுதான் (வலளாயில்) அதுவும் தொடங்கப்பட்டுள்ளது. மீதம் எப்போது நடக்கும் என்பது தெரியாது என்று பிரதமரிடம் எடுத்துக் கூறினார்கள்.
அதற்கு பதில் அளித்த மோடி கூறியதாவது:–
“இன்று இலங்கை ஜனாதிபதியை சந்தித்தேன். அவர் காணி மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சாதகமான கருத்துக்களை கொண்டிருக்கிறார். அவர் எனக்கு உறுதியளித்ததாக நான் சொல்ல மாட்டேன் ஆனால் இவை தொடர்பாக ஜனாதிபதி ஒரு சாதகமான மனநிலையை கொண்டிருக்கிறார் என நான் உணர்கிறேன்.
“இது ஒரு புதிய அரசாங்கம். ஆகவே நீங்கள் அவர்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பொறுமை தேவை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்பு இருந்த அரசாங்கங்களோடு அணுகியதைப் போல இந்த அரசாங்கத்தோடு அணுகக்கூடாது.
ஏனெனில் இது ஒரு புதிய அரசாங்கம் பல மாற்றமான கருத்துக்களை இந்த அரசாங்கம் கொண்டிருக்கிறது. ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் இவை தொடர்பாக விரிவாக ஆலோசித்து புதிய தந்தி ரோபாயங்களை வகுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறான தந்தி ரோபாயங்களின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச வேண்டும். இனப்பிரச்சினைத் தீர்வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இந்தியா எப்பொழுதும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
மேலும் ‘’இந்தியா மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கு தானே’’ என்று கேட்டார். இதற்குக் கூட்டமைப்பினர் “ஆம் என பதில் அளித்தனர்.
இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிறேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன் ஆகியோரும் இந்தியத் தரப்பில் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஜெய்சங்கர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். maalaimalaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக