வெள்ளி, 20 மார்ச், 2015

சொல்வதெல்லாம் உண்மை’ இயக்குநர் சரவணன் : மக்களை எளிதில் ஏமாற்ற முடியாத

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ 1000 - வது அத்தியாயத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.
‘‘தமிழைப்போல தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழி சேனல்களும் இந்த நிகழ்ச்சியை நடத்த ஆர்வம் காட்டுகின்றன. உண்மையை சரியான கோணத்தில் ஆராய்ந்து அடையாளப்படுத்துவதில் எங்களுக்கு கிடைத்த தனித்துவம்தான் இதற்கு காரணம்!’’ என்கிறார், கடந்த நான்கு ஆண்டுகளாக இந்நிகழ்ச்சியை இயக்கி வரும் சரவணன். அவரிடம் பேசியதிலிருந்து…
சின்னத்திரையில் இதற்கு முன் ஒளிபரப்பான ‘கதையல்ல நிஜம்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’ ஆகியவை இதே பாணி நிகழ்ச்சிகளாக இருந்திருக்கிறது. அந்த வரிசையில் ‘சொல்வதெல்லாம் உண்மை’நிகழ்ச்சி எதை வித்தியாசமாக எடுத்துச் சொல்கிறது?

எங்கள் நிகழ்ச்சியில் ஒரு குடும்பப் பிரச்சினையை எடுத்துக்கொள்ளும்போது அதன் ஆரம்ப கட்டத்தை மட்டுமே வைத்து தீர்வுகளை எடுப்பதில்லை. அவர்களின் வாழ்க்கை அமைப்பு, உணவு முறை, கலாச்சாரம், திருமண பழக்க வழக்கம், உள்ளூர் அரசியல் என்று பல தரப்பு விஷயங்களையும் அலசி ஆராய்ந்துதான் பேசத்தொடங்குகிறோம். இந்திய அளவில் முதன்முதலாக அதிக கொலை வழக்குகளை கையில் எடுத்துக்கொண்டு, அதை அடுத்தகட்ட விசாரணைக்கு எடுத்துச் சென்றிருக்கிறோம். இதெல்லாம் இந்த நிகழ்ச்சியின் தனித்த வெற்றிதானே.
பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினையை நான்கு சுவருக்குள் வைத்து விசாரிக்காமல் வெளிச்சம் போட்டு காட்டுவதாக இந்த நிகழ்ச்சி பற்றி பல எதிர் வாதங்களும் முன் வைக்கப்படுகிறதே?
அப்படியெல்லாம் இல்லை. இன்றளவும் பல தற்கொலை மீட்பு மையங்களை தொலைபேசியில் தொடர்பு கொள்பவர்கள், ‘என் பிரச்சினையை காது கொடுத்து கேட்க ஆள் இல்லை’ என்றுதான் பேசுகிறார்கள். சமீபத்தில் என்னிடம் தொலைபேசியில் பேசிய ஒரு பெண், ‘எனக்கு படிக்க ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுக்க யாருமில்லை. நான் எதற்காக வாழ வேண்டும்’ என்றார். நாங்கள் அவர் படிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தோம்.
இங்கே 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும்போது நிறைய கருத்துக் கணிப்புகள் வரும். ஆனால், மக்கள் அதன் முடிவுகளைப் பொருட்படுத்தாமல் தங்கள் மனதில் நினைத்த ஒருவரை தேர்ந்தெடுப்பார்கள்.
அதேபோல் தங்களுக்கு ஒரு தொடர் சரியாகப் பட்டால் மட்டுமே ஆதரவு கொடுப்பார்கள். அவர்கள் ஆதரவு கொடுத்ததால்தான் 4 ஆண்டுகளைக் கடந்து இந்த தொடர் வெற்றிகரமாக போய்க்கொண்டு இருக்கிறது. மக்களை அவ்வளவு எளிதில் ஏமாற்றமுடியாது.
இந்த நிகழ்ச்சிக்கு வந்துபோகும் குற்றவாளி களும், பாதிக்கப்பட்டவர்களும் அடைந்த தீர்வுகள் என்ன?
பிரிவுதான் சரியான தீர்வு என்று வந்த பல தம்பதிகள் எங்கள் தொடரால் இன்று இணைந்து வாழ்கிறார்கள். பல கொலை வழக்குகளுக்கு அரசு சாட்சியாக காவல் துறை எங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
இதனால் பல அச்சுறுத்தல்களும் வருமே?
கண்டிப்பாக வரும். அரசியல், புலனாய்வு, தீவிர இலக்கியம் ஆகிய பிரிவுகளில் 7 ஆண்டுகளுக்கும் மேல் பத்திரிகையாளராக பணியாற்றிய பிறகே, இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். அதனால் எல்லா விதமான சவால்களையும் எளிதாகவே எதிர்கொள்கிற பக்குவம் இயல்பாகவே உருவாகிவிட்டது.
நிகழ்ச்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோக என்ன செய்யப் போகிறீர்கள்?
இந்தியில் ஆமிர்கான் வழங்கிய ‘சத்தியமேவ ஜெயதே’ நிகழ்ச்சியைவிட அசத்தலாக இந்நிகழ்ச் சியை கொண்டுபோகும் திட்டம் இருக்கிறது. எப்போ தும் பரபரப்பாக இருக்கும் சென்னை அண்ணாசாலை யில், செல்பவர்களுக்கு சரியான கழிப்பறை வசதி இல்லை. இது ஒரு உதாரணம் மட்டுமே. இப்படி மக்கள் அன்றாடம் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டி யிருக்கிறது. இதற்கெல்லாம் தீர்வு கொண்டுவரும் வகையில்தான் எங்களது அடுத்த பயணம் இருக்கும்.
நிகழ்ச்சியில் லஷ்மி ராமகிருஷ்ணன் பேசும், ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ வசனம் பெரிய அளவில் காமெடி வார்த்தையாக பரவி விட்டதே?
வரவேற்பு பெற்ற பல நிகழ்ச்சிகளுக்கு இதுபோல் நடந்திருக்கிறது. எங்கள் நிகழ்ச்சி ஒன்றில் இளம்பெண் ஒருவர் பல முறை கருக்கலைப்பு செய்து வாழவே வழியில்லாமல் நின்ற ஒரு கட்டத்தில் சொல்லப்பட்ட வார்த்தைகள்தான் இது.
அது பயன்படுத்தப்பட்ட இடத்தையும், சூழலை யும் உணர்ந்தால் இதைக் கிண்டலடிப்பதைப் பற்றி யோசிப்பார்கள்.
உங்கள் அடுத்த இலக்கு சினிமாதானே?
எனக்கு சினிமா ஆசையெல்லாம் இல்லை. என்னை ஒரு பத்திரிகையாளன் என்று கூறிக்கொள்வதில்தான் எனக்கு அதிக மகிழ்ச்சி. சுதந்திரமாக எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதேபோல, தொலைக்காட்சியில் புதிய ரியாலிடி நிகழ்ச்சி ஒன்றுக்கான வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறேன். ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நிகழ்ச்சியாக அது இருக்கும்.  /tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக