வெள்ளி, 27 மார்ச், 2015

சந்திரிகா தலைமையில் இலங்கைத் தமிழர் மறுசீரமைப்புக் குழு

இலங்கைத் தமிழர் மறுசீரமைப்புக்காக அந்நாட்டின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தலைமையில் சிறப்பு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு அண்மையில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, "தமிழர்கள் நலனைப் பாதுகாப்பதையும், அவர்களுக்கான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும்' என்று வலியுறுத்தியிருந்தார். "தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் இலங்கை அரசின் 13-ஆவது சட்டத் திருத்தத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும்' என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், இலங்கைத் தமிழர்களை மீள்குடியேற்றம் செய்யவும், அவர்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை உடனடியாக மேற்கொள்வதற்காகவும், சிறப்பு நடவடிக்கைக் குழுவை அந்நாட்டின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள மைத்ரிபால சிறீசேனா தலைமையிலான அரசு அமைத்துள்ளது. அந்நாட்டின் முதல் பெண் அதிபரான சந்திரிகா குமாரதுங்க அந்தக் குழுவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: இலங்கையில், இனம் மற்றம் மதம் சார்ந்த நல்லிணக்கத்தை ஏற்படுத்துவற்கு புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் அரசு, முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதற்காக தமிழர் மறுசீரமைப்பு சிறப்பு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டு, அதன் தலைவராக சந்திரிகா குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதார நிலையை முறைப்படுத்துவது அரசின் அடுத்த இலக்காக உள்ளது.
அதிபருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகப்படியான அதிகாரத்தைக் குறைத்து இலங்கை நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை வலுப்படுத்தும் நோக்கிலான சட்டத் திருத்தமும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று விக்ரமசிங்க தெரிவித்தார். dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக