ஞாயிறு, 15 மார்ச், 2015

ராகுல் காந்தியின் அங்க அடையாளங்களை விசாரித்த போலீஸ்! அஞ்சாத வாசம் ஏன்?

ராகுல்காந்தியின் அங்க அடையாளங்கள் பற்றி டெல்லி போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் விசாரணை< காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கடந்த 10 நாட்களாக எங்கு இருக்கிறார் என்ற தகவல் உறுதியாக யாருக்கும் தெரியவில்லை. அவர் வெளிநாடு சென்றிருக்கலாம். விரைவில் அவர் நாடு திரும்புவார் என்று கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன்பு டெல்லி போலீசார் ராகுல்காந்தி வசிக்கும் துக்ளக் லேன் வீட்டுக்கு சென்றனர். அவர்கள் அங்கிருந்த சிறப்பு பாதுகாப்பு படையினர் மற்றும் கட்சி பிரமுகர்களிடம் ராகுல்காந்தி பற்றி அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு உள்ளனர். ராகுல் காந்தியின் மர்ம பயணம் நிச்சயமாக காங்கிரசுக்கு நல்ல பெயரை தரப்போவதில்லை. பொறுப்பற்ற தன்மையைதான்குறிக்கிறது.
ராகுல்காந்தி தலை முடியின் நிறம் என்ன? அவருடைய கண்களின் நிறம் என்ன? வயது, உயரம் உள்ளிட்ட அங்க அடையாளங்களையும், ராகுல் காந்தி எந்த மாதிரியான ஷூக்களை அணிகிறார்? அவருடைய தந்தையின் பெயர் என்ன?... ராகுல்காந்தி எங்கெல்லாம் சென்று உள்ளார் என்பது போன்ற பல்வேறு கேள்விகளையும் சரமாரியாக கேட்டு இருக்கிறார்கள்.

அப்போது அங்கிருந்தவர்கள் அந்த போலீஸ்காரர்களை படம் பிடித்து உள்ளனர். இதையடுத்து டெல்லி போலீசார் உடனடியாக அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்மாதிரி அல்ல

ராகுல்காந்தியின் வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியவர்கள் டெல்லி போலீஸ் துணை சப்-இன்ஸ்பெக்டர் சாம்ஷெர் சிங் என்பது தெரிய வந்துள்ளது. இவர்தான் ராகுல்காந்தி பற்றி பல்வேறு தேவையற்ற கேள்விகளை எழுப்பி இருக்கிறார். இது அரசியல் ரீதியாக உளவு பார்க்கும் செயலாகும். தேவையின்றி மற்றவர்களின் விஷயத்தில் தலையிடுவதும் ஆகும்.

(குஜராத்தில் இளம்பெண் ஒருவர் உளவு பார்க்கப்பட்ட சம்பவம் குறித்து மோடியை மறைமுகமாக தாக்கும் விதமாக) இதுபோல அரசியல்வாதிகளை மேற்பார்வையிடுவதும், அவர்களை உளவு பார்ப்பதும் குஜராத் மாநிலத்துக்கு வேண்டுமென்றால் முன்மாதிரியாக இருக்கலாம். நிச்சயமாக இந்தியாவுக்கு முன்மாதிரியாக இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

போலீஸ் பற்றி விசாரிப்பு

இந்த நிலையில் டெல்லி கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் ஜதின்நர்வால் தலைமையில் போலீசார் நேற்று ராகுல்காந்தியின் வீட்டுக்கு சென்றனர். அவர்கள் ராகுல்காந்தி பற்றி துருவித்துருவி கேள்விகள் கேட்ட போலீசார் மற்றும் அதன் தொடர்ச்சியான சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

ராகுல்காந்தி வீட்டில் போலீசார் விசாரணை நடத்தியது குறித்து, டெல்லி போலீஸ் கமிஷனர் பாஸ்சி நிருபர்களிடம் கூறியதாவது:-

பாதுகாப்பு தணிக்கை

இதுபோன்ற பாதுகாப்பு தணிக்கை சோதனைகள் பிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா, பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, கிஷன்பால் குஜார், நரேஷ் அகர்வால், வீரப்ப மொய்லி உள்ளிட்ட எம்.பி.க்கள் சந்திரசேகர ராவ் மற்றும் பல்வேறு முக்கிய தலைவர்களுக்கும் நடத்தப்பட்டு உள்ளது.

இதேபோல் பாதுகாப்பு தணிக்கை குறித்த தகவல்களை சேகரிக்க டெல்லி போலீசார் சென்றபோதுதான் ராகுல் காந்தியின் கண்கள் நிறம், தலை முடி நிறம் பற்றி கேட்கப்பட்டு உள்ளது. இதில் வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது.

உளவு பார்க்கும் வேலை அல்ல

இது வழக்கமான அரசியல் நடைமுறைதான். இது உளவு பார்க்கும் வேலையும் அல்ல. இதற்கும், மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

இதில் எந்த வித அரசியல் நெருக்கடியும் கிடையாது. முக்கியமான பிரமுகர்களுக்கு எப்போதும் போல் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு தொடர்பான தணிக்கைதான் ராகுல்காந்தி விஷயத்திலும் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.


உளவு பார்ப்பதாக காங்கிரஸ் கண்டனம்

ராகுல்காந்தியின் அங்க அடையாளங்கள் குறித்து டெல்லி போலீசார் கேள்வி எழுப்பியதற்கு காங்கிரசின் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில், “இது தனி மனிதர் ஒருவருடைய தனிப்பட்ட உரிமைகளில் தலையிடுவது ஆகும். உளவு பார்ப்பது போன்ற இந்த செயலை யார் செய்தது, யாருடைய கட்டளையின் பேரில் இதைச் செய்தனர் என்பது எங்களுக்குத் தெரியவேண்டும். ராகுல்காந்தி பாராளுமன்றத்தில் எம்.பி.யாக இருக்கிறார். அவரைப் பற்றிய விவரங்கள் வேண்டும் என்றால், பாராளுமன்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதில் அவரைப் பற்றி மறைப்பதற்கு எந்த ரகசியமும் இல்லை. தகுந்த காரணங்கள் இன்றி ஒரு பிரஜையின் தனிப்பட்ட உரிமைகளில் டெல்லி போலீசார் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள இயலாது” என்றார்.

பா.ஜனதாவின் செய்தி தொடர்பாளர் சுதான்சு திரிவேதி நிருபர்களிடம் கூறுகையில், “ராகுல் காந்தியின் பாதுகாப்பு தணிக்கை குறித்த ஆய்வுக்காகவே இந்த விசாரணை நடந்து இருக்கிறது. ஆனால் இதை காங்கிரஸ் ஒரு அரசியல் பெரிய பிரச்சினையாக ஆக்குகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் தேவையற்ற விஷயத்தை பெரிதுபடுத்துவதை வாடிக்கையாக கொண்டு உள்ளது” என்று குறிப்பிட்டார் dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக