திங்கள், 2 மார்ச், 2015

சுப்பர் சிங்கரும் உலகத்தமிழரின் அடாவடி அரசியலும்!

supersingerசுப்பர் சிங்கர் ஜுனியர் நாலாவதில் பங்குபற்றிய ஏனைய போட்டியாளர்களின் பாடும் திறமைகளின் அடிப்படையிலும் பார்க்கும்போது, ஜெசிக்கா முதல் பத்து இடங்களுக்கு வருவதற்கே தகுதியற்றவர் என்பது  இசைபற்றி அதிகம் ஆழ்ந்த ஞானம் இல்லாதவர்களுக்கு சாதாரணமானவர்களுக்கு கூட  புரியும்.

கடந்த சில வருடங்களாக விஜய் ரி.வியின் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியினை தவறாது பார்த்து வருகின்றேன். இந்த வருடத்து சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில்தான் (2014-2015) இசை தோற்றுப் போனதையிட்டு மிகவும் மனவருத்தம் அடைகின்றேன்.
மிகச்சிறந்த பாடகர்கள், இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதிலிருந்து, முதல் மூன்று இடங்களுக்கு வருவதுவரை, மிகவும் நேர்த்தியாக திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுள்ளது. யசிக்காவிற்கு ஒரு கோடிக்கு மேற்பட்ட வாக்குகள் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் ஜெசிக்காவிற்கு முதலிடம் வழங்காமல் விஜய் ரி.வி மோசடி செய்து விட்டதாகவும் இலங்கைத்தமிழர்சார் இணையங்கள் பிரச்சாரம் செய்து வருவது இன்னமும் வேதனையை அதிகரிக்க செய்துள்ளது.

யசிக்காவிற்கு ஒரு கோடிக்கு மேற்பட்ட வாக்குகளை அளிக்கப்பட்டது என்பது உண்மையானால், இந்த பெருந்தொகையான (உலகெங்கிலும் ஏறத்தாள ஏழு கோடி அல்லது ஆகக்கூடிப்போனால் எட்டுக் கோடி தமிழர்களே வாழ்கின்றார்கள் என்று பார்த்தால், ஒரு கோடி வாக்குகள் என்பது ஒருவருக்கு கிடைப்பது என்பது பெருந்தொகையே) வாக்குகளை வைத்து பார்க்கும் போது, யசிக்காவிற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு சிறந்த தமிழ் இசை அல்லது சிறந்த தமிழ்ப்பாடகர் முதலிடத்திற்கு வருவதைக்காட்டிலும், வேறு ஏதோ காரணங்களுக்காக ஜெசிக்கா என்பவர் முதலிடத்திற்கு வரவேண்டுமென்ற முனைப்பே அல்லது தீவிர எண்ணமே மேலோங்கி நின்றுள்ளது என்பது தெளிவாகத் தெரிகின்றது.
இறுதி நிகழ்ச்சியில் போட்டியாளருக்கு கிடைத்த வாக்குகளின் அடிப்படையில்தான் மாத்திரம்தான் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவார்கள் என்றால் உண்மையிலேயே ஜெசிக்காவிற்குதான் முதலிடம் அளித்திருக்க வேண்டும்.
ஆனால் அப்படி நிகழ்ந்திருந்தால், மிகவும் மோசமான முறையில் இசை படுதோல்வி அடைந்திருக்கும். போட்டியாளருக்கு கிடைத்த வாக்குகளின் அடிப்படையிலும் நடுவர்களின் தீர்ப்பின் அடிப்படையிலுமே ஜெசிக்கா இரண்டாமிடத்திற்கு தள்ளப்பட்டார். இதுகூட இசைக்கு கிடைத்த படுதோல்வியே.
இசைத்திறமையின் அடிப்படையிலும், சுப்பர் சிங்கர் ஜுனியர் நாலாவதில் பங்குபற்றிய ஏனைய போட்டியாளர்களின் பாடும் திறமைகளின் அடிப்படையிலும் பார்க்கும்போது, ஜெசிக்கா முதல் பத்து இடங்களுக்கு வருவதற்கே தகுதியற்றவர் என்பது என்னைப்போன்ற இசைபற்றி அதிகம் ஆழ்ந்த ஞானம் இல்லாதவர்களுக்கு சாதாரணமாக புரியும்.
இந்த புரிதல் எனக்கு எனது காதுகள் வழியாக மாத்திரம் வரவில்லை, பாடகர்களின் பாடல்கள் தொடர்பாக நடுவர்கள் தெரிவித்த விமர்சனங்கள், பாராட்டுதல்கள் என்பவற்றை கேட்டதாலும் வந்ததே. எனினும் மிகவும் திறமையுள்ளவர்களாக குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பிரவஸ்தி, அனல் ஆகாஸ், சிவானி போன்ற பாடகர்களை முதலிலே கழட்டி விட்டதற்கு நடுவர்களின் தீர்ப்பே காரணம்.
இவர்களுக்கு வைல் கார்ட்டில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டபோது மீண்டும் இவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள். அப்படியிருந்தும் வைல் கார்ட்டில் தெரிவு செய்யப்பட்டவர்களில் யசிக்கா முதலாவதாக இருந்தது மாத்திரமன்றி, இறுதிப்போட்டியில் இரண்டாமிடத்திற்கு முன்தள்ளிவிடப்பட்டார்.
ஜெசிக்கா இரண்டாமிடத்திற்கும், யசிக்காவை விடவும் திறமையுள்ள ஹரிப்பிரியா மூன்றாமிடத்திற்கும், அதேபோன்று ஸ்ரீஷா, பரத், அனுஷ்சியா போன்ற சிறந்த பாடகர்கள் கடைசி மூன்று இடங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டதின் காரணம் என்ன? முதலாவது காரணம், விஜய் ரி.வி.
வெளிநாடுகளிலுள்ள இலங்கைத்தமிழர்களின் சந்தையை இழக்க விரும்பவில்லை. இவர்கள் தங்களது தொலைக்காட்சியில் விஜய் ரி.வியைப் பார்ப்பதற்காக வருடாவருடம் சந்தாப்பணம் செலுத்த வேண்டும்.
இந்த சந்தாப்பணம் மூலமாகவும் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத்தமிழர்களது நிறுவனங்களின் விளம்பரங்கள் மூலமாகவும் விஜய் ரி.விக்கு பெருந்தொகையான வருமானம் கிடைக்கின்றது.
இரண்டாவது காரணம், விஜய் ரி.வியும் நடுவர்களாக உள்ளவர்களும் அவ்வப்போது வெளிநாடுகளிலுள்ள இலங்கைத்தமிழர்கள் ஒழுங்கு செய்யும் இசை நிகழ்ச்சிகளுக்கு வந்து பணம் சம்பாதிக்க முடியாமல் போய்விடும். அனந்த் வைத்தியநாதன் அவர்களை இந்த வியாபாரத்தில் உள்ளடக்க முடியாது.
ஜெசிக்கா இலங்கையை பூர்விகமாக கொண்டவரென்பதும், தமிழர்களின் அதிதீவிரவாத தேசிய உணர்ச்சியை தட்டியெழுப்பும் பாடலொன்றை (விடை கொடு எங்கள் நாடே) பாடியவர் என்பதாலுமே ஜெசிக்காவிற்கு ஒரு கோடிக்கு மேற்பட்ட வாக்குகள் கிடைத்தன.
சரியான புள்ளி விபரங்கள் எதுவுமில்லாவிடினும் கடந்த 32 ஆண்டுகளில் ஏறத்தாள 5 இலட்சம் இலங்கைத்தமிழர்களே (தமிழ்நாட்டிலுள்ளவர்களை தவிர்த்து) வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர் என்பதை திட்டவட்டமாக கூறலாம்.
(இதில் பெரும்பாலானவர்கள் தமது சொந்த விருத்திக்காக இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து, ஆடம்பரமாக வாழ்ந்து கொண்டு, இலங்iகையில் பயங்கரவாதத்தை விதைத்துக் கொண்டிருப்பவர்கள்) இவர்களில் எல்லோரும் வருடாவருடம் சந்தாப்பணம் செலுத்தி தமிழ் ரிவியினை பார்ப்பபதில்லை.
அப்படி தமிழ் ரிவியினை பார்ப்பவர்களில் விஜய் ரி.வியின் சுப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சிகளை கண்டு களிப்பவர்கள் ஒரு சிறு பகுதியினரே. இதுதவிர சுப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சிகளை இணையத்தினூடாவும் கண்டு களிப்பவர்கள் கணிசமானோர் உள்ளனர் எனபதை மறுப்பதற்கில்லை.
எனினும் ஒருவர் 500 வாக்குகளை அளிக்கலாம் என்பதை பயன்படுத்தி, ஒரு கோடிக்கு மேற்பட்ட வாக்குகளை யசிக்காவிற்கு அளிப்பதில் ஈடுபட்டவர்கள் 5000 ஆயிரத்திற்கு மேற்படாத இலங்கைத்தமிழர்களே என்பதை உறுதியாக கூறமுடியும்.
ஒருவர் 500 வாக்குகளை அளிப்பதற்கு எவ்வளவு நேரம் செலவிடப்பட வேண்டுமென்பது தெரியுமா? இலங்கைத் தமிழர்களுக்கே உரிய இந்த அதிதீவிர மனோபாவம், விஜய் ரி.வியின் சுப்பர் சிங்கர் நிகழ்சிகளை பார்த்து இரசிக்கும் ஏனைய தமிழ் பார்வையாளர்களில் பெரும்பான்மையோருக்கு இல்லை என்பது தமிழ் இசை உலகுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விடயம்.
கடந்த 65 வருடங்களாக இலங்கை அரசியலிலும் எப்போதுமே பிழையானவர்களுக்கே ஆதரவளித்தும் வாக்களித்தும்
பழகிப்போன இலங்கைத்தமிழர்களிடம், இசைத்துறையில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டால் என்ன செய்வார்கள்? இலங்கைத்தமிழர் என்பதால் திறமை குறைந்தவரை, திறமை வாய்ந்தவர்களை மீறி முன்னுக்கு தள்ளுவதா?
நடுவர்கள் எவரெவரை அதிகம் பாராட்டுகிறார்ள், எவரெவருக்கு எழுந்து நின்று கைதட்டுகிறார்கள் போன்றவற்றினை கவனித்தாவது ஜெசிக்காவிற்கு வாக்களிப்பது குறிப்பது இலங்கையர்கள் தங்கள் மனச்சாட்சிக்குள் கேள்விகளை எழுப்பி இருக்கலாம்.
அதிதீவிரவாத தமிழ்த்தேசியத்தால் இலங்கை அரசியலையும் சமூகத்தையும் பொருளாதார வளங்களையும் சீரழித்தது போதாதென்று, இவர்கள் இப்போது தமிழ்நாட்டு இசைத் துறையையும் நாசம் பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.
விஜய் ரி.வி. நிர்வாகம், சுப்பர் சிங்கர் ஸ்பொன்சர்கள், அனந்த் வைத்தியநாதன், சுப்பர் சிங்கர் நடுவர்கள் மற்றும் தமிழ்நாட்டு இசைத்துறையினர், இந்த நாசகாரச்சக்திகள் சுப்பர் சிங்கர் போன்ற இசை நிகழ்ச்சியில் புகுந்து தில்லுமுல்லுப் பண்ணுவதை உடனடியாக தடுத்து நிறுத்த முன்வர வேண்டும்.
எந்தவொரு இசையின் வளர்ச்சிக்கும் அதனை சந்தைப்படுத்தல் என்பது முக்கிய மானதாயினும், அது இசைத்துறையில் திறமை வாயந்தவர்கள் முன்வருவதை, இசைத்துறையை வளர்தெடுப்பதை மழுங்கடிக்க அனுமதிக்கக் கூடாது.
சுப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியின் இறுதியில் ஜெசிக்காவிற்கு இரண்டாமிடம் வழங்கப்பட்ட பின்னர், முகத்தில் எந்தவித சலனமும் காட்டாது ஹரிப்பிரியா, ஸ்ரீஷா, பரத், அனுஷ்சியா ஆகியோர் அரங்கில் இருந்ததை பாராட்டாமலிருக்க முடியாது.
அடுத்துவரும் சுப்பர் சிங்கர் போட்டியில் ஒரு போட்டியாளருக்கு ஒரு வாக்குத்தான் அளிக்க முடியும் என்பதை கட்டுப்பாடாக விஜய் ரி.வி. வாக்களர்களுக்கு அறிவிக்க வேண்டும்.
சிவசண்முகமூர்த்தி சுந்தரம்
Email: sasundram@gmail.com   salasalappu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக