ஞாயிறு, 1 மார்ச், 2015

ஐந்நூறு அடிக்கு தோண்டி இருநூறு அடிக்கு இரும்புக் குழாயை இறக்கி

சுற்றிச் சுற்றி ஆழ்குழாய் கிணறுகளைத் தோண்டுகிறார்கள். எங்கள் வீட்டில் ஒரு குழாய். எதிர்வீட்டில் ஒன்று அதற்கு பக்கத்துவீட்டில் ஒன்று. வெறுமனே தோண்டுவதில்லை. தோண்டிக் கொண்டிருக்கும் போது அவ்வப்போது அழுத்தமான காற்றை உள்ளே அனுப்புகிறார்கள். ‘புஸ்ஸ்’ என்ற பெரும் சப்தத்துடன். உடைந்த கற்கள் மண்கட்டிகளையெல்லாம் சிதறடிக்கும் ஒரு நுட்பம் அது.  ‘நான் நல்லா இருந்தா போதும்’ என்கிற கான்செப்டும் அதில் உண்டு. எங்கள் ஆழ்குழாயில் நூற்றியிருபது அடியிலேயே தண்ணீர் வந்துவிட்டது. மூன்று வருடங்களுக்கு முந்தைய கதை இது. ஆனால் எதற்கும் இருக்கட்டும் என்று ஐந்நூறு அடிக்கு தோண்டி இருநூறு அடிக்கு இரும்புக் குழாயை இறக்கியிருந்தோம். தரையிலிருந்து இருநூறு அடி வரைக்கும் உதிரி மண். விழுந்து குழியை மூடிவிடக் கூடாது என்பதற்காக பாதுகாப்பு அஸ்திரம் அந்த இரும்புக் குழாய். அந்த அஸ்திரத்தில் பக்கத்து வீட்டுக்காரர்கள் அம்பு எறிந்துவிட்டார்கள். எங்களுக்குப் பிறகு அவர்கள் போர்வெல் தோண்டினார்கள்.

கற்களையும் மண் துகளையும் சுத்தம் செய்வதற்காக அழுத்தம் கொடுக்கிறார்கள் அல்லவா? அந்த அழுத்தத்தின் போது அவர்கள் குழியிலிருந்து வந்த கல் ஒன்று எங்கள் வீட்டு ஆழ்துளைக் கிணற்றின் இரும்புக் குழாய் மீது மோதியிருக்கிறது. சோலி சுத்தம். குழாய் நசுங்கிப் போய்விட்டது. மோட்டாரை மேலே இழுக்கவும் முடியவில்லை கீழே பார்க்கவும் முடியவில்லை. சலனப்படக்கருவியை கயிற்றில் கட்டி உள்ளே அனுப்பிப் பார்த்துவிட்டார்கள். வேலைக்கு ஆகவில்லை. கடைசி முயற்சியாக ஒரு பெரிய இரும்பை உள்ளே விட்டு இடிக்கப் போகிறார்கள். வந்தால் தண்ணீர் போனால் கண்ணீர். கண்ணீரேதான். வராதா பின்னே? ஒரு லாரி தண்ணீர் வாங்கினால் ஐந்நூறு ரூபாய். ஏழெட்டு பேர் இருக்கிற கூட்டுக் குடும்பம் எங்களுடையது. வாங்குகிற சம்பளத்தை இரண்டாம் தேதியானால் தண்ணீர் டேங்க்காரருக்கு மாற்றிவிட வேண்டும் போலிருக்கிறது.  nisaptham.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக