ஞாயிறு, 29 மார்ச், 2015

ஆம் ஆத்மி ! கனவு கலைகிறது ! அர்விந்த் கேஜ்ரிவால் நான் நான் நான் ? AAP ...Death of a Dream


BN-GW766_indvot_P_20150210024813இந்திய அரசியல் வரலாறில் ஒரு மிகப்பெரிய மாற்றமாக நிகழ்ந்தது ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி. கருப்புப் பணம் மட்டுமே, அரசியலின் அடிப்படையாக இருந்த ஒரு சூழல். கருப்புப் பணம் இல்லாதவர்கள் அரசியலில் இறங்கவே முடியாத என்ற ஒரு விரக்தி அளிக்கக் கூடிய நிலையில், அதற்கு மாற்றாக, அந்தத் தடையை உடைத்து மிகப் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது ஆம் ஆத்மி கட்சி. ஒரு சாதாரண தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் இத்தகைய வெற்றியை பெற முடியுமா என்று அனைவரும் அவநம்பிக்கை கொண்டிருந்த ஒரு சூழலில், முடியும் என்பதை மிக தீர்க்கமாக நிரூபித்த ஒரு கட்சி.
ஆம் ஆத்மி கட்சி பெற்ற மிகப் பிரம்மாண்டமான ஆதரவு என்பது, இந்திய சமூகத்தில் நியாய உணர்வு மிக்க அனைவரையும் நம்பிக்கை கொள்ள வைத்த ஒரு விஷயம். இடதுசாரிகள் முழுக்க தோல்வியடைந்து, வாக்கு அரசியலிலும் நில்லாமல், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திலும் உறுதியாக நில்லாமல், தாங்களும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி ஒரு திரிசங்கு நிலையில் இருந்த காலத்தில், காங்கிரஸ், பிஜேபி ஆகிய கட்சிகளுக்கும், வட இந்தியாவைச் சேர்ந்த சாதிக் கட்சிகளுக்கும் மாற்றே இல்லையா என்று ஏங்கிக் கொண்டிருந்த நடுத்தர வர்க்கத்தினரின் கனவாக உருவானதே ஆம் ஆத்மி கட்சி.
எந்த ஒரு இயக்கத்துக்கும் ஒரு முகமூடி ஒன்று வேண்டும். அந்த முகமூடியை வைத்தே வெற்றிகளை ஈட்ட முடியும். வரலாற்றில் இட்லர், காந்தி, மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா என்று இது போல பல்வேறு தலைவர்களின் முகங்களே மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்திருக்கின்றன. ஆனால் இப்படி தங்கள் முகங்களை வைத்து வெற்றிகளை ஈட்டிய தலைவர்கள், அந்த வெற்றி தங்கள் தலைக்கு ஏறாமல் பார்த்துக் கொண்டார்களேயானால் வரலாற்றில் நிலைத்து நிற்பார்கள்.
கேஜ்ரிவால்தான், ஆம் ஆத்மியின் முகம், அவரது யோசனையில்தான் இக்கட்சியே உருவானது. ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கான பிரதான காரணம், கேஜ்ரிவால்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவரால் கிடைத்த வெற்றி என்ற காரணத்தால் தன்னைத் தவிர வேறு யாருமே தலைவராக இருக்கக்கூடாது, எதிர்த்துக் கேள்வி கேட்கக் கூடாது என்ற மனநிலையில்தான் கேஜ்ரிவால் இருக்கிறார்.
ஊழலுக்கு எதிரான இயக்கம் என்று அன்னா ஹசாரே ஒரு இயக்கத்தை தோற்றுவித்து, உண்ணாவிரதம் இருந்தபோது, அதன் பின்னணியில் இருந்து செயல்பட்டு, அந்த இயக்கத்தை வெற்றிப் பாதையை நோக்கி அழைத்துச் சென்றவர் கேஜ்ரிவால். அதன் பின்னணியில் இருந்து லோக்பால் வரைவு மசோதாவை தயாரிப்பது முதல், மற்ற அரசியல் கட்சிகளை கையாள்வது வரை பின்னணியில் இருந்து செயல்பட்டார். இப்படி செயல்பட்டு, அன்னா ஹசாரேவோடு நெருக்கமாக ஆன காரணத்துக்காக இவரோடு இருந்த கிரண் பேடியின் கோபத்துக்கும் ஆளானார் என்பதை மறுக்க முடியாது.
Arvind-Kejriwal-sadஅதன் பிறகு, லோக்பால் இயக்கம் ஒரு தேக்க நிலையை அடைந்தபோது, அடுத்த கட்டத்துக்கு அதை எப்படி எடுத்துச் செல்வது என்று அன்னா ஹசாரே உள்ளிட்டோர் வியந்து கொண்டிருந்த நிலையில் துணிச்சலாக ஒரு அரசியல் கட்சியை தொடங்கினார் கேஜ்ரிவால். “நேர்மையான அரசியல்” (Imandhar Rajneedhi) என்று அறிவித்தார். இந்தியாவில் அனைத்துக் கட்சிகளும் ஊழல் கட்சிகள் என்றார். வாரந்தோறும், பெரிய தலைவர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஊழல் பட்டியல்களை வெளியிட்டார். காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆம் ஆத்மி கட்சியைப் பார்த்து அதிர்ந்து போனாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.



2013 டெல்லி சட்டசபைத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி ஒரு போட்டியே அல்ல. போட்டி காங்கிரஸ் மற்றும் பிஜேபி இடையேதான் என்று இரு கட்சிகளுமே பேசின. ஒரு அரசு அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்த அவர், ஒரு கைதேர்ந்த அரசியல்வாதிக்கு உரிய சாதுர்யத்தோடு அனைத்து விவகாரங்களையும் கையாண்டார்.
ஆம் ஆத்மி கட்சியின் ஆரம்பகால வளர்ச்சியின்போது, பிரசாந்த் பூஷண் மற்றும் யோகேந்திர யாதவ் என்ற இரண்டு மிகப்பெரிய அறிவுஜீவிகள் அவருக்கு துணை நின்றனர். நீண்டகால அரசியல் ஆய்வறிஞர் என்ற வகையில் யாதவின் பங்கு ஆம் ஆத்மி கட்சிக்கு பக்க பலமாக ஒரு புறம் இருந்ததென்றால், நீதித்துறை ஊழல் மற்றும் அரசியல் கட்சி ஊழல் என்று பல்வேறு முனைகளில் போராட்டத்தை முன்னெடுத்த பிரசாந்த் பூஷணின் பங்கு மற்றொரு வகையில் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பலமாக அமைந்தது.
இந்துத்துவா மற்றும் வலதுசாரிகள், வெளிநாடுகளிலும், உள்நாடுகளிலும், பிஜேபிக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களிலும் இணையத்திலும் ஒரு பெரும் ஆதரவு முழக்கத்தை முன்னெடுத்த அதே நேரத்தில், அதற்கு சற்றும் குறையாத வகையில், பிஜேபியை நேரடியாக மோதி கலங்க வைக்கும் அளவுக்கு ஆம் ஆத்மிக்கான தொண்டர்கள் குவிந்தனர். வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆம் ஆத்மிக்காக ஒரு புறம் நிதி சேகரித்தனர் என்றால், வசதியான வேலைகளில் இருந்த பல்வேறு மென்பொறியாளர்கள், கார்ப்பரேட்டுகளில் பணியாற்றியவர்கள் ஆகியோர், தங்கள் வேலைகளைத் துறந்து தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
அறுபதுகளில், திராவிட முன்னேற்றக் கழகம் மொழிப்போரை முன்னெடுத்தபோதும், எழுபதுகளில், இந்திரா காந்திக்கு எதிராக ஜெய்பிரகாஷ் நாராயணன் இயக்கம் நடத்தியபோதும், சுதந்திரப் போராட்ட காலத்தில் காந்தியின் அழைப்பை ஏற்று ஆதரவு குவிந்தபோதும் இருந்த ஆதரவு, ஆம் ஆத்மி கட்சிக்கு இருந்தது என்றால் மிகையாகாது.
அமெரிக்காவில் சிகாகோ நகரில் ஆம் ஆத்மி கட்சிக்காக வெளிநாடுவாழ் இந்தியர்கள் 18 மே 2013 அன்று நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் யோகேந்திர யாதவ் மற்றும் குமார் விஸ்வாஸ். அந்த மாநாட்டைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சிக்கு நிதி குவிந்தது. 2013 டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட முடிவெடுத்தபோது, இந்தியா முழுக்க குவிந்த தொண்டர்களின் ஆதரவை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இந்தியாவெங்கும் உள்ள தொண்டர்கள், குறிப்பாக ஊழலை ஒழிக்க வேண்டும் என்று நினைத்தவர்கள். ஆயிரக்கணக்கில் குவிந்தார்கள். டெல்லி பிரச்சாரம் களை கட்டியது.
ஆம் ஆத்மி கட்சியின் பலமே அதன் தொண்டர்கள்தான். விடுப்பு எடுத்து, சொந்தக் காசை செலவு செய்து, டெல்லி சென்று, நண்பர்கள் வீட்டில் தங்கி, வீடு வீடாக பிரச்சாரம் செய்தனர். அந்த பிரச்சாரமே, காங்கிரஸ் கட்சியை பின்னுக்குத் தள்ளி, இரண்டாவது பெரிய கட்சியாக டெல்லி தேர்தலில் வெல்ல உதவியது. 2013 தேர்தலில் 28 சீட்டுகளை ஆம் ஆத்மி கட்சி வென்றபோது, இந்தியாவே திரும்பிப் பார்த்தது. அந்த வெற்றி, இந்தியா முழுக்க ஒரு மாற்று அரசியலை தேடி அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு ஒரு ஊக்கமாக அமைந்தது.
ஆம் ஆத்மி கட்சியின் மற்றொரு சிறப்பான அம்சம் என்னவென்றால், மற்ற கட்சிகளைப் போல தெளிவான கொள்கை அல்லது கோட்பாடுகள் எதுவும் இல்லாமல், ஊழல் எதிர்ப்பு என்ற ஒற்றை முழக்கத்தை வைத்து அரசியலை முன்னெடுத்ததே. இந்தியாவின் மோசமான அரசியல் சூழலை நெடு நாட்களாக கவனித்து மனம் வெதும்பி இருந்த பலரை, திரும்பிப் பார்க்க வைத்தது ஆம் ஆத்மி கட்சி. இதன் காரணமாகவே பலர் தங்களை ஆம் ஆத்மி கட்சியோடு இணைத்துக் கொண்டனர். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், இல்லாதவர்கள், அரசியலில் பல்வேறு கொள்கைகளை உடையவர்கள் என்று அனைவரும் பாரபட்சமின்றி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்கள். இந்தியாவின் சுதந்திர வேட்கைக்கு காந்தி எப்படி ஒரு முகமாக இருந்தாரோ, அது போலத்தான் ஊழல் எதிர்ப்பு என்ற இயக்கத்துக்கு கேஜ்ரிவால் ஒரு முகமாக இருந்தார்.
2013 தேர்தலுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு ஆட்சியமைத்தார் கேஜ்ரிவால். அந்த ஆட்சி அதிகாரமே அவரது மனதை மாற்றியிருக்கக் கூடும். அப்போது கேஜ்ரிவால் ஆட்சியில் இருந்தபோது, டெல்லி செல்ல நேர்ந்தது. பிப்ரவரி 2014. 2ஜி தொடர்பான உரையாடல்களை பிரசாந்த் பூஷண் வெளியிட இருந்த நேரம்.
முதல் நாள் பிரசாந்த் பூஷணிடம் இந்த உரையாடல்களை அளித்தபோது அவர் கூறியது,
நான் தனிப்பட்ட முறையில் எந்த முடிவும் எடுக்க முடியாது. எங்கள் கட்சியின் தலைமை செயற்குழுவோடு ஆலோசித்த பிறகுதான் முடிவெடுக்க முடியும். நீங்கள் டெல்லியிலேயே இருங்கள். நான் உங்களுக்கு தகவல் கூறுகிறேன்
என்றார். அன்று அவரோடு அமர்ந்திருந்தபோது, அவரது இளைய வழக்கறிஞரிடம் கேஜ்ரிவால் இருக்கிறாரா என்று கேட்பதற்கு பதிலாக “சிஎம் இருக்கிறாரா” என்றுதான் கேட்டார். அப்போதே, ஏதோ சரியில்லை என்று தோன்றியது. அன்று இரவு, பூஷண், உரையாடலை ஆம் ஆத்மி வெளியிட முடிவெடுத்து விட்டதாகவும், மறுநாள் காலை ஏழு மணிக்கு அலுவலகம் வருமாறும் கூறினார். அவர்கள் கட்சியின் தலைமைக் குழுவோடு விவாதித்து முடிவெடுத்த அந்த வடிவம் மிக சிறப்பாக இருந்தது. பிரசாந்த் பூஷண் ஒரு மூத்த வழக்கறிஞர் என்ற முறையில் அந்த உரையாடல்களில் இருந்தவை என்ன என்பது அவருக்கு நன்கு தெரியும். அவர் நினைத்திருந்தால், அவராகவே அந்த உரையாடல்களை யாரையும் கலந்தாலோசிக்காமல் வெளியிட்டிருக்க முடியும். ஆனால் அவர் கட்சியினரோடு கலந்தாலோசித்தே இதை செய்தார்.
அவரோடு பத்திரிக்கையாளர் சந்திப்பு தொடர்பான வேலைகளில் ஈடுபட்ட பிறகு மாலை 4 மணிக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பு. தமிழகத்தில் இருந்து ஆம் ஆத்மி கட்சியை பார்த்து வந்த காரணத்தால், இவர்கள் அனைவரும் ஒன்றாகத்தான் இருப்பார்கள் என்று ஒரு எண்ணம் இருந்தது. ஆனால் அந்த பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு கேஜ்ரிவால் வரவில்லை. அவர் ஜந்தர் மந்தரில் நடந்த ஏதோ ஒரு வடகிழக்கு மாகாண மாணவர்களின் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்று விட்டார் என்று கூறினார்கள். 2ஜி டேப் வெளியீடு என்பது, ஆம் ஆத்மி கட்சியின் ஒரு பெருமையான தருணம். அதை ஏன் கேஜ்ரிவால் தவற விடுகிறார் என்று ஒரு எண்ணம் எழுந்தாலும் அப்போது அது குறித்து பெரிதாக எண்ணவில்லை. ஆனால், யோகேந்திர யாதவ் அந்த சந்திப்புக்கு வந்திருந்தார். பிரசாந்த் பூஷணோடு சேர்ந்து இறுதி வரை அமர்ந்திருந்தார். சந்திப்பு முடிந்ததும், ஒரு மாருதி காரில், மூன்று பேர் அமரும் இடத்தில் நான்கு பேரோடு அமர்ந்து சென்றார் யாதவ்.
அதன் பிறகு பாராளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டு அடைந்த தோல்விகள் அனைவரும் அறிந்ததே. அத்தோடு ஆம் ஆத்மி கட்சியின் வரலாறு முடிந்து விட்டது என்றே பெரும்பாலானோர் ஆருடம் கூறினர்.
ஆனால் 2015 டெல்லி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது ஆம் ஆத்மி கட்சி. 70 இடங்களில் 67 இடங்களை கைப்பற்றியது. இந்த தேர்தல் பிரச்சாரக் களத்தை நேரடியாக சென்று ஆய்வு செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது இந்தியாவெங்கும் வந்து குவிந்திருந்த தொண்டர்களில் பலரை சந்திக்க நேர்ந்தது. அவர்களிடம் குவிந்திருந்த ஆர்வம், துடிப்பு மலைக்க வைத்தது. ஏன் ஆம் ஆத்மி வெற்றியடையப் போகிறது என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ஒரு இளைஞன் வந்திருந்தான். அந்த இளைஞன் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி, கரோல் பாக் பகுதியில் நடந்த ஆம் ஆத்மி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஓடினான். அவனோடு சேர்ந்து ஓடுவதற்கே சிரமமாக இருந்தது. எதற்காக இங்கே வந்திருக்கிறாய் என்று கேட்டதற்கு, இது போன்றதொரு கட்சியை நான் பார்த்ததில்லை என்றான். இந்த கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டியது நமது கடமை என்றான். கூட்டம் முடிந்து மெட்ரோ ரயில்நிலையத்துக்கு திரும்புகையில் வழி நெடுக “பான்ச் சால் கேஜ்ரிவால் ” என்று கத்தியபடியே வந்தான்.
இப்படி பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் இந்தியாவெங்கும் வந்து குவிந்திருந்தனர். அந்தத் தொண்டர்கள் தங்கள் சொந்தப் பணத்தில், தன்னார்வத்தோடு வந்திருந்தனர். மற்ற அரசியல் கட்சிகளைப் போல அவர்கள் பணத்துக்காக அங்கே வரவில்லை. முதன் முறையாக ஒரு மாற்று அரசியல் உருவாகியிருக்கிறது, இந்த அரசியலின் மூலமாக ஒரு நெம்புகோல் வைத்து, இந்தியாவை புரட்டிப் போடப் போகிறோம் என்று நம்பினர்.
ஆனால் இந்த ஆதரவுகளையெல்லாம் அரவிந்த் கேஜ்ரிவால் தனக்கான ஆதரவு என்று நம்பினார். 28 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றதுமே இந்த முடிவுக்கு கேஜ்ரிவால் வந்து விட்டார்.
yogendra-yadav2015ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதிலேயே சிக்கல்கள் தொடங்கின. தேர்தல் செலவுக்கு தேவையான நிதிகள் வந்து கொண்டிருந்ததால், நேர்மையான சிறந்த வேட்பாளர்களை நியமிக்க வேண்டும் என்று பிரசாந்த் பூஷண் மற்றும் யோகேந்திர யாதவ் கூறியதை அரவிந்த் கேஜ்ரிவால் துளியும் ரசிக்கவில்லை. இந்த தேர்தலிலேயே பிரசாந்த் பூஷணை ஏறக்குறைய கேஜ்ரிவால் ஓரங்கட்டினார் என்றே சொல்ல வேண்டும். ஆனால் தேர்தல் பிரச்சார சமயத்தில், கட்சிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடாது என்று அவர் எவ்விதமான குரலும் கொடுக்கவில்லை. அதே நேரத்தில் யோகேந்திர யாதவ் அந்தத் தேர்தலில் பம்பரமாக சுழன்று உழைத்தார். கட்சியின் முகமாக தொலைக்காட்சிகளில் தோன்றுவதும், ஊடகங்களுக்கு பேட்டியளிப்பதுமாக யாதவின் பணி மகத்தானது.



ஏற்கனவே இருந்த சிக்கல் 67 இடங்களை வென்றதில் பூதாகரமாக உருவெடுத்தது. ஏற்கனவே தன்னகங்காரத்தோடு இருந்த கேஜ்ரிவாலுக்கு இந்த வெற்றி முழுக்க முழுக்க தனக்கு கிடைத்த வெற்றி என்று எண்ண வைத்தது. அந்த எண்ணம் படிப்படியாக தன்னை எதிர்த்தவர்களை ஓரங்கட்டுவதிலும், தனக்கென்று ஒரு துதிபாடிகளின் கூட்டத்தை உருவாக்குவதிலும் சென்று முடிந்தது.
மாக்கியவல்லி வர்ணித்த அரசியல்வாதியின் சாதுர்யத்தோடு, யோகேந்திர யாதவ் மற்றும் பிரசாந்த் பூஷணை ஓரங்கட்டும் முயற்சியில் படிப்படியாக இறங்கினார் கேஜ்ரிவால். பதவியேற்பு விழாவின்போது பேசிய பேச்சிலேயே, மறைமுகமாக 2 மார்ச் அன்று, தனது சதுரங்கத்தின் மிக மிக ஆபாசமான ஒரு நகர்த்தலை நடத்தினார் கேஜ்ரிவால்.
“இந்த வெற்றி சிலருக்கு அகங்காரத்தை தந்திருக்கிறது. நாம் பல்வேறு மாநிலங்களில் விரிவடையப் போகிறோம் என்று கூறுகின்றனர்”
என்று பேசினார் கேஜ்ரிவால். தேர்தல் வெற்றியை ஒட்டி, பத்திரிக்கையாளர்களை சந்தித்த யோகேந்திர யாதவ்தான்
வேறு மாநிலங்களுக்கு விரிவாக்கம் செய்வது குறித்து யோசிப்போம்
என்று கூறினார். தனிப்பட்ட முறையில் ஒரு பத்திரிக்கையாளரோடு ஆம் ஆத்மி கட்சிப் பிரமுகர் ஒருவர் நடத்திய உரையாடலை பகிரங்கமாக ஆக்கி, அதன் மூலம் யோகேந்திர யாதவை கட்சி விரோதி என்றும், ஆம் ஆத்மிக்கு எதிரானவர் என்ற பிம்பத்தையும் உருவாக்கினார். இணைப்பு இந்த செய்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளியானதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பல தலைவர்கள், யோகேந்திர யாதவ் மற்றும் பிரசாந்த் பூஷணுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை ஊடகங்களில் தொடர்ந்து கூறி வந்தனர். அமைதியாக இருந்த பூஷண் யாதவ் கூட்டணி ஒரு கட்டத்தில் பதில் தாக்குதலை தொடுக்கத் தொடங்கினர். இந்த சண்டை தெருச்சண்டையாகியது.

new-delhi-aap-dissident-leader-yogendra-yadav-at-284271

ஒரு கட்டத்தில் அரசியல் தலைமைக் குழுவைக் கூட்டி, அதில் இருந்து பிரசாந்த் பூஷண் மற்றும் யோகேந்திர யாதவை நீக்கினர். இந்த தெருச் சண்டைகள் அனைத்தும் நடக்கையில், அர்விந்த் கேஜ்ரிவால், பெங்களுரில் சிகிச்சைக்காக சென்றிருந்தார். இவை அனைத்தும் கேஜ்ரிவாலுக்கு தெரியாமல் நடந்தது போல ஒரு பிம்பத்தை அவர் உருவாக்க முயன்றாலும், அவை அனைத்துமே கேஜ்ரிவாலின் திட்டத்தின்படியே நடந்தது. தன்னுடைய அரசியல் எதிரிகளை பழிவாங்குவதில், நரேந்திர மோடிக்கு சற்றும் சளைத்தவர் அல்ல என்பதை கேஜ்ரிவால் நிரூபித்தார். தன்னை வளர்த்து எடுத்து நெருக்கடிகளில் காப்பாற்றிய அத்வானியை அரசியல் வானிலிருந்தே மறையச் செய்தவர்தான் மோடி. அதே போல, ஆம் ஆத்மி என்ற கட்சி இன்று ஒரு அரசியல் சக்தியாக உருவாகக் காரணமாக இருந்தவர்களை மலிவான தந்திரங்களின் மூலம் ஓரங்கட்டி விரட்டியடிப்பதில் கேஜ்ரிவால் தற்காலிகமாக வெற்றி பெற்றுள்ளார்.
இன்று நடந்த தேசிய செயற்குழு கூட்டத்தில் நடந்த சம்பவங்கள், கேஜ்ரிவால் எந்தவொரு மலிவான அரசியல்வாதிக்கும் சற்றும் சளைத்தவர் இல்லை என்பதையே நிரூபித்துள்ளது. ஒரு கட்சிக்கு லோக்பால் என்ற அமைப்பை உருவாக்கி, அதில் சமூகத்தில் அந்தஸ்து உள்ள அட்மிரல் ராமதாஸ் என்பவரை நியமித்து, அவர் இதற்கு முன்னர் நடந்த அனைத்துக் கூட்டங்களிலும் பங்கேற்ற நிலையில், இந்தக் கூட்டத்தில் அவரை அழைப்பதை தவிர்த்து, பூஷண் ஆதரவாளர்கள் என்று அறியப்பட்டவர்களை கூட்டத்துக்கு வர விடாமல் தடுத்து, பூஷண் மற்றும் யோகேந்திர யாதவை, தன்னுடைய ஆதரவாளர்களால் தள்ளு முள்ளுக்கு ஆளாக்கி, ஒழிக ஒழிக என்று கோஷமிட வைத்து, அவர்கள் இருவருக்கும் பேச வாய்ப்பே வழங்காமல், தேசிய செயற்குழுவில் இருந்து நீக்கியதன் மூலம், தான் ஒரு சராசரிக்கும் கீழான மலிவான அரசியல்வாதி என்பதை கேஜ்ரிவால் நிரூபித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி ஒரு மாற்று அரசியல் என்பதை நம்பி கேஜ்ரிவால் பின்னால் வந்தவர்களில் ஒருவரான போராளி மேத்தா பட்கர் இன்று கேஜ்ரிவால் மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தி வெளியேறியுள்ளார்.
கேஜ்ரிவால் வாழ்க என்று இன்று துதிபாடுபவர்ளுக்கு மட்டுமே கட்சியில் இடம் என்பதை கேஜ்ரிவால் வெளிப்படையாக உணர்த்தியுள்ளார். கேஜ்ரிவால் பேசியதாக வெளியிடப்பட்ட உரையாடலில், அவர் சராசரிக்கும் கீழான மனிதர் என்பது அவர் பேசிய வார்த்தைகளின் மூலம் தெரிகிறது. தன்னை எதிர்த்து கேள்வி கேட்டவர்களின் மீது இப்படியொரு கோபம் இருக்கும் மனிதன் தன்னை மாற்று அரசியலின் வடிவம் என்று கூறிக் கொள்வதுதான் வேடிக்கை.



kejriwalaap-mainபுரட்சித் தலைவி வாழ்க, மக்கள் முதல்வர் வாழ்க என்று கூவும் இந்தக் கூட்டத்துக்கும், கேஜ்ரிவாலின் அருகில் இருக்கும் கூட்டத்துக்கும் பெரிய வேறுபாடு இல்லை. இந்தக் கூட்டத்தின் பலத்தால் எதையும் சாதிக்கலாம் என்று கேஜ்ரிவால் நினைத்தால் அவர் பகற்கனவு காணுகிறார். ஏழை மக்களின் கட்சி என்று செதுக்கி செதுக்கி உருவாக்கிய ஆம் ஆத்மி போன்ற கட்சியை தன்னுடைய துதிபாடிகளின் கட்சியாக மாற்றியதன் மூலம், இந்தியாவில் ஜனநாயகத்தை விரும்பும், ஜனநாயகத்தை நேசிக்கும் மக்களின் கனவை சிதைத்துள்ளார் கேஜ்ரிவால்.
ஆம் ஆத்மி கட்சி என்ற அற்புதமான கனவை மரணிக்கச் செய்துள்ளார் கேஜ்ரிவா  savukkuonline.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக