செவ்வாய், 31 மார்ச், 2015

திருவாரூர் பல்கலை கட்டிடம் இடிந்து 5 பேர் பலி : நிறுவன மேலாளர் உள்பட 4 பேர் சிறையில்

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக குடியிருப்பு கட்டுமானப்பணியின் போது 5 தொழிலாளர்கள் பலியானது  தொடர்பாக ஆந்திர கட்டுமான நிறுவன பொது மேலாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.திருவாரூர் அடுத்த நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இதில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்காக நாககுடியில் வளாக குடியிருப்பு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. குடியிருப்பு வளாகம் 4 மாடி கட்டிடமாக கட்டப்பட்டு வருகிறது.  நேற்று காலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, 4வது தளத்தில் ஒரு முனையில் இருந்த சிமென்ட் பில்லரின் ஒரு பகுதி மட்டும் முறிந்து சென்ட்ரிங் பணி நடந்து கொண்டிருந்த 3வது தளத்தில் விழுந்தது
. இதில் 3வது, 2வது மற்றும் முதலாவது தளத்தில் அமைக்கப்பட்டிருந்த சென்ட்ரிங் பலகை, கம்பிகள் சரிந்து அடுத்தடுத்து விழுந்தது. இதில் சென்ட்ரிங் பணியில் ஈடுபட்டிருந்த 21 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.  கட்டுமான தொழிலாளர்கள் மயிலாடுதுறையை சேர்ந்த சின்னசாமி (26), ஒடிசாவை சேர்ந்த கிட்டு(26), சமீர்குமார் (26), உ.பியை சேர்ந்த ராம்சுபாஹக்(18), நாகை மாவட்டம் மணல்மேடு அடுத்த பட்டவர்த்தியை சேர்ந்த குமார் (28) ஆகியோர் இறந்தனர்.காயமடைந்த 16 தொழிலாளர்கள் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குடியிருப்பு வளாக கட்டுமான பணியை, ஐதராபாத்தை சேர்ந்த டிஇசி இன்பிரா ஸ்டெக்சர் என்ற நிறுவனம் கான்ட்ராக்ட் எடுத்து செய்து வருகிறது. இந்த நிறுவனம் சென்ட்ரிங் பலகை அமைப்பதற்கு, வேறு ஒரு நிறுவனத்திடம் உள் ஒப்பந்தம் விட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.  இதையடுத்து ஐதராபாத் நிறுவன பொது மேலாளர் ஆந்திராவை சேர்ந்த ஆனந்த்(26),  இன்ஜினியர் திருச்சி சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த  அந்தோணி அமல் பிரபு(31), மேஸ்திரி மயிலாடுதுறையை சேர்ந்த அய்யனார்(32), மேற்பார்வையாளர் குருங்குளம் சதீஷ்குமார்(25) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து நன்னிலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இடிந்து விழுந்த சிமென்ட் பில்லர் கடந்த ஒரு மாதம் முன்புதான் அமைக்கப்பட்டது. ஒரு மாதத்திலேயே அது இடிந்து விழுந்துள்ளதால், கட்டுமான பணி தரம் இல்லாமல் இருந்ததுதான் காரணம் என தெரியவந்துள்ளது.

சிமென்ட் கலவையில் உரிய அளவு தண்ணீர் சேர்க்காமல் கட்டுமான பணி செய்து வந்ததாகவும், இதனால் கலவை காய்ந்து உறுதியற்ற நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.  2014 ஜூலை 19ம் தேதி பல்கலை.யை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொள்வதாக இருந்தது. இந்நிலையில் கட்டுமான பணியில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக பல்வேறு புகார்கள் கூறப்பட்டதால் அவர் விழாவை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஏடிஎஸ்பி ராஜேந்திரன், டிஎஸ்பிக்கள் அன்பழகன், குணசேகரன் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பெரியசாமி, சந்திரா, விஜயகுமார், ராஜா, ஜெயந்திஆகியோர் கொண்ட 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.இன்று மத்திய பொறியாளர் குழுவினர் இடிந்து விழுந்த கட்டிடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்துகின்றனர். அதன் பின்னரே விபத்துக்கான உண்மை காரணம் தெரிய வரும்.இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக