சனி, 21 மார்ச், 2015

வாட்ஸ் அப்'பில் பிளஸ் 2 வினாத்தாளை அனுப்பிய 4 ஆசிரியர்கள் ஒசூரில் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் பிளஸ் 2 வினாத்தாளை செல்லிடப்பேசியின் கட்செவி அஞ்சலில் ("வாட்ஸ் அப்') அனுப்பிய 4 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வுகள் கடந்த 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இத் தேர்வில் முறைகேடுகளைக் கண்காணிப்பதற்காக மாநிலம் முழுவதும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தேர்வு நடைபெறும் மையங்களுக்குச் சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.
பிளஸ் 2 கணிதத் தேர்வு மார்ச் 18-ஆம் தேதி நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள தனியார் பள்ளிக்கு தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த மையத்தில் மொத்தம் 323 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். அதில் ஒரு வகுப்பறையில் மொத்தம் 20 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 19 பேர் தேர்வு எழுதினர். ஒருவர் தேர்வு எழுத வரவில்லை.

மீதியிருந்த அந்த வினாத்தாளை தேர்வு தொடங்கிய சிறிது நேரத்தில் அந்த மையத்தின் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய ஆசிரியர் மகேந்திரன், தான் வைத்திருந்த செல்லிடப்பேசி மூலம் புகைப்படம் எடுத்தார்.
பின்னர், அந்தப் படத்தை கட்செவி அஞ்சல் மூலம் ஆசிரியர்கள் உதயகுமார், கோவிந்தன் ஆகியோருக்கு அனுப்பினார். பின்னர், மேலும் இருவருக்கு அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில், தேர்வு தொடங்கிய சிறிது நேரத்தில் பறக்கும் படை அதிகாரிகள் அந்த தேர்வு மையத்துக்குள் வந்தனர். அவர்கள் மாணவர்களிடம் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது, பறக்கும் படையில் வந்த ஒருவர், மையக் கண்காணிப்பாளரை சோதனை செய்தார். அப்போது அவரிடம் செல்லிடப்பேசி இருந்தது.
"தேர்வு மையத்துக்குள் மாணவர்கள் மட்டுமல்ல, கண்காணிப்பாளரும் செல்லிடப்பேசி எடுத்து வரக் கூடாது என்று கூறப்பட்டுள்ள நிலையில், நீங்கள் எப்படி செல்லிடப்பேசியை எடுத்து வந்தீர்கள்' என்று கேட்டனர். மேலும், ஆசிரியர் மகேந்திரனின் செல்லிடப்பேசியை சோதித்துப் பார்த்தபோது, தேர்வு நடந்து கொண்டிருந்த கணிதத் தேர்வின் வினாத்தாள் "வாட்ஸ் அப்' மூலம் பிறருக்கு அனுப்பப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட தேர்வு கண்காணிப்புப் பொறுப்பாளராகப் பணியாற்றிய, அனைவருக்கும் கல்வித் திட்ட (எஸ்எஸ்ஏ) இணை இயக்குநர் நாகராஜ் முருகன், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமசாமி ஆகியோரிடம் பறக்கும் படையினர் புகார் செய்தனர். அவர்கள் கிருஷ்ணகிரி எஸ்.பி. கண்ணம்மாளிடம் புகார் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்.பி. கண்ணம்மாள் உத்தரவின்பேரில், ஒசூர் ஏஎஸ்பி ரோகிணி பிரியதர்ஷினி, மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.
பிறகு, பிளஸ் 2 தேர்வு வினாத்தாளை கட்செவி அஞ்சல் மூலம் அனுப்பியதாக ஆசிரியர்கள் மகேந்திரன், உதயகுமார், கோவிந்தன், கார்த்திகேயன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இவர்கள் ஒசூரில் பாகலூர் சாலையில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வருவது தெரியவந்தது. இவர்களில் கோவிந்தன், மகேந்திரன் ஆகிய 2 பேரிடம் இருந்து செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.


கேமராவில் சிக்கிய ஆசிரியர்

பிளஸ் 2 கணிதப் பாட வினாத்தாளை ஆசிரியர் மகேந்திரன் செல்லிடப்பேசி மூலம் புகைப்படம் எடுக்கும் காட்சிகள் தேர்வறையிலிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.

வினாத்தாளை அனுப்பியது ஏன்? இதுகுறித்து விசாரித்தபோது பல பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
புகைப்படம் எடுக்கப்பட்ட வினாத்தாள் குறிப்பிட்ட சில ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும், அவர்கள் அதற்கான விடைகளை பூர்த்தி செய்து தேர்வு மைய ஆசிரியர்களுக்கு திருப்பி அனுப்புவதாகவும், அவற்றை குறிப்பிட்ட சிலருக்குக் கொடுத்து, தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு வினாத்தாள்களுக்கு விடைகளைப் பெற்று கொடுக்கும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கணிசமான தொகை வழங்கப்படுவதாகவும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


"செல்லிடப்பேசிக்கு அனுமதி கூடாது'

ஒசூரில் தேர்வறை கண்காணிப்பாளரே செல்லிடப்பேசியின் கட்செவி அஞ்சல் மூலம் பிளஸ் 2 வினாத்தாளை அனுப்பிய சம்பவத்தைத் தொடர்ந்து, தேர்வறைகளுக்குள் செல்லிடப்பேசியை அனுமதிக்கக் கூடாது என அரசுத் தேர்வுகள் இயக்ககம் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் கூறியதாவது:
தேர்வு மையத்தில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, தரைவழி தொலைபேசியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. தேர்வு கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களுக்குச் சென்றதும் தேர்வுக் கட்டுப்பாட்டு அறையில் செல்லிடப்பேசியைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும். அவசரத் தேவைக்கு மட்டும் முதன்மைக் கண்காணிப்பாளர் அறையில் செல்லிடப்பேசியைப் பயன்படுத்தலாம் எனவும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால், ஒசூரில் உள்ள தேர்வு மையத்தில் இந்த விதிமுறை மீறப்பட்டுள்ளது. அதனாலேயே, இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினரிடம் புகார் செய்யப்பட்டது. இந்த ஆசிரியர்கள் முறைகேடான செயல்களில் ஈடுபடுவதற்கு முன்னதாகவே கண்டறியப்பட்டுள்ளனர். இதையடுத்து, தமிழகம் முழுவதும் தேர்வறைகளுக்குள் செல்லிடப்பேசியை கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக