செவ்வாய், 24 மார்ச், 2015

வேலூர் சிறுமி கடத்திக் கொலை~ கோயில் குருக்களுக்கு 10 ஆண்டு சிறை

வேலூர் அருகே பள்ளிச்சிறுமி கடத்திக் கொலை  கோயில் குருக்களுக்கு 10 ஆண்டு சிறை
குடியாத்தம், பாண்டியன் நகர், பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்தவர் குமார் (50). இவர் அப்பகுதி ஆஞ்சநேயர் கோயிலில் குருக்களாக பணிபுரிந்து வந்தார். அவரது வீட்டுக்கு எதிரே அன்னை இந்திராகாந்தி நிதியுதவி நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்த குடியாத்தம், பிச்சனூர் பகுதியைச் சேர்ந்த ராஜா மகள் ராஜேஸ்வரி (5) படித்து வந்தார்.19.9.2011 அன்று பள்ளிக்கு சென்ற அச்சிறுமி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீஸார் வழக்குப் பதிந்து தேடுதல் வேட்டை நடத்தினர். குமார் வசித்து வந்த வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் சாக்கு மூட்டைகள் கட்டப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் 3 தினங்களுக்கு பிறகு கிடைத்தது.


முதல்கட்ட விசாரணையில், பள்ளிக்கு வந்த அச்சிறுமியை குமார் சாக்லெட் கொடுத்து அழைத்துச் சென்றது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமியை கடத்திச் சென்றதையும், அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தபோது இறந்துபோனதும், அதையடுத்து சாக்குமூட்டையில் சிறுமியின் சடலத்தை போட்டு அருகில் உள்ள கிணற்றில் வீசியதும் தெரியவந்தது.குமார் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை சிறையில் இருந்து விடுவிக்காமல் வழக்கை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து சிறையில் இருந்து வந்தார்.

இந்நிலையில், வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மகளீர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இவ்வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்தது. அரசுத் தரப்பில் இ.சிவஜோதி ஆஜரானார்.

குமார் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து இந்திய தண்டனைச் சட்டத்தின் இரு பிரிவுகளில் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும், மற்றொரு பிரிவில் 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து, தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க நீதிபதி நசீர்அகமது உத்தரவிட்டார். இதையடுத்து குமார் மீண்டும் வேலூர் மத்தியச் சிறைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக