வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

Qissa பார்க்கவேண்டிய ஒரு இந்திய படம் ! மீரா நாயர் .

பஞ்சாபி மொழிப் படமான ‘கிஸ்ஸா’ (Qissa) ஆங்கில சப்-டைட்டிலுடன் பிப்ரவரி 20-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. ‘கிஸ்ஸா’ என்றால் அரேபிய மொழியில் வாய்மொழி வரலாற்றையும், பண்பாட்டையும் பேசும் கதைகளைக் குறிக்கும்.
இப்படத்தை இயக்கி இருக்கும் அனுப் சிங் இந்திய மண்ணைச் சார்ந்தவர். ஆனால் கிழக்கு ஆப்பிரிக்காவில் பிறந்தவர். இவர் இலக்கியத்திலும் தத்துவப் படிப்புகளிலும் பட்டம் பெற்று, பூனே திரைப்படக் கல்லூரியில் பயிற்சி பெற்றவர். இவர் ஏற்கெனவே ‘லாஸ்யா’ (Lasya-The Gentle Dance) என்கிற குறும் படத்தை இயக்கியுள்ளார். இது ஜெர்மன் திரைப்பட விழாவில் பரிசு வென்றிருக்கிறது.
இவரது முதல் முழுநீளத் திரைப்படம் ‘கிஸ்ஸா’. ஐம்பதுக்கும் மேற்பட்ட உலகத் திரைப்பட விழாக்களில் பங்குகொண்டு சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை போன்ற பல விருதுகளை வென்றது. “இப்படத்தைத் தவற விட்டுவிடாமல் கண்டுகளியுங்கள்” என சர்வதேச அங்கீகாரம் பெற்ற இந்தியப் பெண் இயக்குநர் மீரா நாயர் பரிந்துரைத்திருக்கிறார்.
இந்தியப் படங்களில் மட்டுமின்றி, உலகத் திரைப்படங்கள் பலவற்றில் நடித்துப் புகழ் பெற்றுள்ள நடிகரான இர்பான் கான், அம்பர் சிங் என்கிற ஒரு சீக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 1947-ல் தேசப் பிரிவினையின் போது நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, ஒரு நாட்டுப் பற்று கொண்ட சீக்கியரின் கண்ணோட்டத்தில் இப்படத்தின் கதை பின்னப்பட்டிருக்கிறது. பிரிவினை காரணமாக, பிறந்த மண்ணை விட்டு விட்டு, வேறு இடம் செல்ல வேண்டிய நிலையில் பலரும் பெரும் சோகத்தில் தள்ளப்படுகின்றனர்.
அம்மாதிரியான உணர்வுகளால் உந்தப்பட்ட அம்பர் சிங், மூன்று பெண் குழந்தைகளைப் பெற்ற பின், நான்காவது குழந்தையாவது ஆணாகப் பிறக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார். ஆனால் அந்தக் குழந்தையும் பெண்ணாகப் பிறக்கிறது. அதனை, ஆண் பிள்ளை போல வளர்க்க முற்படுகிறார். காலம் மறக்காத வரலாற்று நிகழ்வின் பின்னணியில் மனிதர்களின் கதையாக விரியும் இந்த உணர்ச்சிகரமான படத்தைத் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் வெளியிடுகிறது. அதிலிருந்தே இந்தப் படம் சொல்லவரும் கருப்பொருளின் முக்கியத்துவம் நமக்குப் பிடிபடும்  /tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக