ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

ஜெயந்தி Natarajan ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தப்ப முடியுமா?

Kathir : ஜெயந்தி சொல்வதை நம்ப முடியாததற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முக்கியமானது டைமிங். மத்திய புலனாய்வு கழகம் (சி.பி.ஐ) அவரை டெல்லிக்கு அழைத்து விசாரிக்க நாள் குறித்த உடனே அவரது கடிதம் பத்திரிகையில் லீக் ஆகிறது. சிபிஐ விசாரணை எதை பற்றி இருக்கும் என்பது குழந்தைக்கு கூட தெரியும். ஊழல்தான். ஜெயந்தி சுற்றுச் சூழல் துறையின் அமைச்சராக இருந்தபோது, பல முறைகேடுகள் நடந்ததாக சி.பி.ஐ.க்கு தகவல் கிடைத்தது. கிடைத்த தகவலின் அடிப்படையில் எல்லாம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவிட முடியாது. தகவல் சரிதானா, ஊழல் நடந்தது என்பதற்கு கொஞ்சமாவது அடையாளங்கள் இருக்கிறதா, போதுமான ஆதாரங்களை திரட்ட வழி உண்டா, வழக்கு தொடர்ந்தால் கோர்ட்டில் நிற்குமா என்பதையெல்லாம் ஆராய வேண்டும்.
அதை ப்ரிலிமினரி என்கொயரி என்பார்கள். பூர்வாங்க விசாரணை. அப்படி ஜெயந்தி துறை சம்பந்தமாக ஒன்றல்ல, இரண்டல்ல, ஐந்து பூர்வாங்க விசாரணைகளை சி.பி.ஐ நடத்தி முடித்து, அறிக்கைகளையும் தயார் செய்திருக்கிறது. ஜெயந்தியிடம் கேட்க வேண்டிய கேள்விகள் பட்டியலையும் ரெடியாக வைத்திருக்கிறது. இது பிஜேபி ஆட்சி எடுத்த நடவடிக்கை அல்ல. காங்கிரஸ் அரசு தெரியாமல் போட்ட சேம்சைட் கோலும் அல்ல. நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பான விசாரணையின் தொடர்ச்சியாக, சுப்ரீம் கோர்ட் ஆணைப்படி ஐ.மு.கூட்டணி அரசு நியமித்த நீதிபதி எம்.பி.ஷா கமிஷன் கண்டுபிடித்த ஊழல்கள். ஒடிசாவில் மட்டுமே 59,000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மொத்த தொகை 2ஜி ஊழலில் சொல்லப்பட்ட தொகையை தாண்டியிருக்கலாம். தொழிற்சாலைகள் அமைக்கும்போது சுற்றுச்சூழல் பல வகையிலும் பாதிக்கப்படுகிறது. நதி நீர், நிலத்தடி நீர், காடுகள், மலைகள், அவற்றை நம்பி உயிர் வாழும் பழங்குடி மலைவாழ் மக்கள், விலங்குகள், பறவைகள் எல்லாருக்கும் ஏதோ ஒரு வகையில் மோசமான விளைவுகள் ஏற்படுகிறது. இந்த பாதிப்புகளை தடுக்க இந்திரா காந்தி துறையாக உருவாக்கி, ராஜீவ் காந்தி அமைச்சகமாக மேம்படுத்தியதுதான் சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம். தாழப் பறக்கும் காக்கைகள் -20: ஜெயந்தி தப்ப முடியுமா? பல ஆயிரம் கோடி முதலீடு செய்து ஆலைகள் அமைக்க முன்வரும் தொழிலதிபர்கள் முதலில் இந்த அமைச்சகத்தில் ஓகே பெற வேண்டும். சி.பி.ஐ தாக்கல் செய்துள்ள முதல் 3 பூர்வாங்க விசாரணை அறிக்கைகளில் ஜெயந்தி அளித்த ஒப்புதல்கள் சுட்டப்பட்டுள்ளன. ஜார்கண்ட் மாநிலத்தின் சரண்டா காடுகள், அனுக்கா வனங்கள் ஆகியவற்றில் சுரங்கம் தோண்ட ஜிண்டால் ஸ்டீல், ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல் ஆகிய கம்பெனிகளுக்கு அவர் அனுமதி வழங்கியிருந்தார். விதிகளை மீறி அனுமதி வழங்க பெரும் தொகை கைமாறியதாக 2013லேயே செய்திகள் வெளிவந்தன. இந்த அனுமதிகள் பற்றி சி.பி.ஐ அறிக்கை தாக்கல் செய்த தேதி 2014 அக்டோபர் 24 மற்றும் 28. மறுநாள் எகனாமிக் டைம்ஸ் இந்த செய்தியை பிரசுரிக்கிறது. ஜெயந்தியை விசாரிக்கப் போவதாக சி.பி.ஐ அதிகாரி சொன்ன தகவலும் அதில் இருக்கிறது. இந்த செய்தி வெளியானதில் இருந்தே ஜெயந்தி தரப்பில் பதட்டம் கவ்வியதை டெல்லி ஊடக வட்டாரத்தில் ஊர்ஜிதம் செய்கிறார்கள். ஆளும் கட்சியின் செய்தி தொடர்பாளர் என்ற அடிப்படையில் ஜெயந்தி அனைத்து செய்தியாளர்களுடனும் நல்ல தொடர்பு வைத்திருந்தார். இந்த நெருக்கடியில் இருந்து மீள பிஜேபியில் சேர்வதுதான் ஒரே வழி என்று காங்கிரஸ் கட்சியில் ஜெயந்தி மீது அதிருப்தியில் இருந்த இரண்டு அமைச்சர்கள் பகிரங்கமாகவே செய்தியாளர்களிடம் சொன்னார்கள். பிஜேபி தலைவர் அமித் ஷாவை ரகசியமாக ஜெயந்தி சந்தித்து பேசினார் என்ற உறுதி செய்ய முடியாத தகவலும் பரவியது. தாழப் பறக்கும் காக்கைகள் -20: ஜெயந்தி தப்ப முடியுமா? அப்போதுதான் சோனியாவுக்கு கடிதம் எழுதுகிறார் ஜெயந்தி. 2013 டிசம்பர் 20ம் தேதி ராஜினாமா செய்தவர் (அதாவது சோனியா - ராகுல் உத்தரவுப்படி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்), அடுத்த ஆண்டு நவம்பர் வரை (அதாவது சி.பி.ஐ நெருங்கும் தகவல் வெளியாகும் வரை) என்ன செய்து கொண்டிருந்தார்? காங்கிரஸ் பெரும் புள்ளி ஒருவரை விசாரித்தபோது, ஊர்ஜிதம் ஆகாத செய்திகள் பற்றி கருத்து சொல்வதில்லை என்று கூறி விலகப் பார்த்தார். பழைய அரசில் அவரது நண்பர்களாக இருந்த சிலர் இப்போது ஆளும் கட்சியில் சேர்ந்து பொறுப்புகள் பெற்றிருப்பதை சுட்டிக் காட்டியதும் அவரது பிடிவாதம் தளர்ந்தது. 'வெளியேறிய யாரும் மோசமான குற்றச்சாட்டுகளில் சிக்கவில்லை. அவர்கள் சோனியா - ராகுல் மீது தனிப்பட்ட புகார்களை கூறவும் இல்லை. ஜெயந்தி மட்டும் பிஜேபிக்கு போக ஏன் இந்த வழியை தேர்ந்தெடுத்தார் என்பது எனக்கும் விளங்கவில்லை' என்றார். கொஞ்சம் யோசித்து சொல்லுங்களேன் என்றதும் அவரே தொடர்ந்தார்: "சி.பி.ஐ பிடியில் இருந்து தப்ப பிஜேபி அரசின் உதவி தேவை என்றால், 'நான் செய்த குற்றங்கள் எல்லாவற்றுக்கும் சோனியா - ராஜீவ்தான் காரணம். அவர்கள் உத்தரவுப்படியே விதிகளை மீறி தொழிலதிபர்களுக்கு அனுமதி வழங்கினேன். அதன் மூலம் கிடைத்த ஆதாயங்கள் அனைத்தும் அம்மா - மகனிடமே சேர்க்கப்பட்டது' என்று வாக்குமூலம் மாதிரி அறிக்கை விடுங்கள்" என்று யாரோ கூறியிருக்க வேண்டும் என்றார். யாரோ என்பதை அமித் ஷா என்று எடுத்துக் கொள்ளலாமா என்றதும் 'இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள். அப்போது தானாக தெரியும்' என்று சொல்லியபடி அந்த காங்கிரஸ் புள்ளி நகர்ந்து விட்டார். இந்து நாளிதழுக்கு கொடுக்கப்பட்ட ஜெயந்தியின் கடித நகலை மீடியாதான் லெட்டர் பாம் என வர்ணிக்கின்றன. பொட்டு வெடி அளவுக்குக்கூட அதில் வெடி மருந்து இல்லை. அமைச்சர் பதவியை பறிகொடுத்த புலம்பல்தான் அதிகம் கேட்கிறது. மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஒரே நபர் இவர்தானாக்கும் என்ற கேள்வி எழுகிறது. எத்தனையோ பேர் நீக்கப்பட்டுள்ளனர், துறை மாற்றப்பட்டுள்ளனர். அமைச்சரவை மாற்றம் நடக்கும்போது பலர் வருவார்கள், சிலர் போவார்கள். அது சகஜம். நமது தமிழ்நாட்டில் பார்க்காததா? நேற்று இருந்தார் இன்று இல்லை என்பது அதிமுக அமைச்சரவையின் இலக்கணமாகிப் போனது. யாருக்காவது காரணம் சொன்னார்களா, யாரும் கேட்கத்தான் செய்தார்களா? கொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி... என்று பட்டினத்தார் பாடலை ரிங்டோனாக வைத்துக் கொள்கிறார்கள். தப்பா? அன்செரமோனியஸ் எக்சிட் என்பார்களே, அதுபோல வெளியேற்றி தன்னை அவமதித்து விட்டதாக குமுறுகிறார். வெளியேற்றப்படுவதே அவமதிப்புதான். அவமதித்து வெளியே தள்ளினாலும் வெளியே தள்ளி அவமதித்தாலும் வித்தியாசம் ஏதுமில்லை. ஆனால் ஜெயந்திக்கு அப்படி நேரவில்லையே. பிரதமர் அழைத்து சொல்லி, இவர் கடிதம் கொடுத்து, அதை அவர் ஏற்று. இவரது பணிகளை பாராட்டி பதில் கடிதமும் அனுப்பியதாக இவரே சொல்கிறாரே, சோனியாவுக்கு எழுதிய கடிதத்தில். சோனியாவிடம் கேட்டபோதும்கூட கட்சிப்பணிக்கு தேவைப்படுகிறீர்கள் என்ற பதில் வந்ததாக கூறுகிறார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சியை காப்பாற்றும் பொறுப்பை ஜெயந்திக்கு ஒப்படைத்து இருக்கிறார்கள் சோனியாவும் மன்மோகன் சிங்கும். அதற்காக பெருமைப்பட வேண்டும். ஆனால் பாருங்கள், 'நான் அறைக்குள் போனதும் மன்மோகன் சிங் எழுந்து நின்றார். அவர் பதட்டமாக இருந்தார். கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்திருக்கிறது, நீங்கள் ராஜினாமா செய்யச் சொல்லி...' என்று பிரதமர் அறைக்குள் நடந்ததை விவரிக்கிறார் ஜெயந்தி. கேவலமாக இருக்கிறது. ஒரு பிரதமரை அசிங்கப்படுத்த நினைத்து ஜெயந்தி இவ்வாறெல்லாம் ரகசியக் காப்பு பிரமாணத்தை மீறிப் பேசுகிறார் என்றால் நிச்சயமாக அவரது நோக்கம் பலிக்காது. பதவி இழந்த ஓராண்டு காலத்துக்கு பிறகும் அதன் மீதிருந்த பற்றை விட முடியாமல் தவிக்கும் ஏக்கம்தான் இந்த வார்த்தைகளில் பிரதிபலிக்கிறது. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் ரேஞ்சுக்கு தனது ராஜினாமாவுக்கு காரணம் கேட்கிறார் ஜெயந்தி. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி சொன்னதுபோல, ஜெயந்தி பதவி இழந்த காரணம் அவரைத் தவிர எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது. அவரது அமைச்சகம் சம்பந்தப்பட்ட ஃபைல்கள் சென்னைக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், இங்கே அதிகாரி அல்லாத ஒரு பெண்மணி மூலமாகத்தான் அமைச்சருடன் பேசி முடிக்க முடியும் என்றும் அப்போதே நாடு முழுவதும் பேச்சு நிலவியது. 350க்கு மேற்பட்ட பெருந்தொழில் நிறுவன ஃபைல்கள் அவரால் பெண்டிங்கில் வைக்கப்பட்டு இருந்த உண்மை அதிகாரிகள் மத்தியில் பகிரங்கமாக விவாதிக்கப்பட்ட ஒன்று. அவ்வளவு ஏன்? பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் மேடைகளில் கர்ஜித்த நரேந்திர மோடியே சொன்னாரே: ‘இப்போதெல்லாம் டெல்லியில் புதிய வரி ஒன்று விதிக்கிறார்களாம். அதை செலுத்தாமல் சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் ஒரு ஃபைலும் மூவ் ஆகாதாம். அந்த வரிக்கு ஜெயந்தி டேக்ஸ் என்று பெயராம்..'. சோனியா டேக்ஸ், ராகுல் டேக்ஸ் என்று மோடி பேசவில்லை. மற்ற அமைச்சர்கள் லஞ்சம் வாங்குகிறார்கள் என்றும் பெயர் சொல்லவில்லை. ஜெயந்தி டேக்ஸ் என்று இவருக்கு மட்டும்தான் கவுரவம் அளித்தார். அந்த அளவுக்கு பிரபலமான ஒரு விஷயத்தை கேள்வியே படாதவர் போல ஜெயந்தி இன்று பேட்டி கொடுப்பதும் சோனியாவுக்கு கடிதம் எழுதுவதும் வடிகட்டிய அபத்தம். அன்றைக்கே மோடிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வழக்கு தொடர்ந்திருக்க வேண்டாமா? சம்பந்தப்பட்ட தொழிலதிபர்கள் தன்னிடம் கதை கதையாக சொன்னார்கள் என்றார் மோடி. அவருக்கு தொழிலதிபர்களோடு இருக்கும் நெருக்கம் உலகம் அறிந்தது. அவர்கள் பொய் பேச அவசியம் இல்லை. ஏனென்றால், ராகுல் காந்தியிடமும் தொழிலதிபர்கள் இதே புகாரை வைத்தார்கள். தொழிலதிபர்கள் எந்தக் கட்சியிலும் உறுப்பினர்கள் அல்ல. எந்தக் கட்சி வந்தாலும் தனது தொழிலுக்கு பலன் கிட்ட வேண்டும் என விரும்புபவர்கள். ஆளும் கட்சிக்கு மட்டுமல்ல ஆளும் வாய்ப்பு கொண்ட எதிர்க்கட்சிக்கும் உண்மையான உளவுத் தகவல்களை கொடுப்பதே அவர்கள்தான். அப்படி கிடைத்த தகவலின் அடிப்படையில் ராகுல் காந்தியும் ஒரு கூட்டத்தில் தொழிலதிபர்களுக்கு ஒரு வாக்குறுதி அளித்தார். ‘சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் ஃபைல்கள் நகர மறுப்பது குறித்து என் கவனத்துக்கு கொண்டு வந்தீர்கள். இனிமேல் அவ்வாறு நடக்காது. ஒப்புதல் குறித்த அரசின் முடிவுகள் நியாயமாகவும், வெளிப்படையாகவும், தாமதமின்றியும் எடுக்கப்படும்' என்று வர்த்தக சம்மேளன கூட்டத்தில் ராகுல் அறிவித்தார். எப்போது தெரியுமா? 2013 டிசம்பர் 21ம் தேதி. ஜெயந்தி ராஜினாமா செய்த மறுநாள். ஆதிவாசிகள், விலங்குகள், சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சில தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என்றுதான் சோனியாவும் ராஜீவும் ஜெயந்திக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள். இது இயல்பானது மட்டுமல்ல, பாராட்ட வேண்டிய விஷயமும்கூட. எந்த நிறுவனத்துக்கும் ஒப்புதல் கொடுக்கச் சொல்லி அவர்கள் சிபாரிசுக் கடிதம் எழுதவில்லை. சிபிஐ வழக்குகள் ஜெயந்தி ஒப்புதல் கொடுத்த தொழில்கள், சுரங்கங்கள் சம்பந்தப்பட்டவை. தானும் தனது குடும்பமும் 4 தலைமுறைகளாக காங்கிரசுக்கு சேவை புரிந்த கதையையும் கண்ணீர் மல்க ஜெயந்தி நினைவு கூர்கிறார். அதற்கு இளங்கோவன் பதில் கூறியுள்ளார். ஒரு ஆதரவாளர்கூட இல்லாத ஜெயந்திக்கு 27 ஆண்டுகள் எம்.பி பதவி கொடுத்து தமிழக காங்கிரசில் பல தலைவர்களின் அதிருப்தியை ராஜீவும் பிறகு சோனியாவும் சம்பாதித்துக் கொண்டதுதான் மிச்சம். அதே போல ஜெயந்தியின் தாத்தா பக்தவத்சலம் தமிழக முதல்வராக இருந்தபோதுதான் இந்தி எதிர்ப்பு போராட்டமும் உணவுப் பஞ்சமும் உலுக்கியது. தமிழ்நாட்டில் அதன் பிறகு காங்கிரஸ் தலைதூக்கவே இல்லை. ஜெயந்தி விவகாரம் எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அனுதாபத்தையோ ஆதரவையோ ஈர்க்கும் பிரச்னை அல்ல. ஊழல் வழக்கு வளையத்தில் சிக்காதிருக்க ஒரு முன்னாள் அமைச்சர் மேற்கொண்டுள்ள மொக்கையான முயற்சியாகவே தெரிகிறது. பெண்ணை வேவு பார்த்த விவகாரத்தில் மோடியை தாக்கிப் பேச காங்கிரஸ் மேலிடம் இட்ட கட்டளை தனக்கு பிடிக்கவில்லை என்று ஜெயந்தி இப்போது சொல்வதில், எப்படியாவது மோடியின் அனுதாபத்தை பெற வேண்டும் என்ற துடிப்புதான் அப்பட்டமாக வெளிப்படுகிறது. சோனியாவும் ராகுலும் மன்மோகனும் புகார்களுக்கு அப்பாற்பட்ட நல்லவர்கள் என்று நாடு நம்பிவிடவில்லை. ஆனால் பதவி இழந்த துக்கம் தாளாதவர்களின் புலம்பலை ஒலிபெருக்கி அந்த தலைவர்களின் நிம்மதியைக் கெடுக்கலாம் என பிஜேபி நினைத்தால் அது நடக்காது. சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் ஊழல் வழக்குகள் தடையின்றி விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டனை பெற மோடி அரசு வழி விட வேண்டும். ஊழல் குற்றவாளிகளோடு எக்காரணம் கொண்டும் எந்த வகையிலும் நட்பு பாராட்டுவது பிஜேபியின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கிவிடும்.
//tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக