செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

இளையராஜாவையும் ரஹ்மானையும் துணிந்து தோலுரித்த இசை சூரியா!




இளமை துள்ளோ துள்ளுவென்று துள்ளுகிறது. கதாநாயகியின் தொப்புளை பியானோவாக்கும் காட்சியில் படம் பார்ப்பவர்களின் இதயம் ஏகத்துக்கும் எகிறி குதிக்கிறது.

நாயகியின் பெயர் சாவித்ரியாம். இடுக்குப்பல். வட்டமான முகம். ரோஜா நிறம். கழுத்துவரை பக்கா ஃபேமிலி லுக். முகலாய இளவரசிகள் பயன்படுத்திய மஸ்லின் துணிதான் இடைவேளை வரை இவருக்கு தாவணி. டிரான்ஸ்பரண்டாக இரு கோடுகள் ஜெயராஜின் ஓவியம் போல அப்பட்டமாக கேமிராவில் பதிவாகிறது. இவரது இடுப்புக்கு ஸ்பெஷல் லைட்டிங் வைத்திருக்கிறார் கேமிராமேன். நடிப்புக்கு ஜோதிகாவையும், சிம்ரனையும் டிப்பி அடிக்கிறார். நிச்சயமாக எஸ் ஜே சூர்யா ஒரு பெரிய காரியத்தை தமிழ் சினிமாவுக்கு செய்துள்ளார் நன்றி


சூர்யாவுக்கு முகம் கொஞ்சம் முத்தலாக இருந்தாலும் சேட்டைகளுக்கு குறைவில்லை. பாரதிராஜா மாதிரி கம்பீர குரல். இவருடைய பாம்புகடிக்கு சாவித்ரி மருந்து கொடுக்கும் லாவகத்தை பார்க்கும்போது, நம்மை ஏதாவது தண்ணிப் பாம்பாவது கொத்தித் தொலைக்கக்கூடாதா என்று ஆதங்கம் ஏற்படுகிறது.

படத்தின் தொடக்க காட்சிகள் படைப்பாற்றலின் உச்சம். இசை என்பது கேட்கக் கடவ உருவான சமாச்சாரம். அதை விஷூவலாக மாற்றிக் காட்டமுடியுமா என்கிற சவாலை ஏற்று அனுபவித்து இழைத்திருக்கிறார். குறிப்பாக மலைமுகட்டில் நின்றவாறே நோட்ஸுக்கு கை ஆட்டும் காட்சி ‘ஏ’ க்ளாஸ். டைட்டானிக்தான் இன்ஸ்பிரேஷன். இருந்தாலும் அதை தமிழ்ப்படுத்தியிருப்பதில் சூர்யாவின் தனித்தன்மை பளீரென்று கவர்கிறது. வனத்துக்கு நடுவே அருவிக்கு அருகில் ரெக்கார்டிங் தியேட்டர் மாதிரியான ஐடியாக்கள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கூட வந்திருக்க வாய்ப்பில்லை.

சத்யராஜை இப்படியும் ஓர் இயக்குனர் பயன்படுத்த முடியுமா என்று காட்சிக்கு காட்சி ஆச்சரியம். அவருடைய நடிப்புலக வாழ்வின் மைல்கல்.

எஸ்.ஜே.சூர்யா, தமிழ் நிலம் தன்னகத்தே உருவாக்கியிருக்கும் மாபெரும் இண்டெலெக்ச்சுவல். யாருடைய தாக்கத்தாலும் பாதிக்கப்படாமல் உருவாகியிருக்கும் சுயம்பு.

‘இசை’ வணிகரீதியாக வெல்லுகிறதோ இல்லையோ, படைப்பாற்றல் ரீதியாக தமிழ் சினிமாவின் புலிப்பாய்ச்சல். சினிமா என்பது டைரக்டர்களின் மீடியம் என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபித்திருக்கும் படம்.

ஓக்கே. படம் பற்றிய உள்ளடக்கரீதியான விமர்சனம் ஓவர்.

* * * * * * *

இசை, இன்னொரு மாதொருபாகன்.

தமிழ்-இந்திய பிரபலங்கள் குறித்து இதுவரை நாம் வாய்மொழிவரலாறாக கேள்விப்பட்ட அத்தனை வக்கிரங்களையும் காட்சியாக்கி இருக்கிறது. மொத்த கேஸையும் தூக்கி சத்யராஜ் கதாபாத்திரத்தின் மீது சுமத்தியிருக்கிறது.

இது புனைவு. கதாபாத்திரங்கள் முழுக்க முழுக்க கற்பனையே. படைப்பாளிக்கு கருத்துச் சுதந்திரம் இருக்கிறது மாதிரி பஜனை கோஷங்கள் வேலைக்கு ஆகாது.

சூர்யா, ஏ.கே.சிவாவாக அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே அவர் கொடுக்கும் போஸ் வாழும் இளம் இசையமைப்பாளரை (தமிழ்ச்சூழலில் இன்றைய தேதிக்கு 62 வயது வரைக்கும் ‘இளம்’தான்) நினைவுபடுத்துகிறது. அந்த பாத்திரத்தின் ஒர்க்கிங் ஸ்டைல், தனிப்பட்ட பண்புகள் அனைத்துமே அவரை மனதில் நிறுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது. கூடுதலாக ‘இசைக்கடல்’ என்கிற பட்டம் வேறு.

இசைக்கடலுக்கு வில்லன் இசைதேவனாம். தமிழில் இசைக்கு யார் தேவன் என்று கேட்டால் பிறந்த குழந்தை கூட ‘ங்கா..ங்காஜா’ என்று மழலைமொழியில் சொல்லிவிடும்.

தான் துப்புவது கூட இசை. அனைவரும் தன் காலில் விழுந்து அதை பொறுக்கிக் கொண்டு போகவேண்டும் மாதிரி தன்னகங்காரம் என்பதெல்லாம் அப்படியே அவருக்கு பொருந்துவது மாதிரி காட்சியமைப்புகள். அதுவும் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணிபுரிந்த இயக்குனர் ஒருவரே முகத்தில் காறித்துப்பப்பட்டு போவது மாதிரி ஒரு காட்சி…

படம் நெடுக இதுமாதிரி காட்சிகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

இதெல்லாம் இசைதேவன் மீதான இயக்குனரின் விமர்சனமாக இருக்கலாம். பிரச்சினை இல்லை.

இசைக்கடலை நிலைகுலைக்க வைக்க இசைத்தேவன் செய்யும் கற்பனைக்கும் எட்டாத வக்கிரமான செயல்பாடுகள்?

இது கற்பனை என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்தாலும் படம் பார்க்கும் ரசிகன், நிஜத்தையும் நிழலையும் ஒப்பிட்டுப் பார்த்து அவரை ‘கதாபாத்திர படுகொலை’ (நன்றி : யாரோ ஒரு தமிழிலக்கியவாதி) செய்துவிட மாட்டானா?

தமிழிலக்கியம்தான் வக்கிரம் நிறைந்து வன்மமான இரத்த பூமியாகி இருக்கிறது. அந்த போக்கினை சினிமாவில் தொடங்கி வைத்திருக்கிறார் சூர்யா. இனி வேண்டாதவர்களை போட்டுத்தள்ள சினிமாவை ஆயுதமாக பயன்படுத்துவார்கள் படைப்பாளிகள். யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் என்னவாக வேண்டுமென்றாலும் சித்தரித்து கருத்து சுதந்திரத்தை காத்துக் கொள்வார்கள்.

ஏன் இந்தப் படத்தைப் பற்றி எதையும் பேச முடியாமல் வாயை இறுக தைத்துக் கொண்டிருக்கிறார்கள் இண்டஸ்ட்ரிகாரர்கள் என்பது புரிகிறது. படம் இத்தனை ஆண்டுகளாக பிசினஸ் ஆகாததின் ரகசியமும் அதுவாகதான் இருக்கக்கூடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக