வியாழன், 5 பிப்ரவரி, 2015

பிஜேபி சுப்ரமணியன் யார்? ஊழல் ராணியின் தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் ஊழல் சக்கரவர்த்தி!

ஸ்ரீரங்கத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளரின் தகுதி என்ன? மக்களின் காலில் விழுந்து வாக்கு சேகரிக்கும் சுப்ரமணியன் யார்? பா.ஜ.க இடைத்தேர்தல்சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட பாசிச ஜெயாவின் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளரின் தகுதி என்ன? மக்களின் காலில் விழுந்து வாக்கு சேகரிக்கும் சுப்ரமணியன் யார்? மக்களை ஏமாற்றி நாமம் போட்டு அதே நாமத்தை இன்று அடையாளமாக்கி பாஜகவின் பல்லக்கில் பவனி வருகிறார் இவர். திருச்சி சென்று வினவு செய்தியாளர்கள் திரட்டியிருக்கும் அதிர்ச்சியூட்டும் செய்தி அறிக்கை. படியுங்கள். பாஜகவின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்துங்கள்!
- வினவு சுப்ரமணிய வைரஸ் நிகழ்த்திய முதல் தாக்குதல்!
தோழரே, சரியா சொல்லணுமுனா அது 1993-ம் வருசம். எங்க ஊரு திருச்சி துறையூருக்கு பக்கத்தில இருக்கும் கரட்டாம்பட்டி. ரொம்ப சின்ன கிராமம். மக்கள் யாருக்கும் பெரிசா படிப்பறிவு கிடையாது. ஊர்ல படிச்ச முதல் தலைமுறையே என்னோடது தான். நம்ப வினவு தம்பிங்க ரொம்ப விலாவாரியா ரிசேச் பண்ணி எழுதியிருக்காக எனக்கு எனக்கு தெரிஞ்சு  இது மாதிரி  ஜெனலிசம் தமிழ்ல ரொம்ப அரிது

93-ம் வருசத்தில ஒரு நாள் ஊரெல்லாம் பரபரப்பா இருந்திச்சி. யாரோ எங்க வயல்லே அஸ்திவாரம் பறிக்கிறாங்கன்னு பேசிகிட்டாங்க. எல்லாரும் அவங்கவங்க வயலைப் பார்க்க ஓடிப் போனோம். எங்களுக்கு ஒரு ஏக்கர் 41 செண்டு நிலம் இருந்திச்சி. அந்த சமயத்துல எங்க நிலத்தில சோள விதை தூவி இருந்தோம்”
விவசாயிகளிடம் பறிக்கப்பட்ட நிலம் பற்றிய விபரங்களைக் காட்டும் வரைபடம்
விவசாயிகளிடம் பறிக்கப்பட்ட நிலம் பற்றிய விபரங்களைக் காட்டும் வரைபடம்
“நாங்க போய் பார்க்கும் போது ஏதேதோ மிஷின்லாம் எறக்கியிருந்தாங்க. எங்க நிலத்துல கோடு கிழிச்சி பள்ளம் பறிச்சிட்டு இருந்தாங்க. என்னோட நிலத்துல தூவி இருந்த சோளத்தையெல்லாம் வாரிக் கொட்டிட்டாங்க. துரைசாமி தம்பு ரெட்டியாரு எல்லாத்தையும் மேப்பார்வை பார்த்துகிட்டு நின்னாரு”.
“ ’என்னா துரைசாமி இது.. கேக்காம கொள்ளாம அஸ்திவாரம் பறிக்க வந்திருக்கியே இது என்னா நாயம்னு’ அவரைப் பார்த்து கேட்டோம். அதுக்கு அவரு, ‘எல்லாம் ஊர் நன்மைக்குத் தான்.. இங்க ஒரு காலேஜு வரும் நம்ம பிள்ளைங்க எல்லாம் படிக்கலாம். ஒரு நல்ல காரியத்த தடுக்காதீங்க’ அப்படின்னு சொன்னாரு”
”துரைசாமி ரெட்டியாரு தி.மு.க கட்சிக்காரரு. அப்ப அவரு தான் பிரெசிரெண்டு. சரி நம்ம தலைவரே சொல்லிட்டாரே அப்ப நல்லதுக்கா தான் இருக்கும்னு கேட்டுகிட்டோம். ஆனா நிலத்துக்கு வெலை பேசலையேன்னு கேட்டோம். அதுக்கு அவரு, ‘முதல்ல காரியம் நடக்கட்டும், அப்பால அரசாங்கத்து கிட்டே சொல்லி எதுனா பாக்கலாம்’ அப்படின்னு சொல்லி முன்பணமா வச்சிக்கங்கன்னு ஆளுக்கு ஆயிரம் ரெண்டாயிரம் மூணாயிரம்னு நிலத்தோட அளவுக்கு தக்க கொடுத்தாரு. வாங்கிட்டு வந்துட்டோம். ஆரம்பத்துல மொத்தம் 62 ஏக்கரா நெலத்த பிடிச்சிக்கிட்டாங்க”
”காலேஜு கட்டிடம்னு சொன்னா மொதல்ல ரெண்டு பெரிய ஷெட்டு தான் போட்டாங்க. தோ இந்த மாதிரி ஆஸ்பெஸ்டாசு கூரை போட்ட செட்டு தான். கட்டிடம் எழும்பி ஒரே மாசத்துல காலேஜு தொறந்தாங்க. அப்ப தான் எங்களுக்கு சேர்மன் சுப்பிரமணியத்தை தெரியும். அவருக்கும் துறையூர் பக்கத்துல தான் அப்படின்னு சொல்லிகிட்டாங்க. ரெட்டியாரு எங்க கிட்டே சொன்னா மாதிரி அது கெவருமெண்டு காலேஜு இல்லைன்னு தெரிஞ்சு கிட்டோம்”
“நிலத்தை பறிகொடுத்தவங்க எல்லாருமா சேர்ந்து போயி காலேஜு சேர்மனை பாத்தோம். அவரு தேனா பேசுனாரு. அவரு கூட துரைசாமி தம்பு ரெட்டியாரும் இருந்தாப்பல. ’காலேஜு கட்டவே காசு பத்தலை, பேங்குல லோனு கேட்டிருக்கோம்.. அதுக்கு நெலப் பத்தரம் வேணும்’ அப்படின்னு சேர்மன் சொன்னாரு. வெலை பேசாம கொள்ளாம எப்படி எழுதிக் குடுக்க முடியும் அப்படின்னு நாங்க கேட்டோம். அதுக்கு நெலத்தை தம் பேர்ல மாத்தி பேங்குக்கு அனுப்பினா தான் அதுக்கு என்னா மதிப்புன்னு அரசாங்கம் சொல்லும், மதிப்பு தெரிஞ்சா தான் லோனு கெடைக்கும்.. லோனு வந்தா தான் காசு தர முடியும்னு சேர்மன் சொன்னாரு”
“சேர்மன் சொன்னதை நம்புங்கன்னு துரைசாமி ரெட்டி கேட்டுகிட்டாரு. வேணும்னா முன் பணமா கொஞ்சம் வாங்கித் தாரேன்னு சொன்னாரு. அப்படியே ஆளுக்கு ரெண்டாயிரம் மூவாயிரம்னு அதே எடத்துல வச்சி வாங்கியும் குடுத்தாரு. ’ஒரு நல்ல காரியத்த தடுக்க வாணாம்.. எனக்கு தான் புள்ள குட்டி இல்லே.. இந்தக் காலேஜுல நாளைக்கு உங்க பிள்ளைங்க தானே படிக்க போகுது’ அப்படின்னு தலைவர் துரைசாமி ரெட்டி கேட்டாரு. சரி தலைவரு நம்ம நல்லதுக்கு தான் சொல்லுவாருன்னு நீட்டின பேப்பர்ல எல்லாம் கைநாட்டு வச்சிட்டு குட்டுத்த காசை வாங்கிட்டு வந்தோம்”
நில-அபகரிப்பு
’நான் குடுக்க வேண்டியத ரெட்டியாரு கிட்டே குடுத்துட்டேன்.. நீங்களும் எழுதிக் குடுத்தாச்சி.. இனிமே ஒன்னியும் புடுங்க முடியாது, ஆனத பாருங்க’ – நிலஅபகரிப்பு பற்றி சேர்மன்
”இந்தா அந்தான்னு ஆறு வருசம் ஓடிப் போயிருச்சு. நாங்களும் கேக்காத முறையில்லே. ரெட்டியாரு கிட்டே கேட்டோம். அவரு கைவிரிக்கவும், சேர்மன் கிட்டே கேட்டோம். ’நான் குடுக்க வேண்டியத ரெட்டியாரு கிட்டே குடுத்துட்டேன்.. நீங்களும் எழுதிக் குடுத்தாச்சி.. இனிமே ஒன்னியும் புடுங்க முடியாது, ஆனத பாருங்க’ அப்படின்னு தூக்கியெறிஞ்சி பேசிட்டாரு. எங்காளு ஒருத்தரு துரைசாமி ரெட்டி கிட்டே சண்டை போட்டு அவரோட டி.வி.எஸ் 50 மொப்பட்டை தூக்கிட்டு வந்துட்டாரு. இன்னம் அந்த மொப்பட்டு அவரு கிட்டே தான் இருக்கு”
“நெலமில்லாதவன் பொணத்துக்கு சமானம்னு சொல்லுவாங்க. எங்க நிலம் போச்சு தோழரே.. எங்களை ஏமாத்திட்டாங்க. பொறவு 2000-மாவது வருசத்துல விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பைப் பத்தி கேள்விப் பட்டோம். படிப்பறிவில்லாத எங்களை ஏறி மிதிச்சவங்க நக்சல்பாரி அமைப்புன்னா பயந்து போவாங்கன்னு கேள்விப்பட்டோம். ஏமாந்த விவசாயிகள்ல விலை போகாம நியாயத்துக்காக நின்ன 14 பேரு ஒன்னு சேர்ந்து பொம்மன் தோழருக்கு பெட்டிசன் அனுப்புனோம். அதுக்கு பின்னே நடந்த எல்லா விசயமும் இந்த பைல்ல வச்சிருக்கேன் நீங்களே பாருங்க” ரட்டாம்பட்டியைச் சேர்ந்த விவசாயி தாங்கள் ஏமாற்றப்பட்ட கதையை எங்களிடம் விவரித்தார். கடந்த இருபதாண்டுகளில் இந்தக் கதையை தான் கண்ட ஆயிரக்கணக்கானோரிடம் ஆயிரக்கணக்கான முறை சொல்லி இருப்பார். என்றாலும், அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளிலும் அடிபட்ட வலி ஆழமாய் பதிந்திருந்தது. அது ஆறாத வடுவாக அந்த மக்களிடம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
அவர்கள் நம்ப வைத்துக் கழுத்தறுக்கப்பட்டவர்கள். தாங்கள் கவுரவமாக உழைத்துப் பிழைத்த நிலத்தின் மேல் உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள் ஒவ்வொன்றும் துரோகம் என்ற அஸ்திவாரத்தின் மேல் கட்டப்பட்டதை அறிந்தும் ஏதும் செய்ய முடியாத ஆற்றாமை அவரது வார்த்தைகளில் எதிரொலித்தது. விவசாயிகளின் வயிற்றிலடித்துக் கட்டப்பட்ட பொறியியல் கல்லூரியின் பெயர் ”ஜெயராம் என்ஜினியரிங் காலேஜ்” திருச்சியின் மிக முக்கியமான கல்விக் கொள்ளையன் ஒருவனுக்குச் சொந்தமானது இது.
உலகில் எங்கும் கேள்விப்பட முடியாத இந்த எத்து வேலையின் சூத்திரதாரியைப் புரிந்து கொள்வோம்.

சுப்பிரமணிய வைரஸ் உருவான வரலாறு!

தமிழிசை சவுந்தரராஜன்
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாவின் வேட்பாளராக சுப்பிரமணியம் அறிவிக்கப்பட்ட உடனேயே பொறி தட்டியது.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாவின் வேட்பாளராக சுப்பிரமணியம் அறிவிக்கப்பட்ட உடனேயே பொறி தட்டியது. நான்கு கல்லூரிகளை வைத்திருக்கும் இந்த நபர் எப்படியும் ஒரு மோசடிக்காரராகவே இருக்குமென்று விசாரித்து பார்த்தோம். அதற்கு எமது திருச்சி பகுதி தோழர்கள் முக்கிய தகவலொன்றை அனுப்பினர். ஆக்ஸ்போர்ட் சுப்பிரமணியம் என்று தற்போது அறியப்படும் கரட்டாம்பட்டி சுப்பிரமணியமாகிய பா.ஜ.க வேட்பாளர் ஒரு ஊரறிந்த அயோக்கியப் பயல் என்பதே அத்தகவல். உடன் வினவுவின் செய்தியாளர் குழு திருச்சிக்குப் பயணமானது.
திருச்சி – ஸ்ரீரங்கம் பகுதிகளில் ஓரளவுக்குப் பெரும்பான்மையானவர்கள் முத்து ராசா சாதியினர். ஓட்டுக்கட்சி தேர்தல் அரசியலின் விதிகளுக்கு உட்பட்டு காய்நகர்த்தும் தி.மு.கவும் அ.தி.மு.கவும் அதே சாதியைச் சேர்ந்தவர்களை களமிறக்க, பாரதிய ஜனதா கல்வி வியாபாரியான கரட்டாம்பட்டி சுப்பிரமணியனை களமிறக்கியது. அரசியல் கிசுகிசு பத்திரிகைகளின் வட்டத்தில் மெல்லிய சலசலப்பு ஒன்று எழுந்து அடங்கியது.
யார் இந்தக் கரட்டாம்பட்டியான்?
ஆறு நாட்டு வேளாளர்கள் என்றழைக்கப்படும் பிள்ளைமார் சாதியின் ஒரு சிறிய பிரிவைச் சேர்ந்தவர் இந்தச் சுப்பிரமணியன். திருச்சியைச் சுற்றியுள்ள பகுதியில் இவர்கள் சிறுபான்மையினர் என்றாலும் திருச்சியின் பெரும்பாலான வர்த்தகத்தை இவர்களே கட்டுப்படுத்துகின்றனர். மங்கள் & மங்கள், சாரதாஸ் போன்ற பெரிய வர்த்தக நிறுவனங்கள் இவர்களிடம் உண்டு. ஓரளவுக்குப் பணக்காரர்கள்.
பிரேமானந்தா
கரட்டாம்பட்டியானின் வாழ்க்கையில் முதன்முதலாக விளக்கேற்றி வைத்த புண்ணியவானின் பெயர் பிரேமானந்தா சுவாமிகள். ஆம், அதே பொறுக்கி புகழ் செக்ஸ் சாமியார் தான்.
ஆனால், கரட்டாம்பட்டி சுப்பிரமணியனின் ஆரம்ப காலங்கள் அத்தனை வளமானதல்ல. கீழ்நடுத்தர குடும்ப பின்னணி கொண்டவர். கல்லூரி படிப்பை முடித்த பின் எண்பதுகளில், தனது ஒன்றுவிட்ட சகோதரர் நடத்தி வந்த சிறிய நகைக்கடை ஒன்றில் சும்மா உட்கார்ந்து பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பார் என்றும், பிறகு சிறிய அளவில் பாத்திரக்கடை ஒன்றை சில காலத்திற்கு நடத்தியதாகவும் மக்கள் சொல்கிறார்கள்.
கரட்டாம்பட்டியானின் வாழ்க்கையில் முதன்முதலாக விளக்கேற்றி வைத்த புண்ணியவானின் பெயர் பிரேமானந்தா சுவாமிகள். ஆம், அதே பொறுக்கி புகழ் செக்ஸ் சாமியார் தான். திருச்சி பிரேமானந்தா ஆசிரமம் அப்போது இலங்கைத் தமிழர்களின் (சரியாகச் சொன்னால் இலங்கைவாழ் இந்தியத் தமிழர்களின்) மையமாக இருந்தது. அதற்கு ஒரு காரணமும் உண்டு.
இலங்கையில், குறிப்பாக கொழும்பு நகரின் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த இந்திய வம்சாவளித் தமிழர்கள் பலருக்கு திருச்சியுடன் ஒரு தொடர்பிருந்தது – காரணம், அவர்களின் பெரும்பான்மையினர் திருச்சியைப் பூர்வீகமாக கொண்ட ஆறுநாட்டு வேளாளர்கள் (பிள்ளைமார்). அந்த வர்த்தகர்களுக்கு இந்தியாவிலிருந்து சரக்குகள் சென்றது, அவர்கள் அங்கிருந்து சரக்குகளை அனுப்பினர்.
இந்த சரக்குப் பரிவர்த்தனைக்கான பணப்பரிமாற்ற மையமாக பிரேமானந்தா ஆசிரமம் விளங்கியது மிக இயல்பானதே – ஏனெனில், அவரே இலங்கையைச் சேர்ந்தவர் தான் என்பதோடு ஆசிரமம் அமைந்த பகுதியும் அதற்குத் தோதாகவே இருந்தது. இது தவிர பல அரசியல்வாதிகளின் கருப்புப் பண சுழற்சியின் மையமாகவும் அந்த ஆசிரமம் இருந்ததென்பது தனிக்கதை. பொறுக்கித்தனமும் கள்ளப் பணமும் பிரிக்க முடியாத கூட்டாளிகள் அல்லவா!
பிரேமனந்தாவுக்கு கிரிமினல் புத்தி இருந்த அளவுக்கு நிர்வாகத் திறன் இல்லை. வேலு நாயக்கருக்கே ஒரு ஐயர் வேண்டியிருந்தாரல்லவா! குறிப்பாக ஆசிரமத்திற்கு வந்து குவியும் கணக்கு வழக்கற்ற கருப்புப் பண மூட்டைகளை பராமரிப்பது, அதை முறையாக பதுக்குவது, வேறு தொழில்களில் முதலீடு செய்து கருப்பை வெளையாக்குவது போன்ற வேலைகளைப் பார்க்க ஆள் தேவைப்பட்ட நிலையில் பிரேமானந்தாவுக்கு முதலில் சுப்பிரமணியத்தின் மனைவி நெருக்கமாகிறார் – அவர் மூலம் சுப்பிரமணியம் அறிமுகமாகிறார்.
பிரேமானந்தா ஆசிரமம்
பிரேமானந்தா ஆசிரமம்
இடைக்குறிப்பு : எம்மிடம் சுப்பிரமணியத்தின் பழைய வரலாற்றை சொன்னவர்கள் பலரும் இந்த இடத்தில் வடிவேலுவின் “கணேச அய்யர் பேக்கரி” கதை ஒன்றைச் சொன்னார்கள். இருப்பினும் அதை மட்டுறுத்தியுள்ளோம். நமது நோக்கம் அரசியலின் பாற்பட்டதேயன்றி தனிப்பட்ட பாலியல் ஒழுக்கங்களும் அந்தப்புர அசிங்கங்களும் இரண்டாம்பட்சமானதே.
எப்படியோ பிரேமானந்தா ஆசிரமத்தின் கணக்கு வழக்குகளைக் கவனித்துக் கொள்ளும் முக்கியப் பொறுப்பில் சுப்பிரமணியம் அமர்கிறார். 1993-ம் ஆண்டு பிரேமானந்தாவின் புகழ் உச்சத்தில் இருந்த அதே காலகட்டத்தில் கரட்டாம்பட்டி கிராமத்தில் கல்லூரிக்கான வேலைகளைத் துவக்குகிறார் சுப்பிரமணியன். திருடனுக்கே தெரியாமல் அவனிடம் செய்யப்பட்ட திருட்டா, அல்லது பிரேமானந்தாவே கருப்பை வெளுக்கும் இந்த வேலையை சுப்பிரமணியத்திடம் ஒப்படைத்தாரா என்பது தேவ ரகசியம்.
1994-ம் ஆண்டு ஆசிரமக் கொலை மற்றும் வன்புணர்ச்சி வழக்கில் பிரேமானந்தா மாட்டிக் கொள்கிறார். பிரேமானந்தா ஆசிரமம் நக்கீரன் புண்ணியத்தில் உலகப் ‘புகழ்’ பெற்றுவிடுகிறது. அதே 1994-ம் ஆண்டு ஜெயராம் கல்லூரி துவங்கப்ப்பட்டது. இதில் இருக்கும் அவசரத்தை கவனித்தீர்களா? 1993-ம் ஆண்டின் பிற்பகுதியில் கட்டிட வேலைகளைத் துவங்கி 1994-ம் ஆண்டே – அதாவது, கட்டுமான வேலைகள் முடிந்தும் முடியாமலும் – கல்லூரியைத் துவங்கி விடுகிறார். ஆசிரமக் கணக்கப்பிள்ளை என்ற பல்லி வாலை கத்தரித்துக் கொண்டு சேர்மன் சுப்பிரமணியனாக அவதரிக்கிறார்.
1997-ம் ஆண்டு பிரேமானந்தா இரட்டை ஆயுள் தண்டனை பெறுகிறார் – அதே ஆண்டு சுப்பிரமணியம் ’ஆக்ஸ்போர்டு இன்ஜினியரிங் காலேஜ்’ என்ற இரண்டாவது கல்லூரிக்கான வேலையைத் துவங்குகிறார். ஆக்ஸ்போர்டு கல்லூரி 1998-ம் ஆண்டிலிருந்து செயல்படத் துவங்குகிறது. ஆயுள் தண்டனையில் ஒரு முடிவும் ஆக்ஸ்போர்டில் ஒரு துவக்கமும் இருப்பதை கவனியுங்கள்.
பிரேமானந்தா ஆசிரமம்
பிரேமானந்தா ஆசிரமத்திற்கு வினவு செய்தியாளர்கள் சென்று பேசிய போது கரட்டாம்பட்டி சுப்பிரமணியன் குறித்து பேசுவதற்கு பலரும் அஞ்சினார்கள்
பிரேமானந்தா ஆசிரமத்திற்கு வினவு செய்தியாளர்கள் சென்று பேசிய போது கரட்டாம்பட்டி சுப்பிரமணியன் குறித்து பேசுவதற்கு பலரும் அஞ்சினார்கள். தவிர்த்தார்கள்.
ஏறக்குறைய இதே காலகட்டத்தில் மேஜர் சீனிவாசன் என்பவர் தலைமையில் நடந்து வந்த அங்காளம்மன் பொறியியல் கல்லூரியின் நிர்வாகத்தில் ஒரு பங்குதாரராக நுழைகிறார் கரட்டாம்பட்டி சுப்பிரமணியன்.
சுப்பிரமணியன் நுழைந்த சில வருடங்களிலேயே அங்காளம்மன் பொறியியல் கல்லூரியின் நிர்வாகம் மொத்தத்தையும் ஆக்கிரமிக்கிறார். தொடர்ந்து மேஜர் சீனிவாசனுக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பிக்கிறார். நாங்கள் விசாரித்த சிலர் சுப்பிரமணியன் மேஜரின் மகனைக் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகச் செய்தார் என்றனர் – அத்தகவலை நம்மால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. எப்படியாயினும் 2000 ஆண்டுகளின் முற்பகுதியில் அங்காளம்மன் கல்லூரி சுப்பிரமணியனின் பகுதியளவிலான கட்டுப்பாட்டுக்குள் வருகிறது.
2006-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி மேஜர் சீனிவாசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். விளைவாக, மொத்த கல்லூரியின் ஏகபோக கட்டுப்பாடு சுப்பிரமணியனின் கையில் வந்து விழுகிறது. 25 ஆண்டுகளுக்கு முன் தெருவும் திண்ணையுமாக திருச்சியைச் சுற்றி வந்த கரட்டாம்ப்பட்டியான் இன்றைய தேதியில் மூன்று கல்லூரிகளும், வேறு சில வியாபார நிறுவன்ங்களுமாக கோடிகளில் புரளும் அளவிற்கு வளர்ந்த சுருக்கமான வரலாறு இது.

சுப்பிரமணிய வைரஸ் வளர தேர்ந்தெடுத்த கம்பெனி

தொண்ணூறுகளின் இறுதிப் பகுதியில் அங்காளம்மன் பொறியியல் கல்லூரியின் ஒட்டு மொத்த நிர்வாகத்தின் மேல் சுப்பிரமனியனின் கண் அழுத்தமாக பதிகிறது. மேஜர் சீனிவாசனின் எதிர்ப்பையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. ஏற்கனவே ஜெயராம் கல்லூரிக்காக மோசடி செய்து விவசாயிகளின் நிலத்தை அபகரித்த விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக கொதிநிலைக்குச் சென்று கொண்டிருந்தது. சூட்டோடு சூடாக 1998-ல் ஆக்ஸ்போர்ட் கல்லூரியையும் துவங்கி தனது சாம்ராஜ்ஜியத்தின் எல்லைகளை விரிவடையச் செய்திருந்தார்.
திடீர் பணக்கார ரவுடிகளின் வளர்ச்சி இரண்டு உடனடி விளைவுகளை ஏற்படுத்தும்; ஒன்று, அயோக்கியத்தனமான நடவடிக்கைகள் சம்பாதித்துக் கொடுக்கும் மக்கள் எதிர்ப்பு; இரண்டு – ஏற்கனவே தொழில் போட்டியில் இருக்கும் சக ரவுடிகளின் கண்களுக்கு உறுத்தலாக மாறுவது. எனவே அவர்கள் திடீர் பணக்க்கார ரவுடியில் இருந்து திடீர் பணக்கார அரசியல் ரவுடியாக பதவியேற்றம் பெற்றுக் கொள்கிறார்கள். இதற்கு தி.மு.க / அ.தி.மு.க நல்ல தேர்வாக இருந்திருக்கும் என்றாலும் பாரதிய ஜனதா கட்சியைத் தேர்ந்தெடுத்தார் சுப்பிரமணியன்.
Narendra-Modi-Cartoonஏனெனில், அரசியல் ரவுடித்தனத்தில் திராவிடக் கட்சிகளுக்கு இருக்கும் மாநில வரம்பு ஒருபக்கம் இருக்க, இவர்கள் கடந்த சில ஆண்டுகள் மட்டுமே அனுபவம் கொண்ட கத்துக்குட்டிகள். பாரதிய ஜனதாவுக்கு ஒரு தேசிய முகம் உள்ளது, அந்த முகத்திற்கு ஒரு நீண்ட வரலாறும் உள்ளது. பாரதிய ஜனதாவின் தேசிய முகத்தின் அங்கங்களாக சுஷ்மா சுவராஜும் இருப்பார், அமித்ஷாவும் இருப்பார்; ஒருபக்கம் குருமூர்த்தி இன்னொரு பக்கம் ரெட்டி சகோதரர்கள்;
நரோதா பாட்டியா கொலை வெறியாட்டமும் பத்து லட்சம் ரூபாய் விலையுள்ள கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு பேசப்படும் ‘வளர்ச்சியும்’ வேறு வேறல்ல
நாணயத்தின் இரண்டு முகங்களுமாக மோடியே இருக்கிறார். அவரே வளர்ச்சி, அவரே நரோதா பாட்டியா.
நரோதா பாட்டியா கொலை வெறியாட்டமும் பத்து லட்சம் ரூபாய் விலையுள்ள கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு பேசப்படும் ‘வளர்ச்சியும்’ வேறு வேறல்ல. இந்துத்துவ பாசிஸ்டுகள் தங்கள் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்காக திட்டமிட்டுக் கொள்ளும் போது மிக கவனமாக இரண்டு அம்சங்களை கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். ஒன்று, புரவலர்கள்; இரண்டு அடியாட் படை.
உதாரணமாக, கோவை கலவரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். கலவரத்தில் நேரடியாக ஈடுபட்டவர்கள் இந்து முன்னணியால் கீழ்மட்டத்தில் அணிதிரட்டப்பட்டவர்கள் – இதற்காக கரும்புக்கடை, குனியமுத்தூர், கெம்பட்டி காலனி, செல்வபுரம் போன்ற உதிரிபாட்டாளிகள் நெருக்கமாக வசிக்கும் பகுதிகளில் பல ஆண்டுகள் இந்து முன்னணி செயல்பட்டுள்ளது. கோவை கலவரங்களுக்கான புரவலர்களாக மார்வாடி சேட்டுகள், செங்குந்த முதலியார்கள், கவுண்டர்கள், நாயுடுகள் என்று மேல்மட்டத்தினரை ஆர்.எஸ்.எஸ் நேரடியாகவும் விஜில் என்ற போர்வையின் கீழும் தயாரித்து வந்தது.
கட்டாம்பட்டியான்
திருச்சி பகுதியில் கொழுத்த புரவலர்களைத் தேடி வந்த இந்துத்துவ கும்பலுக்கு கரட்டாம்பட்டியான் மிக இயல்பான கூட்டாளியாக அமைந்தார்
தனது கல்வி வியாபார நலன்களை பாதுகாத்துக் கொள்ள பொருத்தமான கூட்டாளியைத் தேடிய கரட்டாம்பட்டி சுப்பிரமணியனுக்கு பாரதிய ஜனதா மிக இயல்பான தேர்வாக அமைந்தது. அதே நேரம் திருச்சி பகுதியில் கொழுத்த புரவலர்களைத் தேடி வந்த இந்துத்துவ கும்பலுக்கு கரட்டாம்பட்டியான் மிக இயல்பான கூட்டாளியாக அமைந்தார்.
திருச்சியின் மேல் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு நீண்ட நாட்களாகவே ஒரு கண் உண்டு. பல ஆண்டுகளாக திருச்சியை மையமாக வைத்து தலையால் தண்ணி குடித்தும் கோவை மற்றும் கன்யாகுமரி மாவட்டம் போல் திருச்சி அமையவில்லை. அதை நிறைவேற்றுவதற்கு இந்த இடைத் தேர்தலை பாரதிய ஜனதா ஒரு அதிருஷ்டமாக கருதுகிறது.
எப்போதும் இல்லாத வகையில் நேரடியாக ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் காக்கி டவுசரோடு பாரதிய ஜனதாவுக்கு வாக்கு சேகரிக்க களம் இறக்கப்பட்டுள்ளனர். திருச்சிக்கென ஆர்.எஸ்.எஸ் வகுத்துள்ள எதிர்கால திட்டங்களில் வணிக சாதியினராக உள்ள ஆறு நாட்டு வேளாளர்களுக்கு ஒரு முக்கிய இடம் உள்ளது. அந்த வகையில் தான் சுப்பிரமணியனை வேட்பாளராக களமிறக்கியதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சுப்பிரமணிய வைரசின் விளைவுகள்

“அண்ணே, இந்த ஹாஸ்டல்லே நாங்க ஒரு முன்னூறு பாய்ஸ் ஸ்டூடண்ட்ஸ் தங்கியிருக்கோம்ணே.. கேர்ல் ஸ்டூடண்ட்ஸ் எங்களை விட அதிக எண்ணிக்கையில் தங்கியிருக்காங்க. எனக்கு திருவண்ணாமலை பக்கம் சொந்த ஊரு. வருசத்துக்கு 45 ஆயிரம் ஹாஸ்டல் பீஸ்னு புடுங்கறாங்க. சாப்பாடெல்லாம் வாய்லயே வைக்க முடியாதுண்ணே” – ஆக்ஸ்போர்ட் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த அந்த முதலாம் ஆண்டு மாணவர் சுரத்தின்றி பேசினார்.
மாணவர் விடுதி அறை
ஒவ்வொன்றினுள்ளும் மூன்று உடைந்த தகரக் கட்டில்கள் போடப்பட்டிருந்தன
அந்த உறைவிடக் கட்டிடத்தின் ஒரு தளத்தில் சுமார் இருபது அறைகள் இருந்தன. ஒவ்வொன்றினுள்ளும் மூன்று உடைந்த தகரக் கட்டில்கள் போடப்பட்டிருந்தன. ஒவ்வொரு அறையினுள்ளும் ஆறு மாணவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். மொத்தம் நூறு மாணவர்களுக்கு மூன்றே மூன்று கழிவறைகள் ஒரே ஒரு வாஷ்பேசின் மற்றும் ஐந்து குளியலறைகள். கழிவறைகளின் தரம் மூக்கே இல்லாதவர்கள்தான் அங்கு சீவிக்க முடியும் என்றது.
கல்லூரி கழிவறைகளின் தரம்
நூறு மாணவர்களுக்கு மூன்று கழிவறைகள்!
“காலைல நாங்க லேட்டா போனா பைன் போடறாங்கண்ணா. ஒவ்வொரு வருசமும் ஒவ்வொரு மாணவரும் சுமார் எட்டாயிரம் பத்தாயிரம் நோ டியூ (No due) பைனா கட்டறாங்க. ஆனா, ஹாஸ்டல்ல தங்கற மாணவர்களால சீக்கிரம் கிளம்பவே முடியாது. காலைல பார்த்தீங்கன்னா பெரிய க்யூவே நிக்கும். நானெல்லாம் காலைல நாலு மணிக்கு எழுந்துக்குவேன். ஆனாலும், லேட்டாயிடும்”
வினவு செய்தியாளர் குழு ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரிக்குள் நுழைந்திருந்தது. திருச்சி நகருக்கு வெளியே தீரனூர் என்ற பகுதியை அடுத்து அமைந்திருக்கும் அந்தக் கல்லூரி வளாகத்திற்கு முறையான சுற்றுச்சுவர் கூட கிடையாது. யார் வேண்டுமானாலும், போகலாம் வரலாம்.
ஆக்ஸ்ஃபோர்டு கல்லூரி
விவசாயிகளை அடித்து பிடுங்கி சம்பாதித்த பணத்தில் கட்டப்பட்ட ஆக்ஸ்போர்டு கல்லூரி எனும் காயலான் கடை!
அண்ணா பல்கலைக்கழகத்தின் கவுன்சிலிங் முறையின் கீழ் கல்லூரியில் சேர்ந்த மாணவர் ஒருவரிடம் பேசினோம்.
“அண்ணா, யூனிவர்சிட்டி எங்களுக்கு நிர்ணயம் செய்த பீஸ் 32,500 ரூபா தான். இவனுங்க அந்த அமவுண்டுக்கு மட்டும் தான் கம்ப்யூட்டர் பிரிண்ட் பில் குடுப்பானுங்க. மத்தபடி ஒரு வருசத்துக்கு 60,000 – 65,000  வரைக்கும் பிடுங்கிடறாங்க. அது தவிர வெளியூர் மாணவர்களுக்கு ஹாஸ்டல் பீஸ்னு தனியா 45 ஆயிரம் வாங்கறாங்க.
மாணவர்களிடம் வசூலிக்கப்படும் தொகையில் 4,000 ரூபாய் புத்தகங்களுக்கென்று வசூலிக்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு பருவத்திலும் பரீட்சைக்கு சற்று முன்பு தான் புத்தகங்களே கையில் கிடைக்கும். அந்த புத்தகங்களும் அதே கல்லூரியில் பணிபுரியும் விரிவுரையாளரகள் எழுதியதாக இருக்கும். சாணித்தாளில் அச்சடிக்கப்பட்ட அந்த புத்தகங்களின் மதிப்பை கணக்கிட்டால் ஆயிரம் கூட தேறாது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
கல்லூரியின் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு வகுப்புகளில் தலா 500 மாணவர்களும், மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டுகளில் தலா 350 மாணவர்களும் படிக்கிறார்கள். கவுன்சிலிங் மாணவர்களும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த மாணவர்களும் சம அளவில் உள்ளனர். நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த மாணவர்களிடம் முதலாம் ஆண்டு டொனேஷனாக லட்சங்களில் வசூல் நடக்கிறது. அது தவிர ஆண்டுக் கட்டணங்கள் கவுன்சிலிங் மாணவர்களை விட நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு அதிகம் – எண்பதாயிரத்திலிருந்து ஒன்றரை லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது.
அதிகப்படியாக வசூலிக்கப்படும் பணத்திற்கு துண்டுச் சிட்டையில் கிறுக்கித் தருவதைத் தவிர வேறு முறையான ஆவணங்கள் ஏதும் கிடையாது. கவுன்சிலிங் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் இவ்வாறாக வசூலிக்கப்படும் தொகைக்கு ஒரு சராசரியை நிர்ணயிப்பதாக இருந்தால் சுமாராக கல்விக் கட்டணம் என்ற வகையில் மட்டும் வருடத்திற்கு எட்டரை கோடி ரூபாயும், உறைவிடக் கட்டணமாக சுமார் மூன்று கோடிகளும் சேர்கிறது – அவ்வளவும் துண்டுச் சிட்டையில் எழுதிக் கணக்கு வைக்கப்பட்டும் கருப்புப் பணம்.
மாணவர்கள் கழிப்பறை
நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த மாணவர்களிடம் முதலாம் ஆண்டு டொனேஷனாக லட்சங்களில் வசூல் நடக்கிறது.
ஆக்ஸ்போர்ட் கல்லூரி என்பது சுப்பிரமணியன் நடத்தி வரும் மூன்று கல்லூரிகளில் தரம் குறைந்த ஒன்று என்றாலும், இதே கணக்கை மற்ற இரு கல்லூரிகளுக்கும் போட்டுப் பார்த்தால், மூன்று கல்லூரியிலும் சேர்த்து கல்விக் கொள்ளையில் ஒவ்வொரு ஆண்டும் முப்பத்தைந்து கோடி கொள்ளையிடப்படுகிறது. நோ ட்யூ என்று ஒவ்வொரு பருவத்தேர்வின் போதும் சராசரியாக ஒரு மாணவரிடம் இருந்து நான்காயிரம் வசூலிக்கப்படுகிறது. இதை மூன்று கல்லூரிகளுக்குமாக தோராயமாக கணக்கிட்டால் இரண்டு கோடி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கரட்டாம்பட்டி சுப்பிரமணியன் சுருட்டும் கருப்புப் பணத்தின் குறைந்தபட்ச அளவு 37 கோடிகள்! இது குறைந்தபட்ச கணக்கு தான் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். ஏனெனில், அவர் நடத்தும் மற்ற இரு கல்லூரிகளும் ஓரளவிற்கு பிரபலமானவை என்பதாலும் அந்தக் கல்லூரிகளில் படிப்புப் பிரிவுகள் அதிகம் என்பதாலும் அங்கே வசூலாகும் தொகை நிச்சயம் அதிகமாகத் தான் இருக்கும்.
ஆறு ஆண்டுகளாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கட்டிடம்
ஆறு ஆண்டுகளாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கட்டிடம்
இது ஒருபக்கம் இருக்க, கல்லூரியில் சுமார் 120 விரிவுரையாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் பலர் இளங்கலை பொறியியல் படித்தவர்கள் – சம்பளம் வெறும் 12,000 ரூபாய்கள் தான். ஓரளவு அனுபவம் வாய்ந்தவர்களுக்கு சுமார் 20,000 ரூபாய் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. துறைத் தலைவர்களுக்கு அறுபதாயிரம் வரை சம்பளம். பரிசோதனைக்கூட உதவியாளர்களுக்கு பத்தாயிரத்திற்கும் கீழ் தான் சம்பளம்.
இந்தச் சம்பளமெல்லாம் நிர்ணயம் செய்யப்பட்டவை மட்டும் தான். வழங்கப்படுபவை அல்ல. கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றார் ஒரு ஊழியர். முதலாமாண்டு விரிவுரையாளர் ஒருவர் சில மாதங்களுக்கு முன் அலுவலக அறையில் வைத்தே சம்பளம் கேட்டு தகராறு செய்ததோடு, சம்பளம் தராமல் பண நெருக்கடியின் காரணமாக தான் தற்கொலை செய்து கொண்டால் அதற்குக் காரணம் சேர்மன் தான் என்று எழுதி வைத்து விட்டுத் தான் சாவேன் என்று அழுதவாறே ஏசியுள்ளார்.

சுப்பிரமணிய வைரசோடு ஒரு நேர்முகம்

ஜெயராம் - ஆக்ஸ்ஃபோர்ட் அலுவலகம்
“இது காலேஜ் ஆபீஸ் தானே? அப்புறம் ஏன் பி.ஜே.பி ஆபீஸ் மாதிரி வச்சிருக்கீங்க?”
சுப்பிரமணியன் நடத்தும் கல்லூரிகளுக்கும் கல்விக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதையும் அவை மூன்றும் பணம் கறக்கும் தொழிற்சாலைகள் தானென்பதையும் உறுதி செய்து கொண்ட வினவு செய்தியாளர் குழு, இக்கல்லூரிகளின் சார்பாக திருச்சி தில்லை நகர் பத்தாவது தெருவில் செயல்பட்டு வரும் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்றது.
நுழைவிலேயே பாரதிய ஜனதாவின் கொடி ஒட்டப்பட்டு அதில் “vote for BJP” என்று அச்சிடப்பட்டிருந்தது. நாங்கள் அலுவலக நிர்வாகி மகேந்திரன் என்பவரை ஓரம் கட்டினோம்.
மாணவர்கள் மத்தியில் பேசும் சேர்மன் சுப்பிரமணியன்
மாணவர்கள் மத்தியில் பேசும் சேர்மன் சுப்பிரமணியன்
”சார் எங்க அண்ணன் மகன் வேற கல்லூரில படிக்கிறான். ஆறாவது செமஸ்டர். டீபார் ஆகிட்டான். அவனை உங்கள் கல்லூரிக்கு மாற்றணும். அதுக்கு என்ன விதிமுறைகள் இருக்குன்னு சொல்லுங்களேன்” – தயாரித்து வைத்திருந்த கதை ஒன்றை எடுத்து விட்டோம்.
“ஆறாவது செமஸ்டரா? முடியாதுங்க. ஆட் நெம்பர் செமஸ்டர்ல தான் டிரான்ஸ்பர் செய்ய முடியும்; அது தான் யூனிவர்சிட்டி நார்ம். உங்க பையன் ஈவன் செமஸ்டர்ல இருக்கானே. நிச்சயமா முடியாதுங்க”
(ஆட் செம் (ODD Semester) என்பது கல்வியாண்டின் துவக்கத்தில் வரும் ஒன்று, மூன்று, ஐந்து மற்றும் ஏழாவது பருவங்கள். ஈவன் செம் (Even semester) என்பது கல்வியாண்டின் மத்தியில் வரும் இரண்டு, நான்கு, ஆறு மற்றும் எட்டாவது பருவங்கள்)
“சார் எப்படியாவது ட்ரை பண்ணுங்க சார். எவ்வளவு செலவு ஆனாலும் பார்த்துக்கலாம்” அடுத்த தூண்டிலை வீசினோம்.
“அது வந்துங்க.. கொஞ்சம் கஷ்டம் தான். இப்ப கூட பாருங்க நாலாவது செமஸ்டர்ல ஒரு பொண்ணை மாத்தி கொண்டாந்தோம். ஈவன் செமஸ்டர் தான். உங்க கேசாவது பரவாயில்ல டீபார் தான்.. அந்தப் பொண்ணு டிஸ்கண்டினியூவே பண்ணின கேசு. அதுக்கு மினிஸ்டர் பி.ஏவை பிடிச்சி மினிஸ்டர் லெவல்ல மூவ் பண்ணி தான் செய்ய முடிஞ்சது” மீன் மாட்டியது.
“பரவாயில்ல சார். நாங்களும் மினிஸ்டர் வரைக்கும் பார்க்க தயார் தான். செலவு என்னான்னு சொல்லுங்க, எப்படி பார்க்கிறதுன்னு சொல்லிட்டிங்கன்னா செய்துடலாம்”
“நீங்க ஒன்னு செய்யுங்க. அக்டோபர் மாசம் பையன் கடைசியா வாங்கின ஹால் டிக்கட்டோட வாங்க விஷயத்தை முடிச்சிடலாம்”
“சார் அக்டோபர்னா செமஸ்டர் எக்சாம் நடக்கும் நேரமாச்சே சார்… பரவாயில்லையா?”
”அதெல்லாம் பரவாயில்ல பார்த்துக்கலாம், வேணா கொஞ்சம் முன்னாடி கூட வாங்க ஒன்னும் பிரச்சினையில்லை”
இவர்கள் கல்லூரிக்கு வேறு ஒரு கல்லூரியில் இருந்து ஒரு மாணவரை மாற்றி அக்டோபரில் ஆறாவது செமஸ்டர் பரீட்சைக்கு உட்கார வைப்பது என்பதன் பொருள் – அந்த மாணவர் ஆறாவது செமஸ்டர் பாடங்களை கேட்கவோ வகுப்புகளுக்கு வரவேண்டிய தேவையோ இல்லை என்பது தான். செய்வதும் பிராடு, செய்யும் விதமும் பிராடு. நாங்கள் ’நன்றி’ தெரிவித்து விட்டுக் கிளம்பினோம்.
“ஆமா சார்… இது காலேஜ் ஆபீஸ் தானே? அப்புறம் ஏன் பி.ஜே.பி ஆபீஸ் மாதிரி அவங்க கொடி வச்சிருக்கீங்க?”
“ஹிஹி.. ரெண்டும் ஒன்னு தான் சார்”
நியாயமாக இந்தக் கட்டுரையின் இறுதி பன்ச் லைன் இதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும். சொல்ல இன்னும் கொஞ்சம் இருப்பதால் தொடர்கிறோம்.
jemo-pacha
சுயநிதிக் கொள்ளையர் பச்சமுத்துவின் விருதை வாங்கி எழுத்தாளர் ஜெயமோகன்!
தேர்தல் வாக்குமூலத்தில் தனது கல்லூரி சொத்துக்களை மறைத்துவிட்டு வெறும் 33 கோடி ரூபாயை மட்டும் பெருந்தன்மையுடன் ஒப்புக் கொண்டிருக்கிறார் இந்த மோசடிச் சக்கரவர்த்தி. ஆனால் கல்லூரி அலுவலகமும், கட்சி ஆபிசும் ஒரே அலுவலகத்த்திலிருந்து செயல்படுகிறது. கல்லூரிகளெல்லாம் ட்ரெஸ்ட்டுகளாக வைத்து கல்லா கட்டுவது என்ன இந்தியாவிற்கு புதிதா? பச்சமுத்து கூட தனது கல்லூரிகளை அப்படித்தான் நடத்துகிறார். அவரது சொத்து பத்திரத்திலும் நாம் எஸ்.ஆர்.எம்மை கண்டுபிடிக்க முடியாது.
இப்பேற்பட்ட கொள்ளையர் பச்சமுத்துவின் தமிழ் விருதுகளைத்தான் நமது தமிழ் எழுத்தாளர்கள் வெட்கம் கெட்டு பெற்றுக் கொள்கிறார்கள். அதில் அன்னிய நிதி குறித்து சிலிர்த்துக் கொள்ளும் எழுத்தாளர் ஜெயமோகனும் ஒருவர். இங்கே சுப்பிரமணியன் போன்ற கொள்ளையர்கள் விவசாயிகளின் வயிற்றில் அடித்து இந்து அறம் காக்க தேர்தல் களம் புகுகிறார்கள்.

சுப்பிரமணிய வைரஸ் – ஒரு முறி மருந்து

கரட்டாம்பட்டி சுப்பிரமணி பாரதிய ஜனதாவில் உறுப்பினராக இணைவது தொண்ணுறுகளின் இறுதிக் கட்டத்தில் என்றாலும், தனது அரசியல் நடவடிக்கைகளை பகிரங்கப்படுத்தியதும், கட்சிப் பொறுப்புகளை வாங்கிக் கொண்டதும் இரண்டாயிரங்களுக்கு பிந்தைய காலகட்டத்தில் தான் நடந்தது. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
ஜெயராம் கல்லூரியைக் கட்ட தங்களது நிலத்தை அபகரித்துக் கொண்ட சுப்பிரமணியனோடு சுமார் ஆறாண்டுகள் மல்லுக்கட்டிப் பார்த்த விவசாயிகள் இரண்டாயிரமாவது ஆண்டில் விவசாயிகள் விடுதலை முன்னணியை நாடுகிறார்கள். வி.வி.மு தோழர் பொம்மன் அவர்களின் தலைமையில் வி.வி.மு தோழர்கள் விசாரணை ஒன்றை நடத்தி மோசடி நடந்திருப்பதை உறுதி செய்கிறார்கள்.
தோழர் பொம்மன் தலைமையில் உடனடியாக களமிறங்கும் வி.வி.மு விவசாயிகளின் சார்பாக பல போராட்டங்களை முன்னெடுக்கிறது. கல்லூரியைச் சுற்றிலும் மோசடிப் பேர்வழி சுப்பிரமணியனை எதிர்த்து போஸ்டர்கள், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் போஸ்டர் மற்றும் துண்டுப் பிரசுர பிரச்சாரங்கள் என்று வி.வி.மு முன்னெடுத்த போராட்டங்களின் வீரியம் ”ஏற்கனவே ஏமாற்றி பத்திரத்தில் கைநாட்டு வாங்கி விட்டோமே; நம்மை அசைக்க முடியாது” என்ற மிதப்பில் இருந்த சுப்பிரமணியனை நிதானத்திற்கு கொண்டு வந்தது. குறிப்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர் கவுன்சிலிங் நடந்த சமயத்தில் செய்யப்பட்ட பிரச்சாரங்கள் அவரது தொழிலின் அஸ்திவாரத்தையே அசைத்துப் பார்த்தது.
சுப்பிரமணியன் நிலப்பறிப்பு தொடர்பான ஆவணங்களின் நகல்கள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
பல வழிகளில் வி.வி.மு தோழர்களை அணுகி பேச்சுவார்த்தைக்கு முயற்சி செய்கிறார். பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பிரதிநிகளின் முன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தது. அவற்றில் சுப்பிரமணியன் முன்னுக்குப் பின் முரணாக வாக்குறுதிகள் வழங்கியதாலும், பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே பாதிக்கப்பட்ட விவசாயிகளில் சிலரை காசு கொடுத்து கருங்காலிகள் ஆக்கும் முயற்சியை எடுத்ததாலும் பேச்சுவார்த்தையை வி.வி.மு முறித்துக் கொண்டது. சுப்பிரமணியனை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் வேலையைத் தொடர்ந்தது.
இந்தப் பேச்சு வார்த்தைகளின் குறிப்பிட்ட ஒரு சுற்றின் போது சுப்பிரமணியன் தனக்கு ஆதரவாக பேச பழக்கமான அரசு உயரதிகாரி ஒருவரோடு வந்துள்ளார். அவருக்கு எதிர்தரப்பில் வந்தமரப் போவது வி.வி.மு தோழர்கள் என்பது தெரியாது. பேச்சுவார்த்தையின் போது வி.வி.மு தோழர்கள் வந்தமர்ந்ததைப் பார்த்ததும் பதறிப் போய் விவசாயிகளுக்கு ஆதரவாக பேசிவிட்டு கிளம்பியுள்ளார்.
மேலும் அவரே சுப்பிரமணியனிடம் இவர்கள் தான் (வி.வி.மு) வரப்போகிறார்கள் என்று தனக்குத் தெரியாது என்றும், இவர்கள் நக்சலைட்டுகள் என்றும், விவசாயிகளை ஏமாற்றினால் ஏதாவது ’ஒன்னு கிடக்க ஒன்னு’ செய்து விடக்கூடியவர்கள் என்றும் எச்சரித்துச் சென்றுள்ளார். ஏற்கனவே சுப்பிரமணியன் வி.வி.மு தோழர்களை விலைக்கு வாங்க முயற்சித்து மூக்குடைபட்டவர் என்பது தனிக்கதை.
இந்தப் பின்னணியில் அவர் பாரதிய ஜனதாவோடு நெருங்கியதைப் பொருத்திப் பார்த்தால் முழு சித்திரத்தையும் புரிந்து கொள்ள முடியும். ஏற்கனவே தனது கல்விக் கொள்ளைக்கு ஒரு அரசியல் பாதுகாப்பு என்ற வகையில் பாரதிய ஜனதாவை நாடியிருந்த சுப்பிரமணியம் தற்போது அக்கட்சியில் முக்கிய அந்தஸ்த்தைப் பெறுவதன் மூலம் அதை உறுதி செய்கிறார். கூடவே தனது கொள்ளையை பெருக்கவும் செய்வார்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் என்பது பாரதிய ஜனதாவைப் பொறுத்தவரை மிக முக்கியமானது. தேர்தல் முடிவு ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது என்பது ஒரு நிதர்சனமான உண்மை. அ.தி.மு.கவின் பணபலம் மற்றும் அதிகார பலத்தின் முன் தி.மு.கவே போட்டி போட முடியாமல் சோம்பிக் கிடக்கும் போது முடிவு எப்படி இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
அதிமுக வேட்பாளர்
அ.தி.மு.கவின் பணபலம் மற்றும் அதிகார பலத்தின் முன் தி.மு.கவே போட்டி போட முடியாமல் சோம்பிக் கிடக்கும் போது முடிவு எப்படி இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
ஒரு சின்ன உதாரணம் மட்டும் – முத்தரச நல்லூர் என்ற 300 குடும்பங்கள் மட்டும் வசிக்கும் குக்கிராமத்தில் கடந்த ஒன்றாம் தேதி அ.தி.மு.க கறி விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது. 100 கிலோ மட்டன், 200 கிலோ சிக்கன் மற்றும் மீன் வருவல் என்று தடபுடல் பட்ட விருந்தைத் தொடர்ந்து பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஊரில் தி.மு.க குடும்பம் என்று அறியப்பட்ட குடும்பங்களை குறிவைத்து தேர்தல் வேலைக்காக களமிறங்கியுள்ள வெளியூர் அ.தி.மு.கவினர் களமிறங்கியுள்ளனர். சில வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ஒழுங்காக அ.தி.முகவிற்கு ஓட்டளிக்க வேண்டுமென்றும், தவறினால் வீட்டுப் பெண்களைத் தூக்கிச் செல்வோம் என்றும் பகிரங்கமாகவும் மிரட்டியுள்ளனர்.
அதி.முக தான் வெல்லப்போகிறது என்பது தி.மு.கவுக்கே தெரிந்த சேதி தான்.
என்றாலும் டெப்பாசிட் வாங்குவதைத் தாண்டி பாரதிய ஜனதா வாங்கும் ஒவ்வொரு ஓட்டும் அடுத்த தேர்தலில் அதற்கு பேரம் பேசும் வலிமையைச் சேர்த்துக் கொடுக்கும். அதற்காகவே செலவு செய்யும் வாய்ப்புள்ள சுப்பிரமணியனைக் களமிறக்கி விட்டுள்ளது பாரதிய ஜனதா.
திராவிடக் கட்சியினரை பொறுக்கிகள், ரவுடிகள் என்று சித்தரித்து பாரதிய ஜனதா எடுக்கும் வாந்தியை அப்படியே தின்னும் தமிழக பத்திரிகைகள் கர்ம சிரத்தையாக அதை மறுவாந்தி எடுத்து அக்கருத்தை பொதுபுத்தியில் நிலைநாட்டியுள்ளனர்.
அமித் ஷா
திராவிடக் கட்சியினரை பொறுக்கிகள், ரவுடிகள் என்று சித்தரித்து பாரதிய ஜனதா எடுக்கும் வாந்தியை அப்படியே தின்னும் தமிழக பத்திரிகைகள் கர்ம சிரத்தையாக அதை மறுவாந்தி எடுத்து அக்கருத்தை பொதுபுத்தியில் நிலைநாட்டியுள்ளனர்.
சொல்லப் போனால் இந்தப் பிரச்சாரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட அதிமுகவை வீழ்த்திவிட்டு பாஜக சிம்மாசனம் ஏற முயல்கிறது.
ஊரே காறித்துப்பும் ஒரு மோசடிப் பேர்வழியை செலவு செய்யும் வாய்ப்பு உள்ளவர் என்ற ஒரே காரணத்துக்காக வேட்பாளராக களமிறக்கியிருக்கிறது என்றால், பாரதியஜனதாவின் அரசியல் தராதரத்தை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. தமிழகத்தில் வலுவாக காலூன்ற எந்த எல்லைக்கும் செல்லத் தயார் என்பதை பாரதிய ஜனதா இதன் மூலம் அறிவித்துள்ளது.
மேலும் கல்விக் கொள்ளையர்களான எஸ்.ஆர்.எம் – புதிய தலைமுறை பச்சமுத்து, நீதிக்கட்சி சண்முகம் போன்றவர்கள் சென்ற பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவின் தமிழக புரவலரகளாக இருந்து இரண்டு சீட்டு பெற்றார்கள். இப்போது அந்த கொள்ளையர் அணி நேரடியாகவே பாஜகவில் போட்டியிடுகிறது.
பச்சமுத்து
கல்விக் கொள்ளையர்களான எஸ்.ஆர்.எம் – புதிய தலைமுறை பச்சமுத்து, நீதிக்கட்சி சண்முகம் போன்றவர்கள் சென்ற பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவின் தமிழக புரவலரகளாக இருந்து இரண்டு சீட்டு பெற்றார்கள்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வென்ற பாரதிய ஜனதாவின் எம்.பிக்களில் பெரும்பாலானோரின் மேல் கற்பழிப்பு, கொலை, ஆள்கடத்தல் உள்ளிட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது என்பதையும் கரட்டாம்பட்டியானையும் இணைத்துப் பார்த்தால் இது ஜாடிக்கேற்ற மூடி என்பதை புரிந்து கொள்ள முடியும்.
இதை எதிர்கொள்வது எப்படி என்பதை காலம் சென்ற பொம்மன் தோழர் கோடி காட்டிச் சென்றுள்ளார். கட்டுரையின் இணைப்பில் பொம்மன் தோழர் கரட்டாம்பட்டியானுக்கு 2000-வது ஆண்டு எழுதிய கடிதத்தை அவசியம் வாசியுங்கள். நாம் அதை மெய்யாக்கும் போது தான் இந்துத்துவ பாசிச அபாயத்திலிருந்து தமிழகத்தைக் காப்பாற்ற முடியும்.
பாஜகவிற்கு தேசிய அளவிலும் உள்ளூர் வரையிலும் முதலாளிகள் தேவை. முதலாளிகளுக்கோ பாஜக எனும் கட்சின் முகவரி தேவை. எப்படியும் தோற்போமென தெரிந்தும் சுப்பிரமணியம்ஏன் போட்டியிடுகிறார்? அவரைப் பொறுத்த வரை பாஜக பெயரும், வேட்பாளர் அடையாளமும் தொழிலை அதாவது முறைகேடை தொடர்வதற்கு ஒரு பாதுகாப்பு. பாஜகவிற்கு இத்தகைய புரவலர்கள் இருந்தால்தான் உள்ளூரில் கட்சி நடத்த பணம் கிடைக்கும். அந்த புரவலர்களின் தொழில் மோடியின் தயவில் தேசிய அளவில் பரவும் போது கணிசமான கமிஷனும் கிடைக்கும்.
வேட்பாளர் கரட்டாம்பட்டி சுப்ரமணியம் மீது திருச்சி மாநகர குற்றப் பிரிவு போலீசில் 1.13 கோடி மோசடி செய்ததாக 420 வழக்கு நிலுவையில் உள்ளது. M/s Precision Medic(P)ltd என்ற நிறுவனம் சுப்ரமணியம் கல்லூரி மாணவர்களுக்கு கணினி பயிற்சி வழங்கியதற்கான தொகையை சுப்ரமணியமும் அவரது கல்லூரி முதல்வர்களும் மோசடி செய்துள்ளனர்.
சுப்ரமணியத்திற்கு பிணை வழங்கிய நீதிபதி பி.என்.பிரகாசு ஆர்.எஸ்.எஸ் சிந்தனை கொண்டவர்.வழக்கமாக ஏமாற்றுதல்,மற்றும் மோசடி(420) தொடர்பான வழக்குகளில் மோசடித் தொகை செலுத்தினால் மட்டுமே பிணை வழங்கும் நீதித்துறை இவர் கோடி ரூபாய்க்கும் மேலான மோசடி வழக்கில் பணம் கட்டாமல் ஜாமின் வழங்கியது இதுவே முதல் முறை.
மேலும் தனது வேட்பு மனுவில் குற்ற வழக்குகள் ஏதேனும் நிலுவையில் உள்ளதா? என்ற கேள்விக்கு “இல்லை” என்று பதில் அளித்துள்ளார்.இந்தப் பொய்யை தி.மு.க. அ.தி.மு.க.வினர் புகாராக அளித்த போதும், தேர்தல் அதிகாரி அதை விசாரணையின்றி நிராகரித்துள்ளார். மோடி ஆட்சியில் கேடிகளுக்குத்தான் சட்டமும், பாதுகாப்பும் இருக்கும். பா.ஜ.கவின் பலமே இத்தகைய அதிகார வர்க்க, நீதித்துறை அனைத்தும் காவிகளின் ரவுடித்தனத்தை பாதுக்காப்பதுதான்.
அப்பாவி விவசாயிகளின் வயிற்றில் அடித்து நான்கு கல்லூரி கட்டி ஆண்டுக்கு சில பல கோடிகளை கொள்ளையடித்து அதை பாதுகாக்க கட்சி சேர்ந்து, இப்போது வேட்பாளராகவும் உலா வரும் இந்த நபரையும் இத்தகைய பேர்வழிகளுக்கு ஒளிவட்டம் போட்டு தூக்கி பிடிக்கும் பா.ஜ.கவையும் அப்புறப்படுத்தாமல்  இந்திய மக்களுக்கு விடிவு இல்லை.
___________________________
- வினவு செய்தியாளர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக