திங்கள், 2 பிப்ரவரி, 2015

தனிக்கட்சி தொடங்க கார்த்தி சிதம்பரம் முடிவு ! சிங்கம்/சுவிங்கம் ஒன்று புறப்பட்டதே???????

 தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இளங்கோவனுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் தனிக்கட்சி தொடங்குவது குறித்து ஆதரவாளர்களுடன் இன்று காலை முதல் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.தமிழக காங்கிரசில் முக்கிய தலைவர்களிடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக கோஷ்டி பூசல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. ஜி.கே.வாசன் கட்சியை விட்டு வெளியேறிய உடன் அதிரடியாக மாநில தலைவராக நியமிக்கப்பட்ட ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கும், ப.சிதம்பரம் தரப்புக்கும் இடையே மோதல் முற்றியுள்ளது. இருதரப்பும் ஒருவர் மீது ஒருவர் மேலிடத்தில் புகார் செய்து வருவதால் சோனியா மற்றும் ராகுல் ஆகியோர் இப்பிரச்னையில் தலையிட உள்ளனர். மேலிட முக்கிய தலைவர்களுக்கும் தமிழக காங்கிரசின் கோஷ்டி பிரச்னை பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தனிகட்சின்னு இருந்தாக்கா எந்த கட்சியுடனும் சேர்ந்து பதவி சுகம் அனுபவிக்கலாம் பாருங்க!


இதற்கிடையே, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஈவிகேஎஸ்.இளங்கோவனை எப்படியாவது மாற்றிவிட வேண்டும் என்று ப.சிதம்பரம் டெல்லியில் இருந்து கொண்டு முக்கிய தலைவர்களை அணுகி வருகிறார். ஆனாலும் எதற்கும் சற்றும் அசைந்து கொடுக்காமல் ஈவிகேஎஸ்.இளங்கோவனோ, ப.சிதம்பரம் எடுக்கும் எந்த முயற்சியாக இருந்தாலும் அதற்கு உடனடியாக பதிலடி கொடுத்து வருவது காங்கிரசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், அகமது படேல் ஆகியோரை சந்தித்து ப.சிதம்பரம் தனது மனக்குறைகளை கொட்டி தீர்த்துள்ளார்.

தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை கட்சியை விட்டு நீக்குவது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியது முதல் கழுதைக்கு தெரியுமா கற்பூரவாசனை என்று திட்டியது வரை விலாவாரியாக சொல்லியுள்ளார். மேலும் ஜெயந்தி நடராஜன் விலகிய போது வெளியிட்ட அறிக்கையில், இன்னொருவர் தனது வாரிசோடு சென்றுவிட்டால் கட்சி தூய்மையாகிவிடும் என்று தன்னைத் தான் சுட்டிகாட்டியுள்ளதாக ப.சிதம்பரம் அவர்களிடம் தெரிவித்துள்ளார். இதையும் மீறி கட்சியில் இருக்க வேண்டுமா என்பதை நீங்களே கூறுங்கள் என்று அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் சோனியா வரை இந்த விவகாரம் சென்றதை தொடர்ந்து அவர் ஈவிகேஎஸ்.இளங்கோவனிடம் கேட்டபோது, அவரை குறிப்பிட்டு நான் சொல்லவில்லை என்றும், பொதுவாகவே சொன்னேன் என்று ஈவிகேஎஸ். இளங்கோவன் தொலைபேசி மூலம் விளக்கம் அளித்துள்ளார். அதன் பின்பு நேற்று டெல்லி சென்ற ஈவிகேஎஸ்.இளங்கோவன் அங்கு நடைபெறும் சட்டசபை தேர்தலில் தமிழர் வசிக்கும் பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஈவிகேஎஸ்.இளங்கோவனிடம் சோனியா காந்தி விளக்கம் கேட்டதால் தமிழக காங்கிரசில் பெரும் மாற்றம் வரும் என எதிர்பார்த்திருந்த ப.சிதம்பரம் தரப்புக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

இதனால் காங்கிரஸ் மேலிடம் மீது அதிருப்தியடைந்த கார்த்தி சிதம்பரம், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்க மீண்டும் சென்னையில் தனிக்கூட்டத்தை கூட்டியுள்ளார். தமிழகம் முழுவதும் இருந்து அவரது ஆதரவாளர்கள் சென்னையில் உள்ள அலுவலகத்துக்கு வந்துள்ளனர். அவர்கள் மத்தியில் காங்கிரஸ் மேலிடத்தின் அணுகுமுறை குறித்தும், தனிக்கட்சி தொடங்குவது குறித்தும் விரிவாக கார்த்தி சிதம்பரம் ஆலோசனை நடத்துகிறார். ஏற்கனவே, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ப.சிதம்பரத்துக்கு தராவிட்டால் உடனடியாக கட்சியை விட்டு வெளியேறி தனிக்கட்சி தொடங்குவோம் என்று மேலிடத்துக்கு கெடு விதித்திருந்தனர்.

இந்நிலையில், மீண்டும் தனிக்கூட்டம் கூட்டி தனிக்கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தவிருப்பது காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் ப.சிதம்பரத்தின் அணுகுமுறை வேறுமாதிரி செல்வதால் அவரை சமாதானப்படுத்தும் வகையில், மாநில தலைவர் பதவி எல்லாம் தரமுடியாது. ஆனால் தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தமான காமராஜர் அறக்கட்டளையில் காலியாக உள்ள உறுப்பினர் பதவிக்கு ப.சிதம்பரத்தை மேலிடம் நியமித்துள்ளது. இதற்கெல்லாம் ப.சிதம்பரம் தரப்பு சமாதானம் ஆகுமா அல்லது மீண்டும் தனிக்கட்சி ஒன்று தமிழகத்தில் உதயமாகுமா என்பது அரசியல் தலைவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளங்கோவன் பேட்டிமீண்டும் கார்த்தி சிதம்பரம் தனியாக கூட்டத்தை கூட்டியுள்ளது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறுகையில், ‘‘டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரம் செய்கிறேன். கார்த்தி சிதம்பரம் மீண்டும் தனிக்கூட்டம் கூட்டியுள்ளதாக தகவல் வந்துள்ளது. அவர்கள் என்ன தான் செய்கிறார்கள் என்று பார்ப்போம். என்னை பற்றி கேவலமாக சித்தரித்து ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளதாகவும் கூறினர். போஸ்டரில் எனது பெயர் பெரிதாகத்தான் உள்ளது. அரசியல் என்று வந்தால் கழுத்தில் பூமாலையும் விழும். செருப்பு மாலையும் விழும். டெல்லியில் முக்கிய தலைவர்கள் யாரையும் இன்னும் நான் சந்திக்கவில்லை. தனிக்கூட்டத்தில் என்ன பேசுகிறார்கள் என்பதை தெரிந்து கொண்ட பின்பு எனது பதிலை சொல்கிறேன்' என்றார். //tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக