திங்கள், 2 பிப்ரவரி, 2015

ட்ராபிக் ராமசாமி அதிமுக வாக்குவாதம் ! 30 அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் 500க்கும் மேற்பட்ட கார்கள்

திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிராபிக் ராமசாமியுடன் அதிமுகவினர் சர்ச்சையில் ஈடுபட்டத்தைத் தொடர்ந்து பாஜகவினர் அவருக்கு ஆதரவாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி போட்டியிடுகிறார். இவர் நேற்று பெருகமணி, பெட்டவாய்த்தலை பகுதிகளில் வாக்கு சேகரித்து விட்டு ஸ்ரீரங்கம் கோயில் ராஜகோபுரம் அருகே வந்தார். அப்போது அவர் வந்த கார் காவல் நிலையம் அருகே பழுதாகி நின்று விட்டது. அப்போது அங்கு அதிமுக சார்பில் நாஞ்சில் சம்பத் பிரசாரம் செய்ய வந்ததையொட்டி, ஏராளமான கார்கள் வந்தன. டிராபிக் ராமசாமியின் கார் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி அவரிடம் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்த பா.ஜ.க நிர்வாகிகள், ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் ஹேமநாதன் உள்ளிட்டோர் டிராபிக் ராமசாமிக்கு ஆதரவாக பேசினர். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றியது. பின்னர் அதிமுகவினரை கண்டித்து பா.ஜ.க நிர்வாகிகள், ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் ஹேமநாதன் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் துணை கமிஷனர் சஞ்சய் மாத்தூர், ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் கபிலன் ஆகியோர் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து டிராபிக் ராமசாமி கூறுகையில், ‘‘ஆளும் கட்சி தொடர்ந்து தேர்தல் விதிகளை மீறி வருகிறது. 30 அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோரின் 500க்கும் மேற்பட்ட கார்கள், ஸ்ரீரங்கம் நகர்புறத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. இவை போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது. இதையெல்லாம் கண்டுகொள்ளாத காவல்துறை, வருவாய் துறை உள்ளிட்ட அரசு இயந்திரங்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் மீது வழக்கு தொடர உள்ளேன்‘‘ என்று தெரிவித்துள்ளார்.
/tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக