திங்கள், 2 பிப்ரவரி, 2015

வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தால் 2 ஆண்டு சிறை

புதுடில்லி:தேர்தல்களின் போது, வாக்காளர்களுக்கு பணமாகவோ, பொருட்களாகவோ லஞ்சம் கொடுத்தால், இரண்டாண்டு சிறை தண்டனை வழங்க சட்ட திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முயற்சிகள் மேற்கொள்கிறது.இப்போதுள்ள சட்டங்களின் படி, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தால், அதிகபட்சம் ஓராண்டு சிறை தண்டனை தான் விதிக்கப்படுகிறது. அதுவும், நீதிமன்ற கைது, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டால் தான், குற்றவாளி கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைக்குப் பின், தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படுகிறது.'இவ்வாறு மென்மையான தண்டனை உள்ளதால் தான், தேர்தல்களில் பண பலம் அதிகரித்துள்ளது; லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் கடுமையான தண்டனைக்குரிய குற்றம் என, சட்டம் கொண்டு வர வேண்டும்' என, 2012 முதல், தேர்தல் கமிஷன்,
மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது.
அதை பரிசீலித்த மத்திய அரசு, சட்டத்தை திருத்த முடிவு செய்து, வரைவு மசோதா தயாரிக்குமாறு சட்ட அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
மசோதா தயாராகி வருகிறது. அது சட்டமானால், சந்தேக இடங்களில் வாரன்ட் இன்றி, போலீசார் சோதனை செய்யலாம். வாரன்ட் இன்றி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, இரண்டாண்டுக்கு, 'உள்ளே' தள்ளப்படுவர்.

தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படை, வேட்பாளர்களுக்கு, அரசியல் கட்சிகளுக்கு பல கிடுக்கிப்பிடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட பிறகும், வாக்காளர்களை கவர லஞ்சம் கொடுப்பது தடுக்க முடியாத தொடர்கதையாக தொடர்வதால், இத்தகைய சட்டம் அவசியம் என, நடுநிலையாளர்கள் கூறுகின்றனர்.தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெறும் நாளுக்கு, ஒருசில நாட்களுக்கு முன், வாக்காளர்களுக்கு பணம், நகை, வீட்டு உபயோக பொருட்கள் போன்ற பல வழங்கப்படுகின்றன.
இதை தவிர்த்து, ஓட்டல்களில், 'ஓசி'யில் சாப்பிட டோக்கன், மதுபான கடைகளில் மது அருந்த வசதி என, பல விதங்களில் லஞ்சம் வழங்கப்படுகிறது.

கறுப்பு பணம் - கண்காணிப்பு:

நாடு முழுவதும் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள டில்லி சட்டசபை தேர்தலில், கட்சிகளின் கறுப்பு பண புழக்கம் அதிகரித்துள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து, மத்திய, மாநில அமைப்புகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. மத்திய நிதித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும், டி.ஆர்.ஐ., எனப்படும், வருவாய் புலனாய்வு இயக்குனரகம், சுங்கத்துறையினர், வருமான வரித்துறையினர் ஆங்காங்கே சோதனைகள் நடத்தி, கறுப்பு பண புழக்கத்தை கண்காணித்தும், கட்டுப்படுத்தியும் வருகின்றனர். டில்லியின் அண்டை மாநிலமான, அரியானா மற்றும் உ.பி.,யிலிருந்து தாராளமாக மதுபானங்கள், டில்லிக்குள் நுழைவதாக கிடைத்த தகவலை அடுத்து, டில்லி போலீசார் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளனர்; வாகன சோதனையை முடுக்கிவிட்டுள்ளனர்.

திருமங்கலம் 'பார்முலா':

தமிழகத்தில் பொதுதேர்தல்களிலும், இடைதேர்தல்களிலும் லஞ்சப்பணம் ஆறாக பாய்கிறது. வாக்காளர்களுக்கு குறைந்தது, 1,௦௦௦ ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 3,௦௦௦ ரூபாய் வரையிலும் தரப்படுவதாக சொல்லப்படுகிறது. ௨௦௦9ல் திருமங்கலத்தில் நடந்த இடைதேர்தலின்போது வாக்காளர்களுக்கு ஏராளமாக பணம் தரப்பட்டதால், அது திருமங்கலம், 'பார்முலா' என, இந்தியாவெங்கும் பிரபலமானது.

ஜனநாயகம் மற்றும் நேர்மையான தேர்தலை உறுதிபடுத்த, தேர்தல் நடைமுறைகள் கடுமையாக்கப்பட வேண்டும். கறுப்பு பண புழக்கம், வாக்காளர்களுக்கு லஞ்சம் போன்றவற்றை தடை செய்ய வேண்டும். வெளிப்படையான செலவுகள், வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளுக்கு பொறுப்புகளை உணரச் செய்வது போன்றவற்றின் மூலம், இதை உறுதி செய்யலாம்.
மம்தா பானர்ஜி
மே.வங்க முதல்வர்,
திரிணமுல் காங்.,


தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகளை தொடர வலியுறுத்தியும், அதற்காக விரைந்து சட்டங்கள் இயற்ற வலியுறுத்தியும், பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத் தொடரில், நாங்கள் விவாதம் எழுப்புவோம். அரசியலில் இருந்து பண பலத்தை போக்குவது தான் எங்கள் விருப்பம். இதற்காக, பார்லிமென்டின் உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்துவோம்.
டெரிக் ஓ பிரையன்
திரிணமுல் காங்., - எம்.பி.,தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக