திங்கள், 19 ஜனவரி, 2015

EVKS இளங்கோவன்:ஜெயலலிதா அருண் ஜெட்லியை சந்தித்தது வெட்ககேடானது! நீதியை கேலியாக்கும் கள்ள உறவு .....

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுடன் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சந்தித்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் கடும் சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. ஊழல் வழக்கில் 4 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு முதலமைச்சர் பதவியிழந்து விடுதலையாகியுள்ள ஜெயலலிதாவை அருண் ஜெட்லி சந்தித்ததன் மூலம் அரசியல் தார்மீக நெறிமுறைகளை காலில் போட்டு மிதித்திருக்கிறார். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவரை நிதியமைச்சர் பொறுப்பிலே இருக்கிற ஒருவர் சந்திக்கலாமா? இதன் மூலம் ஊழல் எதிர்ப்பு வேடம் போட்ட பா.ஜ.க.வின் முகமூடி கிழிந்திருக்கிறது.கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்த ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள் 37 இடங்களில் வெற்றி பெறச்செய்தனர். இத்தகைய தீர்ப்பை பெற்ற ஜெயலலிதா சமீபகாலமாக மத்திய அரசுக்கு எதிராக கண்டனங்கள் எழுப்புவதை தவிர்த்து வருவதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது.


முல்லைப்பெரியாறு பிரச்சனையில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி அளித்ததை எதிர்த்து ஜெயலலிதா குரல் கொடுக்காதது ஏன்? மதமாற்ற தடை சட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்ட போது பா.ஜ.க.வை ஜெயலலிதா ஆதரித்தது ஏன்? அன்று மத்திய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த காப்பீட்டு மசோதாவை எதிர்த்த அ.தி.மு.க. இன்றைக்கு ஆதரிப்பது ஏன்?

மாதந்தோறும் 50 காசு டீசல் விலை உயர்வை எதிர்த்து, அன்றைய பிரதமர் மன் மோகன்சிங்குக்கு நீட்டி முழக்கி எதிர்ப்பு கடிதம் எழுதிய ஜெயலலிதா இதுவரை நான்கு முறை பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை உயர்த்தியதை எதிர்த்து கடிதம் எழுதாதது ஏன்? தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து எட்டு மாதங்களாகியும் நீதிமன்ற தீர்வு காண மத்திய அரசை வற்புறுத்தாததற்கு ஜெயலலிதா கூறும் காரணம் என்ன? மத்திய மிருகவதை தடுப்புச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டிய மத்திய அரசை, ஏன் கொண்டு வரவில்லை என்று கேள்வி எழுப்புகிற துணிவை ஜெயலலிதா இழந்தது ஏன்?

தமிழக உரிமை சார்ந்த பிரச்சனைகளில் மத்திய அரசோடு மோதல் போக்கை தவிர்த்ததன் காரணமாக 18 ஆண்டுகள் நடந்த வருமான வரி வழக்கில் இருந்து விடுதலை பெறுவதற்கு மத்திய நிதித்துறை சலுகை காட்டியதை எவரும் மறந்திருக்க முடியாது. தற்போது தனிப்பட்ட முறையில் தமக்கிருக்கிற நெருக்கடியிலிருந்து விடுவித்துக்கொள்வதை நோக்கமாக கொண்டிருக்கிற ஜெயலலிதாவை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சந்தித்தது ஏன்? சந்திப்பின் நோக்கம் என்ன?

தமிழக பா.ஜ.க. ஒரு புறத்தில் 'கழகம் இல்லாத தமிழகத்தை' உருவாக்கப்போவதாக வாய்ச்சவடால் பேசுகிறது. மறுபுறத்தில் மத்திய நிதியமைச்சர் சமரசம் பேசுகிறார்.

ஜெயலலிதா சரணாகதி அடைகிறார். தமிழகத்தின் உரிமைகளை தாரை வார்த்துவிட்டு ஜெயலலிதா சமரசம் பேசுவதை விட தமிழர் விரோத போக்கு வேறு ஏதாவது இருக்க முடியுமா ? இதற்கு கைமாறாக மாநிலங்களவையில் 11 அ.தி.மு.க. உறுப்பினர்களையும், மக்களவையில் 37 உறுப்பினர்களையும் ஆதரவு கொடுப்பதன் மூலம் மத்திய பா.ஜ.க. அரசோடு சமரச உடன்படிக்கை ஏற்படுத்துவதற்கு ஜெயலலிதா முனைந்திருப்பதன் மூலம் சுயநல சந்தர்ப்பவாத அரசியல் அம்பலத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தை வளர்ப்பேன் என்று வாக்குகளை பெற்ற ஜெயலலிதா இன்று தம்மை காப்பாற்றிக்கொள்ள பா.ஜ.க. அரசோடு சமரச சரணாகதிக்கு ஆளாகியிருப்பது வெட்கக்கேடானது.

இவ்வாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தனதுஅறிக்கையில் கூறியுள்ளா nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக