வெள்ளி, 30 ஜனவரி, 2015

நீதியின் பலிபீடங்களாக நீதிமன்றங்கள்! நயவஞ்சகம் என்றால் என்ன என்று கற்று தரும் .........

சகாயம் குழுகுற்றவாளிகளைத் தப்புவிக்க வழக்கை ஆண்டுக் கணக்கில் இழுத்தடிப்பது, எதிர்த் தரப்பு வாதங்கள் எதையுமே கேட்காமல் தீர்ப்பு கூறுவது, வழவழா கொழகொழாவென தீர்ப்புகளை எழுதுவது, குற்றவாளிகளை எச்சரிப்பதுபோல நாடகமாடி சலுகை காட்டுவது
மக்கள் நலன் சார்ந்த பிரச்சினை தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்களின் செயல்பாடுகள், அதன் தீர்ப்புகள் நீதியைக் காவு வாங்குவதாகவே உள்ளன.நீதி – நியாயத்தை மக்கள் பெறுவதற்கான கடைசி புகலிடமாகச் சித்தரிக்கப்படும் நீதித்துறையானது, வழக்குகளைக் கையாளும் முறையே குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கில்தான் உள்ளது என்பதை ஜெயலலிதா – சசிகலா கும்பலுக்குப் பிணை வழங்கிய தீர்ப்பு அம்பலப்படுத்தியிருக்கிறது. இது ஏதோ விதிவிலக்கான விவகாரமாகக் கருத முடியாது. இப்படித்தான் ஏறத்தாழ எல்லா வழக்குகளையும் நீதித்துறை கையாள்கிறது .
சாலைப் பணியாளர்கள் வேலை பறிக்கப்பட்ட வழக்கே இதற்குச் சான்று கூறப் போதுமானது. இதர மாவட்டங்களில் கனிம வளச் சூறையாடலில் ஈடுபட்டு வரும் கொள்ளையர்கள் தப்பிக்கவும், முறைகேடுகளை மூடிமறைக்கவும் கால அவகாசத்தை ஏற்படுத்திக் கொடுத்து, தற்போதைக்கு மதுரை மாவட்டத்தில் மட்டும் விசாரித்தால் போதுமென்ற மொன்னையான நீதிமன்ற உத்தரவுப்படி, கிரானைட் முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்யும் முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம்
தி.மு.க. ஆட்சியின்போது நியமிக்கப்பட்ட 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை ஆட்சிக்கு வந்ததும் ஜெ. கும்பல் பணி நீக்கம் செய்து வீதியில் வீசியெறிந்ததை எதிர்த்து அப்பணியாளர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சுகுணா, பணிநீக்கத்துக்கு இடைக்காலத் தடை விதித்தார். இத்தீர்ப்புக்கு எதிராக ஜெ. அரசு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், சிவஞானம் ஆகியோர், நீதிபதி சுகுணா பிறப்பித்த உத்தரவை நீக்க முடியாது என்றும், மக்கள் நலப் பணியாளர்களை டிஸ்மிஸ் செய்யக் கூடாது என்றும் தீர்ப்பளித்தனர். பின்னர் இதை எதிர்த்து ஜெ அரசு உயர் நீதிமன்றத்தில் சீராய்வு முறையீடு செய்தது. இதை விசாரித்த நீதிபதி அனில்தவே, தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு, மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கத் தேவையில்லை என்று ஜெ. அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு கூறி உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது.
இதை எதிர்த்து மக்கள் நலப் பணியாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றமே விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, கடந்த ஆகஸ்ட் 19 அன்று இந்த வழக்கை விசாரித்த பால்வசந்தகுமார், சத்திய நாராயணன் ஆகிய நீதிபதிகள், மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டுமென்றும், பணி ரத்து செயப்பட்டதால் அவர்களில் 26 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதைக் குறிப்பிட்டு, அவர்களுக்கு அரசுப்பள்ளிகள், மதுஒழிப்புப் பிரச்சாரம் போன்ற வேறு பணிகளையாவது வழங்க வேண்டுமென்றும், இவற்றை 31.10.2014க்குள் நிறைவேற்ற வேண்டுமென்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஜெ. அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனு செப்.23 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதி அனில் தவே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்து விசாரணையை ஜனவரி முதல் வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளி  வைத்துள்ளனர்.
கடந்த மூன்றரை ஆண்டுகளாக மக்கள் நலப் பணியாளர்களை உச்ச நீதிமன்றம் வரை இழுத்தடித்து படாதபாடு படுத்தியிருக்கிறது ஜெ. அரசும் நீதித்துறையும். அவர்களில் பெரும்பாலோர் தாழ்த்தப்பட்ட மிகவும் பிற்பட்ட சமூகப் பின்னணியைச் சேர்ந்தவர்கள். கடந்த 20 ஆண்டுகளாகப் பணியாற்றியுள்ள அவர்கள் இத்தனை வருடங்களுக்குப் பிறகு வயதையும் தொலைத்துவிட்டு வேலையுமிழந்து பரிதவிக்கிறார்கள். ஆனாலும் ஜெ. அரசுக்குச் சாதகமாக இந்த வழக்கை இன்னமும் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது மனித உணர்ச்சியே இல்லாத நீதித்துறை. நீதித்துறை வழக்கைக் கையாளும் முறையைப் புரிந்துகொள்ள இதுவொரு உதாரணம்தான்.
சாலைப் பணியாளர்கள்
ஜெ. அரசால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சாலைப் பணியாளர்கள், தங்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி விழுப்புரம் அருகே தூக்குக் கயிறுடன் நடத்திய சாலை மறியல் போராட்டம். (கோப்புப் படம்)
தனியார் பள்ளிப் பேருந்துகளை முறைப்படுத்தக் கோரும் வழக்கு, குடியிருப்புப் பகுதிகளிலிருந்து டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரும் வழக்கு, பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளைத் தடுக்கக் கோரும் வழக்கு, பேருந்து நிழற்குடைகளை அமைப்பதில் நடந்துள்ள ஊழல் குறித்த வழக்கு, விதிமுறைகளை மீறி அடுக்குமாடிக் குடியிருப்புகள் – வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளதை எதிர்த்த வழக்கு, ஆக்கிரமிப்பாளர்களால் புழல் ஏரிப் பகுதியில் 18 கிணறுகளைக் காணவில்லை என்ற வழக்கு – என இப்படி எல்லா பொதுநல வழக்குகளையும் கண்டுகொள்ளாது தட்டிக்கழிப்பது, ஒத்திவைப்பது, அரசிடம் விளக்கம் கேட்டு வழக்கை இழுத்தடிப்பது, தானே போட்ட உத்தரவுகளைச் செயல்படுத்த எந்த நடவடிக்கையும் இன்றிச் செயலற்றுக் கிடப்பது – என்பனவற்றின் மூலம் மேற்படிக் குற்றங்களுக்கு  நீதித்துறையே உடந்தையாக மாறிப்போவிட்டது.
அண்மையில் டிராபிக் ராமசாமி தொடுத்த பொதுநல வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கனிமவள முறைகேடுகள் பற்றி விசாரிக்க மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் தலைமையில் குழு அமைக்க உத்தரவிட்டதோடு, இரண்டு மாதங்களுக்குள் தனது அறிக்கையை அளிக்க வேண்டுமெனவும் கூறியது. இதனை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செத மனுக்கள் உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் சகாயம் தலைமையில் குழுவை அமைத்து விசாரணை நடத்த தமிழக அரசு வேறுவழியின்றி உத்தரவிட்டுள்ள அதேசமயம், அதனைச் சீர்குலைக்கும் வேலையையும் செய்து வருகிறது.
இதையடுத்து கனிமவள முறைகேடு குறித்து மதுரை மாவட்டத்தில் மட்டும் விசாரிக்க வேண்டுமா, அல்லது தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் விசாரணை நடத்த வேண்டுமா என்பதைத் தெளிவுபடுத்தக் கோரி சகாயம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கவுல் அடங்கிய அமர்வு, மதுரை மாவட்டத்தில் நடந்துள்ள கனிம வள முறைகேடுகள் பற்றி முதற்கட்டமாக விசாரித்தால் போதுமானது, இது பெரிய விவகாரம் என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக விசாரணையை விரிவுபடுத்திக் கொள்ளலாம் என்று மொன்னையாக தீர்ப்பளித்துள்ளது.
சிறிய பேருந்து
சிறிய பேருந்துகளில் வரையப்பட்டிருப்பது இரட்டை இலை ஓவியம் அல்ல, மாசு இல்லாத பேருந்தைக் குறிக்கும் பசுமை இலை ஓவியம் என்ற ஜெ. தரப்பின் வாதத்தை ஒருபுறம் ஏற்றுக் கொண்டு, மறுபுறம் ஏற்காடு தேர்தல் முடியும்வரை தற்காலிகத் தடை விதித்து ஜெ. மனங்கோணாதபடி பவ்யமாகத் தீர்ப்பளித்தது சென்னை உயர்நீதி மன்றம்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பொதுப்பணித்துறையின் துணையுடன் தனியார் நிறுவனங்கள் சட்டவிரோதமாக கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டு வருவது யாவரும் அறிந்த உண்மை. ஆற்று மணல், செம்மண், கல் குவாரிகள், தாதுமணல், கிரானைட் உள்ளிட்ட அனைத்து வகையான கனிம வளக் கொள்ளையையும் சகாயம் குழு விசாரிக்க வேண்டுமென கோரிக்கைகள் வலுத்துள்ள நிலையில், தற்போதைக்கு மதுரை மாவட்டத்தில் மட்டும் விசாரித்தால் போதுமென நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளதன் மூலம் இதர மாவட்டங்களில் கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்டுவரும் கொள்ளையர்கள் தப்பிக்கவும், முறைகேடுகளை மூடிமறைக்கவும் கால அவகாசத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது, நீதித்துறை.
இதுவொருபுறமிருக்க, அரசு கணக்கின்படியே 16,000 கோடி ரூபாய் அளவுக்கு கிரானைட் ஊழலில் ஈடுபட்ட பி.ஆர்.பி. நிறுவனம், மதுரை தவிர இதர மாவட்டங்களில் குவாரி தொழிலில் ஈடுபடலாம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ராஜா அண்மையில் உத்தரவு பிறப்பித்துள்ளார். உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த ஒரு வழக்கில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கையாண்டு வரும் வழக்கில் குறுக்கே புகுந்து தனியாக இப்படியொரு அயோக்கியத்ததனமான உத்தரவைப் பிறப்பித்து பி.ஆர்.பி. கும்பலின் பகற்கொள்ளை தொடர மதுரைக் கிளை நீதிபதியான ‘வசூல்’ ராஜா பச்சைக் கொடி காட்டியுள்ளார். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் வழக்குரைஞர் வாஞ்சிநாதன் இதில் தலையிட்டு மனு தாக்கல் செய்த போதிலும், அதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே தீர்ப்பளித்திருக்கிறார் ராஜா.
இப்படித்தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட்  ஆலையை மூடச்சோல்லி சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டு அளித்த தீர்ப்பை முற்றாக ரத்து செய்து 2.4.2013-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழக அரசு மன்னார் வளைகுடாவைத் தேசிய கடல் பூங்காவாக அறிவித்திருப்பதை மைய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் இன்னும் அங்கீகரிக்கவில்லை என்று மொன்னையான காரணத்தை முன்வைத்து, ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க தாராள அனுமதி அளித்தது. அதேசமயம் தனது அநீதியான தீர்ப்பு அம்பலமாகாமலிருக்க, ஸ்டெர்லைட் ஆலை கடந்த 15 ஆண்டுகளில் ஏற்படுத்திய சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தன்னை யோக்கியவானாகக் காட்டிக் கொண்டது. குற்றவாளிகளுக்கு அபராதம் விதித்து அவர்களைத் தண்டனையின்றித் தப்பிக்கவைக்கும் கட்டப்பஞ்சாயத்து நாட்டாமைகளின் தீர்ப்புக்கும் இதற்கும் வேறுபாடு ஏதும் இருக்கிறதா?
மவுலிவாக்கம் கட்டிட இடிவு
கடந்த ஜூன் இறுதியில் 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து 61 பேரைப் பலிகொண்டு, 27 பேரைப் படுகாயப்படுத்திய சென்னை-மவுலிவாக்கம் பயங்கம் : இப்பகுதியை சீல் வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், விசாரணை முழுமையாக நிறைவடையாத நிலையில் அவசரமாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யக் கூடாது என்று கூறி குற்றவாளிகளைக் காப்பாற்ற இன்னமும் இந்த வழக்கை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.
இப்படி கட்டப்பஞ்சாயத்து நடத்தும் நீதிபதிகள், பொதுநல வழக்கு தொடுப்பவர்கள் மீதே குற்றம் சாட்டித் தண்டிக்கவும் தவறுவதில்லை. பத்திரிகையாளர் அன்பழகன், வழக்கத்துக்கு மாறாக சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 2015-ஆம் ஆண்டில் தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. “உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், வடமாநிலக் கலாச்சாரத்தை இங்கு திணிக்க முயற்சிக்கும் வகையில் கூடுதலாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டுமெனக் கோரி” அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அடங்கிய முதன்மை அமர்வு விசாரித்தபோது, தீபாவளி பண்டிகைக்குக் கூடுதல் விடுமுறை அவசியமா, இல்லையா என்பதையோ, இது வடமாநிலக் கலாச்சாரத்தைத் திணிக்கும் செயல்தானா என்பதையோ பரிசீலிக்காமல், மனுதாரர் மீது பாய்ந்தனர். மனுதாரர் பிரிவினைவாதத்துடன், நாட்டைப் பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் என்று அபாண்டமாகக் குற்றம் சாட்டினர். இவர் விளம்பரத்துக்காக மனு தாக்கல் செய்து மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறார் என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து, எதிர்காலத்தில் இதுபோன்ற மனுக்கள் தாக்கல் செயப்படுவதைத் தடுக்கும் நோக்கில் வழக்கு செலவுக்காக மனுதாரருக்கு ரூ 20,000 அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இப்படி கடுமை காட்டும் நீதிபதிகளின் அணுகுமுறையும் தீர்ப்பும் ஆளும் ஜெ. தரப்பின் வழக்கு என்றால் வேறு மாதிரியாக மாறிவிடுகிறது. ஏற்காடு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகரில் இயக்கப்படும் சிறிய பேருந்துகளில் ஆளும் கட்சியின் இரட்டை இலை சின்னம் வரையப்பட்டிருந்ததை எதிர்த்து, அதை நீக்கக் கோரி மு.க. ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை இழுத்தடித்த சென்னை உயர்நீதி மன்றம், பின்னர் இது இலை ஓவியம் அல்ல, மாசு இல்லாத பேருந்தைக் குறிக்கும் பசுமை இலை ஓவியம் என்ற ஜெ. தரப்பு வாதங்களைக் கேட்டுவிட்டு, இலை ஓவியத்தை உள்நோக்கம் எதுவும் இல்லாமல் தமிழக அரசு வரைந்துள்ளதாகக் கூறுவதை ஏற்பதாகவும், இருப்பினும், இது வாக்காளர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் கருதுவதால், அதன் முடிவை ஏற்று வழக்கைத் தள்ளுபடி செவதாகவும் ஜெ. மனங்கோணாதபடி பவ்யமாகத் தீர்ப்பளித்தது. ஜெ. கும்பல் திமிர்த்தனத்தைக் கண்டிக்கவோ, நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக அபராதம் விதிக்கவோ அது முன்வரவில்லை.
குற்றவாளிகளைத் தப்புவிக்க வழக்கை ஆண்டுக் கணக்கில் இழுத்தடிப்பது, எதிர்த் தரப்பு வாதங்கள் எதையுமே கேட்காமல் தீர்ப்பு கூறுவது, வழவழா கொழகொழாவென தீர்ப்புகளை எழுதுவது, குற்றவாளிகளை எச்சரிப்பதுபோல நாடகமாடி சலுகை காட்டுவது, நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத மத்திய-மாநில அரசுகளுக்குக் கண்டனம் தெரிவிப்பது, அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பது, பிறகு மன்னிப்பு வாங்கிக் கொண்டு வழக்கைத் தள்ளுபடி செவது என்பன போன்ற நடைமுறைகளெல்லாம் நீதித்துறையின் வாடிக்கையாகிவிட்டன. இந்த மானக்கேடான நிலைமை பற்றி மாட்சிமை தங்கிய நீதிபதிகள் கடுகளவும் வெட்கப்படுவதில்லை.
- மனோகரன் வினவு.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக