வியாழன், 29 ஜனவரி, 2015

சுஜாதா சிங் ஏன் திடீரென்று மாற்றப்பட்டார்?சந்தேகத்துக்கு நிச்சயமாக இடம் இருக்கிறது

சுஜாதா சிங் - ஜெய்சங்கர்மத்திய வெளியுறவுத் துறையின் புதிய செயலாளராக, அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் எஸ்.ஜெய்சங்கர் புதன்கிழமை இரவு நியமிக்கப்பட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நியமனங்களுக்கான குழுவின் கூட்டம் தில்லியில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, புதிய வெளியுறவுச் செயலர் நியமனம் தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. வெளியுறவுச் செயலராகப் பணியாற்றி வந்த சுஜாதா சிங்கின் இரண்டு ஆண்டு பதவிக்காலம்,வருகிற ஆகஸ்டில்தான் நிறைவடையும். இந்த நிலையில், அவர் அதிரடியாக நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக புதிய வெளியுறவுத் துறை செயலராக ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: 1976ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐஎஃப்எஸ் அதிகாரியான சுஜாதா சிங்கின் பதவிக்காலம் உடனடியாக முடித்துக் கொள்ளப்படுகிறது. அவரது பொறுப்புக்கு நியமிக்கப்படும் 1977ஆம் ஆண்டு ஐஎஃப்எஸ் அதிகாரியான எஸ்.ஜெய்சங்கர் இப்பதவியில் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்படுவதற்கு முன்பாக, சீனாவுக்கான இந்தியத் தூதராகவும், சிங்கப்பூருக்கான துணைத் தூதராகவும் ஜெய்சங்கர் பணியாற்றினார்.
கடந்த 2008-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான குழுவில் முக்கிய பொறுப்பையும் ஜெய்சங்கர் வகித்துள்ளார். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிகாப்புப் படையின் செயலராகவும், அரசியல் ஆலோசகராகவும் ஜெய்சங்கர் பணியாற்றினார்.
அரசியல் அறிவியல் பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்ற இவர், சர்வதேச உறவுகள் குறித்து ஆய்வு செய்து, முனைவர் பட்டமும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக