சனி, 10 ஜனவரி, 2015

மனித கழிவை சுத்திகரித்து தயாரான நீரை பருகிய பில் கேட்ஸ்

புதியமுறை தொழில்நுட்ப முயற்சியினால் மனிதக் கழிவுகளை சுத்திகரித்து, அதிலிருந்து உற்பத்தி செய்த குடிநீரை பருகிப் பார்த்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், அந்தத் தண்ணீரே தாம் இதுவரை பருகியவற்றில் மிகவும் சுவையானதாக உள்ளது என்று பாராட்டியுள்ளார். | வீடியோ இணைப்பு கீழே |
அமெரிக்காவின் சியேட்டலை மையமாக கொண்டு செயல்படும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமான ஜானிக்கி உயிரிசக்தி ஆலை Omniprocessor வகையிலான தண்ணீர் தயாரிப்பு முறையை இந்த நிறுவனம் கண்டுபிடித்தது. மனிதக் கழிவுகளை கொண்டு அதனை சுத்திகரிப்பு செய்து அதிலிருந்து குடிநீரை தயாரிப்பதே இந்தச் சோதனை முயற்சியாகும்.

இதன் முதல் சோதனை முயற்சி செனகலில் நடத்தப்பட்டது. இந்த ஆய்வு குறித்து அறிந்த பில் கேட்ஸ் தனது மனைவியுடன் அவர் இணைந்து நடத்தும் தன்னார்வ நிறுவனமான 'வில்லியம் ஹெச். கேட்ஸ் ஃபவுண்டேஷன்’ மற்றும் ‘பில் அன்ட் மெலின்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன்' உதவியுடன் இந்த முயற்சிக்கு ஆதரவு அளித்து ஊக்கம் தந்துள்ளார்.
செனகல் ஆலையை முழுவதுமாக சுற்றிப்பார்த்த பில் கேட்ஸ், மனிதக் கழிவுகளை கொண்டு பலதரப்பட்ட சுத்திகரிப்பு முறைகளுக்கு பின்னர் தயாரான குடிநீரை பில் கேட்ஸ் குடித்துப் பார்த்தார். இதனை அடுத்து கூறிய அவர், "இந்த தண்ணீர் மிகவும் சுவையாக இருக்கிறது. இதற்கு முன் நான் பருகி வந்த குடிநீரை விட இதுவே சிறந்ததாக இருக்கிறது. தினமும் இதனை பயன்ப்படுத்த நான் விரும்புகிறேன்" என்றார்.
மனிதக் கழிவுநீரை சுத்திகரித்து அதலிருந்து தயாரிக்கப்பட்ட குடிநீரை பில் கேட்ஸ் பருகும் வீடியோ காட்சி அவரது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கமான @thegatesnotes-ல் 5-ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஐந்து நிமிடங்கள் கொண்ட இந்த வீடியோவில் சுத்திகரிப்பு முறைகளில் பின்பற்றப்படும் முறைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இத்தகைய புதிய முயற்சியை வரவேற்று அதனை ஊக்குவிக்கும் விதமான இந்த வீடியோவை தற்போதைய நிலவரப்படி 1,966,119 பேர் கண்டனர்.
இது குறித்த கட்டுரை ஒன்றையும் பில் கேட்ஸ் தனது வலைப்பூவில் விரிவான கட்டுரையையும் வெளியிட்டுள்ளார்.
உலகின் மிகப் பெரிய பணக்காரர்களின் வரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் பில் கேட்ஸ், மனித கழிவுகளை சுத்திகரித்த குடிநீரை குடித்து புதியதொரு முயற்சிக்கு ஊக்குவித்துள்ளது பலதரப்பினரால் பாராட்டப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கழிவறை உபயோகிப்பின் அவசியம் குறித்தும் அதனை செயல்படுத்தாததால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் 'வில்லியம் ஹெச். கேட்ஸ் ஃபவுண்டேஷன்’ மற்றும் ‘பில் அன்ட் மெலின்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன்' உலக அளவில் விழுப்புணர்வு பிரச்சாரம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.  /tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக