சனி, 10 ஜனவரி, 2015

ஸ்டாலின் ஒப்புதல் இல்லாமல் கலைஞர் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது?

திமுக தலைவராக கருணாநிதி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்றாலும் அது முன்புபோல் அதிகாரத்துடன் கூடிய பதவி இல்லை.
திமுகவின் தலைவர் பொறுப்புக்கு முதல் முறையாக 1969-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழுவில் கருணாநிதி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இன்றோடு 45 ஆண்டுகள் 6 மாதங்கள் 23 நாள்கள் ஆகின்றன. திமுகவின் தலைவர் பதவியில் இருந்து கருணாநிதியை வீழ்த்த அவரது மகன்களாலும் இயலவில்லை.
இன்று நடைபெறும் பொதுக் குழுவில் கருணாநிதி 11-ஆம் முறையாக தலைவராக ஒருமனதாகத் தெர்ந்தெடுக்கப்பட உள்ளார். எனினும், 69-இல் திமுகவுக்கு இருந்த எழுச்சியும், கருணாநிதிக்கு இருந்த ஆதரவும் இப்போது இருக்கிறதா என்றால், இல்லை என்று அழுத்தமாகச் சொல்ல முடியும்.
1969-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் தேதி அண்ணா மறைந்ததும், இரண்டாம் இடத்தில் இருந்த நெடுஞ்செழியனே முதல்வர் ஆவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
அந்த நேரத்தில், "அண்ணாவின் இடத்தைப் பூர்த்தி செய்யக் கூடிய திறமையும், ஆற்றலும் படைத்தவர் கருணாநிதிதான்' என்று பெரியார் முந்திச் சொல்ல; கருணாநிதிக்கு ஆதரவாக எம்.ஜி.ஆரும் அறிக்கை கொடுத்தார். ஜெயலலிதாவின் காலில் விழுவது போல ஸ்டாலினின் காலில் கூட பலரும் விழுந்து  வணங்கும் கண்றாவி. சுயமரியாதை இயக்கத்தின்  இன்றைய நிலை?

இதன் தொடர்ச்சியாக, அந்த ஆண்டு பிப்ரவரி 9-ஆம் தேதி நடைபெற்ற திமுகவின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டப்பேரவை திமுக தலைவர் பதவிக்கு (முதல்வர்) கருணாநிதியை அமைச்சர்களாக இருந்த மதியழகன் முன்மொழிய, சத்தியவாணி முத்து வழிமொழிந்தார்.
நெடுஞ்செழியனை ஆதரித்து எம்.ஜி.ராமசாமி முன்மொழிய வி.டி.அண்ணாமலை வழிமொழிந்தார்.
இந்த நிலையில், "புதிய தலைவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் நான் போட்டியிட விரும்பவில்லை. போட்டியிலிருந்து விலகிக் கொள்கிறேன்' என்று நெடுஞ்செழியன் கூறினார். கருணாநிதி முதல்வரானார்.
அதன் பிறகு, நடைபெற்ற கட்சித் தேர்தலில் பொதுச் செயலாளர் பொறுப்புக்கு நெடுஞ்செழியன் போட்டியிட முன்வந்தார். அப்போது, திமுகவில் தலைவர் பொறுப்பு என்பது இல்லை.
"தலைவர் பொறுப்பு எப்போதும் பெரியாருக்குத்தான்' என்று கூறி, கடைசி வரை பொதுச் செயலாளராகவே அண்ணா நீடித்தார்.
அந்தப் பொறுப்புக்கு நெடுஞ்செழியன் தேர்தலில் நிற்க முன் வந்ததும், "முதல்வராக ஒருவரும், பொதுச் செயலாளராக ஒருவரும் இருந்தால் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்' என்று திமுகவில் உள்ள அனைவரும் கருதினர்.
இதனால் கட்சியின் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, அப்போது அவைத் தலைவர் என்று இருந்த பொறுப்பு தலைவராக மாற்றப்பட்டது. அப்போது நடைபெற்ற பொதுக் குழுவில் கருணாநிதி தலைவரானார், நெடுஞ்செழியன் பொதுச் செயலாளர் ஆனார். அன்று இழந்த இடத்தை நெடுஞ்செழியனால், பிறகு எந்தக் காலத்திலும் பிடிக்க முடியவில்லை.
இன்று 92 வயதாகும் கருணாநிதி திமுகவின் தலைவராக நீடிக்கிறார். அண்ணா இல்லாத நிலையில் 1971, 1989, 1996, 2006 என நான்கு முறை திமுகவை ஆட்சியில் அமர்த்தியது; எம்ஜிஆர், வைகோ பிரிவால் ஏற்பட்ட புயல்களைச் சமாளித்து, திமுகவை நிலைக்கச் செய்தது என்று கருணாநிதியின் பெருமைகள் நீளவே செய்யும். ஆனால், திமுகவின் இன்றைய நிலை என்ன? சாமானியர்களின் கட்சி என்று பெருமை பேசிய திமுகவினரால், இப்போது அப்படிச் சொல்லிக் கொள்ள முடியுமா என்பது சந்தேகமே. பெரும் முதலாளிகளும், கோடீஸ்வரர்களுமே திமுகவின் பொறுப்புகளுக்கு வர முடியும் என்ற நிலை இருக்கிறது.
திமுகவின் 14-ஆவது உள்கட்சித் தேர்தலில் கோலோச்சிய பணநாயகம் இதற்குச் சான்று. ஜாதி ஒழிப்புக்காகத் தொடங்கப்பட்ட திமுகவில் மாவட்டச் செயலாளர்களில் இத்தனை பேர் இந்த ஜாதி, அத்தனை பேர் அந்த ஜாதி எனும் பட்டியலை கருணாநிதி வெளியிட்டு, திமுகவினரைத் திருப்திப்படுத்த வேண்டிய நிலை இருக்கிறது.
மேலும், மதுரையில் திமுகவினருக்கு எதிராகவே பி.சி.ஆர். சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. இதன் பின்னணியில் மு.க.அழகிரி இருந்ததாகக் கூறி, அவர் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
நேர்மையான ஆட்சியைக் கொடுப்போம் என்று சொல்லி வந்த திமுகவினர் மீது, இப்போது பல்வேறு ஊழல் புகார்கள். ஒரு காலத்தில் திமுக பேசியதையே அப்படியே நம்பிய மக்கள், இப்போது திமுக எதைக் கூறினாலும் நம்ப மறுக்கும் அளவுக்கு திமுகவின் நிலை உள்ளது.
திமுக ஆட்சியை இழந்து 4 ஆண்டுகள் ஆகிப் போகிறது. இப்போதும் மக்களால் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படும் கட்சியாக திமுகவே இருந்து வருகிறது.
80 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட திமுகவில் ஸ்டாலின் ஒருவரையே தலைவர் பதவிக்கு கருணாநிதி கொண்டு வந்தார். அதனை எதிர்ப்பவர்களாக அறியப்பட்ட வைகோ, டி.ராஜேந்தர், மு.க.அழகிரி எனத் தொடங்கி, கடைசியாக குஷ்பு வரை திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர்.
துணை முதல்வர் பதவி கடந்த திமுக ஆட்சியின்போதே ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்டுவிட்டது. மாவட்டச் செயலாளர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள் என அனைவரும் ஸ்டாலின் ஆதரவாளர்கள். இப்போது, தலைவர், பொதுச் செயலாளர் பதவிகளுக்கே ஸ்டாலினிடம் ஒப்புதல் பெற வேண்டிய கட்டாயம்.
தற்போதைய நிலையில் கருணாநிதி தலைவர்தான். ஆனால், 1969-ஆம் ஆண்டை போன்ற அதிகாரத்துடன் கூடிய தலைவர் இல்லை. கருணாநிதி எதிர்கொள்ள இருக்கும் சோதனைகளும், வேதனைகளும், சவால்களும் ஏராளம் உள்ளன.  dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக