புதன், 21 ஜனவரி, 2015

சுனந்தா உயிரைகாக்க போராடினாரா? சுனந்தா கொலை வழக்கு கிடைக்கும் 'திடுக்' தகவல்கள்!

டெல்லி: சுனந்தா கொலையை மூடி மறைக்க முயற்சி நடந்துள்ளதை இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு குழு கண்டுபிடித்துள்ளது. சுனந்தா இறந்த பிறகு அவரது அறையில் இருந்த அவருடைய பொருட்கள் சில மாயமாகியுள்ளன. யாரோ சாட்சியங்களை அழிக்க முயற்சி செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுனந்தாவின் காலணிகள், உடைகள் ஆகியவை மாயமாகியுள்ளன. ஒருவர் மர்மமான முறையில் இறந்த இடத்தில் வழக்கமாக இது போன்று நடக்காது என்று விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  மூடி மறைக்க முயற்சி: இது கொலை தான் என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அவர் தற்கொலை செய்திருந்தால் அவரது அறையில் இருந்த பொருட்களை ஏன் அகற்றியிருக்க வேண்டும் என்று அந்த விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார். சுனந்தா இறந்து அது வெளியே தெரியும் முன்பு அவரது அறைக்கு ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அறையில் கண்ணாடி உடைந்து கிடந்துள்ளது, அவரது உடைகள், காலணி ஆகியவை மாயமாகியுள்ளது. கண்ணாடி உடைந்து கிடந்ததை பார்க்கையில் அறையில் சண்டை நடந்திருக்கலாம் அல்லது கொலையை மறைக்க முயல்கையில் கண்ணாடி உடைந்திருக்கலாம் என்று அதிகாரி தெரிவித்துள்ளார். சுனந்தா தனது உயிரை காக்க போராடியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
ஐபிஎல் ஆதாரங்கள் இந்த வழக்கை ஐபிஎல் ஊழல் கோணத்திலும் விசாரித்து வருகிறார்கள். ஐபிஎல்லில் பணப் பரிவர்த்தனை தங்களுக்கு பிடித்தது போன்று நடக்காததால் சிலர் சுனந்தாவை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது. ஐபிஎல் விவகாரம் சுனந்தாவை முற்றிலும் மாற்றிவிட்டதாக இதுவரை விசாரிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். நான் தவறான காரணங்களுக்காக செய்தியில் வருகிறேன். இது எனக்கு சற்றும் பிடிக்கவில்லை என்று சுனந்தா தனது குடும்பத்தாரிடம் தெரிவித்திருக்கிறார். ஐபிஎல் விவகாரம் குறித்து சுனந்தாவுக்கு ஏராளமான தகவல் தெரியும் என்றும், அதை வெளியே கூற வேண்டும் என்று அவர் நினைத்தார் என்றும் பலர் தெரிவித்துள்ளனர். இது குறித்து சுனந்தாவின் கணவரான முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூருக்கு தெரியுமா என்று போலீசார் மீண்டும் அவரிடம் விசாரிக்க வேண்டும். ஏனென்றால் முந்தைய விசாரணையில் இந்த விவகாரம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளார் தரூர். ஏதோ முக்கியமானதை உலகிற்கு தெரிவிக்கப் போகிறேன் என்று சுனந்தா உங்களை மிரட்டினாரே, அது உங்களை பற்றியதா, அல்லது உங்களுக்கு தெரிந்தது பற்றியதா என்று போலீசார் தரூரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவரோ சுனந்தா எதை வெளியே கூற வேண்டும் என்றார் என்பது பற்றி தனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார். ஆனால் சுனந்தா எதை வெளியே தெரிவிக்க விரும்பினாரோ அதை தனது நம்பிக்கைக்குரியவர்களிடம் கூறியுள்ளார். அதனால் அவர்களை விசாரிக்கையில் இந்த விவகாரம் பற்றி தெரிய வரும் என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Read more tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக