சனி, 31 ஜனவரி, 2015

ஜெயந்தி நடராஜன் : வேதாந்த குழுமம், அதானி குழும திட்டங்கள் போன்ற விவகாரங்களில் ராகுல் நிர்ப்பந்தம்.....

டெல்லி: சில குறிப்பிட்ட தொழில் நிறுவனங்களுக்குச் சாதகமாக நடக்குமாறு தன்னை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நிர்ப்பந்தம் செய்ததாகவும், தான் ராகுல் காந்தியின் உத்தரவுகளை மதித்து நடந்ததாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு முன்னாள் மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கடிதம் எழுதியுள்ளது அம்பலமாகியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தக் கடிதத்தை ஜெயந்தி நடராஜன் சோனியாவுக்கு அனுப்பியுள்ளார். கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் காங்கிரஸிலிருந்து விலகுவதாக அறிவித்து பின்னர் மீண்டும் இணைந்து பணியாற்றி வந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.  இந்த நிலையில், சோனியா காந்திக்கு அவர் கடந்த நவம்பர் மாதம் எழுதியுள்ள கடிதத்தில், ராகுல் காந்தியின் நிர்ப்பந்தம் குறித்து கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தி இந்து நாளிதழ் வெளியிட்டுள்ள அந்தக் கடிதத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் ராகுலின் கோரிக்கைகள்... சுற்றுச்சூழல் தொடர்பான சில முக்கிய முடிவுகளில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடமிருந்து குறிப்பிட்ட கோரிக்கைகள் வந்தன. அவற்றுக்கு நான் மதிப்பளிக்கத் தவறியதில்லை. அதேசமயம், சில முக்கியத் திட்டங்கள் தொடர்பாக அமைச்சரவை சகாக்கள் கடும் நெருக்குதல் கொடுத்தும் கூட அவற்றை நான் ஏற்றதில்லை. நிராகரித்துள்ளேன். விமர்சனம்... கட்சிக்குள் உள்ள சிலரால், ராகுல் காந்திக்கு வேண்டிய சிலரால், ராகுல் காந்தியால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரால் நான் தொடர்ந்து குறி வைத்து விமர்சிக்கப்பட்டேன். என்னைப் பற்றி மீடியாக்களில் அவர்கள் அவதூறு பிரசாரமே மேற்கொண்டனர். மேலும், லோக்சபா தேர்தல் பிரசாரம் உச்சத்தில் இருந்தபோது சுற்றுச்சூழல் துறையிலிருந்து என்னை மாற்றினர். ராஜினாமா செய்தி... நான் கடந்த 2013ம் ஆண்டு ராஜினாமா செய்வதாக அறிவித்த அடுத்த நாள் என்னைப் பற்றி மீடியாக்களில் அவதூறு செய்திகளைப் பரப்பினார்கள். கட்சிப் பணியாற்ற நான் விரும்பவில்லை என்று விஷமத்தனமாக செய்தி பரப்பினர். நிராகரித்ததில்லை... எனது அலுவலகம் தொடர்பாக பல முக்கிய தனிப்பட்ட கோரிக்கைகளை ராகுல் காந்தி வைத்தார். அவற்றை நான் உத்தரவு போல எடுத்துக் கொண்டு மதித்துதான் நடந்தேன். அவர் சொன்ன எதையும் நான் நிராகரித்ததில்லை. வேதாந்தா குழுமத் திட்டம்... வேதாந்தா குழுமத்தின் திட்டம் தொடர்பான கோப்புகள் வந்தபோது அதில் நான் பழங்குடியினர் நலனைக் கருத்தி மிகவும் கவனமாக செயல்பட்டேன். பழங்குடியினர் பாதுகாக்கப்பட வேண்டும், அவர்களுக்கு பாதிப்பு வரக் கூடாது என்ற அக்கறையில்தான் அத்திட்டத்திற்கு அனுமதி அளிக்க மறுத்தேன். இந்தத் திட்டத்திற்கு அனுமதி தருமாறு எனது அமைச்சரவை சகாக்கள் சிலர் கடுமையாக நிர்ப்பந்தித்தும் கூட அதை நான் ஏற்கவில்லை. அதானி குழும திட்டங்கள்... நரேந்திர மோடியின் நண்பரான அதானி குழுமத்தின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்திலும் நான் ராகுல் காந்தியின் அலுவலகத்தால் நிர்ப்பந்திக்கப்பட்டேன். குஜராத் காங்கிரஸைச் சேர்ந்த தீபக் பபரியாவுடன் இணைந்து இதில் ஆலோசனை கலந்து செயல்படுமாறு நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன். உத்தரவுகள், கோரிக்கைகள்... நீங்களுமே கூட இந்த விவகாரம் தொடர்பாக பல கவலைகளை எனக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தீர்கள். குறிப்பாக ஜிவிகே பவர் திட்டம், லவசா திட்டம், நிர்மா சிமென்ட் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் தொடர்பாக எனக்கு குறிப்பிட்ட உத்தரவுகள், கோரிக்கைகள் வந்தன. குடும்ப கௌரவத்திற்கு குந்தகம்... என்னை 2013ம் ஆண்டு ஏன் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினீர்கள் என்ற காரணம் எனக்குத் தெரியவே இல்லை. கடந்த 30 வருடமாக பொது வாழ்க்கையில் எந்தக் களங்கமும், புகாரும் இல்லாமல் செயல்பட்டுள்ளேன். ஆனால் நடந்த சம்பவங்கள் எனது குடும்ப கெளரவத்திற்கு குந்தகம் ஏற்படும் வகையில் அமைந்து விட்டன. டாய்லட்டில் கிடந்த பைல்... நான் அமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு கூறப்பட்டு நான் விலகிய சில நாட்களுக்கு முன்பு அதானி குழுமம் தொடர்பாக நான் கடும் நடவடிக்கை எடுத்து அனுப்பிய பைல்,காணாமல் போய் விட்டது. பின்னர் அது கழிவறையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல மேற்குத் தொடர்ச்சி மலை தொடர்பான கஸ்தூரி ரங்கன் அறிக்கை காரணமாக கேரளாவில் எனக்கு எதிரிகள் முளைத்தார்கள். இடி போலத் தாக்கிய குற்றச்சாட்டு... இதெல்லாம் கூட என்னைப் பாதிக்கவில்லை. ஆனால் நான் பதவி விலகிய அடுத்த நாள் நடந்த எப்ஐசிசிஐ கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, சுற்றுச்சூழல் திட்டங்கள் தாமதமானதற்கும், பொருளாதார பாதிப்புக்கும் என்னைக் குற்றம் சாட்டுவது போல பேசியதுதான் என்னை இடி போல தாக்கியது. மோடி விவகாரம்... மேலும், குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி பெண்ணை உளவு பார்க்க உத்தரவிட் விவகாரத்தில் அவரைக் கடுமையாக தாக்கிப் பேசுமாறும் நான் கட்சியால் நிர்ப்பந்திக்கப்பட்டேன். ஆனால் தனி நபர் பிரசாரத்திற்கு நான் உடன்படவில்லை. கொள்கை ரீதியிலான விமர்சனத்தையே நான் ஆதரித்து வந்துள்ளேன். ஆனால் அதையும் மீறி நான் கட்டாயப்படுத்தப்பட்டேன் என்று கூறியுள்ளார் ஜெயந்தி நடராஜன்.

/tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக