புதன், 21 ஜனவரி, 2015

கவுண்டர் பெண்களை களங்கப்படுத்தியது பெருமாள் முருகனா ?

எழுத்தாளர் பெருமாள் முருகன்
பிள்ளை வரம் வேண்டி கோவிலுக்கு செல்லும் ஆதிக்க சாதி பெண்களோடு உறவு கொண்டு அபயமளித்து கோரிக்கையை நிறைவேற்றும் ஆண்களை சாமிகளாக கருதுகிறார்கள் மக்கள். சாமிகளில் தீண்டாச் சாதியினரும் பாதிக்கு பாதி இருப்பதாக நாவல் கூறுகிறது. ஆதிக்க சாதியின் மொழியில் சொல்வதாக இருந்தால், “கவுண்டச்சி வயிற்றில் சக்கிலியின் பிள்ளையா?”. எழுத்தாளர் பெருமாள் முருகன்
“மாதொரு பாகன்” நாவலை தடை செய்யுமாறும், நூலை எரித்தும் திருச்செங்கோட்டில் போராட்டம் நடைபெற்றதை அறிந்திருப்பீர்கள். நாமக்கல் வருவாய்த்துறை அலுவலகத்தில் அரசு அதிகாரத்தினால் நாவலாசிரியர் பெருமாள் முருகன் சித்ரவதை செய்யப் பட்டதும், இறுதியில் தனது அனைத்து எழுத்துக்களையும் திரும்ப பெறுவதோடு இலக்கிய வாழ்வையே முடித்துக் கொள்வதாக அவர் அறிவித்திருக்கிறார். அந்த வகையில் ‘மறுபிறப்பில்’ நம்பிக்கையற்றவனாகிய தான் ‘இறந்து விட்டதாக’வும் கூறியிருக்கிறார்.

கொல்லப்படுபவனே குழிவெட்டிக் கொண்டு மண் மூடி சமாதியாகும் காட்சிகளை சினிமாக்களில் பார்த்திருக்கிறோம். மரணித்தவனே அறிவிக்கும் இந்த மரண அறிவிப்பை கொங்கு தமிழுக்காக ரசிக்கப்படும் ‘கொங்கு’ நாடு சாதித்திருக்கிறது.
இதைக் கண்டித்து அனேகமாய் அனைத்து ஊடகங்களும், எழுத்தாளர்களும், முற்போக்கு – இடதுசாரி அமைப்பகளும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். அந்த எதிர்ப்பில் ஒரு எழுத்தாளனின் கருத்துரிமை, அந்த வட்டார சாதிய, இந்துத்துவ இயக்கங்களின் அராஜகம் போன்ற நியாயங்கள் பேசப்பட்டிருக்கின்றன.
திருச்செங்கோட்டு ஊர் ‘மக்கள்’ நாவலில் – எதை – ஏன் எதிர்த்தார்கள், பெருமாள் முருகனின் நாவலை நாம் எதற்காக ஆதரிக்க வேண்டும் என்ற இருதரப்பின் வாதங்கள் – செய்திகளை பரிசீலித்தால் அவை ஒரு குறிப்பான உண்மையை அந்த உண்மை குறித்த விவாதங்களை மறைத்திருப்பது தெரிகிறது.
அந்த உண்மை என்ன?
இந்த நாவல் ஒரு இறுக்கமான சாதிய சமூகத்தில் குழந்தை பேறின்மையால் அலைக்கழிக்கப்படும் ஒரு தம்பதியினரின் வாழ்வை முன்வைக்கிறது. சாதிய சமூகத்தின் விதிகளை மீறாமல் அதே சமூகம் முன் வைத்திருக்கும் சில நியமங்களை விவரிக்கும் போக்கில் ஏற்றத்தாழ்வான இந்த சாதிய சமூக அமைப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.
நாவலின் இறுதியில் கோவில் திருவிழாவின் இரவில் பிள்ளைப் பேறு வேண்டி வரும் பெண்கள் ஆண்களுடன் உறவு கொள்கிறார்கள். இது ஒரு சடங்காக அப்பகுதியில் நிலவுவதாக ஆசிரியர் முன்வைக்கிறார். ‘ஒழுக்கத்துடன்’ வாழும் பெண்கள் யாருடனோ உறவு வைத்துக் கொண்டு பிள்ளை பெறுகிறார்கள் என்று இதை திருச்செங்கோடுக்காரர்கள் மொழிபெயர்ப்பதன் மூலம் பெருமாள் முருகன் வில்லனாக்கப்படுகிறார்.
அதிலும் ஒரு குறிப்பான உண்மை மறைந்திருக்கிறது. இந்நாவல் ஏற்படுத்தியிருக்கும் எதிர்ப்புக்கும் அந்த மறைபொருள்தான் அடிப்படை.
பிள்ளை வரம் வேண்டி கோவிலுக்கு செல்லும் ஆதிக்க சாதி பெண்களோடு உறவு கொண்டு அபயமளித்து கோரிக்கையை நிறைவேற்றும் ஆண்களை சாமிகளாக கருதுகிறார்கள் மக்கள். சாமிகளில் தீண்டாச் சாதியினரும் பாதிக்கு பாதி இருப்பதாக நாவல் கூறுகிறது. ஆதிக்க சாதியின் மொழியில் சொல்வதாக இருந்தால், “கவுண்டச்சி வயிற்றில் சக்கிலியின் பிள்ளையா?”.
இப்படி தமிழகத்திலேயே சாதி ஒடுக்குமுறைக்கு பிரபலமான மேற்கு தமிழகத்தில், இன்று வரையிலும் தலித் மக்களை அடக்கி ஆளும் ஒரு ஆதிக்க சாதி உணர்வின் வயிற்றில் அமிலத்தை ஊற்றி எரிய வைத்திருக்கும் பெருமாள் முருகனை முதலில் வாழ்த்தி விடுவோம். இந்த நாவலின் தரம், அறம், கலை, சாதனை அனைத்தும் இந்த எதிர் விளைவில்தான் வெளிப்படுகிறது.
ஒன்று கூடும் திருவிழாவிற்கு பிள்ளை வேண்டி தனது மனைவி பொன்னாவை அனுப்பக் கோரும் மச்சான் முத்துவிடம், நாவலின் நாயகன் காளி கூறுகிறான்…..
“நீ அந்தக்காலத்து ஆளாட்டமே பேசறீடா. ஒரு பொம்பள (அவ) சாதிக்குள்ள எத்தன பேருகிட்டப் போனாலும் தப்பில்ல.பொழங்கற சாதிக்காரனோட போனாக்கூடப் பொறுத்துக்குவாங்க. தீண்டாச் சாதியோட போனா அவ்வளவுதான். ஊர உட்டே ஏன் சாதிய உட்டே தள்ளி வெச்சிருவாங்க. இன்னைக்கு அப்பிடியா? சாதிக்குள்ளயே ஒருத்தனோடதான் இருக்கோனுங்கறம். அப்பறம் எப்படி? வீதியில சுத்தறதுல பாதிக்குமேல திரியறது தீண்டாச்சாதித் தண்டுவப் பசங்கதான். அதுக்கப்பறம் என்னால பொன்னாளத் (நாவலின் நாயகி) தொடவே முடியாது. கொழந்த பொறந்தாலும் தொட்டுத் தூக்க முடியாது போ. எதுக்கு இதெல்லாம். நான் இந்தத் தொண்டுப்பட்டியிலயே கெடந்துட்டுப் போறன். எனக்கு வேண்டாம். அப்பிடி ஒரு கொழந்த எனக்கு வேண்டாம். அதுமில்லாத அப்பறம் எல்லாரும் ‘வறடன்’னு என்னயப் பாத்துச் சிரிப்பீங்க. வேண்டாம் உடு . . .”
(இதற்கு காளியின் மச்சான் முத்து பதிலளிக்கிறான்)….
“அரசல் புரசலாப் போற பொம்பள எந்தச் சாதிக்காரனோட போறான்னு சொல்லறது? எதும் வெளிய தெரிஞ்சாத்தான் தப்பு மாப்ள. தெரியாத வெரைக்கும் எதும் தப்பில்ல. செரி மாப்ள. உனக்கு வேண்டாம்னா வேண்டாம். அதுக்காவ நோம்பிக்கு வராத இருக்காத.”
பல்வேறு முயற்சிகளுக்கு பிறகும் குழந்தை இல்லை எனும் போது கணவன் உட்பட வீட்டார் முடிவு செய்து பெண்களை திருவிழாவிற்கு அனுப்புகிறார்கள். சபரி மலைக்கு விரதமிருந்து சென்று வருவது போல இது ஒரு சடங்கு. குழந்தையின்மையையே அல்லும் பகலும் கொல்லும் பேச்சாக வதைக்கும் அதே சமூகம் இப்படி ஒரு தீர்வையும் சரியாகச் சொன்னால் வேறு வழியின்றி உருவாக்கியிருக்கிறது.
காளியின் மனைவி பொன்னா இந்த சடங்கிற்கு மாட்டு வண்டியில் தாய், தந்தையுடன் செல்லும் போது ஒரு அருந்ததியர் குடும்பம் உடன் கேட்டு வந்து பயணிக்கிறது. (கவுண்டர்களை தொடாமல்தான்)
“பிள்ளைகள் இரண்டும் அழகழகாக இருந்தன. அப்பன் மடியில் உட்கார்ந்திருந்த பிள்ளைக்கு எட்டு வயதிருக்கும். இடுப்பில் சின்னக் கண்டாங்கித் துணியைச் சுற்றியிருந்தது. அவள் மடியில் உட்கார்ந்திருந்த சின்னப் பிள்ளைக்கு மூன்று வயதிருக்கும். துணி ஒன்றுமில்லை. எடுத்து மடியில் வைத்துக் கொள்ளலாம் போலிருந்தது. தொடக்கூடாது. தொட்டுத் தூக்கும் சாதிப் பிள்ளைகளையேகூடப் பொன்னா மடியில் வைத்துக் கொள்வதில்லை. ஆசையாக எடுத்தால்கூட ஏதாவது எதிர்பாராத வில்லங்கம் வந்துவிடும் என்று பயந்தாள். வண்டியில் உட்கார்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருக்கும் அந்தக் குழந்தையின் கண்கள் பொன்னாவுக்குப் பிடித்திருந்தன. கண்களிலேயே அதன் சிரிப்பு வெளிப்பட்டது. மானசீகமாக அதை எடுத்து முத்தமிட்டாள். அப்பனைவிட மாரன் வண்டியை வேகமாக ஓட்டினான். சில வண்டிகளை அனாயாசமாக முந்திச் சென்றான். இத்தனைக்கும் மாட்டின்மீது சாட்டையை ஒருமுறைகூட வீசவில்லை. சாட்டைக் கம்பால் மாட்டின் பின்பக்கம் லேசாகத் தட்டியதோடு சரி. கைகால்களால் லேசான தொடுதல்கள் மட்டும். மாடுகளின் மொழி வசமாகப் பிடிபட்டிருந்தது அவனுக்கு. வண்டி ஓட்டுவதில் அவன் கவனமாக இருந்ததால் அப்பனோடு பேச்சு தொடரவில்லை. அது பொன்னாவுக்கு நிம்மதியாக இருந்தது.”
இந்த உரையாடலில் குழந்தையற்ற ஆதிக்க சாதிப் பெண், வறடி (மலடி) என்பதால் சொந்த சாதிக் குழந்தையையும், சாதித் தூய்மை காரணமாக தீண்டாச் சாதி குழந்தையையும் தூக்க முடியாத நிலையை விவரிக்கிறார் ஆசிரியர். நாவலில் குழந்தையின்மையின் சமூக புறக்கணிப்பால் அலைக்கழிக்கப்படும் நாயகனும் நாயகியும் ஆதிக்க சாதியை விடமாலும், சில நேரம் விடுபட நினைத்தும் இழுபட்டுச் செல்கிறார்கள்.
ஓரிடத்தில் சாணார் குழந்தையை தத்தெடுக்கலாம் என்று கூட காளி பேசுகிறான். சொந்த சாதிக்காரன் எவன் எதிர்ப்பான் பார்ப்போம் என சவாலும் விடுகிறான். அப்போது அவன் அந்த சாணாரின் சாராயக் கடையில் குடித்துக் கொண்டிருந்தான் என்றாலும் இந்த முரண்பட்ட நிலை சாதி மேலாதிக்கத்தை சற்றே அசைத்து பார்க்கிறது.
இந்த நூலின் மேல் ஒரு சராசரியான கொங்கு வேளாளருக்கு ஏற்படக் கூடிய அறுவெருப்பும் ஆத்திரமும் முக்கியமானது. சாதி ஒழிப்பை எழுத்துக்கள் வாயிலாக மட்டும் அறிந்து கொண்டு விளக்கும் அறிஞர் பெருமக்கள் களத்தில் அது என்னவாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள இந்த எழுத்து தோற்றுவித்திருக்கும் வெஞ்சினம் நிச்சயம் உதவி செய்யும்.
எழுபது என்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் சமூகத்தில் அல்லது திருச்செங்கோட்டில் பிள்ளைப் பேற்றுக்காக யாரும் யாருடன் உறவு வைத்துக் கொள்ளலாம் என்று எழுதுவது பொறுக்கித்தனமில்லயா, பெண்களை விபச்சாரியாக இழிவுபடுத்தவில்லையா, ஆதாரம் என்ன என்று பெருமாள் முருகனை எதிர்ப்பவர்கள் ஒரே மாதிரி கேட்கிறார்கள்.
பதற்றத்துடன் பலர் கேட்கும் இந்த கேள்விகளுக்கும் கொங்கு வேளாளக் கவுண்டர்களுக்கு ஏற்படும் பதறலும் வேறுபடுகிறது. இவர்களுக்கிருக்கும் கோபம், மேற்கொண்ட ‘களவொழுக்கம், கற்பு’ சார்ந்தவை மட்டுமல்ல. அதன் அடிநாதமாக இருந்து பெருங்கோபத்தை கிளிப்பியிருப்பது தலித் மக்களோடு கவுண்டர்கள் தாம்பத்ய உறவு வைத்திருந்தார்களா என்பதே.
2010-ல் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்த நாவலின் ஆங்கில வடிவம் “One part woman” 2013-ல் வெளியாகியிருக்கிறது. நான்காண்டுகளாக இந்த நாவலுக்கு எதிர்ப்பில்லாமல் போனதற்கு முக்கிய காரணம் அது தமிழகத்தை தாண்டி வெளியே போகவில்லை. ஆங்கிலத்தில் வந்த பிறகு, இனி திருச்செங்கோட்டு ஆதிக்க சாதியினர், பிள்ளைப் பேற்றுக்காக இப்படி ஒரு சடங்கில் சாதி, தீண்டாமை மறுத்து திருவிழா ஏற்பாடு செய்து ஒன்று கூடல் உறவை முன்னொரு காலத்தில் ஒரு மரபாக வைத்திருந்தனர் – என்ற செய்தி பரவி விடும்.
அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிவோ இல்லை கோவையிலோ இருக்கும் கொங்கு வேளாளர்களில் இலக்கியம் மற்றும் படித்த முன்னேறிய பிரிவினருக்கு இது பெரும் உறுத்தலாக உருவெடுத்திருக்கும்.
perumal murugan (3)இந்த நாவலின் சில பக்கங்களை திட்டமிட்டு கவனமாக தெரிவு செய்து நகலெடுத்து அதில் அடிக்கோடிட்டு பார்த்தவர், படித்தவர், கண்டவர், கேட்டவர் என எவரையும் பொறியில் விழச்செய்யும் சாமர்த்தியமெல்லாம் சாதா படிப்பு படித்தவருக்கு கூட தெரிந்திருக்காது. இலக்கிய வாசிப்பும், அந்த வாசிப்பின் விளைவை சாதித் திமிர் கொண்டு கற்பனை செய்யத் தெரிந்த ஒரு சிலராலேயே இது முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதில் ஆர்.எஸ்.எஸ்-இன் சித்தாந்தவாதிகளும் நிச்சயம் இருப்பர்.
வதந்திகளை உருவாக்கி, உணர்ச்சியை பெருக்கி, ஆத்திரத்தை கிளறி, மக்கள் கூட்டத்தை மதம் பிடிக்க வைக்கும் கலையில் அவர்களே சாலச் சிறந்தவர்கள். காலனிய காலத்தில் இந்துமதவெறியர்கள் இந்தக் கலையை ஆங்கிலேயர்களிடம் தொலை நோக்கோடு கற்றுக் கொண்டனர். கப் பஞ்சாயத்தையும், ஜாட் சாதி வெறியையும் அனாயசமாக கையாளும் அவர்களுக்கு “மாதொரு பாகன்” ஒரு கிடைத்தற்கரிய வாய்ப்பு.
இணையத்திலோ இல்லை பொதுவெளியிலே இந்த நாவல் குறித்து உருவாக்கப்பட்ட “பெண்களை இழிவு படுத்தவது” என்ற கருத்து சகலரையும் தன் (அ)நியாயத்தை ஏற்கச் செய்யும் தந்திரமே அன்றி அதுவே பெருமாள் முருகனை ‘கொன்று’ விடுவதற்கு போதுமானதில்லை.
எதிர்ப்பது, எரிப்பதைத் தாண்டி அவரை அச்சுறுத்தி ‘மரணிக்க’ வைப்பதற்கு இன்னும் பெரிய ஆத்திரமும் வன்மும் வேண்டும். திருச்செங்கோட்டில் இந்த நாவலின் இரு பக்கங்களை நகலெடுத்து வீடு வீடாகவும், கோவில் வாயிலிலும், இன்னும் பொதுவெளிகளிலும் ஆயிரக்கணக்கில் விநியோகித்திருக்கிறார்கள்.
அந்த விநியோகத்தின் போது அவர்கள் கவுண்டர் சாதி மக்களிடையே கோபத்தை வரவழைத்தது எப்படி?
வேறு சாதியில் பெண் கட்டியிருக்கும் பெருமாள் முருகன் எனும் நம்ம சாதிக்காரன், நம்மளையும் சக்கிலிக்கு பிறந்தவன்னு எழுதி இழிவுபடுத்துகிறான் என்றே அவர்கள் அனல் பறக்க பிரச்சாரம் செய்திருக்கிறார்கள்.
பெண்ணின் மானம் காப்பவர்கள் எனும் முகமூடி அணிந்து ஆதிக்கசாதி வெறி இங்கே தனக்கு அணி திரட்டுகிறது. இதுவே திருச்செங்கோடு மற்றும் நாமக்கல் பகுதிகளில் காட்டுத்தீயைப் போல பரவி இறுதியில் பெருமாள் முருகனையும் ‘எரித்திருக்கிறது’.
நாம் விசாரித்த ஊடக நண்பர்கள், தோழர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இதை உறுதி செய்தார்கள். இதை ஒரு ஆதாரமாக ஏற்க முடியாது என்பவர்களுக்கும் ஒரு செய்தி உண்டு. ஈஸ்வரன் கட்சியோ இல்லை ஹெச்.ராஜா கூட்டமோ, “அருந்ததி சாதி இளைஞர் ஒருவர், கொங்கு வேளாள பெண்ணை மணம் முடிப்பதில் ஆட்சேபணை இல்லை” என்று சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்! குதிரைக்கு கொம்பு முளைத்தாலும், கிராபிக்ஸ் உதவயின்றி உண்மையிலேயே டயனோசர் மீண்டும் பிறந்தாலும் ஒரு கவுண்டரின் வாயிலோ, கவுண்டர்களுக்கு மதவெறி கஞ்சாவை சப்ளை செய்யும் ஆர்.எஸ்.எஸ் இயக்கமோ இதை ஒரு போதும் சொல்லாது.
மேற்கண்ட நாவல் உரையாடலிலேயே இது வருகிறது. கோவில் திருவிழாவில் பிள்ளைப் பேறு வேண்டி ஆண் சாமிகளை நாடி வரும் ஆதிக்க சாதிப் பெண்கள் அவர்களுடைய சாதியிலேயே கூடிக் கொண்டால் பிரச்சினை இல்லை. தீண்டாச் சாதியோடு தொட்டு உறவாடி அதில் பிறந்த குழந்தையை எப்படி தூக்கி கொஞ்சுவது என்கிறான் காளி.
எங்கள் அம்மாக்கள், பாட்டிகள், சகோதரிகளை இழிவு படுத்துவதாக குமுறும் திருச்செங்கோட்டுகாரர்களின் கவலை பொதுவில் பெண்களின் ‘கற்பொ’ழுக்கம் சார்ந்த ஒன்றல்ல. சரியாகச் சொன்னால் ‘கற்பு’ என்பதே சுய சாதியில் நெகிழ்வையும் – மீறலையும் கொண்டிருக்கும் அதே நேரத்தில் ‘கீழ்’ சாதிகளிலிருந்து காத்துக் கொள்ளும் புனிதம் – தூய்மையையும் ஒரு சேர பெற்றிருக்கிறது.
‘கீழ்’ சாதிகள் என்பதிலும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று வரும் போது அதிலும் மேற்கு பிராந்தியத்தில் கணிசமாக வாழும் தலித்துகளிலேயே அடித்தட்டு பிரிவு மக்களான அருந்ததியினர் என்று புரிந்து கொண்டால்தான் இந்தக் ‘கற்பின்’ இலக்கண ‘பிழை’யை அறிய முடியும்.
நாவலை எரிக்கும் ஆதிக்க சாதி வெறி மற்றும் இந்துமதவெறி கூட்டணி
நாவலை எரிக்கும் ஆதிக்க சாதி வெறி மற்றும் இந்துமதவெறி கூட்டணி
இதனை திருச்செங்கோடுக்கு மட்டுமல்ல. உலகெங்கும் இனக்குழு வரலாற்றில் தாய்வழிச் சமூகமாக தொடங்கி தந்தை வழிச்சமுதாயமாக மாறிய அனைத்து நாடுகளிலும் பார்க்கலாம். ஒரு இனக்குழு அல்லது சாதிப்பிரிவின் கௌரவம் என்பதே அந்தக் குழுவின் பெண்களோடு வேற்று இன ஆண்களின் உயிரணு கலந்து விடாமல் இருப்பதுதான். மொகலாயர் ஆட்சி மற்றும் பல்வேறு ‘இந்து’ அரசர்களின் ஆட்சியில் ரஜபுத்திர பெண்கள் கூட்டம் கூட்டமாக தீக்குளித்ததும், இன்றும் சாதி மத மறுப்பு காதலர்கள் கொல்லப்படுவதும், அதை சமூக சட்டமாக அமல்படுத்தும் கப் பஞ்சாயத்துக்களும் கொண்டிருக்கும் கௌரவமும், கற்பும் இப்படித்தான் நடந்தன, நடந்து வருகின்றன.
மேற்கு தமிழகத்தில் ஒரு கொங்கு வேளாள ஆண் ஒரு தலித் பெண்ணை காதலித்து, கல்யாணம் செய்த சம்பவங்கள் உண்டு. அதிலும் ஆகப்பெரும்பான்மை ஜோடிகள் பிரிக்கப்பட்டு கவுண்டர் ஆண்களுக்கு மறுமணம் செய்து முடித்து விடுவார்கள். ஆனால் ஒரு அருந்ததி ஆண், ஒரு கவுண்டர் பெண்ணை மணம் முடித்தார் இல்லை காதலித்தார் என்பதெல்லாம் கற்பனையில் கூட சாத்தியமில்லை. மிக அபூர்வமாக ஓரிரு விதி விலக்குகள் இருக்கலாமென்றாலும் மேற்கண்டதுதான் இன்றளவும் உள்ள மாற்ற முடியாத நியதி.
ஆதிக்க சாதிகளைப் பொறுத்தவரை இதில் ஆண் பெண் வேறுபாடில்லை. கவுண்டர் எப்படி தாழ்த்தப்பட்ட மக்களை நடத்துவாரோ அப்படித்தான் கவுண்டர் பெண்களும் நடத்துவார்கள். அதே நேரம் அந்த ஆதிக்க சாதிப் பெண்கள்தான் சுய சாதியால் பல்வேறு காரணங்களின் துணை கொண்டு ஒடுக்கவும் படுகிறார்கள்.
சொல்லப்போனால் கவுண்டர் பெண்களை மட்டுமல்ல அனைத்து ஆதிக்க சாதிப் பெண்களையும் களங்கப்படுத்தவதே பார்ப்பனிய சாதியமைப்பும் அதன் ஆணாதிக்க நடைமுறையும்தான்.
அதில் முதன்மையானது “மலடி” அல்லது நாவலின் படி “வறடி”.
ஒரு கோவில் திருவிழாவில் பிள்ளை வேண்டி உறவு கொள்வதை கேட்பதற்கும், கற்பனை செய்வதற்கும் நாராசரமாக உள்ளதே என்று ‘வேதனை’ப்படுவோர் தங்களது வேதனையை நிரூபிக்க வரலாற்று ஆதாரம் அளியுங்கள் என்று பெருமாள் முருகனைக் கேட்கிறார்கள். ஆதாரங்கள் மட்டும் வரலாற்றையோ இல்லை வரலாற்றின் நியாயத்தையோ கொண்டு வந்து விடாது.
ராமர் பிறப்புக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும் பாபர் மசூதி இடிக்கப்பட்டு இந்த இடம்தான் ராம ஜன்ம பூமி என்று வரலாறு கட்டியமைக்கப்படுகிறது. குரங்குகள் போட்ட பாலம்தான் ராமர் சேது என்று சேது சமுத்திர திட்டமே நிறுத்தி வைக்கப்படுகிறது.
ஆதிக்கத்தில் இருப்போரே வரலாற்றை மட்டுமல்ல ‘ஆதாரங்களையும்’ கொண்டு வரலாற்றை உருவாக்குகிறார்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கோ இல்லை அதன் போராட்டங்களுக்கோ உரிய வரலாற்றை கண்டுபிடிப்பது மிகவும் கடுமையான பணி.
எளிமையாகச் சொல்வதானால் பிள்ளைப் பேறு குறித்த பிரச்சினைகள், தீர்வுகள், விளைவுகள் இன்றைய சமகாலத்தில் நமது மக்களிடம் எப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டால் திருவிழா பாலுறவு குறித்த ஆதாரங்களை தருமாறு பெருமாள் முருகனைக் கேட்க வேண்டியிருக்காது.
எனினும் சில சமகால உண்மைச் சம்பவங்கள் உங்கள் பார்வைக்கு……
திக்க சாதிப் பெண்களை களங்கப்படுத்துவது யார்? பாலியில் ரீதியிலும், குடும்ப நிலையிலும், மண வாழ்க்கையிலும் அவர்களை காலமெல்லாம் துன்புறுத்துவது யார்? தலித் மக்களா? ராமதாஸ் கூறியது போல ஜீன்ஸ் பேண்டு, கூலிங்கிளாஸ் போட்டுவிட்டு தலித் இளைஞர்கள் ஆதிக்க சாதி பெண்களை சூறையாடுகிறார்களா?
சொத்துடமை அமைப்பில் இல்லாதவர்களாக சிறைவைக்கப்பட்டிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் துன்பம் ஒடுக்கும் சமூக்தின் ஏழைகளுக்கும் பெருமளவுக்கு இருந்தே தீரும்.
ஆதிக்க சாதிகளின் கௌரவம் பெண்களின் “தூய்மையோடு” சேர்ந்திருப்பதை தூக்கி நிறுத்துவது நிலவுடமை எனும் சொத்து வடிவம். அந்த சொத்து இல்லாத பட்சத்தில் அதே சாதி பெண்களாக இருந்தால் கூட ‘தூய்மை’க்கான மதிப்பு மிகமிகக் குறைவு.
ஆதிக்க சாதி ஆண்களில் பொறுக்கிகள், குடிகாரர்கள், அதிக வயது ஆண்கள், ‘பெரு நோய்’ வந்தவர்கள், குழந்தைப் பேறுக்காக இரண்டாம் தாரம், மூன்றாம் தரம் தேடும் கணவன்கள், முக்கியமாக வைப்பாட்டிகளைத் தேடும் ஆதிக்க சாதி பெருங்கிழார்கள் …….இவர்களுக்கு அபயமளிக்கும் ‘சேவையினை’ ஆதிக்க சாதி ஏழைப்பெண்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏன் அவள் ஊரை விட்டு ஓடிவரலாமே என்று கேட்பவர்கள் மணிரத்தினத்திடம் வேண்டுமானால் உதவி இயக்குநராக சேரலாம். இங்கு மறுப்போ, மாற்றோ கிடையாது. குறைந்த பட்சம் விடுதலை உணர்ச்சியை கற்பனையில் கூட காண முடியாது.
இனி கதைகளைப் பார்ப்போம்.
1) இந்தக் கதையில் வரும் மூத்தவள் சம தகுதி கொண்ட சாதிக்காரரோடு ஓடி விட்டாள். அந்த வகையில் அது பெரிய பிரச்சினையாகவில்லை. ஆனாலும் ஏழைகள் என்பதால் இவர்களுக்கிருக்கும் கொஞ்ச நஞ்ச சாதி கௌரவமும் தள்ளாடத் துவங்கியது. அவசர அவசரமாக பதினாறு வயது இளையவளை முப்பது வயதுக்காரனுக்கு மணமுடித்தார்கள், பெற்றோர்கள். அவனோ பிறவியிலேயே இதயத்தில் ஒட்டையும், கிராமத்தில் கொஞ்சம் நிலபுலமும் கொண்டவன். விவசாயியாக வாழ்ந்தாலும் கடின வேலைகள் எதுவும் செய்ய முடியாது. மக்கள் வழக்கில் அவனொரு ஆஸ்மாக்காரன். ஒரிரு வருடங்களில் ஒரு கைக்குழந்தையை கொடுத்துவிட்டு அவன் மரித்துவிட்டான்.
பதினேழு பதினெட்டு வயதில் அந்தப் பெண்ணுக்கு ஒரு குழந்தை. பத்தாவது படிப்பை துறந்து மண வாழ்க்கையில் சிக்கியவளுக்கு கண்ணுக்கெட்டிய தூரத்தில் எதுவுமில்லை. வயது, தனிமை ஒரு புறம். விதவைகளுக்கு ‘உதவ’ நினைக்கும் ஆதிக்க சாதி ஆண்களின் பொறுக்கித்தனமான தொல்லைகள்.
இறுதியில் அது அல்லும் பகலும் தொடரும் சித்ரவதையாக மாறியது. அதில் ஒரு சில வண்புணர்வுகளாகவும், மனத்தை சிதைக்கும் ரணமாகவும் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் கூடிய சீக்கிரமே அந்தப் பெண் மனச்சிதைவுக்கு ஆளானாள். வழக்கில் பைத்தியம். தற்போது அவள் நிலை என்ன, எங்கிருக்கிறாள்? யாருக்கும் தெரியாது.
2) இதுவும் ஒரு விதவையின் கதை. இந்தப் பெண் ஏழையில்லை என்பதால் மேற்சொன்னபடியான நிலைமை இல்லை. ஆனாலும் நெருங்கிய உறவில் ஒரு நிலக்கிழாரின் வைப்பாட்டி. அதே நேரம் அந்தக்கிழாருக்கு வேறு கல்யாணம் நடந்து குழந்தை குடித்தனமாக இருந்தாலும் இவளுக்கென்று அங்கே ஒரு ‘மரியாதை’ இருந்தது நிஜம். அவளும் அங்கே சென்று வருவாள். நல்லது கெட்டதற்கெல்லாம் கொஞ்சம் உரிமையோடு தலையிடுவாள். ஆனாலும் தாலியற்ற, அதிகாரப்பூர்வ உரிமையற்ற நிலை. வயதானதும் அங்கே சென்று வரும் தேவையோ இல்லை அனுமதியோ இல்லை அழைப்போ இல்லை. நிலக்கிழாரும் இறந்து விட்டார்.
விதவையின் துயரமும், தனிமையின் பயமும், முதுமையின் அவலமும் சேர்ந்து மனத்தை சிதைத்தன. ‘பெருந்தன்மை’ வாய்ந்த அந்ந நிலக்கிழாரின் வாரிசுகளோ அந்த அம்மாவை ஏதோ அனாதை இல்லத்தில் சேர்த்து விட்டு வந்தார்கள். சந்தையில் வாங்கிய பாத்திரம் பளபளப்பு போய் ஓட்டை விழுந்ததும் பழைய கடைக்கோ இல்லை குப்பை மேட்டிற்கோ போய்ச் சேருகிறது. இதுதான் இப்பெண்ணின் நிலை.
3) அடுத்த கதையில் வரும் கிராமத்தில் இரு தார மணம், வீட்டுக்கு வீடு சகஜம். எல்லாம் குழந்தைப் பேறின்மை காரணம்தான். இரண்டாம் மணம் நடக்கும் நாட்களின் முன்னும் பின்னும் நடக்கும் உளவியல் துன்பங்களை முதல் தாரமானவள் கடந்து வருவது என்பது அமில வீச்சை எதிர் கொண்டு முடங்கிப் போகும் ஒரு பெண்ணின் துயரத்தோடு ஒப்பிடக் கூடியது.
அப்படி அந்த வீட்டுக்காரர் இரண்டாம் தாரத்தை மணக்கிறார். அவருக்கே ஆண்மைக் குறைவு (உயிரணு குறைபாடு) எனும் போது எத்தனை தாரம் மணந்து என்ன பயன்? இதை ஒரு வருடத்தில் உணரும் போது இரண்டாம் தாரத்துக்கு பதட்டம் வந்து விடுகிறது? எதிர்காலம் என்ன? சொத்து, நிலபுலம், வாழ்க்கை என்னவாகும்? முக்கியமாக குத்திக் காட்டும் ஊரார் பேச்சு…கணவனுக்கும் இதே போன்றொதொரு சிக்கல். கூடுதலாக ஆண்மை குறித்த கவுரவக் குறைவு.
பெண்ணின் வலியை ஒரு பெண் அதிலும் அடுத்த வீட்டு பெண் புரிந்து கொள்வாள். அப்படி அந்த அடுத்த வீட்டு பெண்ணும் இது குறித்து பல முறை யோசித்து விட்டு தனது கணவனை இரண்டாம் தாரத்து பெண்ணோடு உறவு கொள்ள ஏற்பாடு செய்கிறாள். எல்லாம் நல்லபடியாக முடிந்து குழந்தை பிறக்கிறது. சொத்துக்கள் காப்பாற்றபடுகிறது. இதை அசிங்கம் என்று கருதிய முதல் தாரம் சொத்தில் பாதியைக் கேட்டு பஞ்சாயத்து கூட்டுகிறாள். பஞ்சாயத்து போவதற்கு முன்பேயே கொடுத்து விடுகிறார், நிலக்கிழார். என்னதான் ஆதிக்க சாதி, சொத்து பத்து என்று இருந்தாலும் இந்த விவகாரங்களை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கையாள முடியாதல்லவா?
மாதொரு பாகன்4) இந்த கிராமத்தின் கதையில் வரும் இந்த நபருக்கு தொழு நோய். அதவும் கை, கால்களில் கட்டு கட்டும் அளவில் கொஞ்சம் முற்றிய நிலையில். நோய் முற்றுவதற்கு முன்பே திருமணம் நடந்திருந்தாலும் தாம்பத்தியம் நடக்கவில்லை. இப்படி ஒரு திருமணத்திற்கு யார் சம்மதிப்பார்கள்? கண்டிப்பாக ஏழைகள்தான். எனினும் பாலுறவை வலியுறுத்தாத அளவுக்கு அவரிடம் ‘கருணை’ இருந்தது. அதே நேரம் நிலபுலத்தை காப்பாற்றுவதற்கும், அந்த பெண்ணின் எதிர்காலத்திற்கும் குழந்தைகள் தேவைப்படுகிறது. ஆணொன்றும், பெண்ணொன்றுமாக இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. தந்தை அவரில்லை என்பது அவருக்கும் தெரியும்.
5) அடுத்த கதை. ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஏழைப்பெண். பொருளாதாரத்தில் நொடித்துப் போன குடும்பம். ஆதலால் மண வாழ்க்கையிலும் அதே நொடித்தல். முதலிரவு துவங்கி ஓரிரு மாதம் வரை எதுவும் நடக்கவில்லை. முழு ஆண்மைக்குறைவு என்று தெரிந்தே நடந்த கயமைத்தனமான திருமணம். பிறகு ஒரு நாள் அந்த கணவன் தான் தொட முடியாத பெண்ணின் காலில் விழுகிறான். தனது குறைபாட்டை ஏற்றுக் கொண்டு மணமுடித்தமைக்கு நன்றி தெரிவிக்கிறான். கூடவே ஒரு கோரிக்கை.
எப்படியும் ஒரு குழந்தை வேண்டும். அது மட்டும் நிறைவேறிவிட்டால் வேறு எந்த பிரச்சினையும் இல்லை. என்ன செய்வது? தனது தம்பியிடம் சொல்லி ஏற்பாடு செய்கிறேன். இதற்கு மட்டும் சம்மதியென்று மன்றாடுகிறான். அந்த பெண்ணோ அழுவதா சிரிப்பதா என்று திகைத்து நிற்கிறாள். அவளைப் பொறுத்த வரை இது ஒரு அழுகுணியாட்டம் என்ற வகையில் அசிங்கம். பிறகு அவள் மசியவில்லை என்றானதும் வேறு சந்தர்ப்பங்களில் அடிக்கிறான். அங்கே மட்டும் ஆண்மை எழுச்சி பெறுகிறது. பிறகு அவனும் செத்துப் போகிறான். அந்தப் பெண் விதவை.
6) குழந்தை வேண்டி சனிபகவானை மூலவராக கொண்ட ஒரு சிறு கோவிலுக்கு போகிறது ஒரு குடும்பம் (திரு நள்ளாறு அல்ல). பார்ப்பன பூசாரியைப் பார்த்து பிரச்சினையை சொல்கிறார்கள். அவனோ அந்த பெண்ணை சற்று தனியாக அழைத்து பேசுகிறான். மருத்துவர்களே தீர்க்க மூடியாத இந்த பிரச்சினைகளை தாங்கள் தீர்த்திருப்பதாக நம்பிக்கையூட்டுகிறான். சில விவரங்களை கேட்கிறான். தூக்கி வீசப்பட்ட தூமை துணியில் நல்ல பாம்பு புரண்டு விட்டதால் கருப்பையில் நாக தோஷம் இருப்பதாக சொல்கிறான். பிறகு விசயத்திற்கு வருகிறான். மார்பகங்கள் இரண்டும் ஒரு அளவாக ஒரே அமைப்பில் இருக்க வேண்டும். இரண்டில் ஒன்று சற்றே மாறினாலும் பிரச்சினை, உனக்கு எப்படி என்கிறான். சாங்கியத்தை எதிர்பார்த்து வந்த அந்த பெண்ணுக்கு சங்கடம் வருகிறது. இதற்காக என் ஜனங்கள் கூட்டி வரவில்லை என்று போய்விடுகிறாள்.
போனவள் அவர்களிடமும் சொல்லவில்லை. சொல்லமாட்டாள் என்று இவனுக்கும் தெரியும். பாலியல் வன்புணர்விக்கு உடல் ரீதியாக அல்ல உள ரீதியாக பலவீனமான பெண்களே வேட்டைக்காரர்களுக்கு உகந்தவர்கள். அந்த வகையில் ஆதிக்க சாதியின் ஏழைப் பெண்கள் ஏதோ சில வகைகளில்லாவது பலவீனமானவர்கள்தான்.
7) அடுத்த கதையின் நாயகன் ஒரு ஆதிக்க சாதி ஆண். முதல் தாரத்திற்கு குழந்தை இல்லை என்று ஆனவுடன் வழக்கமான பேச்சு ஆரம்பிக்கிறது. அவனும் சம்மதிக்கிறான். முதல் தாரத்தின் உறவினர்கள் கொஞ்சம் செல்வாக்கானவர்கள் என்பதால் அவர்களுக்கு தெரியாமல் திடீரேன திருமணம் ஏற்பாடு செய்து நடத்துகிறார்கள். அது தெரிந்து முதல் தார உறவினர்கள் உடன் வந்து சண்டை போடுகிறார்கள். போலீசுக்கு போவோம் என்று எச்சரிக்கிறார்கள். பேச்சு வார்த்தை பெருஞ்சண்டையாக ஆகும் முன் தனியே சென்று விடுகிறான் அந்த கணவன். அரை மணிநேரத்தில் அவனை தூக்கில் தொங்கிய நிலையில் பார்க்கிறார்கள். மணமேடை கோலத்தில் இருக்கும் இரண்டாம் தாரமும், அதை எதிர்த்து சண்டை போட்ட முதல் தாரமும் அடுத்த கணமே விதவைகள். இனி அவர்களின் எதிர்கால தகுதி என்ன?
8) இதிலும் ஒரு ஆண்தான். ஊருக்கு வந்த பிற மாவட்டத்து ஆதிக்க சாதி பெண்ணை விரும்பி காதலிக்கிறான். சம தகுதி சாதி என்பதால் பிரச்சினை இல்லை என்றாலும் அவனது தந்தை ஏற்கவில்லை. அதாவது அந்த பிற சாதி பெண்ணை மணமுடித்தால் சொத்தில் எதுவும் கிடையாது என்கிறார். காதலையும் துறக்க முடியாமல், சொத்தையும் விட முடியாதவன் ஒரு வாரத்தில் தனது உயிரை துறக்கிறான்.
ஆதிக்க சாதிகளின் ஆண்களும் கூட அங்கே நிம்மதியாக எப்போதும் வாழ்வதில்லை. சாதியக் கட்டுமானத்தை கொஞ்சம் மீற நினைத்தாலும் சரி கட்டுமானத்தை காப்பாற்ற செய்யப்படும் குறுக்கு வழிகளும் சரி ஆண் பெண் இருபாலாரையும் ஒருங்கே வதைக்கிறது. பெண்ணுக்கு இதன் பரிமாணங்கள் அதிகம்.
கதைகளை முடித்துக் கொள்வோம்.
பெருமாள் முருகனது நாவலை நகலிட்டு விநியோகித்து பெண் மானம் போனது என்று பொங்கியெழுந்த திருச்செங்கோட்டு கொங்கு வேளாளக் கவுண்டர்களுக்கும், அவர்களது மானத்தை புரிந்து கொண்டதாக கண்ணீர் விட்ட இதர ஆதிக்க சாதி கனவான்களுக்கும் இந்த கதைகளை சமர்ப்பணம் செய்கிறோம்.
இந்தக் கதைகளின் கொடூரங்களை விட திருச்செங்கோடு கோவில் திருவிழாவின் பிள்ளைப் பேறு உறவு முறை எவ்வளவோ நாகரீகமானது. திருவிழாவில் பிள்ளை வரம் வேண்டி சாமிகளுடன் உறவு கொள்ளும் நிகழ்வு உண்மையா அதற்கு ஆதாரம் உண்டா என்ற கேள்வியின் தேவை இன்னும் இருக்கிறதா? இல்லை அது கற்பனை என்றே வைத்துக் கொள்வோம். மேற்கண்ட கதைகள் இதையும் விஞ்சிவிடவில்லையா?
இந்தக் கதைகளை தமிழகத்தின் எந்த மாவட்டத்திலும், எந்த ஆதிக்க சாதியினரிடத்திலும் பார்க்கலாம். ஊர், பெயர், சாதி பெயர்களை குலுக்கல் முறையில் எடுத்தாலும் எந்தக் கதையும் எங்கேயும் இல்லாமல் போகாது. கதைகளுக்கு இங்கே முடிவில்லை. பார்ப்பனிய சாதியக் கட்டமைப்பால் கண்ணீரில் வெந்துக் கொண்டிருக்கும் தேசமிது.
கணவன் இறந்தால் மனைவிக்கு மறுமணம் கூடாது என்பதில் என்னய்யா புனிதம் அல்லது ஒழுக்கம்? விதவைப்பட்டம் சூட்டி வெள்ளுடை தரித்து வீட்டில் சிறை வைப்பது எதற்கு? விதவையின் உண்மைப் பொருள் என்ன? இலவச விபச்சாரமா? இல்லை மறுக்கவோ தண்டிக்கவோ முடியாத வாய்ப்பை வழங்கும் வன்புணர்வா? இதுதான் பெண்களின் ஒழுக்கத்தை காப்பாற்றும் இலட்சணமா?
இல்லை, நீங்கள் பெண்களின் ஒழுக்கத்தை காப்பாற்றவில்லை. உங்களது கொழுப்பு பறி போய்விடுமோ என்பதையே ஒழுக்கம் என்று அலறுகிறீர்கள்.
அனேக ஆதிக்க சாதிக் கிராமங்களில் கால் பங்கு குடும்பங்களிலாவது இருதார மணங்களை பார்க்கிறோம். அதற்கு ஆயிரத்தெட்டு விளக்கங்கள். குழந்தை தொடங்கி மைனர் தனம் வரை ஏராளமான சலுகைகள். சரி. அதே சலுகைகளை பெண்ணுக்கும் கொடுங்களேன். ஆண்மைக் குறைவு காரணமாக அதே முதல் மனைவி இரண்டாம் கணவனையும் மணக்கட்டுமே. ஒரே வீட்டில் இரண்டு மனைவிகளோடு வாழலாம் என்றால் இரண்டு கணவன்களோடும் வாழலாம் என்று ஒரு பெண் கோரலாமா கூடாதா?
முதல் தாரத்தை புழுங்கச் செய்த கையோடு இரண்டாம் தாரத்தோடு முதலிரவில் கலந்து இன்பத்தையும் பிறகு குழந்தை எனும் சொத்துடைமை பிம்பத்தையையும் பெற்றுக் கொண்டு திவ்யமாக காலம் கழிக்கும் ஆண்களின் உரிமையை பெண்ணுக்கும் அளிக்க மறுப்பது ஏன்?
அதை ஒரு பெருமாள் முருகனோ இல்லை அல்லா பிச்சையோ கற்பனை கதையாக எழுதினால் இது நடந்ததற்கு ஆதாரம் என்ன என்று கேட்பீர்களா? உங்களுக்குத் தேவை ஆதாரமில்லை. அதிகாரம். கேள்வி கேட்க முடியாத சாதி அதிகாரம்.
–    தொடரும் வினவு.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக