ஞாயிறு, 18 ஜனவரி, 2015

லீலா சாம்சன் ராஜினாமா! Messenger of God தடையை ரத்து செய்தது தவறு?

மத்திய திரைப்பட தணிக்கைக்குழு வாரியத்தின் தலைவராக இருந்த லீலா சாம்சனின் ராஜினாமா ஏற்கப்பட்டது. புதிய வாரியம் விரைவில் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ‘மெசேஞ்சர் ஆப் காட்’ (கடவுளின் தூதர்) என்ற படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கைக்குழு வாரியம் அனுமதி மறுத்தது. ஆனால், திரைப்பட தணிக்கைக்குழு தீர்ப்பாயம் ஒப்புதல் வழங்கியது. இதில் அதிருப்தி அடைந்த தணிக்கைக்குழு வாரியத்தின் தலைவர் லீலா சாம்சன் நேற்று முன்தினம் பதவி விலகினார். தணிக்கைக்குழு வாரியத்தில் தலையீடுகள் வந்ததாகவும், நிதி ஒதுக்கப்படாததால் 9 மாதங்களாக உறுப்பினர்கள் சந்திப்பு நடைபெறாததாகவும் அவர் குற்றம் சாட்டினார். அவரைத் தொடர்ந்து 12 உறுப்பினர்களும் பதவி விலகி உள்ளனர்.
இது தொடர்பாக மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை மந்திரி அருண் ஜெட்லி நேற்று ‘பேஸ் புக்’ சமூக வலைத்தளத்தில் கூறி இருப்பதாவது:-

திரைப்பட சான்றளிப்பு தொடர்பான அனைத்து விவகாரங்களிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மிகுந்த இடைவெளியை கடைப்பிடிக்கிறது.

இந்த விவகாரத்தை காங்கிரஸ் அரசியலாக்குகிறது. 2004-ம் ஆண்டு, பிரசித்தி பெற்ற நடிகர் அனுபம் கெர் தணிக்கைக்குழு வாரியத்தின் தலைவர் பதவி வகித்தபோது, முந்தைய அரசால் நியமிக்கப்பட்டவர் என்பதால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நீக்கிவிட்டது. அந்த வகையில், தணிக்கைக்குழு வாரியத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, அரசியலாக்கியது. நாங்கள் அப்படி செய்ய விரும்பவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நியமிக்கப்பட்டவர்கள், வழக்கமான விவகாரங்களை, அரசியல் ஆக்க முடிவு செய்து விட்டனர்.

தணிக்கைக்குழு வாரியத்தின் தலைவராக லீலா சாம்சன் செயல்படாமல் இருந்திருக்கிறார். தணிக்கைக்குழு வாரியத்தின் கூட்டங்கள் நடைபெறவில்லை என அவர் கூறி இருப்பது, சுய கண்டனத்துக்குரியது.

தணிக்கைக்குழு வாரியத்தில் ஊழல் என்றால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நியமிக்கப்பட்டவர்கள் தங்களை தாங்களே குற்றம் சாட்டிக்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதற்கிடையே திரைப்பட தணிக்கைக்குழு வாரியத்தின் தலைவர் பதவியிலிருந்து லீலா சாம்சனின் ராஜினாமாவை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு விட்டது.

இந்த நிலையில் மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை செயலாளர் பீமல் ஜூல்கா கூறுகையில், “ லீலா சாம்சனின்ராஜினாமா ஏற்கப்பட்டுவிட்டது. இதை ஏற்று, அமைச்சகம் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. உறுப்பினர்கள் ராஜினாமாவை பொறுத்தமட்டில், அவர்களது விலகல் கடிதங்கள் அதிகாரப்பூர்வமாக வந்து சேரவில்லை” என்றார்.

மேலும் அவர், “ திரைப்பட தணிக்கைக்குழு வாரியத்தை புதிதாக அமைக்கும் பணி தொடங்கி விட்டது. விரைவில் இந்த நியமனம் நடைபெறும்” என்று கூறினார்.

மத்திய திரைப்பட தணிக்கைக்குழு வாரிய விவகாரத்தில் மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை மந்திரி அருண் ஜெட்லிக்கு, காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி அந்த கட்சியின் மூத்த தலைவரும், மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை முன்னாள் மந்திரியுமான மணீஷ் திவாரி கருத்து தெரிவிக்கையில், “இது துரதிர்ஷ்டவசமானது. வருந்துவதற்குரியது. மத்திய தணிக்கைக்குழு வாரிய பிரச்சினையை அவர் அரசியலாக்க வழி தேடுகிறார். அதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இடையிலான பிரச்சினையாக கருதுகிறார். தணிக்கைக்குழு வாரிய நியமனங்களை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அரசியல் ஆக்கியது என்று அருண் ஜெட்லி கருதினால், சரியான வழியில் தணிக்கைக்குழு வாரியத்தை நீக்கி இருக்க வேண்டியதுதானே? எதற்காக அவர் கள் ராஜினாமா செய்யும் வரை யில் 8 மாதம் காத்திருந்தீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.

மேலும், “அருண் ஜெட்லியின் குற்றச்சாட்டுகள், அவர்களின் தகுதியின்மைக்கு கோரும் மன்னிப்புதானே தவிர வேறல்ல” என்றும் சாடினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக