திங்கள், 5 ஜனவரி, 2015

ஜெ. மேல்முறையீட்டை ஒத்தி வைக்க முடியாது! நீதிபதி குமாரசாமி

பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார் விடுத்த கோரிக்கையை தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி காட்டமாக நிராகரித்தார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நாள்தோறும் விசாரணை நடைபெறும் என்றும் கண்டிப்புடன் நீதிபதி குமாரசாமி கூறினார். 1991-96ஆம் ஆண்டு தமிழக முதல்வராக பதவி வகித்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக ரூ66 கோடி சொத்துக் குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. 18 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 27-ந் தேதியன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.   மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ100 கோடி, சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு தலா ரூ10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர்.
இம்மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க தனி பெஞ்ச் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி நீதிபதி குமாரசாமியை தனி பெஞ்ச் நீதிபதியாக கர்நாடகா உயர்நீதிமன்றம் நியமித்தது. இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்தது. தனி நீதிபதி குமாரசாமி அன்று விடுமுறையில் இருந்தார். இதனால் நீதிபதி பில்லப்பா விசாரணை நடத்தி இன்றைக்கு ஒத்தி வைத்தார். அதே நேரத்தில் விசாரணையை 12-ந் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையையும் நீதிபதி பில்லப்பா நிராகரித்தார். இதனைத்தொடர்ந்து ஜெயலலிதா உள்ளிட்டோரின் மேல் முறையீட்டு மனுக்கள் தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி ஆஜராகி தமது கருத்தைப் பதிவு செய்தார். இந்த வழக்கின் முதல் புகார்தாரர் என்ற அடிப்படையில் தாம் கருத்துகளைப் பதிவு செய்வதாக அவர் தெரிவித்தார். ஆனால் இதற்கு அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த வழக்கின் முதலாவது புகார்தாரர் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறைதான் என்றும் சுட்டிக்காட்டினார். இருப்பினும் சுப்பிரமணியன் சுவாமி தமது கருத்துகளை தொடர்ந்து பதிவு செய்தார். பின்னர் ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குமார், இந்த வழக்கில் டெல்லியில் இருந்து மூத்த வழக்கறிஞர் வந்து ஆஜராக இருக்கிறார். இதற்கு ஏதுவாக வழக்கின் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதில் அதிருப்தியடைந்த நீதிபதி குமாரசாமி, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி இம்மனு மீது நாள்தோறும் விசாரணை நடைபெறும். எந்த ஒருதரப்பும் வழக்கின் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கக் கூடாது என்று கண்டிப்புடன் கூறினார். மேலும் இன்றைய விசாரணையின் போது தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் குமரேசன் ஆஜரானார். அவர் தமது வாதத்தின் போது இந்த வழக்கில் அரசுக்கு உதவ தங்களையும் சேர்க்க வேண்டும் என்று ஏற்கெனவே மனுத்தாக்கல் செய்திருப்பதை சுட்டிக்காட்டினார். அத்துடன் ஜெயலலிதா வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்களின் சார்பாகவும் இன்று வாதிடப்பட்டது. இந்த நிறுவனங்களுக்கும் ஜெயலலிதாவுக்கும் எந்த ஒரு தொடர்பில்லை என்றும் வாதிடப்பட்டது.

  /tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக