சனி, 3 ஜனவரி, 2015

திறமை இல்லா பட்டதாரிகள்? கல்வித்துறையின் கோளாறு ?

மதிப்பெண்களை வைத்து மாணவர்களை வரிசைப்படுத்தும் துக்ககரமான கல்வி முறை மாற வேண்டும்
இந்திய மக்கள்தொகை 125 கோடி என்றும், அதில் 60% இளைஞர்கள் என்றும் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அதில் 50% பேர் 25 வயதுக்குக் குறைவானவர்கள். நமது பிரதமர் மோடி உலகெங்கும் சென்று, “இந்தியா இளைஞர்கள் மிகுந்த நாடு. சீனாவையும் மற்ற உலக நாடுகளையும் முந்திக்கொண்டு நாங்கள் வெகு விரைவில் வளர்ந்த நாடாகிவிடுவோம். எங்கள் நாட்டில் தொழில் முதலீடு செய்யுங்கள், உற்பத்தி செய்யுங்கள்” என்றெல்லாம் சொல்லிவருகிறார்.
இந்த நிலையில், ‘திறமை இல்லாப் பட்டதாரிகள்’ என்றொரு பெரும் பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறது இந்தியா. 45 சதவீதத்துக்கும் அதிகமான பட்டதாரிகள், அறிவுசார்ந்த எந்த ஒரு வேலைக்கும் ஏற்றவர்கள் இல்லை என்றும், வெறும் 8% முதல் 12% பொறியியல் மாணவர்கள் மட்டுமே வளாக நேர்காணல்களின்போது வேலைக்கு அமர்த்தத் தகுதியுடையவர்களாக இருக் கிறார்கள் என்றும் சொல்கிறது ஒரு கருத்துக் கணிப்பு.

காத்திருக்க முடியுமா?
அப்படியென்றால், மொத்தம் 85 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்கள் வேலை இல்லாமல்தானே கல்லூரிகளிலிருந்து வெளியே வருகிறார்கள்? (இதில் 100% வேலைவாய்ப்பு என்று விளம்பரங்கள் வேறு). ஏதோ கண்துடைப்பு வேலையாக ஊர், பேர் தெரியாத லெட்டர் பேட் நிறுவனங்களிலெல்லாம் வேலைக் கடிதம் வாங்கிக்கொடுத்துவிட்டு, பின்னர் ‘எங்களுக்கு ஒன்றுமே தெரியாது’ என்று கைவிரிக்கும் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டேவருகிறது.
சரி, கல்லூரிகளையும் பாடத்திட்டங்களையும் கட்டுப்படுத்த வேண்டிய ‘அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழுமம்’ என்ன சொல்கிறது? “கவலைப் படாதீர்கள், தரமற்ற கல்லூரிகளையெல்லாம் காலப் போக்கில் மாணவர்கள் சேர்க்கை இல்லாமல் அவர்களே மூடிவிடுவார்கள். தரமான கல்வியைக் கொடுக்கும் நல்ல கல்லூரிகள் மட்டுமே நிலைக்கும். அதுவரைக்கும் சற்றுப் பொறுமையாகக் காத்திருங்கள்” என்கிறது.
இளைஞர்களின் கதி என்ன?
ஏதோ நினைத்த மாத்திரத்தில் திறந்து மூடும் சாலையோர உணவகங்கள்போல, அவர்களே மூடிவிடு வார்கள் என்பது எவ்வளவு பெரிய அபத்தம். வியர்வை சிந்தி, உயிரைக் கொடுத்து உழைத்த பெற்றோரின் உழைப்பினால் வந்த காசைக் கொடுத்து, தங்கள் இளம் பருவத்தைத் தொலைத்து, எந்தத் திறமையும் அறிவும் இல்லாமல் பட்டம் பெற்று வெளியில் வந்து வேலை கிடைக்காமல் தெருவில் நிற்கும் இளைஞர்களின் கதி என்ன? வாழ்க்கையைத் தொலைத்து நிற்கும் இளைஞர்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம்?
2013-ல் தமிழகத்தின் தலைசிறந்த பொறியியல் கல்லூரியில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களில் பலர் முதல் செமஸ்டர் தேர்வில் கணிதப் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்பது அதிர்ச்சித் தகவல். 12-ம் வகுப்புத் தேர்வில் கணிதத்தில் 200/200 மதிப்பெண் பெற்றவர்கள், கல்லூரித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பது பேரதிர்ச்சி.
பள்ளிகளை விட்டுக் கல்லூரிக்கு வந்தால் அங்கும் அதே கதைதான். பல கல்லூரிகள், பள்ளிக்கூடங்களைவிட மாணவர்களை மிகவும் கடுமையாக நடத்துகின்றன. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் பல்கலைக்கழக ரேங்க். எப்படியாவது செமஸ்டர் தேர்வுகளில் தங்கள் மாணவர்கள் முதல் ரேங்க் பெற்றுவிட வேண்டும், கல்லூரி வாசலில் விளம்பரப் பதாகைகள் வைக்க வேண்டும். இதுதான் பிரதானக் குறிக்கோள்.
ஷேக்ஸ்பியர், எலியட் தெரியவில்லை
தமிழகத்தின் சிறந்த பொறியியல் கல்லூரிகளில் பயிலும், பல்கலைக்கழக ரேங்க் பெற்ற மாணவ-மாணவியரிடம் அவர்கள் துறை சார்ந்த அடிப்படைக் கேள்விகளுக்குக்கூட தெளிவான பதில் இல்லை. சமீபத்தில் மின்னணு உதிரிப் பாகம் தயாரிக்கும் ஒரு தனியார் நிறுவனத்தின் மனிதவள மேலாளர் சொன்னது, “நாங்கள் எதிர்பார்ப்பதெல்லாம் தங்கள் துறை சார்ந்த தெளிவும், அடிப்படை மின்னணுபற்றிய அறிவும்தான். நான்கு ஆண்டுகள் மின்னியல் பயின்ற பல பட்டதாரிகளுக்கு மின்னோட்டம்குறித்த அடிப்படை விதியான ‘ஓம்ஸ்’ விதி தெரியவில்லை. இவர்களை எந்த அடிப்படையில் வேலைக்கு எடுப்பது?”
ஆங்கில ஆசிரியர் பணிக்கு தேர்வு நடத்தி, ஒருவரைக்கூட வேலைக்கு எடுக்க முடியாமல் தவிக்கும் ஒரு பள்ளி முதல்வர் இப்படிச் சொல்கிறார்: “பொறியியல் மட்டுமல்ல, ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு இலக்கணப் பிழை இல்லாமல் எழுத, பேசத் தெரியவில்லை. ஷேக்ஸ்பியர் தெரியவில்லை, எலியட் தெரியவில்லை, ஆங்கில இலக்கியம் சார்ந்த எதுவும் தெரியவில்லை.” ஆங்கிலோ-இந்திய ஆசிரியர்கள் கிடைப்பார்களா என்று இப்போது தேடிவருகிறார்.
நமது அடிப்படைக் கல்வி முறையில் மிகப் பெரும் மாற்றங்களைக் கொண்டுவராவிட்டால், உலகெங்கும் நாம் பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் மக்கள்தொகை லாபம், வெறும் மக்கள்தொகை சாபமாக மாறக்கூடிய காலம் வெகு விரைவில் வந்துவிடுமோ என்ற அச்சமே ஏற்படுகிறது.
வெறும் மதிப்பெண்களை மட்டுமே வைத்து மாணவர்களை வரிசைப்படுத்தும் துக்ககரமான நமது கல்வி முறை மாற வேண்டும். மதிப்பெண்களோடு, மாணவர்களின் தனித் திறமைகளையும் கண்டெடுத்து வளர்க்கும், திறன் சார்ந்த கல்விக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். வேகமாக மாறிவரும் உலகத்துக்கு ஏற்ப நமது கல்வி முறையிலும் தாமதம் இல்லாத, துரிதமான மாற்றங்களைக் கொண்டுவரும் வழிவகைகள் செய்ய வேண்டும்.
ஆரம்பப் பள்ளி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை, மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், அரசாங்கம் அனைவருக்கும் மதிப்பெண்களைத் தாண்டிய சிந்தனை வர வேண்டும். நமது கல்வி முறையில் தக்க மாற்றங்கள் செய்து, சிறந்த திறன் மிகுந்த பட்டதாரிகளை உருவாக்கத் தவறினால், இந்த தேசம் ‘திறமை இல்லாப் பட்டதாரிகள்’ நிறைந்த, திண்டாடும் தேசமாகத்தான் திகழும் என்பது நிச்சயம்.  tamil.thehindu.com
சிவக்குமார் பழனியப்பன், மாஸ்டரிங் மைண்ட் அகாடமியின் நிறுவனர்,
தொடர்புக்கு: siva@masteringmind.com  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக