ஊட்டி அரசு சேட் மருத்துவமனையில், பிரசவத்துக்குப்பின் உயிரிழந்த தாய்மார்களின் எண்ணிக்கை, நேற்று ஐந்தாக உயர்ந்தது.நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு சேட் மருத்துவமனையில் ஜெயந்தி, அமுதா ஆகியோர் பிரசவத்துக்குப்பின் உயிரிழந்தனர். சரஸ்வதி, ராதிகா ஆகியோர் கோவை மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அடுத்தடுத்து இறந்தனர். இந்நிலையில், ஊட்டி அரசு சேட் மகப்பேறு மருத்துவமனையில் பிரசவித்துக்குப்பின் ரேவதி என்பவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நேற்று காலை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மதியம் அரசு மருத்துவமனையில் ஆய்வு முடித்தபின், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி:
நீலகிரி மாவட்ட அரசு மருத்துவமனைகளில், கடந்த ஓராண்டில், 2750 பிரசவங்கள் நடந்துள்ளன; ஒரு தாய் கூட உயிரிழக்கவில்லை. ஊட்டி அரசு சேட் மருத்துவமனையில் நடந்த பிரவசத்துக்குப் பிந்தைய இறப்புகள் குறித்து விரிவான விசாரணை நடத்த, மாநில சுகாதார திட்ட இயக்குனர், மருத்துவப் பணிகள் துறை இயக்குனர் உட்பட உயர்மட்டக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
கட்டமைப்பு, சேவை குறைபாடு உட்பட அனைத்து விஷயங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வில், தனியார் மருத்துவ நிபுணர்களை இணைக்க வேண்டிய அவசியமில்லை.
தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினமும், ௨000 பேருக்கு பிரசவம் நடக்கிறது. இந்திய அளவில், பிரசவ கால இறப்பு விகிதம் லட்சம் பேருக்கு, 138 பேர் என்ற நிலையில் உள்ளது. ஆனால், தமிழகத்தில், இந்த இறப்பு விகிதம், லட்சம் பேருக்கு, 68 பேர் என்ற நிலையில் மட்டுமே உள்ளது.ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவ பரிசோதனை, சிகிச்சை பெறும் பெண்களை, பிரசவ தேதிக்கு இருநாள் முன்பே, மருத்துவமனைக்கு அழைத்து வந்து சேர்க்கும் பணி, 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் மேற்கொள்ளப்படுகிறது. மாநிலத்தில், 1727 சிறப்பு மருத்துவர்கள், 'ஆன்-லைன்' மூலம் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு அடுத்த மாதம், 9ம் தேதி, கவுன்சிலிங் நடத்தப்படவுள்ளது. மருத்துவ தேர்வாணையம் மூலம், 2172 டாக்டர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர். இதன் மூலம், டாக்டர்கள் பற்றாக்குறை தவிர்க்கப்படும்.இவ்வாறு, அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
உறவினர்கள் ஆவேசம்:
ஊட்டி, எல்க்ஹில், குமரன் நகரைச் சேர்ந்த சரவணன் மனைவி ரேவதி, 25, அரசு சேட் மருத்துவமனையில் ஆண் குழந்தை பெற்றார். அதன்பின் உடல்நிலை மோசமடைந்து, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உயிரிழந்தார். அதிர்ச்சி அடைந்து, திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்ட உறவினர்களை, போலீசார் கலைத்து அனுப்பினர். உறவினர்கள் கூறுகையில், 'ஊட்டி சேட் மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை; அதன்காரணமாகவே, உயிரிழப்புகள் தொடர்கின்றன' என்றனர்.
'பிரேதத்துக்கு சிகிச்சை அளிக்கஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்':
''என் மனைவி உயிரிழந்ததை மறைத்து, ஆம்புலன்சில் கோவைக்கு கொண்டு செல்ல டாக்டர்கள் முயன்றனர்,'' என, அமுதாவின் கணவர் ஜான் கென்னடி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கதறினார்.
கண்ணீருடன் ஜான்கென்னடி கூறியதாவது: கடந்த 24ம் தேதி, என் மனைவி அமுதாவை பிரசவத்துக்காக ஊட்டி அரசு சேட் மருத்துவமனையில் சேர்த்தேன். ஜன.,5, 2015ல் பிரசவ தேதி குறித்தனர். வலி வரும் போது மருத்துவமனையில் சேர்க்க டாக்டர்கள் அறிவுறுத்தினர். முன்கூட்டியே வலி ஏற்பட்டு, கடந்த 25ம் தேதி மருத்துவமனையில் 'அட்மிட்' செய்தோம். பரிசோதித்த டாக்டர்கள், உடல்நிலை சீராக உள்ளது எனக்கூறி, 26ம் தேதி, 'சிசேரியன்' செய்து கொள்ளலாம் என்றனர்; நாங்களும் ஒப்புக்கொண்டோம். கடந்த 26ம் தேதி, காலை, 11:40 மணிக்கு சிசேரியன் மூலம், குழந்தை பிறந்தது.மதியம், 12:15 மணிக்கு வார்டுக்கு மாற்றப்பட்ட சிறிது நேரத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டது. பரிசோதித்த செவிலியர், ரத்தப் போக்கு அதிகமாகி விட்டதாக கூறி, மீண்டும் அறுவைச் சிகிச்சை அரங்கிற்கு அழைத்துச் சென்றனர். கர்ப்பப் பையை அகற்றினால்தான், மனைவியின் உயிரை காப்பாற்ற முடியும் என்றனர். மனைவியின் உடல்நிலை கவலைக்கிடமானது.டாக்டர்களின் அறிவுரைப்படி, கோவை மருத்துவமனைக்கு, அரசு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றோம். பாதி வழியில், ஆம்புலன்சை, ஊட்டி அரசு மருத்துவமனைக்கே திருப்பி வந்து 'அட்மிட்' செய்தனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.சிகிச்சை குறைபாடே, என் மனைவி சாவுக்கு காரணம். என் மனைவி உயிரிழந்ததை அறிந்தே, மேல் சிகிச்சை எனக் கூறி, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்; மனிதாபிமானமின்றி செயல்பட்டனர்; நீதி விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறுகூறி, ஜான் கென்னடி கதறினார்.
வினவு.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக