அரசு இந்தியப் பொருளாதாரத்தை சீர்தூக்க மேற்கொண்ட முயற்சியால் இந்தியாவில் முதலீட்டு வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதாக 'எழுச்சி மிகு குஜராத்' மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தொழில் துறையில் முதலீட்டை அதிகரிக்கும் நடவடிக்கையாக, குஜராத் மாநிலம்
காந்திநகரில், 'எழுச்சி மிகு குஜராத்' 7-வது உச்சி மாநாடு நடைபெறுகிறது.
மாநாட்டை, ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் தொடங்கி வைத்தார். உலக
முதலீட்டாளர்கள் பங்கேற்கும் இம் மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி
முன்னிலை வகித்தார். அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி
சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல்
மாநாட்டில் பங்கேற்க வந்தவர்களுக்கு வரவேற்பளித்தார். மனித வள மேம்பாட்டு
துறை அமைச்சர் ஸ்மிருதி இராணியும் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.
மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:
பாஜக அரசு இந்தியப் பொருளாதாரத்தை சீர்தூக்க முயற்சித்து வருகிறது. ஆட்சி
அமைத்த ஏழே மாதங்களில் இந்தியப் பொருளாதாரம் நிலையற்ற, நம்பிக்கையற்ற
போக்கிலிருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் உலக நாடுகள்
இந்தியாவின்பால் ஈர்க்கப்பட்டுள்ளன. இந்தியா தற்போது முதலீட்டாளர்களுக்கு
வாய்ப்புகளை வாரி வழங்கும் தேசமாக உள்ளது.
இந்தியாவில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை
விதைத்திருக்கிறோம். இந்திய முயற்சிக்கு உலக நாடுகள் உதவி வருகின்றன. எனது
அரசு நியாயமான, வெளிப்படையான முதலீட்டு சூழலை ஏற்படுத்துவதிலே அக்கறை
செலுத்துகிறது.
பொருளாதார பிரச்சினைகளை அணுகும் முறையை நாம் மாற்ற வேண்டும். பொருளாதார
மந்த நிலையை எப்போதும் வணிக ரீதியிலானதாகவே நாம் பார்க்கிறோம். ஆனால்,
அதிகமான மக்கள் வாழும் பகுதியில், தனி நபரின் சராசரி வருமானம் மிகக்
குறைவாக இருப்பதும் பொருளாதார மந்த நிலைக்கு காரணம் என்பதை நாம்
உணர்வதில்லை. சாமான்யனின் வேலைவாய்ப்பையும், சராசரி வருமானத்தையும்,
வாங்கும் திறனையும் அதிகரிப்பதால் மந்த நிலையை சரி செய்ய முடியும் என நாம்
என்றாவது யோசித்திருக்கிறோமா?
இந்திய அரசு இந்த கோணத்திலேயே இப்போது கவனம் செலுத்துகிறது. நாட்டு
மக்களின் சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்த வேண்டும் என்பதில் அதிக கவனம்
செலுத்தப்படுகிறது. மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்தப்பட வேண்டும்.
வளர்ச்சியை எட்ட 'கூட்டுறவு கூட்டாட்சி' நடைபெற வேண்டும். தேசம் வளர மாநில
அரசுகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். அதே வேளையில் வளர்ச்சி காண்பதில்
மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியும் நிலவ வேண்டும். இன்று, நாம்
(சர்வதேச முதலீட்டாளர்கள்) அனைவரும் ஒரே குடும்பமாக இங்கு இணைந்துள்ளோம்.
அருகாமையை மட்டுமே வைத்து இதை நான் கூறவில்லை. ஒருவரது கனவு நனவாக
மற்றொருவரது வழிகாட்டுதல் அவசியம் என்ற சர்வதேச சூழலை அடிப்படையாகக் கொண்டு
இதனை தெரிவிக்கிறேன்.
'மோடி எப்போதும் சாத்தியப்படாத வாக்குறுதிகளை அளிக்கிறார்' என்ற
விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. அது ஏற்புடையதல்ல. எனது அறிவிப்புகளுக்கு
திட்ட உருவம் கொடுக்கப்பட்டு வருகின்றன. அவை செயல்படுத்தப்பட்டும்
வருகின்றன. நாம், அனைவரும் ஒன்றிணைந்து வளர்ச்சி, வளம், அமைதி ஓங்க
செயல்படுவோம்" இவ்வாறு மோடி பேசினார்.
குஜராத்தில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு:
மாநாட்டில் பேசிய ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, "உலகின்
வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்க முடியும்.
நாங்கள் குஜராத் நிறுவனம் என்பதில் பெருமை அடைகிறோம். எங்களுடன்
தொழில்புரிய அனைத்து முதலீட்டாளர்களுக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன்.
குஜராத்தில் முதலீடு செய்யுங்கள், நன்மை அடைவீர்கள். ரிலையன்ஸ் நிறுவனம்,
நடப்பாண்டில் குஜராத்தில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்யும்" இவ்வாறு
முகேஷ் அம்பானி கூறினார். tamil.hindu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக