செவ்வாய், 23 டிசம்பர், 2014

Sony இணையதளத்தை வடகொரியா முடக்கியது! அமேரிக்கா கடும் கோபம்?

சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தை வடகொரியா முடக்கியது காட்டுமிராண்டித்தனமான செயல் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். வடகொரிய அதிபர் கிம் ஜோங் யுன் பற்றி அமெரிக்காவின் சோனி பிக்சர்ஸ் பட நிறுவனம் ‘தி இன்டர்வியூ’ என்னும் திரைப்படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் வடகொரியா அதிபரை கொலை செய்வதற்காக அமெரிக்காவின் சி.ஐ.ஏ. உளவு நிறுவனம் 2 செய்தியாளர்களை வாடகைக்கு நியமிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த படம் வருகிற 25-ந் தேதி உலகமெங்கும் திரையிடப்பட முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதனிடையே தங்கள் நாட்டு தலைவரை கேலி செய்து படமாக எடுத்திருப்பதை விரும்பாத வட கொரியாவின் ‘அமைதியின் பாதுகாவலர்கள்’ என்ற அமைப்பினர், சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தை முடக்கினர்.


மேலும், இந்த படத்தை வெளியிட்டால் அதைப் பார்ப்பவர்கள் அனைவரும் கசப்பான விதியை சந்திக்க நேரும் என்று எச்சரிக்கை விடுத்து இ-மெயில்களையும் அவர்கள் அனுப்பி வைத்தனர். இது வடகொரியா அரசின் கைவரிசை என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது.

இந்த நிலையில், தி இன்டர்வியூ படத்தை வெளியிடுவதை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

அதே நேரம், இதுபோன்ற செயல்களில் தாங்கள் ஈடுபடவில்லை என்று வடகொரியா அரசு மறுத்தது. “எங்கள் மீதான இந்த குற்றச்சாட்டை அமெரிக்கா நிரூபிக்காவிட்டால் இரு நாடுகளின் கூட்டு விசாரணைக்கு அமெரிக்கா ஒத்துழைக்க வேண்டும்” என்றும் வடகொரியாவின் தேசிய பாதுகாப்பு கமிஷன் கேட்டுக்கொண்டு இருந்தது.

இதனிடையே, சோனி பிக்சர்சின் இணையதளத்தை வடகொரியா முடக்கியதற்கும், அந்த நிறுவனத்துக்கு மிரட்டல் விடுத்ததற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அமெரிக்காவின் சி.என்.என். தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தை முடக்கியதை நான் ஒரு போர் நடவடிக்கையாக கருதவில்லை. எனினும், கம்ப்யூட்டர் வழியாக நடத்தப்பட்ட மிகப் பெரியதொரு தாக்குதலாக இதனை எண்ணுகிறேன்.

இது திட்டமிட்டு நடத்தப்பட்ட காட்டுமிராண்டி தாக்குதல். வடகொரியாவின் இத்தகைய செயல் மிகவும் கண்டனத்துக்கு உரியது.

இதனால் தீவிரவாதத்தை பரப்புகிற நாடுகளின் பட்டியலில் வடகொரியாவைச் சேர்ப்பதா? இல்லையா? என்பதை அமெரிக்க அரசு மறுபரிசீலனை செய்யவேண்டி இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தை வடகொரியா முடக்கியதற்கு ஜப்பானும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இது பற்றி ஜப்பான் அமைச்சரகத்தின் செயலாளர் யோஷிடே சுகா கூறுகையில், “இந்த விஷயத்தில் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் தனது ஆதரவை அளிக்கும்” என்றார்.maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக