புதன், 17 டிசம்பர், 2014

மதம் மாறினாலும் அக்கிரஹாரம் சமத்துவபுரம் ஆகாது ! RSS க்கு துணைபோகும் இனவாதிகள், சாதியக் கட்சிகள்!

ஆர்.எஸ்.எஸ். முஸ்லீம்கள் மதமாற்றம்ட்சியைப் பிடித்த ஆறே மாதத்தில் இந்தியாவை கூறுகட்டி விற்பதை அதிவேகமாக செய்து வருகிறது மோடி அரசு. கூடவே  தனது பார்ப்பனிய இந்துமதவெறி பாசிச செயல் திட்டத்தையும் புயல் வேகத்தில் நிறைவேற்றி வருகிறது. இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, குரு உத்சவ், புராணக் குப்பைகளை பாடத்திட்டத்தில் சேர்ப்பது, அவற்றையே வரலாறு என்று திரிப்பது, பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிப்பது என்ற வரிசையில் தாய் மதத்திற்குத் திரும்புதல் என்ற பெயரில் கட்டாய மதமாற்றத்தை அரங்கேற்றி வருகிறது, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல்.


புகழ்பெற்ற தாஜ்மஹால் நகரமான ஆக்ராவில், இருநூறு ஏழை முஸ்லீம்களை, ஆர்.எஸ்.எஸ்-இன் அடியாள் படையான பஜ்ரங்தள் கும்பல் கட்டாய மதமாற்றம் செய்துள்ளது. இவர்கள் அனைவரும் பழைய – வீணான பொருட்களை சேகரித்து வாழும் ஏழைகள். மேற்கு வங்கத்திலிருந்து பிழைக்க வந்த பரிதாபத்திற்குரியவர்கள், இம்மக்கள்.
ரேசன் கார்டு, ஆதார் அடையாள அட்டை, உதவித்தொகை, போலீஸ் தொல்லையிலிருந்து பாதுகாப்பு என ஒருபுறம் ஆசை காட்டியும், மறுபுறம் குடியிருக்கும் இடத்தை விட்டு காலி செய்துவிடுவோம் என மிரட்டியும் நடத்தப்பட்ட மதமாற்றம் இது.
50 இடங்களில் ஒரு லட்சம் சிறுபான்மையினரை மதமாற்றம் செய்ய இலக்கு நிர்ணயித்து, வரும் டிசம்பர் 25 (கிருஸ்துமஸ்) அன்று 4000 கிருத்துவர்களையும், ஆயிரம் முஸ்லீம்களையும் மதமாற்றம் செய்யப்போவதாக பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் ரவுடி சாமியார் ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ் மண்டலத் தலைவர் ராஜேஸ்வர் சிங் ஆகியோர் பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.
மதமாற்றம் செய்ய மட்டும் மாதம் 50 லட்சம் ரூபாயும், போக்குவரத்து செலவுக்கு எட்டு முதல் பத்து லட்சம் ரூபாயும் செலவழிப்பதாக ராஜேஸ்வர் சிங் அறிவித்துள்ளார். வழிபாடு எதுவும் நடக்கவில்லை எனப் பொய் பிரச்சாரம் செய்து அறுபது கிருஸ்தவ தேவாலயங்களையும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் கைப்பற்றியுள்ளது. கடந்த 2003 வாஜ்பாய் ஆட்சியில் இருந்த போது இப்போதைய மிரட்டல் வழியில் உ.பியிலும், உத்திரகாண்டிலுமாக 2.73 லட்சம் பேரை மதம் மாற்றினர்.
இந்தியாவில் மதமாற்றம் என்பது பார்ப்பனியக் கொடுங்கோன்மை காரணமாகவே வரலாறு நெடுகிலும் நடைபெற்று வருகிறது. விவேகானந்தர் எனும் இந்து சாமியாராலேயே “பைத்தியக்காரர்களின் நாடு” என்று அழைக்கப்பட்ட நம்பூதிரிகளின் சாதிக் கொடுமையில் சிக்கியிருந்த கேரளமோ, திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சனாதன கிரிமினல் பிடியில் மாட்டியிருந்த குமரி மாவட்ட நாடார் சாதி மக்களோ, கம்மா-ரெட்டி காட்டுமிராண்டித்தனத்தில் உயிரை விட்டுக் கொண்டிருந்த ஆந்திரத்து தலித் மக்களோ, ஒரிசாவின் பழங்குடியினரோ, வரலாற்று ரீதியாகவே பார்ப்பனியத்தின் பண்பாட்டு பிடியை ஏற்க மறுத்த வட கிழக்கு மக்களோ, நிலவுடமை ஆதிக்கத்தின் இறுமாப்போடு தலித் மக்களை ஒடுக்கி வரும் இந்தி பேசும் மாநிலங்களோ…இங்கெல்லாம் மதமாற்றம் ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் பெருமூச்சாகவே இருந்தது.
இந்துமதவெறியர்கள் தூற்றுவது போல மதமாற்றம் என்பது வாளின் முனையிலோ இல்லை பால்பவுடர் தயவிலோ நடைபெறவில்லை. ஒருவேளை வாழ்க்கை வசதிகள் கிடைக்கும் என்பதால் ஏழைகள் மதம் மாறுகிறார்கள் என்றால் அது பார்ப்பனியத்தின் நிலவுடமை சமூகம் தோற்றுவித்த வறுமைதான் அடிப்படை. அப்போதெல்லாம் இகலோக வசதிகளுக்காக ‘தாய் மதத்தை’ – தாயை விற்றுவிட முடியுமா என்று நொள்ளை நியாயம் பேசினார்கள், இந்துமதவெறியர்கள்.
இப்போது அதே இகலோக வசதிகளை கொடுப்போம் என்று ஆசை வார்த்தையோடு, அதிகார மிரட்டலையும் சேர்ந்து மதம் மாற்றுகிறார்கள். இசுலாம், கிறித்தவம் போன்று இந்துமதம் அடிப்படியிலேயே ஒரு மதத்திற்குரிய அடிப்படைகளை கொண்டிருக்கவில்லை என்றார் அம்பேத்கர். அதனால்தான் இந்து மதம் மற்ற மதங்களைப் போல தனது மதத்தில் வெளிநபர்கள் யாரையும் சேர்ப்பதை விரும்பவில்லை, முயலவுமில்லை. காரணம் இது சாதி ஏற்றத்தாழ்வை ஆன்மாவாகக் கொண்டிருக்கும் ஒரு அதிகார அமைப்பு.
இப்போதும் கூட இவர்கள் மதம் மாற்றினாலும் அந்த மக்கள் வங்கதேச முசுலீம்கள் – ஆதலால் தலித்துக்கள் எனும் அடையாளத்தோடுதான் அங்கே நடத்தப்படுவார்கள். பாஜக அதிகாரத்தில் இல்லாத போது இந்தியா முழுவுதம் மதமாற்றத் தடை சட்டம் வேண்டும் என்று ஊளையிட்டதும் இதே கூட்டம்தான். ஆட்சிக்கு வந்த பிறகு அந்த தடை சட்டம் மற்ற சிறுபான்மை மதங்களுக்கு மட்டுமெனஅமல்படுத்தி விட்டு, இவர்கள் “தாய் மதம்” திரும்புதலுக்கு இது பொருந்தாது என்று மதம் மாற்றுவார்கள்.
பார்ப்பனியம் என்னதான் முயன்றாலும், எத்தனை இலட்சம் பேரை மதம் மாற்றினாலும் சாதி ஏற்றத்தாழ்வு எனும் கொடுங்கோன்மை இங்கே இல்லாமல் போய்விடாது. இந்து மதத்தின் கொடுமைகளுக்கு எதிராக மதம் மாறினார்கள் எனும் வரலாற்று உண்மை, இப்போதும் பொருள் இழந்து விடவில்லை. கட்டயமாக முசுலீம்களும், கிறித்தவர்களும் இந்து மதத்திற்கு மாற்றப்பட்டாலும் அக்ரஹாரம் சமத்துவபுரமாக மாறிவிடாது. பார்ப்பனியத்தோடு ஜன்ம பகை கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டமும் குறைந்து விடாது.
ஆர்.எஸ்.எஸ்
படம் : நன்றி reuters
‘இந்தியாவில் உற்பத்தி செய்’ என்ற மோசடி முழக்கத்தின் கீழ் நாட்டு வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பது, மேலும் 12 அணு உலைகளை நிறுவி மக்களை நிரந்தர ஆபத்தில் வைத்திருப்பது, ஏழை மக்களுக்கு வழங்கப்படும் மானிய விலை மண்ணெண்ணெய் உட்பட அனைத்து மானியங்களையும் வெட்டி வயிற்றிலடிப்பது, சமையல் எரிவாயுவுக்கு வங்கி கணக்கின் பெயரில் மறைமுக மானிய வெட்டு என பீடை நடை போடுகிறது மோடி அரசு.
நாட்டின் மீதும், மக்களின் மீதும் பொருளாதார பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிடும் அதே வேளையில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் கலாச்சார ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு பார்ப்பன பாசிச மேலாதிக்கத்தை நிலைநாட்ட வெறிபிடித்து அலைகிறது. இந்தியாவை இந்து நாடு என மறைமுகமாக அல்ல பகிரங்கமாகவே அறிவிக்கிறது.
பெரியார், அம்பேத்கர் உட்பட ஏராளமான அறிஞர்களாலும், வரலாற்றறிஞர்களாலும் குப்பை என்றும் சாதிவெறிக் கிரிமினல் சட்டத் தொகுப்பு என்றும் இகழப்பட்ட பார்ப்பனியத்தின் புராணப் புரட்டுக்களையும், பகவத் கீதையையும் ஊதிப்பெருக்கி இந்து வெறியைத் தூண்டுகிறது இக்கும்பல்.
கீதையை தேசிய நூலாக்குவதன் மூலம் கருத்தியல் ரீதியாகவே பார்ப்பனிய மேலாதிக்கத்தை பறைசாற்றுகிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல். கிறிஸ்மஸ் விடுமுறையை ரத்து செய்வதன் மூலம் பள்ளி மாணவரிடையே இருக்கும் கொஞ்ச நஞ்ச சமத்துவ உணர்வையும் குழி தோண்டி புதைக்கிறார்கள். பெரியார் உருவாக்கிய பார்ப்பனிய ஆதிக்க எதிர்ப்பு, சாதி மதம் பார்க்காத சமத்துவ நடைமுறைகள், சாதி மறுப்பு திருமணங்கள், பகுத்தறிவு ஆகிய பண்புகள் கோலோச்சிய தமிழகத்தில் கால்பதிக்க ஆர்.எஸ்.எஸ் கும்பல் வெளிப்படையாக கூட்டங்களையும் பயிற்சியையும் நடத்துகிறது.
அனைத்து ஓட்டுக்கட்சிகள், இனவாதிகள், சாதியக் கட்சிகள், அனைவரும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு துணைபோகும் அபாயகரமான சூழலில் மதவெறி சக்திகளை வீழ்த்த வேண்டிய வரலாற்று கடமை நம் முன் நிற்கிறது. எனவே பார்ப்பனியத்திற்கு பாடை, கட்ட உழைக்கும் மக்களை அணிதிரட்ட, மதச்சார்பற்ற, ஜனநாயக, புரட்சிகர சக்திகள் ஓரணியில் திரண்டு போராட வேண்டுமென அறைகூவி அழைக்கிறோம்.
இவண்,
காளியப்பன்,
மாநில இணைப்பொதுச் செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்  வினவு.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக