வெள்ளி, 12 டிசம்பர், 2014

நடிப்பிசை புலவர் கே ஆர் ராமசாமி The Man who started the Trend... first actor politician


கே.ஆர்.இராமசாமி நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி நூற்றாண்டு நிகழ்வில் திராவிடர் இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு உரை
சென்னை,டிச.10- சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நடிப்பிசைப்புலவர் கே.ஆர்.இராமசாமி நூற்றாண்டு எனும் தலைப்பில் திராவிடர் இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு  உரையாற்றினார். நூற் றாண்டு விழா நாயகராக வரலாற்றில் இடம் பெற்றுள்ள நடிப்பிசைப்புலவர் கே.ஆர்.ஆர். என்றழைக்கப்படும் கே.ஆர்.இராமசாமி இப்போதுள்ள மோடி மாதிரி தந்திரம் தெரியாதவர். வெளளை மனசுக்காரர் என்று திருநாவுக்கரசு தம் உரையில் குறிப்பிட்டார்.

இன்றைக்கு உள்ள இளைஞர்களில் கேட்பவர்கள் யார் இருக்கிறார்கள்?  இந்துப் பத்திரிகையில் செப்டம்பர் மாதம் கே.ஆர்.ஆர். படத்தைப் போட்டு The Man who is the legend என்று போட்டார்கள்.
13 ஆம் வயதில் டி.கே.சண்முகம் குழுவில் சேர்ந்து நடிகராக இருந்தவர். டிகேஎஸ் குழுவில் சேர்வது என்றால், பாடத் தெரிந்திருக்க வேண்டும். எல்லா பாத்திரத் தையும் ஏற்று நடிக்கவேண்டும். சீதை அசோக வனத்தில் ரிஸ்ட் வாட்ச் கட்டி யிருந்தார் என்று அண்ணா கூறுவார்.
1988-1989 இல் முரசொலியில் கே.ஆர்.ஆர்.குறித்து கட்டுரை முதல் முதலில் எழுதினேன். திராவிட இயக்கத் தூண்கள் என்னும் நூலிலும் (நான்காம் பதிப்பு வந்துவிட்டது) அவரைப்பற்றி எழுதி உள்ளேன்.
எஸ்எஸ்பியும், கே.ஆர்.ஆரும் நல்ல நண்பர்கள். திமுகவுக்கு கிடைத்த முதல் செல்வந்தர் எஸ்.எஸ்.பி என்று நாவலர் (மன்றத்தில்) எழுதினார். கங்கை அமரனின் மாமனார் எஸ்எஸ்பி 1982இல் மறைந்தார். கே.ஆர்.ஆர். 1971 இல் மறைந்தார்.
1958-1959 இல் நான் எஸ்.எஸ்.எல்.சி., எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் போது, செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள குடிசைப்பகுதியில் கொடி ஏற்றி வைப்பதற் காக அவரை அழைத்தபோது உடனே ஒப்புக்கொண்டு வந்தார். அப்போது திமுக கொடியை ஏற்றி வைத்துவிட்டு கொடி பறக்குது பார் என்ற அற்புதமான பாடலை பாடினார். அந்தப் பாடல் மதுரையில் திமுக விழாவில் ஒலிபரப்பப்பட்டது.
1965 இல் அவர் பல புராணப் பாத் திரங்களை ஏற்று நடிக்க வேண்டியிருந்தது.  டிகேஎஸ் சகோதரர்களின் அபிமானத்தைப் பெற்று நடித்துக்கொண்டிருந்தார். அவரைப் போலவே இயக்கத்துக்கு கிடைத்தவர் நடிகமணி டிவி நாராயணசாமி. குடியரசு பத்திரிகையை நடிகர்களிடம் கொடுப்பார். சத்தமாக ஒருவர் படிக்க மற்றவர்கள் கேட் பார்கள். அப்படி கேட்டவர்தான் கே.ஆர்.ஆர். ஆவார். பகுத்தறிவுக் கொள் கையால் ஈர்க்கப்பட்டார்.
அவர் நடித்த பல நாடகங்கள் திரைப் படங்களாக எடுக்கப்பட்ட போதும் அவரே நடித்தார். உதவி இயக்குநராக கிருஷ்ணன் பஞ்சு, வடுவூர் நாராயணசாமி இருந்தார்கள்.
1935 இல் மேனகா படத்தில் நடித்தார். பாரதிதாசன் பாடல் எழுதி வந்த  பாலாமணி அல்லது பக்காத் திருடன் படத்தில் நடித் துள்ளார் என்று இந்து ஆங்கிலப் பத்திரிகையில் 23.11.2014 அன்று வந்துள்ளது.
1989ஆம் ஆண்டில் திராவிட இயக் கமும், திரைப்பட உலகமும் வெளியிடப் பட்டது. இரண்டு புத்தகங்களிலும் கே.ஆர்.ஆர்.குறித்து நான் எழுதியுள்ளேன். அவர் தந்திரம் தெரியாதவர். அரசியல் தெரியாதவர். அண்ணா சொல்வதைக் கேட்பவர்.
The Man who started the Trend... first actor politician என்று அவரைப்பற்றி எழுதி உள்ளார்கள். அப்போது அவர் நடித்த வேலைக்காரி 100 நாட்கள் ஓடியது. அவர் நடித்த ஓர் இரவு 50 நாட்கள் ஓடியது. திராவிட இயக்கக் கருத்து களை பிரதிபலிப்பவையாக அவை இருந்தன.
1945 ஆம் ஆண்டுகளில் அண்ணா வுடன் நெருக்கமாக இருந்தவர். கலை உலகின் கருவூலமாக திகழ்ந்தவர். பகுத் தறிவுப்பாசறையில் சேர்ந்து தந்தை பெரியார் இலட்சியங்களை சார்ந்து அருமையாக எழுச்சி ஊட்டும் வகையில் எழுத்தாளனாக, பேச்சாளனாக நான் இருப்பதற்கு என்னை ஊக்கப்படுத்தியவர் கே.ஆர்.ஆர். என்று அண்ணா கூறுவார். பொருளாதாரத்தில் எனக்கு உதவியவர் என்றும் அண்ணா கூறியுள்ளார்.
25 படம் என்று இந்து ஆங்கிலப் பத்திரிகை வரிசைப்படுத்தி உள்ளது. அவர் 26 படங்கள் நடித்தவர். அவர் நடித்த செந்தாமரை படத்தை இந்து விட்டுவிட்டது.
அவர் நடிக்கும் சிறிய பாத்திரத்தில்கூட பத்திரிகைகள் பாராட்டும்படி நடித்தார்.
நாடகமாக இருந்த குமாஸ்தாவின் பெண் 1945 இல் படமானது. ஈரோட்டி லிருந்து வெளிவந்த குடியரசில் அண்ணா  பட விமர்சனம் எழுதியபின், தொடர்ந்து தொடர்பில் இருந்தார்கள். நாடக கம் பெனிக்கு ஈரோட்டில் வாரம் ஒருமுறை தந்தை பெரியார் செலவில் சாப்பாடு உண்டு.
தந்தை பெரியார் அவர்களிடம் இவர்கள் நமக்குத் தேவையானவர்கள் என்று கூறி யிருந்தார்.
குமாஸ்தாவின் பெண் அல்லது கொலைகாரப் பெண் என்று அண்ணாவால் எழுதப்பட்டு திரைப்பட விமர்சனமாக வெளிவந்த புத்தகம் அது ஒன்றுதான்.
இதுபோல் வேறில்லை உள்ளிட்ட சமூகப்படங்கள் பாலாமணி படத்துக்கு இயக்குநர் பாபுராவ். பாரதிதாசன் பாட்டு எழுதினாலே ஓடிவிடும் என்று நினைத் தார்கள். ஆனால், நாவல் சிறப்பாக விற்பனை ஆனது. இயக்குநர் நன்றாக படம் எடுக்கவில்லை.
பூம்பாவை படம் திருஞானசம்பந்தர் கதை. மயிலாப்பூரில் எலும்பு பதிகம் பாடியதால் பெண் உருவம் பெற்றது என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் உள்ள கதை. மேனகா, குமாஸ்தாவின் பெண், பூம்பாவை, தெய்வநீதி, கிருஷ்ண பக்தி, கங்கணம் என ஏழு படங்களுக்குப் பிறகு தொடர்பு இருந்தாலும் அதன்பிறகே அண்ணாவுடன் வந்து சேர்கிறார்.
தேசபக்தி, வேலைக்காரி, விஜயக்குமாரி, ஓர் இரவு, செந்தாமரை, துளி விஷம், சுகம் எங்கே? சதாரம், அவன்,  சொர்க்கவாசல், கன்னியின் காதலன் என்று அவர் நடித்த படங்கள் நன்றாக ஓடியவையாகும். சுய மரியாதைக்கருத்துகளை, அரசியல், நாடகம், பாடல், கலைநிகழ்ச்சி என்ற வடிவங்களில் கொண்டு சென்றவர்களில் கே.ஆர்.ஆர். முதலாமவர் ஆவார்.
பார்ப்பனர் அல்லாதவரான கே.பி.சுந்த ராம்பாள் ஆளுநரே நியமனம் செய்து எம்எல்சி ஆனவர். 1945ஆம் ஆண்டில் வய்.மு.கோதைநாயகி சிறைச்சாலை என்ன செய்யும்? என்ற பாடலை பாடியவர். தேச பக்தி பாடல் பாடியவர் என்று சொல்லப்பட்ட எம்.எஸ்சுக்கு எந்தப் பதவியும் கொடுக்க வில்லை. எம்.எஸ் பார்ப்பனர் அல்ல என்றாலும் பார்ப்பனப்பெண்ணாகவே மாற்றிக்கொண்டவர். தமிழ்த்தாய் வாழ்த் தைப் பாட மாட்டேன் என்றவர்.
கே.ஆர்.ஆர். எம்எல்சி ஆனதற்கு அவர் பணம் கொடுத்து வரவில்லை.  1960 இல் திமுகவிடம் 15 எம்எல்ஏக்கள்தான் இருந்தார்கள். 33 எம்எல்ஏ ஆதரவு இருந் தால்தான் எம்எல்சி ஆகலாம். ஜனநாயக காங்கிரசு விகே இராமசாமி முதலியார் கட்சியில் 16 எம்எல்ஏக்கள், கம்யூனிஸ்ட், காங்கிரசு எம்.எல்.ஏக்கள் ஆதரித்தனர்.  அப்படி அனைத்துக்கட்சியினரின் ஆதரவு அவருக்கு இருந்தது. அவருக்குப்பிறகுதான் இந்தியாவிலேயே அரசியலில் நடிகர்கள் பலரும் இடம் பெற்றனர். நர்கீஸ், குஷ் வந்த்சிங், சிவாஜி, எம்ஜிஆர் எல்லாம் பிறகு வந்தார்கள்.
தன்னை இழந்து இயக்கத்துக்காக உழைப்பு கொடுத்தவர். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஏ.கே.தங்கவேல் திமுக மாநாட்டை நடத்தியவர்.  ஆனாலும், அண்ணாவின் ஊர்க்காரர் என்று தங்கவேலுவுக்கு அளிக்காமல், கே.ஆர்.இராமசாமியையே எம்எல்சி ஆக்கினார்.
நடத்தைச் சான்றிதழை (Conduct Certificate) தமிழில்தான் கொடுப்பார்.  பலருக்காகவும் நானே அவரிடம் வாங்கி உள்ளேன். எந்தக் கட்சிக்காரரையும் நோகும்படி பேசமாட்டார். கலைஞர் கூட்டங்களில் காரிலிருந்தவாறே பேச்சைக் கேட்பார். அவர் மறைந்தபோது கலைஞர் இரங்கலுரையாற்றினார். மதுரை எழுத்தாளர் பாண்டியன் பாராட்டியுள்ளார்.
பூம்பாவைப் புலவர் என்று பாராட்டப் பட்ட கே.ஆர்.ஆர். 1955ஆம் ஆண்டில் நாவலர் அவர்கள் நடிப்பிசைப் புலவர் என்று பாராட்டினார். நாவலர் ஒருவருக்கு பட்டம் கொடுக்கிறார் என்றால் சாதாரண மாகக் கொடுத்துவிட மாட்டார்.
அரும்பு நாடகத்தில் எம்ஜிஆர் நடித்தபோது புரட்சி நடிகர் என்று கலை ஞர்தான் பட்டம் கொடுத்தார். எஸ்எஸ் ஆருக்கு இலட்சிய நடிகர் என்று வளை யாபதி முத்துக்கிருஷ்ணன் கொடுத்தார். திமுக வரலாறு நான் எழுதிவருகிறேன். விரைவில் வெளிவர இருக்கிறது.
மன்றம் பத்திரிகைக்கும், ஜனார்த்தன னுக்கும் பத்திரிகை நடத்துவதற்காகவே நாடகம் போட்டு நிதி திரட்டித் தந்தவர் கே.ஆர்.ஆர். திமுக கூட்டங்களுக்கு மின்சாரம் கிடைக்காது.
என்.வி.நடராசன், இளம்பரிதி பொறுப்பாளர்களாக இருந்த போது, செங்குட்டுவன் ஏற்பாட்டில், சிந்தா திரிப்பேட்டையில் கூட்டம் ஏற்பாடாகியும், ஒலி பெருக்கி, மின்சாரம் இல்லை என்றதும் அந்த காலத்திலேயே இரண்டாயிரம் ரூபாய் வழங்கி அண்ணாசாலையில் உள்ள முகமது இப்ராகிம் கம்பெனியில் மாவட்டத்துக்கு ஒரு ஒலிபெருக்கி வாங்கிக்கொடுத்தார். கூட்டம் தொடங்கும் நேரத்தில், அனுமதி மறுக்கப் பட்டபோது, அரைமணி நேரத்திற்குள் அப்போதைய கமிஷனர் பார்த்தசாரதி (பார்ப்பனர்)யிடம் சென்று அனுமதி வாங்கி, கூட்டம் தொடங்கி நடைபெறச் செய்தார். புரட்சிக் கவி கதையில் காஷ்மீரை மய்யமாகக் கொண்ட கவியின் காதலன் கே.ஆர்.ஆர். நடித்துக் கொடுத்தார். என்.எஸ்.கிருஷ்ணன்மீது பற்று கொண்டவர்.
கே.ஆர்.ஆர். கொள்கைவழியில் நின்று வெற்றி பெற்றவரே ஒழிய பணத்தால் அல்ல. 1909ஆம் ஆண்டில் அண்ணா பிறந்தார். 1914ஆம் ஆண்டில் அண்ணா பிறந்தார்.  கே.ஆர்.ஆர். எழுதிய ஓர் இரவு கதைக்கு அப்போதே ரூபாய் நாற்பதாயிரத்தை கே.ஆர்.ஆர். பெற்றுக்கொடுத்தார்.
அவர் நடித்த சொர்க்கவாசல் முழுமையாக நாத்திகக் கருத்துகளை வெளிப்படுத்திய தாலேயே பல வெட்டுகளை சந்தித்து வெளியானது. கே.ஆர்.ஆர். நூற்றாண்டில் அவர் திராவிட இயக்கத்தை வளர்த் தெடுப்பதில் பெரும்பங்கினை ஆற்றியதை நாம் மறப்பதற்கில்லை.
-இவ்வாறு க.திருநாவுக்கரசு பேசினார்.

.viduthalai.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக