புதன், 10 டிசம்பர், 2014

பகவத் கீதை தேசிய நூலானால் ஜாதி காப்பாற்றப்படும், Corporate தொழிலாளர் பலனை எதிர்பாராமல் கடமையை செய்வார்கள்?

கனிம வளக் கொள்ளையர்களான ரெட்டி சகோதரர்களுக்கு ஆசி வழங்கும் சுஷ்மா! ஆசி கடமை என்றால் பலன் என்ன? பாஜகவின் கர்நாடக தேர்தல் செலவு!தீண்டாமையை அமல்படுத்து, சூத்திரனை அடிமைப்படுத்து, பெண்களை வெளியே விடாதே போன்ற நல் முத்துக்களை எல்லாம் கீதையில் படித்து ...?
 கனிம வளக் கொள்ளையர்களான ரெட்டி சகோதரர்களுக்கு ஆசி வழங்கும் சுஷ்மா! ஆசி கடமை என்றால் பலன் என்ன? பாஜகவின் கர்நாடக தேர்தல் செலவு!
கவத் கீதையை தேசியப் புனித நூலாக விரைவில் அறிவிப்போமென இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். பகவத் கீதை எழுதப்பட்டு, இல்லையில்லை பகவானால் அருளப்பட்டு 5,151 வருடம் ஆகிவிட்டதாம். இப்படி ஒரு புராண புரட்டுக்கு வரலாற்று அனிமேஷன் செய்து விசுவ ஹிந்து பரிஷத் நடத்திய புதுதில்லி நிகழ்ச்சியில் சுஷ்மா இதனை குறிப்பிட்டார்.
பகவத் கீதை ஏற்கனவே மோடி அரசால் கவுரவிக்கப்பட்டு வருவதாகவும் தேசிய நூல் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டும் தான் பாக்கி என்றும் கூறினார் சுஷ்மா. அதற்கு உதாரணமாக அமெரிக்கா சென்ற மோடி ஒபாமாவை சந்தித்த போது பகவத் கீதையை பரிசளித்ததை குறிப்பிட்டார். அலெக்ஸ் ஹேலியின் “ரூட்ஸ்” நூலை படித்திருக்கும் அமெரிக்க மக்கள் கீதையின் உண்மையான பொருளை அறிய வரும் போது காறித்துப்புவார்கள்.
படம் : ஓவியர் முகிலன்
bhagavathசுஷ்மாவின் கூற்று பிழையில்லை என்பதை அமெரிக்கா சென்ற போது மட்டும் அல்ல, அதற்கு முன்னதாக ஜப்பான் சென்ற போதும் நிரூபித்தார், மோடி. ஜப்பான் மன்னர் அகிஹிடோவுக்கு கீதையை பரிசளித்த மோடி இவ்வாறு சொன்னார். ”கீதையை பரிசளித்தற்கு எனது மதச்சார்பற்ற நண்பர்கள் இந்தியாவில் பெரும் புயலை கிளப்புவார்கள்” என்றார்.
மோடி எதிர்பார்ப்பை கிளறியது போல இங்கு யாரும் மோடியின் நடவடிக்கையை விமரிசிக்கவில்லை. இந்தியாவில் பார்ப்பனியத்திற்கு ஆதரவாக விளக்கப்படும் மதச்சார்பற்ற கொள்கைக்கு பொருத்தமான நடவடிக்கையை தான் மோடி செய்தார். எனினும் இந்துக்கள்தான் பாதிக்கப்பட்டோர் எனும் பொய்ப் பிரச்சாரத்தின் அனுகூலத்தில் இருந்து கொண்டு கிடைக்கும் அனுதாபத்தை அறுவடை செய்ய கணக்குப் போட்டார். இந்தியாவில் பின்பற்றப்படும் மதச்சார்பின்மை கொள்கை என்பது உலக நாடுகள் தமது நடைமுறை அனுபவத்திலும், படிப்பினைகளிலும் கண்டுணர்ந்த ஒன்றல்ல.
அரசிலிருந்து மதத்தை துண்டித்தல் என்ற மதச்சார்பற்றக் கொள்கைக்கு முரணாக அனைத்து மதங்களையும் சமமாக பாவித்தல் என்று விநோத விளக்கத்துடன் இந்தியாவில் மதச்சார்பின்மை கடைபிடிக்கப்படுகிறது. அரசியல், சிவில் வாழ்க்கையிலிருந்து மதத்தை துண்டித்தல் எனும் மேற்கத்திய கருத்தாக்கமே மதச்சார்பின்மை எனும் வார்த்தைக்குரிய சரியான பொருளும் நடைமுறையும் ஆகும்.
பதினெட்டாம் நூற்றாண்டில் நடந்த பிரெஞ்சுப் புரட்சியில்தான் இது முதன்முதலில் அமலாக்கப்பட்டது. அதற்கு முன் கல்வி, சட்டம், திருமணம், தண்டனை அனைத்திலும் கிறித்தவ திருச்சபையே அதிகாரம் கொண்டிருந்தது. இனி மதங்களுக்கு வேலையில்லை எனும் நிலைமையில்தான் மதச்சார்பின்மை குறித்த புரிதல் அங்கே தோன்றி வளர்ந்தது.
பார்ப்பனிய இந்துமதத்தின் பிடியில் இருக்கும் இந்தியாவில் இப்படி பொது வாழ்க்கையில் இருந்து மதத்தை துண்டிப்பதை ஆதிக்க சாதியினரை உள்ளடக்கிய ஆளும் வர்க்கம் விரும்பவில்லை. ஆகவே பார்ப்பனியத்தை தூக்கி பிடித்தல் எனும் நோக்கத்திற்காக இங்கே அனைத்து மதங்களையும் சமமாக பாவிப்பது அல்லது ஆதரிப்பது எனும் கேடான விளக்கத்தை முன்வைத்து அமல்படுத்தினர்.
அனைத்து மதங்களையும் மதிக்கின்ற சமரச சன்மார்க்கம் இந்த கருத்தாக்கத்தில் நிலவுவது போன்ற பாவனை இருந்தாலும் அடிப்படையில் இந்த கொள்கை நோய்க்கூறு கொண்டது. பிரதானமாக இந்து மதவெறியர்களுக்கும் கூடவே இசுலாமிய அடிப்படைவாதிகளுக்கும் கூட இந்த கேடான மதச்சார்பின்மை கொள்கை தேவையானது. தத்தமது மதத்து பெண்கள், ஒடுக்கப்பட்டோரை ஆதிக்கம் செய்வது முதல் பல்வேறு வழிகளில் இந்த மதச்சார்பின்மை எனும் அனைத்து மதசார்பு கொள்கை பயன்படுகிறது. என்றாலும் பார்ப்பனியம் தான் இதில் ஆதாயம் அடையும் முதன்மையான பிரிவாகும். இதைத்தான் மண்ணுக்கேற்ற மதச்சார்பின்மை என்று பீற்றுகிறார்கள்.
இந்துக்களிடம் நிலவும் கூர்மையான சாதி, வர்க்க முரண்பாடுகளை மறைத்து மிருகபலத்தை காட்டி தங்களுக்கு சிங்கத்தின் பங்கை கேட்க இந்த மண்ணுக்கேற்ற மதச்சார்பின்மைக் கொள்கை உதவுகிறது. ‘இது இந்துக்களின் புண்ணிய பூமி. எனவே ராமனை தேசிய நாயகனாக கொள், விநாயகன் ஊர்வலத்துக்கு முஸ்லிம்கள் வாழும் தெருக்களை திறந்து விடு, கிருஷ்ணன் அருளிய கீதையை தேசியப் புனித நூலாக அறிவி’ என்று எகத்தாளம் போடுகிறார்கள்.
ஒரு வேளை கிருஷ்ணன் பெண்களுடன் ‘ஆடிய விளையாட்டுகளை’ தேசிய விளையாட்டுக்களாக அறிவியுங்கள் என்றுகூட ஆர்.எஸ்.எஸ் கூட்டம் கோரலாம். அதன்படி ரேப் மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு தேசிய அங்கீகாரம் கூட கிடைக்கலாம். மண்ணுக்கேற்ற மதச்சார்பற்ற கொள்கையை விரித்துப் பார்த்தால் இத்தகைய அபாயங்கள் இல்லாமல் இல்லை.
சுஷ்மாவின் கோரிக்கையை ‘மதச்சார்பற்ற’ தேர்தல் அரசியல் கட்சிகள் ஒருங்கே கண்டித்திருக்கின்றன. அந்த கண்டனங்கள் ஒரே மாதிரியானவை. பலசமய வழிபாட்டுமுறை கொண்ட இந்தியாவில் கீதையை மட்டும் தேசியப் புனித நூலாக அறிவிப்பது மற்ற சமயத்தவரை புண்படுத்தும் என்பது பிரச்சினையின் ஒரு பகுதி தான். முதலில் கீதை ‘இந்து’க்களின் நூலா என்பதே கேள்விக்குறி.
தேசியப் புனித நூல் பிரச்சினை இருக்கட்டும்; ஒரு சமய நூலுக்குரிய தகுதியையே கீதை கொண்டிருக்கிறதா என்ற கேள்வியும் முக்கியமானது. ‘கடமையை செய்; பலனை எதிர்பாராதே’ என்ற தத்துவத்தை கீதையிலிருந்து உருவி சுரண்டல் முதலாளிகள் தம்மிடம் பணிபுரியும் தொழிலாளர்கள் கண்களில் தென்படும் வண்ணம் பல இடங்களில் எழுதியிருப்பதை பார்க்கிறோம்.
நூறு தலைமுறைகள் உட்கார்ந்து சாப்பிடும் வண்ணம் சொத்துக்களை சுருட்டிய வர்க்கம்தான் இந்த “பலனை எதிர்பாராதே” எனும் கர்ம தத்துவத்தை விடாப்படியாக பேசி வருகிறது. பெரும்பான்மை மக்களிடம் “இப்போது பலனை பார்க்காதீர்கள், சொர்க்கத்தில் உங்களுக்குரிய பங்கு காத்திருக்கிறது” என்று அணை போடவே இத்தகைய பிரச்சாரம் பயன்படுகிறது.
ஆனால் இந்த பலனை எதிர்பாராதே என்று அம்பானி, ஆதானி, பொள்ளாச்சி மகாலிங்கம் வகையறாக்களிடம் அமல்படுத்தி அவர்களிடம் உள்ள பல பில்லியன் கோடி ரூபாய் சொத்துக்களை கைவிட வேண்டியதுதானே என்று எவரும் கேட்பதில்லை. மாநகரங்களிலும், இலக்கிய உலகிலும் கீதைக்கு தத்துவ விளக்கம் கொடுக்கும் ஆன்மீக – இலக்கிய அடியார்கள் இப்படி ஒரு கேள்வி யாருக்கும் வரக்கூடாது என்பதற்காகவே தினுசு தினுசாக விளக்கம் கொடுப்பார்கள்.
இன்றைய சாதியின் தொடக்கநிலை வடிவமான நால்வருண பேதத்தை கிருஷ்ணன் கீதையில் அகங்காரத்துடன் விவரிக்கிறான். ‘மனிதர்களின் மூன்று இயற்பண்புகளுக்கு ஏற்ப மனித சமூத்தை நான் தான் நான்கு வருணங்களாகப் பிரித்தேன். இதை உருவாக்கிய எனக்கு இதனை (வருண அமைப்பை) நீக்கவோ, மாற்றவோ அதிகரம் இல்லை’ என்கிறான் கிருஷ்ணன். இந்த வருண அமைப்பை யாராவது குலைக்க முயற்சித்தால் ‘நான் அப்போது தோன்றி அவர்களை அழிப்பேன்’ என்றும் கூறுகிறான்.
பார்ப்பனர்கள் ஞானிகள், ஷத்ரியர்கள் வீரர்கள், பனியாக்கள் வியாபாரிகள், சூத்திரர்கள் எடுபிடிகள், பஞ்சமர்கள் இதற்கு வெளியே இருக்கவேண்டிய இழிவபிறிவுகள் எனும் வர்ணப் பிரிவினைதான் இன்று பல நூறு சாதிகளாக ஏற்ற இறக்கத்துடன் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்த வருண அமைப்பில் கலப்பு நடந்தால் அதுவே ஆகப்பெரிய குழப்பம் என்கிறான் கண்ணன். இதையே இன்றும் பல்வேறு தருணங்களில் பல்வேறு முறைகளில் கேட்டிருப்போம்.

கனிம வளக் கொள்ளையர்களான ரெட்டி சகோதரர்களுக்கு ஆசி வழங்கும் சுஷ்மா! ஆசி கடமை என்றால் பலன் என்ன? பாஜகவின் கர்நாடக தேர்தல் செலவு!
இட ஒதுகீட்டில் வந்த டாக்டருக்கு அறிவு கிடையாது, தலித்துக்களுக்கு இலக்கியம் எழுதத் தெரியாது, பெண்களுக்கு தலைமை தாங்கத் தெரியாது, ஜெயாவை கெடுத்தது சசிகலா, என்று இந்த குழப்பம் குறித்த பார்ப்பனியக் கவலை கணந்தோறும் பேசிக்கொண்டேதான் இருக்கிறது.
வருண அமைப்பை குலைக்கும் எதிரிகளை வன்முறை பிரயோகித்து ஒழிக்க ஆணையிடுகிறான் கிருஷ்ணன். இன்றும் சட்டீஸ்கரில் அம்பானி, அதானி பொருளாதார அமைப்புக்கு சவால் விடும் மாவோயிஸ்டுகள், பழங்குடிகளை ஒழிப்பது, இந்திய தரகு முதலாளிகளின் நலனுக்காக தமிழக மீனவர்களை கொல்லும் சிங்கள கடற்படைக்கு அனுமதி அளிப்பது, இன்னும் காஷ்மீர், வடகிழக்கு என்று கிருஷ்ணனின் வாரிசுகள் பெரும் போரையே நடத்தி வருகிறார்கள்.
மற்ற மதங்களின் கடவுளுக்குரிய தன்மை கிஞ்சித்தும் இல்லாத பாத்திரம் தான் கிருஷ்ணன். கிறித்தவ, இசுலாமிய மதங்களின் கடவுள்கள் கூட பிறப்பினால் யாரையும் பேதம் பார்ப்பதில்லை. இங்கோ பெரும்பான்மை மக்களை கொன்றோ ஒடுக்கியோ வைத்திருக்க விரும்பும் கடவுள்தான் பார்ப்பனியத்தின் மூலக் கடவுள்.
அதன்படி பகவத் கீதை ஒரு இந்து பயங்கரவாத நூல், கிருஷ்ணன் ஒரு இந்து பயங்கரவாதி என்பதற்கும் எண்ணிறந்த சான்றுகளை அடுக்க முடியும்.
தன்னை ஒருவன் ஆராதிக்க முன்வந்தால் அவனை ஏற்றுக்கொள்வேன் என்று சொல்லும் கிருஷ்ணன், நேர்மையான வாழ்க்கையை ஒழுகுவதை அதற்கு நிபந்தனையாக சொல்லவில்லை. அதனால்தான் ஊழல் பேர்வழிகளும், கொலைகாரர்களும் கொண்ட பாஜக கிருஷ்ணனை தூக்கிபிடிக்கிறது. திருப்பதி உண்டியிலில் விழும் எண்ணிறந்த கருப்புப் பணமும் அதையே காட்டுகிறது.
தன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களில் கீதையே வழிகாட்டியிருக்கிறது என்று மெச்சுகிறார் சுஷ்மா ஸ்வராஜ். கர்ம தருமத்தின் படி பலனை எதிர்பாராமல் வினையாற்றும் உத்வேகத்தை கண்ணன் அருளுரை தந்திருப்பதாகவும் உரையாற்றினார் அவர். உண்மைதான். கர்நாடக ரெட்டி பிரதர்ஸ் எனும் கனிம வளக் கொள்ளையர்களெல்லாம் சுஷ்மாவின் கோஷ்டியில் முக்கியமானவர்கள் என்பதைப் பார்க்கும் போது கீதையின் பலன் அளப்பரியதுதான்.
போலவே 2002 குஜராத் இனப்படுகொலையின் சிறிய பாதிப்பு கூட இல்லாமல் டிசைனர் உடை போட்டு குஷாலாக சுற்றி வரும் மோடியின் நடவடிக்கையை பார்த்தாலும் நாம் அதை ஒத்துக் கொள்ள வேண்டும்.
பாஜகவின் இந்த அறிவிப்பு பொருளற்றது, கீதையை இழிவுபடுத்துவது, கீதைக்கு இத்தகைய தேசிய நூல் போன்ற அடையாளங்கள் தேவையில்லை என்று காங்கிரஸ் கட்சி சொல்லியிருக்கிறது. இது போன்றதொரு விளக்கத்தைத்தான் சுற்றி வரும் சொல்லாடல்கள் மூலம் எழுத்தாளர் ஜெயமோகன் போன்றோர் செப்புகின்றனர்.
காங்கிரசு என்ற கட்சியே மிதவாத பார்ப்பனியக் கட்சிதான். கதர் வேட்டி காந்தி காலத்திலிருந்து அல்ட்ரா மாடர்ன் ராகுல் காந்தி காலம் வரை இந்த வரலாறு மாறிவிடவில்லை. இந்து மதத்தில் நல்ல இந்து மதம், தவறாக முன்வைக்கப்படும் கெட்ட இந்துமதம் என்று இவர்கள் மட்டுமல்ல, நம்பூரிதிரி பாடு புகழ் சிபிஎம் போலிக் கம்யூனிஸ்டு கட்சிகளும் கூட கூறுகிறார்கள்.
ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் பார்ப்பனியத்தின் ஆன்மா சாதி. சாதி என்பது சமூக, பொருளாதார வாழ்வில் ஏற்றத்தாழ்வுடன் பெரும்பான்மை மக்களை ஒடுக்குவது. அப்படி ஒடுக்குவதை மத ரீதியான ஆன்மீகத்துடன் இணைக்கும் போது அது ஆளும் வர்க்கத்திற்கு அளப்பறிய சேவை செய்கிறது.
மலத்தை எடுக்கும் சாதியினருக்கு கிடைத்திருக்கும் தொழில் இறைவன் அருளியது, புண்ணியத்தை கூட்டுவது என்று மோடி கொக்கரித்தாரே அதைத்தான் அந்தக் காலத்தில் ஹரியின் ஜனங்கள் என்று காந்தி பாடினார். இந்த பித்தலாட்டத்தை திரைகிழித்தார் அம்பேத்கர். அதை வெகுஜனமக்களுக்கு எடுத்துச் சென்றார் பெரியார்.
ஆகவே இந்தியாவில் ஒரு பெருமைப்படும் மரபு இருந்தது என்று சொல்வதானால் அது பார்ப்பனிய எதிர் மரபுதான். அதாவது வருண, சாதியத்தை மறுக்கும் மரபே நமது போற்றலுக்குரிய மரபு. சித்தர்களும், சாருவாகனர்களும், புத்தர் தொடங்கி அம்பேத்கர் பெரியார் வரை அந்த மரபு தொடர்கிறது. அதை இருட்டடிப்பு செய்வதே பார்ப்பனியத்தின் கீதை மரபு.
அரசியல் சட்டம்தான் புனித நூல், கீதை அல்ல என்று முழங்குகிறார் மம்தா பானர்ஜி. அரசியல் சட்டமே பார்ப்பனியத்தின் புனிதத்தை ஒத்துக் கொண்டே துவங்குகிறது, இன்று வரை கடைபிடிக்கிறது. ஆகவேதான் தான் எழுதிய சட்டத்தை எரிக்கும் முதல் ஆளாக நானே இருப்பேன் என்று அம்பேத்கர் கூறினார். அரசியல் சட்டம் எழுதும் போது பார்ப்பனிய இந்துமதவெறியர்கள் எத்தகைய எதிர்ப்புகளையெல்லாம் தெரிவித்தனர் என்பதையும் வரலாறு பதிவு செய்திருக்கிறது.
கீதையை தேசிய நூலாக அறிவித்தால் மற்ற மதத்தினர் புண்படமாட்டார்களா என்று பாமக ராமதாஸ் உள்ளிட்டு பல்வேறு கட்சிகள் ஒப்புக்கு பேசுகின்றனர். உண்மையில் கீதை கூறும் சாதிக்கட்டமைப்பின் புனிதத்தை இத்தகைய சமூக நீதிக்கட்சிகளும் இன்று வரை பாதுகாப்பது கண்கூடு. அதனால்தான் இவர்கள் எவரும் கீதையை பெரும்பான்மை மக்களை ஒடுக்கும் பயங்கரவாத நூல் என்று சொல்லத் துணியவில்லை.
பார்ப்பனியத்திற்கு ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பின் காரணமாக தோன்றியவையே புத்த, சமண மதங்கள். அதன்பிறகு வரலாறு நெடுகிலும் பார்ப்பனியம் தன்னை தகவமைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகிறது. இது வெறுமனே மதம், ஆன்மீக தளத்தில் மட்டும் செயல்படாமல், நிலவுடமை, பொருளாதாரம் எனும் தளங்களையும் உள்ளடக்கிய படியால் ஆளும் வர்க்கத்திற்கு வேறு எதனையும் விட பார்ப்பனியமே மிகுந்த சேவை செய்யும் தகுதியைக் கொண்டிருந்தது.
இதனாலேயே இந்தியா முழுவதும் பல்வேறு மன்னர்கள் பார்ப்பனியத்திற்கு புரவலராக இருந்து தூக்கி விட்டனர். ஆதிசங்கரன் போன்றோர் அதை கருத்துத் தளத்தில் செய்தனர். இத்தகைய வரலாற்றுப் போக்கில்தான் மகாபாரதம் பல்வேறு இடைச்செருகல்களோடு ஊதிப்பெருக்கப்படுகிறது. அதுதான் கீதையையும் தோற்றுவித்தது. கீதை சொருகப்பட்ட காலம் கி.பிக்கு பின்னரே என்று பல்வேறு வரலாற்று ஆசிரியர்கள் கூறியிருக்கின்றனர்.
எத்தகைய மனித விரோத நூலுக்கு 5000 ஆண்டு வயது என்பது ஒரு புரட்டு. ஒருவேளை இந்துமதவெறியர்களின் படி அந்த வயது உளறல் உண்மை என்றே வைத்தாலும் அது இந்தியா வெகு காலமாக அடிமை நாடாக இருக்கிறது என்பதன் அறிகுறியே அன்றி பெருமைக்குரிய ஒன்றல்ல.
எந்த வகையிலும் தகுதியற்ற கீதையை தேசியப் புனித நூலாக்குவோம் என்பது கயமை நிறைந்தது. மக்கள் பெற்றுவந்த மானியங்களை வெட்டி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக தொழிலாளர் கொள்கைகளை திருத்தி அமைக்கும் வேலையை துரிதகதியில் நடத்தும் மோடியின் அக்கிரமங்களை நியாயப்படுத்த பகவத் கீதை பயன்படும் என்பதில் சந்தேகமில்லை.
எனவே மறுகாலனியாதிக்கத்துக்கு எதிரான நமது போராட்டதுடன் பகவத் கீதையை தடை செய் என்ற முழக்கத்தையும் முன்னெடுக்க வேண்டியது அவசியமாகிறது.
தடையா, இது கருத்துரிமையை மறுப்பதாகுமே என சில கருத்துரிமை காவலர்கள் கேட்கலாம்.
தீண்டாமையை அமல்படுத்து, சூத்திரனை அடிமைப்படுத்து, பெண்களை வெளியே விடாதே போன்ற நல்முத்துக்களையெல்லாம் கருத்துரிமையில் சேர்ப்பீர்களா என்ற எளிய கேள்வியை கேட்டுப் பாருங்கள்!
ஒடுக்கப்படும் மக்களின் கருத்துரிமைக்கு போராடுவதும், ஆர்.எஸ்.எஸ் போன்ற பயங்கரவாத இயக்கங்களை தடை செய்வதும், அதற்கு அடிப்படையான புராண இதிகாசங்களை விலக்கி வை என்று கோருவதும் வேறு வேறு அல்ல.
- சம்புகன்.வினவு.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக