செவ்வாய், 9 டிசம்பர், 2014

பகவத் கீதையை தேசியநூலாக்க தமிழகம் கடும் எதிர்ப்பு!

பகவத் கீதை தேசிய புனித நூலாக அறிவிக்கப்படும் என்ற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் பேச்சுக்கு திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
கருணாநிதி: மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றதும் சமூக ஊடகங்களில் ஹிந்தி, குரு உத்சவ், சம்ஸ்கிருத வாரம் என சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. மத்திய இணை அமைச்சர் ஒருவரின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பிரதமரே வருத்தம் கலந்த தொனியில் சமாதானம் பேசுகிற அளவுக்கு நிலைமை சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், ஹிந்துக்களின் புனித நூலான பகவத் கீதை, தேசிய புனித நூலாக அறிவிக்கப்படும் என்றுகூறி வம்பை விலை கொடுத்து வாங்கியிருக்கிறார் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றபோது அந்நாட்டு அதிபர் ஒபாமாவுக்கு பகவத் கீதையை பரிசளித்தார். அப்போதே அதற்கு தேசிய புனித நூல் தகுதி வழங்கப்பட்டு விட்டது.
இதனிடையே, தேசிய புனித நூலாக பகவத் கீதை அறிவிக்கப்படும் என அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவைப் பொருத்தவரை அரசியலமைப்புச் சட்டம்தான் புனித நூல் என்றும், மதச்சார்பற்ற நாட்டில் ஒரு மதத்தின் நூலை புனித நூலாக அறிவிக்கக் கூடாது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
பாஜக அரசு பல்வேறு வகையில் மக்கள் நலன் பேணும் செயல்களில் ஈடுபட்டாலும், இதுபோன்ற தேவையற்ற செயல்கள் மூலம் பெயரைக் கெடுத்துக் கொள்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது. எனவே, வளர்ச்சிப் பணிக்கு குந்தகம் ஏற்படாதவாறு எச்சரிக்கையுடன் மத்திய அரசை பிரதமர் மோடி வழிநடத்திச் செல்ல வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: ஒரு தரப்பு மக்களின் விருப்பத்தை ஒட்டுமொத்த இந்தியாவின் மீதும் திணிக்கும் நோக்கத்துடன் பகவத் கீதை தேசிய புனித நூலாக அறிவிக்கப்படும் என மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.
பகவத் கீதை, திருக்குரான், புனித பைபிள் ஆகியவை வெவ்வேறு மதங்களின் புனித நூலாக இருந்தாலும், அவை ஒரே மாதிரியான பாடங்களைத் தான் போதிக்கின்றன.
இந்தச் சூழலில் கீதையை தேசிய நூலாக அறிவிப்பது இந்தியாவை ஹிந்து தேசமாக்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது என்ற வாதத்துக்கு வலு சேர்ப்பதாக அமையும். கடந்த 6 மாதங்களில் போற்றத்தக்க எந்தத் திட்டமும்  மோடி ஆட்சியில் செயல்படுத்தப்படவில்லை. மாறாக மொழித் திணிப்பு, கலாசாரத் திணிப்பு மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.
இதனை தமிழகம் மட்டும் எதிர்க்கிறது என்பதால், ஒருபுறம் திருவள்ளுவரின் பிறந்த நாள் வட மாநிலப் பள்ளிகளில் கொண்டாடப்படும் என அறிவித்துவிட்டு, மறுபுறம் கீதையை தேசிய நூலாக அறிவிக்கத் துடிப்பது மோசடி அரசியலாகவே பார்க்கப்படும். எனவே, கீதையை தேசிய நூலாக அறிவிப்பதைக் கைவிட வேண்டும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்: மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் வகையில் ஹிந்தி திணிப்பு, சம்ஸ்கிருத திணிப்பு என ஒவ்வொரு நாளும் ஒரு புதுப் பிரச்னையை பாஜக கிளப்பி வருகிறது. அந்த வகையில், பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிப்போம் என சுஷ்மா ஸ்வராஜ் பேசியிருக்கிறார்.
வகுப்புவாத வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு அந்தச் சந்தடியில் தனியாருக்கு எல்லாவற்றையும் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு இந்தியாவின் இறையாண்மைக்கு உலை வைப்பதுதான் பாஜக அரசின் திட்டமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
எந்த மதச்சார்பும் இல்லாத, அறநெறிகளைப் பரப்பும், உலகப் பொதுமறை என எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட திருக்குறளை தேசியப் பொதுமறையாக அறிவிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக