வியாழன், 11 டிசம்பர், 2014

மாறன் சகோதரர்களிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை ! ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில்...

தயாநிதி மாறன், கலாநிதி மாறன் | கோப்புப் படம்ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோரிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தியுள்ளது.
ஏற்கெனவே அனுப்பப்பட்ட சம்மனின் அடிப்படையில், இருவரிடம் இந்த வாரத்தின் தொடக்கத்தில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகவும், அவர்களது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்தன.
இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் கூறும்போது, "மாறன் சகோதரர்களுடனான விசாரணையின்போது பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அவர்கள் கூறிய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட வாய்ப்பு உண்டு.
இந்த வழக்கில் மாறன் சகோதரர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான தனிப்பட்ட மற்றும் நிர்வாக ரீதியில் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் தாக்கல் செய்த சில ஆவணங்கள் மோசடியானவை" என்று அவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, இந்த வழக்கில் 2015 மார்ச் 2-ல் நீதிமன்றத்தில் மாறன் சகோதரர்கள் நேரில் ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததும் நினைவுகூரத்தக்கது.
வழக்கின் பின்னணி
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது ஏர்செல் உரிமையாளர் சிவசங்கரனுக்கு நெருக்கடி கொடுத்து மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத் தலைவர் அனந்த கிருஷ்ணன் அந்நிறுவனத்தை வாங்க உதவியதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து 2011-ல் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான சன் டைரக்ட் நிறுவன பங்குகளில் ரூ.650 கோடியை மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்திருப்பதை சிபிஐ கண்டுபிடித்தது.
பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு சிபிஐ, இந்த வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
மாறன் சகோதரர்கள் தவிர மேலும் 6 பேர் மற்றும் சன் டைரக்ட் டி.வி. பிரைவேட் லிமிடெட் உட்பட 4 நிறுவனங்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன. 6 தனிநபர்கள் தவிர சன் டைரக்ட் டிவி பிரைவேட் லிமிடட் உள்ளிட்ட 4 நிறுவனங்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் கிரிமினல் சதி உள்ளிட்ட குற்றங்கள் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள தனிநபர்கள், நிறுவனங்கள் மீது சாட்டப்பட்டுள்ளன.
இந்தக் குற்றப்பத்திரிகை மீதான விசாரணையின்போது, 'ஏர்செல் நிறுவனத்தை தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்து விற்பனை செய்ய வைத்ததற்கான ஆதாரங்கள் உள்ளன' என்று சிபிஐ தரப்பு வாதிட்டது. இதற்கான ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
'கடந்த 2004-06 காலகட்டத்தில் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், ஏர்செல் நிறுவனத்தின் உரிமங்களுக்கான விண்ணப்பங்களை காரணமே இன்றி நிலுவையில் வைத்தார். அதன் உரிமையாளர் சிவசங்கரனுக்கு நெருக்கடி கொடுத்து, அதன் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய வைத்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. நிறுவனம் கைமாறிய பிறகு உரிமம் வழங்கப் பட்டது. இதில் பாதிக்கப்பட்டது சிவசங்கரன்தான்' என்று சிபிஐ தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.tamil.hindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக