ஞாயிறு, 7 டிசம்பர், 2014

பெரியாறு அணை பாதுகாப்பு இனி மத்திய பாதுகாப்பு படையினரிடம் !

முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு, கேரள போலீசாரிடம் இருந்து மத்திய பாதுகாப்பு படையினரிடம் செல்வது உறுதியாகியுள்ளது.பெரியாறு அணையின், இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளை, தமிழக பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது. அணை பாதுகாப்பு பணிகளை, 1961க்கு முன் வரை, தமிழக போலீசார் கவனித்து வந்தனர். அணையை ஒட்டிய பகுதிகளில், வனவிலங்குகள் அச்சுறுத்தல், அடிப்படை வசதிகள் இல்லாததை காரணம் காட்டி, தமிழக போலீசார் அங்கு பணி செய்ய மறுத்தனர். இதையடுத்து, அணையின் பாதுகாப்பு, தற்காலிகமாக, கேரள போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று வரை, அவர்கள் தான், பாதுகாப்பு பணியில் உள்ளனர். அவர்களுக்கான சம்பளத்திற்காக, தமிழக அரசு, ஆண்டு தோறும், 12 லட்சம் ரூபாய் செலவிடுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு பிறகு, அணைக்கு, மத்திய பாதுகாப்பு படையினர், பாதுகாப்பு வழங்குவது உறுதியாகியுள்ளது.
பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அணை பாதுகாப்பு ஏற்பாட்டை, மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள், இரண்டு முறை ஆய்வு செய்துள்ளனர். இரண்டு ஷிப்ட் முறையில், 50 போலீசார் பணிபுரிவதை குறிப்பெடுத்துக்கொண்டனர். விரைவில், அணைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. கேரள போலீஸ் பாதுகாப்பு விலக்கி கொள்ளப்படுமா என்பது தெரியவில்லை. இவ்வாறு, அவர் கூறினார். பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது, 137 அடியை ஒட்டி உள்ளது. நீர் மட்டத்தை, 136 அடியாக குறைக்க கோரி கேரள அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. எனவே, நீர் மட்டத்தை, 142 அடிக்கு நிலை நிறுத்தும் பணிகளை மீண்டும் துவக்கும்படி, நீர்வளத்துறை உயர் அதிகாரிகளுக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக