செவ்வாய், 30 டிசம்பர், 2014

போலி என்கவுண்டர் கேசில் இருந்து அமித் ஷா விடுவிக்கப்பட்டார்!

மும்பை: குஜராத்தில், 2005ம் ஆண்டில் நடைபெற்ற, போலி என்கவுன்டர் வழக்கிலிருந்து, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, விடுவிக்கப்பட்டார். அவருக்கும், இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்து, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நேற்று அவரை விடுவித்தது.
குஜராத்தில் தாதாவாக வலம் வந்த சொராபுதீன் ஷேக், போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு மற்றும் அவன் கூட்டாளி துளசிராம் பிரஜாபதி படுகொலை வழக்கில், குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா பெயர் சேர்க்கப்பட்டது; இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரித்து வந்தது.சி.பி.ஐ., சிறப்பு நீதிபதி, எம்.பி.கோசாவி பிறப்பித்த உத்தரவில், 'சொராபுதீன் என்கவுன்டர் வழக்கில், அமித் ஷா மீது தொடரப்பட்ட வழக்கிற்கு ஆதாரம் இல்லை. எனவே, அவரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கிறேன்' என, உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, சி.பி.ஐ., சார்பில் மேல் முறையீடு செய்யப்படுமா என்பது குறித்து யோசித்து முடிவெடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சொராபுதீன் ஷேக்கின் சகோதரர், சி.பி.ஐ., உத்தரவு, விலைக்கு விற்கப்பட்டு விட்டது என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக