வெள்ளி, 19 டிசம்பர், 2014

கொள்ளையர்கள் கூடாரமாக மாறிவிட்ட அரவிந்தர் ஆசிரமம் இழுத்து மூடப்படவேண்டும்?

தற்கொலைக்கு முயன்று மீட்கப்பட்ட சகோதரிகளின் தந்தை பிரசாத், ஜெய ஸ்ரீ (இடது படம்), ஹேமலதா மற்றும் நிவேதிதா.
தற்கொலைக்கு முயன்று மீட்கப்பட்ட சகோதரிகளின் தந்தை பிரசாத், ஜெய ஸ்ரீ (இடது படம்), ஹேமலதா மற்றும் நிவேதிதா.
புதுச்சேரியில் தற்கொலைக்கு முயன்ற சகோதரிகள் 5 பேரும் அரவிந்தர் ஆசிரம நிர்வாகத்துடன் கடந்த 12 ஆண்டு காலமாக நீண்ட நெடிய சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிஹார் மாநிலம் பொகாரா (தற்போது ஜார்கண்ட்டில் உள்ளது) பகுதியைச் சேர்ந்த பிரசாத்- சாந்தி தேவி தம்பதி கடந்த 1970-ம் ஆண்டு தொடக்கத்தில் புதுச்சேரி வந்துள்ளனர். அரவிந்தர், ஸ்ரீ அன்னை பக்தரான பிரசாத், தனது மகள்களான ஹேமலதா, ஜெயஸ்ரீ, அருணஸ்ரீ, ராஜ்யஸ்ரீ, நிவேதிதா ஆகியோரை ஆசிரமப் பள்ளியில் படிக்க வைத்துள்ளார். பிறகு, சகோதரிகள் 5 பேரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஆசிரம உறுப்பினராக மாறி, அங்கேயே தங்கி சேவை செய்ய தொடங்கினர். குருசுகுப்பத்தில் உள்ள ஆசிரம விடுதியில் அவர்களுக்கு அறை ஒதுக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் அவர்களுக்கு ஆசிரமத்தை சேர்ந்த சிலரால் பிரச்சினை ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் புகார் கூறினர். ஆனால், கடந்த 2002-ம் ஆண்டு ஹேமலதா மீது ஆசிரம நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.
மேலும், 5 சகோதரிகளும் சேர்ந்து ஆசிரம நிர்வாகத்தினர் மற்றும் உறுப்பினர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்தனர். ஆசிரம விதிமுறைப்படி உள்ளே நடப்பதை வெளியே சொல்ல தடை உள்ளது. அதையும் மீறி கடந்த 2004-ல் அவர்கள் போலீஸில் புகார் தந்தனர். அதில், தங்கள் ஐவருக்கும் ஆண் உறுப்பினர்களால் கடந்த 13.6.2004-ல் பாலியல் குறித்த படங்கள் வந்ததாகத் தெரிவித்தனர். இதுதொடர்பாக கடந்த 4.8.2004 மற்றும் 11.10.2004-ல் புகார்கள் பெறப்பட்டு ஆசிரமத்தைச் சேர்ந்த ஒருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதே சமயம் ஆசிரம நிர்வாகமும் நாகராஜ் என்பவரை நியமித்து தனியாக விசாரணை நடத்தியது. அவர் தனது விசாரணை அறிக்கையில், ‘5 சகோதரிகள் மீது தவறுள்ளது என்றும் அவர்கள் ஆசிரமத்தை விட்டு வெளியேற வேண்டும்’ என்றும் கூறினார். அதன் அடிப்படையில், 5 பேரையும் வெளியேற்ற ஆசிரம நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது. அதை எதிர்த்து புதுவை நீதிமன்றத்தில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர். ஆசிரமத்திலிருந்து 5 பேரையும் வெளியேற்ற நீதிமன்றம் தடை விதித்தது.
எனவே, ஆசிரம தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் நடைபெற்ற விசாரணையில், ஹேமலதா பிரசாத் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை ஆசிரமத் தரப்பு கூறுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. அந்த விசாரணை அறிக்கையை எதிர்த்து ஹேமலதா தரப்பினர் வழக்கு தொடர்ந்ததோடு ஆசிரம நிர்வாகத்தினர் மற்றும் உறுப்பினர்கள் மீது மீண்டும் பாலியல் புகார் தெரிவித்தனர். இதை ஆசிரம நிர்வாகம் மறுத்தது. அதைத்தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையம், மனித உரிமைகள் ஆணையம் தரப்பிலும் புகார் கூறப்பட்டன. ஆனால், ‘புகார்களில் உண்மை இல்லை’ எனத் தெரிவித்தன. இதற்கிடையே, ஆசிரமத்தை விட்டு ஹேமலதா உள்ளிட்ட 5 சகோதரிகளும் வெளியேற வேண்டும் என கடந்த 21.6.2010-ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், 5 சகோதரிகளும் அந்த உத்தரவை பின்பற்றாததால் ஆசிரம நிர்வாகம் சார்பாக அவர்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கில், கடந்த ஏப்ரல் மாதம் 29-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், ‘5 சகோதரிகளும் ஜூலை 31-க்குள் ஆசிரமத்தை காலி செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டது. ஆசிரமத்திலிருந்து செல்லும் வரை அரவிந்தர் ஆசிரம விதிகளை ஐவரும் பின்பற்ற வேண்டும் என ஆணை பிறப்பித்தது. அவர்கள் நீதிமன்ற ஆணையை பின்பற்றாவிட்டால் ஆசிரம நிர்வாகம் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்தது. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவை 5 சகோதரிகளும் கடைப்பிடிக்கவில்லை எனக் கூறி ஆசிரம தரப்பினர் உச்ச நீதிமன்றத்தை மீண்டும் அணுகினர். அதனால், ‘ஐவர் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது’ என உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. ஐவரையும் ஆசிரமத்தை விட்டு வெளியேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு ஆறு மாத அவகாசத்தை கடந்த ஜூன் மாதம் வழங்கியது. தற்போது, ஆறு மாதம் முடிந்தும் ஐவரும் வெளியேறாததால் ஆசிரம தரப்பு சார்பாக மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு விசாரணை கடந்த 6-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘ஐந்து பேரும் டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஆசிரமத்தை காலி செய்ய வேண்டும். அப்படி காலி செய்யாவிட்டால் அவர்களை கைது செய்யவும், ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றவும் புதுச்சேரி போலீசார் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உச்ச நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், காலி செய்ய சொன்னால் தற்கொலை செய்து கொள்வதாக அவர்கள் அறிவித்தனர். உடனே 5 பேரையும் கடந்த 16-ம் தேதி முதல்வர் ரங்கசாமியிடம் சமூக ஆர்வலர்கள் சிலர் அழைத்துச் சென்றனர். அதற்கு ரங்கசாமி, ‘உச்ச நீதிமன்ற உத்தரவு என்பதால் ஆசிரமத்தில் இருந்து முதலில் வெளியே வாருங்கள். பிறகு, ஆசிரமத் தரப்பில் பேசி இடம் பெற்று தர ஏற்பாடு செய்யலாம்’ என தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் இதை ஏற்கவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் குருசுக்குப்பத்தில் உள்ள ஆசிரம விடுதியில் 4-வது மாடியில் ஏறி தற்கொலைக்கு முயன்றனர். போலீஸார் அவர்களை அங்கிருந்து அழைத்து பெற்றோருடன் அனுப்பினர். இறுதியில், நேற்று காலை காலாப்பட்டு கடலுக்குச் சென்று தற்கொலைக்கு முயன்று தாய், இரு மகள்கள் இறந்தனர். தந்தை உட்பட 4 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
ஆசிரமத்தில் பாலியல் தொந்தரவு நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுப்பிய 5 சகோதரிகளும் 12 ஆண்டுகளாக நடத்திய நீண்ட நெடிய சட்டப் போராட்டம், 3 பேரின் தற்கொலையில் முடிந்துள்ளது.
பிளாக்கில் தகவல்கள் பதிவு
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்துக்கு எதிராக தாங்கள் தொடர்ந்த வழக்கு தொடங்கி தாங்கள் சந்தித்த பிரச்சினைகள், நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இணையதளத்தில் பிளாக் தொடங்கி நிவேதிதா, ஹேமலதா இருவரும் பதிவு செய்துள்ளனர். இதற்காக, ‘பிரசாத் சிஸ்டர்ஸ்’ என்ற பெயரில் பிளாக்ஸ்பாட் ஆரம்பித்துள்ளனர்.
ஆசிரமத்துக்கு எதிராக தாங்கள் தொடங்கிய போராட்டம் பற்றியும் எழுதி உள்ளனர். அதில், மத்திய அரசுக்கு அனுப்பிய மனு, தங்கள் வாழ்க்கையை முடித்து கொள்வது ஆகிய தகவல்கள் உள்ளன. மேலும், தங்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளை விமர்சனம் செய்தும் எழுதி இருக்கின்றனர்.
புதுச்சேரியில் நாளை பந்த்
புதுச்சேரியில் உள்ள சமூக நல இயக்கங்கள் சார்பாக பாரதி பூங்காவில் நேற்று மாலை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்துக்கு மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலர் சுகுமாறன் தலைமை வகித்தார். அதில் பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து சுகுமாறன் கூறுகையில், “அரவிந்தர் ஆசிரமத்தில் ஐந்து சகோதரிகளும் 12 ஆண்டு காலமாக நீதி கேட்டு போராடி வந்தனர். நீதி கிடைக்காத காரணத்தாலும், ஆசிரமத்தை விட்டு வெளியேற்றிய காரணத்தாலும் மன பாதிப்பு அடைந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
இதற்கு, அரவிந்தர் ஆசிரமமே முழுப்பொறுப்பு. ஆசிரமத்தில் பெண்களுக்கு பல்வேறு கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. எனவே, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அரவிந்தர் ஆசிரமத்தை கையகப்படுத்த வேண்டும். மூத்த ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து ஆசிர மத்தை நிர்வகிக்க வேண்டும். பாலியல் தொந்தரவு குறித்தும் ஆசிரமத்தின் சட்டவிரோத நடவடிக்கை குறித்தும் விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஆசிரமத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரையும் மீட்டு பாதுகாப்பு தர வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை (டிசம்பர் 20) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும். இந்த போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், வியாபாரிகள், ஒத்துழைப்பு தரவேண்டும்” என்றார்.
உயிர் தப்பிய பெண் பாலியல் புகார்
புதுச்சேரியில் தற்கொலைக்கு முயன்று உயிர் தப்பிய சகோதரிகளில் ஒருவரான ஹேமலதா நேற்று புதுச்சேரி அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இவர், நேற்று முன்தினம் 4வது மாடியில் ஏறி தற்கொலை செய்யப் போவதாக அறிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் அளித்த பேட்டியில், “அரவிந்தர் ஆசிரமத்தில் சிறு வயதில் இருந்தே வசித்து வந்தோம். அங்கு எங்களுக்கு பாலியல் தொந்தரவு இருந்ததால் அதை எதிர்த்து போராட்டம் நடத்தினோம். போலீஸில் புகார் அளித்தோம். ஆனால், போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதற்கிடையே எங்களை ஆசிரமத்தை விட்டு நிர்வாகம் வெளியேற்றியதால் மன வேதனை அடைந்தோம். இரவு முழுவதும் எங்களுக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து வேதனை அடைந்தோம். பின்னர், குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து சின்னகாலாப்பட்டு கடற்கரைக்கு சென்றோம். அப்போது, அங்கு இருந்த 2 பேர் என்னை பலாத்காரம் செய்தனர். ஏற்கெனவே, வேதனையில் இருந்த எங்களுக்கு இது பெரிய கொடுமையாக இருந்தது. நான் பலாத்காரம் செய்யப்பட்டதை நிரூபிக்க டிஎன்ஏ சோதனைக்கு தயாராக உள்ளேன்” என்று தெரிவித்தார்.
இது குறித்து, காலாப்பட்டு சப்இன்ஸ்பெக்டர் ரமேஷிடம் கேட்டபோது, ‘‘தற்கொலை செய்ய சென்றபோது அடையாளம் தெரியாத இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக ஹேமலதா புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்யப்படும்” என்றார். புதுச்சேரி வட்டாட்சியர் ரமேஷும் இது குறித்து விசாரணை நடத்துவதாக தெரிவித்தார்.
‘14 ஆண்டுகளாக போராடியும் பயனில்லை’
அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதால் தற்கொலைக்கு முயன்று மீட்கப்பட்ட சகோதரிகளில் ஒருவரான ஜெயஸ்ரீ என்பவர், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்கொலைக்கு முயன்றது குறித்து அவரிடம் கேட்டபோது, “சிறு வயதில் இருந்தே ஆசிரம விடுதியில் நானும் எனது சகோதரிகளும் சேவையாற்றி வருகிறோம். ஆசிரம நிர்வாகத்தில் உள்ளவர்களால் இருந்து விடுதியில் அடிக்கடி பாலியல் தொந்தரவு இருந்தது.
இது தொடர்பாக போலீஸ் மற்றும் நீதிமன்றங்களில் முறையிட்டோம். ஆனால், எங்களுடைய உணர்வுகள் யாருக்கும் புரியவில்லை. கடந்த 14 ஆண்டுகளாக ஆசிரம நிர்வாகத்துக்கு எதிராக போராடி வருகிறோம். எங்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
தற்போது, ஆசிரமத்தில் இருந்து எங்களை வெளியேற்றி விட்டனர். போலீஸாரும், நீதிமன்றமும் கைவிட்டதால் வேறு வழியின்றி மனமுடைந்து குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றோம்” என்று தெரிவித்தார்.
சிபிஐ விசாரிக்க திமுக கோரிக்கை
அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட 3 சகோதரிகள் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, புதுச்சேரியில் உள்ள பல்வேறு கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுங்கட்சி எம்எல்ஏ நேரு தலைமையில் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, நேரு கூறும்போது, “ஆசிரமத்தில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து ஏற்கெனவே சட்டப்பேரவையில் பேசியுள்ளோம். இதில், மாநில அரசு நடவடிக்கை எடுக்க முடியாது. மத்திய உள்துறை அமைச்சகம்தான் நேரடியாக தலையிட வேண்டும். உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரமத்தை நிர்வாகம் செய்ய தனியாக ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும்” என்றார்.
இதேபோல், திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ சிவா பங்கேற்று பேசும்போது, “ஆசிரமத்தில் என்ன நடக்கிறது என்று புதுச்சேரியில் உள்ளவர்களுக்குகூட எதுவும் தெரிவது இல்லை. தற்கொலைக்கு முயன்ற சகோதரிகளை போலீஸார் தங்கள் கண்காணிப்பில் வைத்தி ருந்து கவுன்சலிங் வழங்கி இருக்க வேண்டும். ஆசிரமம் மீதான ஒட்டுமொத்த புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அரவிந்தர் ஆசிரமத்தை அரசு கையகப்படுத்தி தனி அதிகாரியை நியமித்து நிர்வாகத்தை நடத்த வேண்டும்’’ என்றார். இதுபோல இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாகவும் ஆசிரம விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.tamil.hindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக