சனி, 6 டிசம்பர், 2014

ரேஷன் கடைகளில் கெரசின் கிடைக்காது ~! மானியம் ரத்து செய்ய மத்திய அரசு முடிவு !

புதுடெல்லி: பொதுவிநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் மானிய விலையில் மண்ணெண்ணைக்கு வழங்கும் திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கடிதம் எழுதியுள்ளார்.பொதுமக்கள் பயன்படுத்தும் காஸ் சிலிண்டர், ஏழைகள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய், விவசாயிகளுக்கான யூரியா போன்றவற்றுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் பட்ஜெட்டில் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்படுகிறது. இதனால் மத்திய அரசுக்கு பெரும் நிதிசுமை ஏற்படுவதால் மானியத்தை படிப்படியாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மானியம் வழங்கும் முறைகளில் மாற்றம் கொண்டுவரவும் முடிவு செய்துள்ளது. சமையல் காஸ்  சிலிண்டருக்கு வழங்கும் மானியத்தை வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் சேர்க்கும் நடவடிக்கை வருகிற ஜனவரி 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது.


அதே போல் பொது வினியோக திட்டத்திலும் மத்திய அரசு பல்வேறு மாற்றங்களை செய்ய உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வருகிற பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அறிவிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஏழைகளுக்கு பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மின் இணைப்பு உள்ள குடும்பங்களுக்கு மானிய விலை மண்ணெண்ணெய் வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில் மின்சார வசதி இல்லாத வீடுகளுக்கு மானியத்துடன் சோலார் மின் வசதி திட்டம் செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூக நலத்திட்டங்களில் ஏற்படும் செலவை குறைத்து வருவாயை அதிகரிக்கும் நோக்கிலும் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசித்து வருகிறது.

கடந்த 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிபரத்தின்படி பெரும்பாலான வீடுகளில் மண்ணெண்ண்ணை விளக்கேற்றும் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. மேலும் நகர்ப்புறங்களிலும், சிறிய நகரங்களில் சமையல் செய்ய காஸ் சிலிண்டர்களே பயன்படுத்தப்பட்டு வருகிறது. மண்ணெண்ணை பயன்பாடு முற்றிலுமாக குறைந்து தற்போது காஸ் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து வருவதும் மண்ணெண்ணை மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. 2 சதவீதத்துக்கும் குறைவான குடும்பங்களே சமையல் செய்ய மண்ணெண்ணெய் பயன்படுத்தி வருகின்றன. கிராமங்களில் உள்ளவர்கள் விறகு போன்றவற்றையே சமையல் செய்ய பயன்படுத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் மானிய மண்ணெண்ணெய் திட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது

அடுத்த பட்ஜெட்டில் மண்ணெண்ணை மானியம் ரூ.5,852,14 கோடியாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  பொது வினியோகத்திட்டத்தின் மூலமாக மண்ணெண்ணை வினியோகமும் நீண்ட நாட்களுக்கு நீடித்திருக்கவும் வாய்ப்பில்லை. மண்ணெண்ணை, பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் உள்ளிட்ட மொத்த பெட்ரோலிய பொருட்களுக்கான மானியம் தற்போதைய பட்ஜெட்டில் ரூ.63,427 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2011 சென்சஸ் அடிப்படையில் ஏற்கனவே பொது வினியோக திட்டத்தில் இருந்து முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு குறைத்து வந்தது. தற்போது அதனை பாஜ அரசும் மேற்கொண்டு முன்னெடுத்து செல்ல தீர்மானித்துள்ளது.

தற்போது பொது வினியோகத்திட்டத்தின் மூலமாக மண்ணெண்ணை வினியோகம் நிறுத்தப்படும் பட்சத்தில் டீசல் உள்ளிட்ட பொருட்களில் மண்ணெண்ணை கலப்படும் முற்றிலுமாக தடுக்கப்படும் என்று மத்திய அரசு கருதுகிறது.கடந்த 2002ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியின் போது பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மண்ணெண்ணை மற்றும் சமையல் சிலிண்டர் ஆகியவற்றிற்கான மானியத்துக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கும் முறை கொண்டு வரப்பட்டது. அது முதல் மத்திய அரசு எவ்வளவு மண்ணெண்ணை வழங்குகிறதோ அவ்வளவுக்கு மட்டுமே மானியம் ஒதுக்கப்பட்டு வந்தது. விற்பனை விலைக்கும், பொது வினியோக திட்டத்தில் கொடுக்கப்படும் விலை வித்தியாசம் மானியமாக கணக்கிடப்பட்டு மாநில அரசுக்கு வழங்கப்பட்டு வருகிறது.வரும் பிப்ரவரி மாதம் பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அப்போது பொது வினியோக திட்டத்தின் மூலமாக மானிய விலையில் வழங்கப்பட்டு மண்ணெண்ணையை முற்றிலுமாக ரத்து செய்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக