திங்கள், 22 டிசம்பர், 2014

சென்னை ஆசிரியரிடம் பட்டபகலில் கத்தியை காட்டி வழிப்பறி !

Daylight robbery in chennai street . A man threaten a teacher with knife ,she gave all her jewels and money to save herself.  சென்னையில் பெண்களிடம் செயின் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
தனியாக செல்லும் பெண்களை பின் தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் செல்லும் கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டியும் மிகவும் துணிச்சலுடன் செயின் பறிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னையில் துரைப்பாக்கம் பகுதியில் மொபட்டில் சென்ற ஆசிரியை ஒருவரை டிப்–டாப் ஆசாமி ஒருவன், கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறித்துச் செல்கிறான். அந்த காட்சிகளை தனது வீட்டு மாடியில் இருந்தபடியே கல்லூரி மாணவி ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளார்.
அந்த காட்சிகளின் விவரம் வருமாறு:–
சென்னை துரைப்பாக்கம் ஒக்கியம் பேட்டை 10–வது தெருவில் வசித்து வருபவர் வேலம் (39) அதே பகுதியில் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வரும் இவர் தனது மொபட்டில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்.

அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் தங்களது மோட்டார் சைக்கிளை கொண்டு அவரது மொபட்டில் மோதுகிறார்கள். இதில் நிலை குலைந்து ஆசிரியை வேலம் கீழே விழுகிறார்.
இதையடுத்து மோட்டார்சைக்கிளில் இருந்து 6 அடி உயர வாலிபர் ஒருவர் பெரிய கத்தியுடன் கீழே இறங்குகிறார். படித்த வாலிபர் போன்ற தோற்றத்தில் இருக்கும் அவர், கத்தியை காட்டி மிரட்டி அணிந்திருக்கும் நகைளை கேட்கிறார். அப்பெண் முதலில் கொடுக்க மறுக்கிறார்.
இதனால் அவரது உடலில் கை வைத்து தள்ளி ஓரமாக செல்லுமாறு சைகை காட்டுகிறார். இதனால் பயந்து போன வேலம் தான் அணிந்திருக்கும் நகைகளை பதட்டத்துடன் உடல் நடுங்கியபடியே ஒவ்வொன்றாக கழற்றி கொடுக்கிறார்.
இதனை வாங்கிக் கொண்டு ஹாயாக நடந்து செல்லும் கொள்ளையன், சிறிது தூரம் சென்றதும், மொபட்டில் இருந்து ஒரு பையை எடுக்கிறான். அப்போது ஆசிரியை வேலம் கையெடுத்து கும்பிட்டபடியே ஏதோ சொல்கிறார். இதன் பின்னர் அந்த பையை திருப்பிக் கொடுக்கும் கொள்ளையன், தயாராக மோட்டார் சைக்கிளில் காத்திருக்கும் தனது கூட்டாளியுடன் அங்கிருந்து தப்பிச் சென்று விடுகிறான்.
இதையடுத்து ஆசிரியை வேலம், கீழே கிடக்கும் தனது மோட்டார்சைக்கிளை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு தள்ளிக் கொண்டே தனது வீட்டுக்கு செல்கிறார்.
அவருக்கு தெரிந்த சிறுவன் ஒருவன் வேகமாக ஓடி வந்து வேலத்திடம் இருந்து மொபட்டை வாங்குகிறான்.
இந்த காட்சிகள் அனைத்தையுமே செல்போன் வீடியோவில் பதிவு செய்திருக்கும் கல்லூரி மாணவி அதனை துரைப்பாக்கம் போலீசில் ஒப்படைத்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆசிரியை வேலமும் இதுபற்றி போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் 14 பவுன் நகைகளை கொள்ளையன் பறித்துச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியை வேலத்தை வழியில் மடக்கி கத்திமுனையில் செயினை பறிக்கும் வீடியோ காட்சி சுமார் 2½ நிமிடம் ஓடுகிறது.
இத்துணிகர கொள்ளை சம்பவம் நடந்தபோது அந்த வழியாக சைக்கிளில் ஒருவர் செல்கிறார். அவர் எதைப்பற்றியும் கவலைப்படாமலேயே கடந்து செல்கிறார்.
பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் போதே கத்திமுனையில் கொள்ளையன் ஒருவன் செயினை பறிக்கும் இந்த வீடியோ காட்சி வாட்ஸ் அப்பில் வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோ காட்சியை வைத்து கொள்ளையனை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். வீடியோவில் இருக்கும் கொள்ளையன் பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சென்னையில் இது போன்று தொடரும் செயின் பறிப்பு சம்வங்களை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக