திங்கள், 15 டிசம்பர், 2014

முதலாளிகளின் சொத்து மதிப்பு ஆறு மாதங்களுக்குள் வானை எட்டியது மோடியின் சாதனை

மோடி - ஜேட்லிமானிய வெட்டின் மூலம் மட்டுமல்ல, இதுவரை கேள்வியேபட்டிராத வழிகளின் மூலம் மக்களைக் கொள்ளையடிக்கத் துணிந்துள்ள ஒரு கிரிமினல் அரசை நாம் எதிர்கொண்டுள்ளோம்
ரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்று ஆறு மாதங்கள் முடிவதற்குள்ளாகவே இந்தியாவைச் சேர்ந்த மிகப்பெரும் தரகு முதலாளிகளின் சொத்து மதிப்பு அதிகரித்திருப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.  கடந்த ஆறு மாதங்களில் இந்தியப் பொருளாதாரம் ஒரு அங்குலம்கூட முன்னே நகர்ந்திராதபோது, கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்து மதிப்பு  எகிறிப் பாய்ந்தது எப்படி? ஊரான் சொத்தைக் கொள்ளையடித்து திடீர்ப் பணக்காரர்கள் உருவாவது போல, நாட்டின் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதன் வழியாகத்தான் அவர்களின் சொத்து மதிப்பு எகிறியிருக்கிறது.  இக்கொள்ளைக்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கும் புரோக்கர் வேலையைத்தான் மோடி அரசு செய்து வருகிறது.
< காப்பீடு துறையில் 49 சதவீதம் வரை அந்நிய முதலீட்டை அனுமதிப்பதற்கு ஏற்பச் சட்டத் திருத்தம் கொண்டுவருவது; முந்தைய காங்கிரசு கூட்டணி அரசு கொண்டுவந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைத் திருத்துவது; நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பது; பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்கை 52 சதவீதம் அளவிற்குக் குறைப்பது, பல்லாயிரம் கோடி சொத்துக்களைக் கொண்டுள்ள ரயில்வே துறையில் தனியார்மயத்தைப் புகுத்துவது – என அவரது அரசு அறிவித்துவரும் சீர்திருத்தங்கள் இந்த புரோக்கர் வேலைக்குச் சான்று பகர்கின்றன. நரேந்திர மோடி தனியார்மயத்தைத் தீவிரப்படுத்தும் வேகத்தைப் பார்த்தால், அவரது ஆட்சிக் காலம் முடிவதற்குள் இந்த நாடே கார்ப்பரேட் முதலாளிகளின் தனிப்பட்ட சொத்தாகிவிடும்.
இத்தனியார்மய நடவடிக்கைகளை  நாட்டின், மக்களின் நலனை முன்னிறுத்தித்தான் செய்வதாக வாய்பந்தல் போட்டு வருகிறார், மோடி.  கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் கோரியபடி தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்த முயலும் அவர், அதற்கு உழைப்பே வெல்லும் எனப் பெயரிடுகிறார். தொழிலாளர்களின் வேலையைப் பாதுகாப்பதற்காகவே நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கப் போவதாக அறிவிக்கிறார், அவரது நிதியமைச்சர் அருண் ஜேட்லி. இந்த அறிவிப்பையும் இந்தியாவைச் சேர்ந்த தரகு முதலாளிகளின் சங்கங்கள் இணைந்து நடத்திய இந்தியப் பொருளாதார மாநாட்டில் வெளியிடுகிறார், அவர். அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற கவர்ச்சித் திட்டத்தைத் தொடங்கிவைத்தபொழுது, இது பொருளாதாரத் தீண்டாமையை ஒழிப்பதற்கான முயற்சி என்றார், மோடி. ஆனால், இத்திட்டத்தின் பின்னே சமையல் எரிவாயு மானியத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும் சீர்திருத்தம் மறைந்திருந்தது இப்பொழுது அம்பலமாகியிருக்கிறது.
தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
மோடி அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தொழிலாளர் நலச் சட்டத் திருத்தத்தை எதிர்த்துப் பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து டெல்லியில் நடத்திய ஆர்ப்பாட்டம்.
பாசிஸ்டுகள் எப்பொழுதுமே  மக்களை மயக்கும் கவர்ச்சி முழக்கங்களின் மூலம்தான் தமது நோக்கத்தை ஈடேற்றிக் கொள்கிறார்கள்.  இட்லர்கூட தேசிய சொசலிசம் என்ற  முழக்கத்தைத்தான் மக்கள் முன் வைத்தான் என்பதை நாம் இங்கு நினைவுகூர்வது அவசியமானது.  மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தின்பொழுது நல்ல காலம் பொறக்கப் போகுது என முழங்கியதன் பின்னே முழுக்க முழுக்க கார்ப்பரேட் முதலாளிகளின் நல்லகாலம்தான் இருந்தது, இருக்கிறது என்பதைத்தான் அவரது இந்த ஆறு மாத கால ஆட்சி நிரூபித்திருக்கிறது.
பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எதிரான தடைகளை உடைத்தெறிய வேண்டும் என ஜி-20 நாடுகள் மாநாட்டில் சூளுரைத்திருக்கிறார், மோடி.  நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவருவதற்கு எதிராக விவசாயிகள் போராடத் துணிந்தால், தொழிலாளர் நலச் சட்டத் திருத்தத்துக்கு எதிராகத் தொழிலாளர்கள் போராடத் துணிந்தால், மானிய வெட்டுகளுக்கு எதிராகப் பொதுமக்கள் போராடத் துணிந்தால், அப்போராட்டங்களை ஈவிரக்கமின்றி ஒடுக்க வேண்டும் என்பதைத் தாண்டி இதற்கு வேறு பொருள் கொள்ளமுடியாது. காங்கிரசு அணிந்துகொண்டிருந்த மனித முகத்துடன்கூடிய பொருளாதார சீர்திருத்தம் என்ற முகமூடியெல்லாம் மோடிக்குத் தேவைப்படவேயில்லை.
முந்தைய காங்கிரசு கூட்டணி அரசில் சில சில்லறை சலுகைகளை விவசாயிகளுக்கு அளிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருந்த புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை, கார்ப்பரேட் முதலாளிகளின் விருப்பங்களுக்கு ஏற்ப திருத்துவதற்கு மோடி அரசு முடிவு செய்திருப்பதும்; எதிர்வரும் ஜனவரி 1 முதல் சமையல் எரிவாயு உருளைக்கு வழங்கப்படும் மானியத்தை நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை நாடெங்கும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருப்பதும் இந்திய மக்களுக்கு மிகக் கொடூரமான கெட்ட காலம் நெருங்கிவிட்டதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன.
காப்பீடு ஊழியர்கள் போராட்டம்
காப்பீடு துறையில் அந்நிய முதலீட்டை 49% வரை அதிகரிக்க அனுமதிக்கும் சட்டத் திருத்தத்தை எதிர்த்து கொல்கத்தா நகரில் காப்பீடு நிறுவன ஊழியர்கள் நடத்திய சாத்வீகப் போராட்டம் : மெழுகுவர்த்திகளால் மோடியைச் சுட்டுவிட முடியாது.
மானியப் பணத்தைப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் போடுவது என்ற நடைமுறை, மானியத்தை வெட்டுவதற்கான தந்திரமான திட்டமாகும். ஏனென்றால், இத்திட்டப்படி ஒவ்வொரு குடும்பமும் சமையல் எரிவாயு உருளையை  சந்தை விலையில் – கிட்டதட்ட 900 ரூபாய் கொடுத்து வாங்கிய பிறகுதான் மானியம் வங்கிக் கணக்கில் போடப்படும். மாதச் சம்பளக்காரர்களே மாதக் கடைசியில் தடுமாறி நிற்கும்பொழுது, தினக்கூலி தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்தத் திட்டம் எரிவாயு உருளையை இனி எட்டாக் கனியாக்கிவிடும்.  சமையல் எரிவாயுவிற்கு அடுத்து, உணவு மானியத்திலும் 30,000 கோடி ரூபாய் அளவிற்கு மறைமுகமாக வெட்டிவிடுவதற்குத் தயாராகி வருகிறது, மோடி அரசு.
மானிய வெட்டின் மூலம் மட்டுமல்ல, இதுவரை கேள்வியேபட்டிராத வழிகளின் மூலம் மக்களைக் கொள்ளையடிக்கத் துணிந்துள்ள ஒரு கிரிமினல் அரசை நாம் எதிர்கொண்டுள்ளோம் என்பதை பிரீமியம் ரயிலும், டீசல், பெட்ரோல் மீதான கலால் வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டிருப்பதும் உணர்த்துகின்றன. பிரீமியம் ரயில் கட்டணம், அந்த ரயில் புறப்படும் தேதியும் நேரமும் நெருங்க நெருங்க பல மடங்காக ஏறிக்கொண்டே போகும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
தனியார் ரயில் பயண முகவர்கள் பயணிகளின் அவசரத்தையும், டிக்கெட்டுக்கான டிமாண்டையும் பொருத்து சட்டவிரோதமாக அடித்துவந்த கொள்ளையை, மோடி அரசு பிரீமியம் ரயில் மூலம் சட்டபூர்வமாக ரயில்வே துறையே கொள்ளையடிப்பதற்கான ஏற்பாடாக மாற்றிவிட்டது. மேலும், முன்பதிவு பயணச் சீட்டு, உடனடி பயணச் சீட்டு வழங்கும் சேவைகளை முழுக்கமுழுக்கத் தனியாரிடம் ஒப்படைக்கும் ஏற்பாடு மூலம் கள்ளச் சந்தைக்கான புதிய வாய்ப்புகளைச் சட்டபூர்வமாகவே திறந்துவிட்டுள்ளது.
சமீபத்தில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சரிந்த பிறகும், அதற்கு ஏற்ப பெட்ரோல், டீசலின் விற்பனை விலை குறையவில்லை. இதற்குக் காரணம், கச்சா எண்ணெயின் விலை சரிந்த நேரம் பார்த்து, பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் கலால் வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டதுதான். இதுவொரு தந்திரமான முடிவு. இந்த உயர்வின் மூலம் இரட்டை இலாபத்தை மோடி அரசு அடைந்திருக்கிறது. கச்சா எண்ணெயின் விலை சரிந்தாலும், தனது வரி வருவாய் சரியாமல் இருப்பதற்கு ஏற்ப இந்த வரி உயர்வை அமலாக்கியது ஒன்று.  மற்றொன்று, எதிர்காலத்தில் கச்சா எண்ணெயின் விலை உயரும்பொழுது கூடுதலாக வரி வருவாய் கிடைப்பதையும் உத்தரவாதப்படுத்தியிருக்கிறது.
05-thondaiman
ஏகாதிபத்திய முதலீட்டாளர்களின் முழுநம்பிக்கையைப் பெறுவதுதான் இந்த அரசின் இலட்சியமாக இருக்கிறது. அதற்கேற்றபடி வங்கித் துறை, காப்பீடு துறை, ரயில்வே துறை, பாதுகாப்புத் துறை என கேந்திரமான துறைகள் அனைத்திலும் தனியார்மயம் கிடுகிடுவென புகுத்தப்படுகிறது. காப்பீடு துறையில் 49 சதவீதம் அளவிற்கு அந்நிய நேரடி முதலீடை அனுமதிக்கும் முடிவை முந்தைய காங்கிரசு அரசே எடுத்திருந்தது.  அதற்குப் பின்வந்த மோடியோ அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளர்களும் காப்பீடு துறையில் முதலீடு செய்வதற்கு ஏற்ப அத்துறையைச் சூதாடிகளுக்குத் திறந்து விடுகிறார்.
தனியார்மயம் என்பதே பொதுச் சொத்துக்களை ஏகாதிபத்திய முதலாளிகளும், உள்ளூர் தரகு முதலாளிகளும் கொள்ளையடிப்பதற்கான ஏற்பாடுதான் – அச்சொத்து அலைக்கற்றையாகவோ, நிலக்கரி வயலாகவோ, பொதுத்துறை நிறுவனங்களாகவோ இருக்கலாம்.  மைய – மாநில அரசுகள், அதிகார வர்க்கம், அரசியல்வாதிகள் ஆகியோர் இக்கொள்ளைக்கு ஏற்பாடு செய்து கொடுக்கும் மாமா வேலையைத்தான் கௌரவமாகவும் சட்டபூர்வமாகவும் செய்து கொடுக்கின்றன. அந்த வகையில் நரேந்திர மோடி கார்ப்பரேட் முதலாளிகளின், முதலீட்டாளர்களின் மனம் கவர்ந்த மாமாவாக இருக்கிறார். தனது முதல் பட்ஜெட்டிலேயே நல்ல இலாபத்தில் இயங்கிவரும் ஓ.என்.ஜி.சி., கோல் இந்தியா உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்குகளைத் தனியாரிடம் விற்கும் முடிவை அறிவித்திருந்த மோடி அரசு, இப்பொழுது நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் தாரைவார்க்கும் முடிவை தடாலடியாக எடுத்திருக்கிறது.
கடந்த இருபது ஆண்டுகளில் மாடர்ன் பிரட், வீ.எஸ்.என்.எல்., பால்கோ எனப் பல பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டுள்ளன. அந்நிறுவனங்கள் தனியார் வசமான பின்னே வேலையிழப்புதான் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினையாக உருவெடுத்தது. சென்னை-கிண்டியில் அமைந்திருந்த இந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார்மயமாக்கப்பட்டது.  இப்பொழுது அந்நிறுவனம் இருந்த இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு இருக்கிறது. அங்கு வேலை பார்த்துவந்த தொழிலாளர்களும், ஊழியர்களும் கறிவேப்பிலையைப் போல தூக்கி எறியப்பட்டார்கள் என்பதுதான் வரலாறு. நமக்குப் பொதுத்துறை நிறுவனமாகத் தெரிவது தரகு முதலாளிகளின் கண்களுக்கு ரியல் எஸ்டேட்டாகத் தெரிகிறது என்பதுதான் உண்மை. ஆனால், நிதியமைச்சர் அருண் ஜேட்லி, “நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் வேலையைப் பாதுகாப்பதற்காகவே அவற்றைத் தனியார்மயமாக்க முடிவு செய்திருப்பதாக”க் கூசாமல் புளுகி வருகிறார்.
தொழிற்சாலைகளைக் கண்காணித்து முறைப்படுத்தும் சட்டங்கள் திருத்தப்படுகின்றன. வரி ஏய்ப்பில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது விதிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட பின்தேதியிட்டு வரி விதிக்கும் சட்ட முன்வடிவு கைவிடப்படுகிறது. இதுவரை இருந்து வந்த வணிக வரிச் சட்டங்கள் கைவிடப்பட்டு, அதனிடத்தில் பொருள் மற்றும் சேவை வரி என்ற புதிய சட்டம் கொண்டுவரப்படுகிறது.  தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தும் முயற்சி தீவிரப்படுத்தப்படுகிறது. இத்திருத்தங்கள் மூலம் முதலீட்டாளர்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த “இன்ஸ்பெக்டர் ராஜ்”-க்கும், சிவப்புநாடா முறைக்கும் முடிவு கட்டுவதாக அறிவிக்கிறது, மோடி அரசு. கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் மீது அரசிற்கு இருந்துவந்த பெயரளவிலான கட்டுப்பாடுகளும், கண்காணிக்கும் உரிமையும் கைவிடப்படும் அதேவேளையில், மக்கள் மீதான கண்காணிப்போ ஆதார் அட்டை உள்ளிட்டுப் பல்வேறு வழிகளில் தீவிரமடைகிறது.
“எட்டப்பனை நல்லவனாக்கிவிட்டார் எனது அருமை நண்பர் தொண்டைமான்” – இது வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் வந்துள்ள புகழ்பெற்ற வசனம்.  மோடியின் ஆட்சி அந்த வசனத்தைத்தான் நினைவுபடுத்துகிறது. எட்டப்பனிடத்தில் மன்மோகன்சிங், தொண்டைமான் இடத்தில் நரேந்திர மோடி என்பதுதான் வேறுபாடு.
- அழகு வினவு.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக