திங்கள், 29 டிசம்பர், 2014

AirAsia காணாமல்போன ஏர்ஏஷிய விமானம் கடலுக்கடியில்? BBC News

காணாமல்போன இந்தோனேஷியாவின் ஏர்ஏஷிய விமானம் (எண்:QZ8501) கடலின் ஆழத்தில் இருக்கக்கூடும் என்று இந்த விமானத்தை தேடுவதற்கான இந்தோனேஷிய தேடுதல் மற்றும் மீட்புக்குழுவின் தலைவர் தெரிவித்திருக்கிறார். இந்த விமானம் காணாமல் போனதற்கு முன்பாக கடைசியாக அந்த விமானத்திலிருந்து கிடைக்கப்பெற்ற ஒருங்கிணைப்புத் தகவல்களின் அடிப்படையிலேயே தாம் இந்த அனுமானத்திற்கு வந்திருப்பதாக பாம்பாங் சொய்லிஸ்டோ தெரிவித்தார்.
162 பயணிகளுடன் இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த இந்த ஏர் பஸ் A320-200 ரக விமானம் காணாமல் போய் ஒரு நாள் முடிந்துவிட்டநிலையில் அதனைத்தேடும் பணிகள் தொடர்கின்றன. ஆனால் அது எங்கே இருக்கிறது என்பதற்கான எந்த தடயமும் இதுவரை கிடைக்கவில்லை.

இந்த விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்கள் நிலைகுலைந்த நிலையில் இந்தோனேஷியாவின் சுரபயா விமானநிலையத்தில் குழுமியிருக்கின்றனர். இந்த விமானத்தோடு காணாமல் போயிருக்கும் தமது உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் குறித்த தகவல்களுக்காக அழ்ந்த கவலையோடு அவர்கள் காத்திருக்கின்றனர்.
கடைசியாக மோசமான வானிலையை காரணம்காட்டி பாதை மாற்றுவதற்காக இந்த விமான ஓட்டி வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் இந்த விமானம் அதன் கண்காணிப்பு ரேடார்களின் பார்வையில் இருந்து மறைவதற்கு முன்னதாக அதனிடமிருந்து எந்தவிதமான அபாய அறிவிப்போ, அவசர உதவிக்கான கோரிக்கையோ வரவில்லை.
இந்த பின்னணியில் தமக்கு கொடுக்கப்பட்ட விமானத்தின் ஒருங்கிணைப்புத் தகவல்களை சீராய்வு செய்து பார்த்தபோது இந்த விமானம் தற்போது கடலுக்கு அடியில் இருக்கலாம் என்கிற அனுமானத்திற்கே தாங்கள் வந்திருப்பதாக இந்த விமானத்தை தேடுவதற்கான இந்தோனேஷிய தேடுதல் மற்றும் மீட்புக்குழுவின் தலைவர் பாம்பாங் சொய்லிஸ்டோ ஜாகர்த்தாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.   bbc.co.uk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக