வியாழன், 27 நவம்பர், 2014

Kushboo: கலைஞர் மிகச் சிறந்த தலைவர். அவர் மீது எனக்கு அன்பு, மரியாதை என்றைக்கும் உண்டு!

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை எதிர்க்கும் நோக்கத்துடன் காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை என்று நடிகை குஷ்பு கூறினார்.
திமுகவில் இருந்து பிரிந்து சில மாதங்கள் அமைதியாக இருந்து வந்த குஷ்பு தற்போது காங்கிரஸில் சேர்ந்துள்ளார்.
திமுகவை எதிர்க்கும் நோக்கத்துடனே அவர் காங்கிரஸில் சேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் "தினமணி'க்கு புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:
காங்கிரஸில் இருந்து எல்லோரும் வெளியேறும் நிலையில், அந்தக் கட்சியில் நீங்கள் இணைந்தது ஏன்?

காங்கிரஸ் கட்சி மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையின் காரணமாகத்தான் அதில் சேர்ந்தேன். சாதி, மத வேறுபாடு இல்லாத, வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவைப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதை காங்கிரஸ் கட்சியால் வழங்க முடியும் என்று கருதியே காங்கிரஸில் இணைந்தேன்.
மேலும், மும்பையில் பிறந்து வளர்ந்ததால் சிறு வயதில் இருந்தே நான் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவள் என்பதே உண்மை. காங்கிரஸ் என் ரத்தத்தோடு ஊறிய ஒன்று.
காங்கிரஸ் கட்சியில் பதவியை எதிர்பார்த்து சேர்ந்தீர்களா?
நான் பதவியை எதிர்பார்க்கக் கூடியவள் இல்லை. திமுகவில் 4 ஆண்டுகளாக கடுமையாக உழைத்தேன். பதவி வேண்டும் என்றால், அந்தக் கட்சியிலேயே கேட்டுப் பெற்றிருக்க முடியும். ஆனால் பதவி கேட்டதும் இல்லை. அதை விரும்பியதும் இல்லை. எந்தப் பொறுப்பு கொடுக்க வேண்டும் காங்கிரஸூக்குத் தெரியும். அவர்கள் கொடுப்பார்கள்.
திமுகவை எதிர்க்கும் நோக்கத்துடனும், குறிப்பாக மு.க.ஸ்டாலினை எதிர்க்கும் நோக்கத்துடன்தான் காங்கிரஸில் நீங்கள் இணைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறதே? அது உண்மையா?
மு.க.ஸ்டாலினை எப்போதுமே என்னுடைய எதிரி என்று கூறியது இல்லை. அவருடன் பிரச்னை என்று கூறியதும் இல்லை. என்னுடைய ராஜிநாமா கடிதம் திமுகவின் பொருளாளராக இருந்த ஸ்டாலினுக்கும் சென்றிருக்கும். இப்போதுகூட எங்காவது ஸ்டாலினைப் பார்த்தால், அவருக்கு வணக்கம் சொல்லமாட்டேன் என்பதெல்லாம் இல்லை. அந்தப் பண்பாடு, மரியாதை என்றைக்கும் இருக்கும். சிலர் எல்லா விஷயத்துக்கும் கண், காது வைத்து உருவகப்படுத்துவர். அதற்கு நான் பொறுப்பாக முடியாது.
திமுகவின் தலைவர் கருணாநிதிதான் என்று நீங்கள் கூறியதற்கு ஸ்டாலின் ஆதரவாளர்கள் உங்கள் வீடுகளை அடித்தார்களே?
அந்தத் தாக்குதலுக்குப் பிறகும் ஒன்றரை ஆண்டுகள் திமுகவில் இருந்துள்ளேன். அதனால் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால், அப்போதே திமுகவிலிருந்து வெளிவந்து என் எதிர்ப்பைத் தெரிவிதிருக்க முடியும்.
காங்கிரஸ் - திமுக கூட்டணி:
வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவும் காங்கிரஸூம் கூட்டணி அமைத்தால் உங்கள் நிலைப்பாடு என்ன?
எனக்கு எதிர்ப்பு ஒன்று இல்லை. கூட்டணி தொடர்பாக கட்சியின் பெரியவர்கள் எடுக்க வேண்டிய முடிவு இது.
கருணாநிதியைச் சந்திப்பேன்:
காங்கிரஸ் தலைவர்கள் கருணாநிதியைச் சந்திப்பது வழக்கம். நீங்கள் கருணாநிதியிடம் வாழ்த்துப் பெறுவீர்களா?
தற்போது புது தில்லியில் உள்ளேன். சென்னைக்கு வந்தால், கண்டிப்பாக அவரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறுவேன். கருணாநிதி மிகச் சிறந்த தலைவர். அவர் மீது எனக்கு அன்பு, மரியாதை என்றைக்கும் உண்டு என்றார்.dinamani .com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக