ஞாயிறு, 23 நவம்பர், 2014

Kiss of Love போராட்ட அறிவிப்பால் கோவை Fun Mall மூடிக் கிடக்கிறது

கோவை: கோவையில் உள்ள பிரபல வணிக வளாகமான ஃபன் மாலில் முத்தப் போராட்டம் நடத்தப் போவதாக தகவல்கள் பரவியதைத் தொடர்ந்து வணிக வளாகமே இழுத்து மூடப்பட்டது. இதனால் ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமாக மால் மூடப்பட்டுக் கிடக்கிரது. கேரள மாநிலத்தில் உள்ள காபி ஷாப் ஒன்றில் சமீபத்தில் முத்தப்போட்டி நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்பினர் சம்பவ இடத்துக்குள் அதிரடியாக புகுந்தனர். முத்தப்போட்டிக்கு வந்தவர்களை சரமாரியாக தாக்கினர். இதற்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு கிளம்பியது. கலாசார சீரழிவு என்று குற்றஞ்சாட்டினர். அதே நேரத்தில் முத்தப்போட்டிக்கு இளவட்டங்களின் ஆதரவு அமோகமாக இருந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் முத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐஐடி வாசலில் காரித் துப்பும் போராட்டத்தை இந்து முன்னணி அமைப்பினர் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கோவை அவினாசி சாலையில் உள்ள ஃபன் மாலில் இன்று முத்தப் போராட்டம் நடைபெற உள்ளதாக பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலை தளங்களில் தகவல் பரவியது. இதனால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தப் போராட்டத்தை அனுமதிக்க மாட்டோம், தடுப்போம் என்று இந்து முன்னணியினர் அறிவித்தனர். இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் கூறும்போது பொது இடத்தில் முத்தமிட்டுக்கொள்வது அநாகரீகமான செயல். நம் கலாசாரத்துக்கு எதிரானது. எனவே தான் நாங்கள் முத்தப்போராட்டத்தை எதிர்க்கிறோம். முத்த போராட்டம் நடப்பதாக சமூகவலை தளங்களில் வெளியான தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. கோவையில் முத்த போராட்டம் நடத்த அனுமதிக்க கூடாது என்று போலீசில் புகார் மனு கொடுத்துள்ளோம் என்றார். இதையடுத்து உதவி கமிஷனர் பாஸ்கரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கோபி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஃபன் மாலின் செக்யூரிட்டிகளும் ரோந்து சுற்றி வருகின்றனர். இருப்பினும் முன்னெச்சரிக்கையாக மாலுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு விட்டது. இதனால் மால் மூடிக் கிடக்கிறது. போலீஸாரும் தொடர்ந்து ரோந்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த மாலில் 80-க்கும் மேற்பட்ட கடைகளும், 5 தியேட்டர்களும் உள்ளன. விடுமுறை நாளான இன்று 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இங்கு வருவார்கள். அதன் மூலம் மாலில் ரூ.1 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறும். அது இன்று முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸாரை அணுகியுள்ளனதாம் மால் நிர்வாகம்.

/tamil.oneindia.com/n

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக