சனி, 8 நவம்பர், 2014

ஹை... ஃபேஸ்புக்! சீனியர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள Facebook !

.ஆஷிகா,  படங்கள்: பா.காளிமுத்து, ர.சதானந்த்'ஃபே
ஸ்புக்... கடிவாளமற்ற இளைஞர் உலகம்’, 'முகநூல், முழு நேரத்தையும் விழுங்கிவிடும்’ என்பது போன்ற நெகட்டிவ் விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், 'இந்த ஃபேஸ்புக் எங்களுக்கு எவ்வளவு உதவிகரமாக இருக்கிறது தெரியுமா?!’ என்று சீனியர்கள் பலரும் சப்போர்ட் செய்வது... ஆச்சர்யத்தை அள்ளி வீசுகிறது! 'ஃபேஸ்புக்’குக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கின்றன... இந்த சீனியர்களின் பாஸிட்டிவ் வார்த்தைகள்!
சுப்பிரமணியன் (ஓய்வுபெற்ற சீனியர் எக்ஸிக்யூட்டிவ், ரிசர்வ் வங்கி): ''என்னோட ரிட்டயர்ட்மென்ட் வாழ்க்கையை பரபரப்பாக்கிட்டு இருக்கிறது, ஃபேஸ்புக்தான். பல நிறுவனங்களில் ஆலோசகராகவும், உறுப்பினராகவும் இருக்கும் நான், இதுவரை 35 நாடு களுக்கு பயணம் பண்ணியிருக்கேன்.
12 மொழிகள் தெரியும். ஃபேஸ்புக்ல நுழைஞ்ச பிறகு நானும் நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டிருக்கேன். பொருளாதாரம், சினிமா, அரசியல், சமூகப் பிரச்னைகள்னு புகுந்து கலக்கிடறாங்க தோழர்கள். குறுகிய வட்டத்தில், எண்ணத்தில் இருந்த என்னை, இதிலிருந்து வெளிக்கொண்டு வந்தது, ஃபேஸ்புக்தான். குக்கிராமத்தில் பிறந்த நான், அப்போ தகவல் பரிமாற்றத்துக்கு அவ்வளவு சிரமப்பட்டிருக்கேன். இப்போ ஃபேஸ்புக் மூலமா உலகமே சுருங்கினதைப் பார்க்கிறேன். செமினார்கள்ல இளைஞர்களை சந்திக்கும்போது, முகநூல் தந்த வெளிச்சத்தால அவங்களோட அலைவரிசையில் என்னாலயும் பேச முடியுது. இதுக்கு அவங்ககிட்ட நல்ல வரவேற்பும் இருக்கு!''
சின்னகொண்டா சுப்புராமய்யர் கிருஷ்ணமூர்த்தி (ஓய்வுபெற்ற வரலாற்றுப் பேராசிரியர்): ''சௌராஷ்டிர மொழி பற்றிய ஒரு புத்தகம் வெளியிட எனக்கு ஆசை. 1978ம் வருஷத்துல என்னோட பிஹெச்.டி படிப்புக்காக சௌராஷ்டிர மொழி பத்தின ஆராய்ச்சி புத்தகத்தை எழுத முயற்சி எடுத்தேன். சரியான சோர்ஸ் கிடைக்காததால கைவிட்டுட்டேன். என்னோ 76வது வயசுல முகநூல் வந்தப்போ, என் கனவு புத்தகத் துக்கான சோர்ஸ்களை தேடிப்பிடிச்சு, இதோ பிஹெச்.டி முடிச்சு, இந்த பிப்ரவரியில புத்தகத்தையும் வெளியிட்டுட்டேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு!''
பிரபா, (கணித ஆசிரியை): ''கடந்த 27 வருஷமா ஆசிரியப் பணியில் இருக்கேன். ரெண்டு வருஷத் துக்கு முன்ன முகநூலுக்குள்ள காலடி எடுத்து வெச்ச பிறகு, என்னோட ஆசிரியப் பணியிலயும் புத்துணர்வு பொங்க ஆரம்பிச்சுடுச்சு. மாணவர்களுக்கு சொல்றதுக்கான குட்டிக் கதைகள், விழிப்பு உணர்வுத் தகவல்கள், பொதுஅறிவு விஷயங்கள்னு கிளாஸ்ரூமுக்கு அள்ளிட்டுப் போற   சுவாரஸ்யங்கள்   இதுல  நிறைய கொட்டிக் கிடக்கு. இப்போ எல்லாம் என்னோட வகுப்புனாலே, ஒருவித எதிர்பார்ப்போட மாணவர்கள் காத்திருக்கிறாங்க. தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்களை மட்டுமே படிச்ச நான், இப்போ ஆங்கில நாவல்களும் படிக்க ஆரம்பிச்சிருக்கேன். எல்லாம் ஃபேஸ்புக் நண்பர்களோட பரிந்துரைதான். மற்ற பள்ளி ஆசிரியர்களுடனான தொடர்புக்கும் இது நல்ல தளமா இருக்கிறதால, வகுப்பறை, பாடங்கள், தேர்வுகள் குறித்த தகவல்களை எங்களால எளிதாகப் பரிமாறிக்கொள்ள முடியுது!''
வித்யா சுப்ரமணியன் (இல்லத்தரசி): ''என் ரெண்டு பொண்ணுங்களும் கல்யாணமாகிப் போயிட்டாங்க. அப்பப்போ எனக்கு ஏற்படுற தனிமை உணர்வை போக்கும் மருந்து, இந்த முகநூல்தான். பொண்ணுங்களோட சின்ன வயது சேட்டைகள், அவங்களை வளர்க்கறதுக்குள்ள திக்குமுக்காட வைத்த தருணங்கள்னு பழைய நினைவுகளை முகநூலில் பகிர்ந்துப்பேன். என்னோட உணர்வுகளை மத்தவங்ககிட்ட சொல்லிட்ட ஒரு சின்ன சந்தோஷம், நிறைவு கிடைக்கும். இங்க நொடிக்கு நொடி சுடச்சுட செய்திகள் கொட்டிட்டே இருக்கு. வெறும் தகவலா இல்லாம, அதோட பாஸிட்டிவ், நெகட்டிவ் பக்கங்களை வேர்ல இருந்து நுனி வரைக்கும் விளக்கிடறாங்க முகநூல் நண்பர்கள். இப்போ எல்லாம் தனியா இருக்கோம்கிற உணர்வே வர்றதில்ல!''
விமலா ரமணி (எழுத்தாளர்): ''கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், ஆன்மிகக் கதைகள், காதல் கதைகள், மொழிபெயர்ப்பு கதைகள்னு கடந்த 40 வருஷமா எழுதிட்டிருக்கேன். இப்போ முகநூல் வழியா என் வாசகர்களை எளிதா தொடர்புகொள்ள முடியுது. அவங்களோட பாராட்டுக்கள், விமர்சனங்களை நேரடியாகவே பெறமுடியுது. என் படைப்பு எந்த பத்திரிகையில் வெளிவந்திருக்குங்கிற தகவலை நான் சொல்ல, உடனே படிச்சுட்டு பின்னூட்டம் போட்டுடுவாங்க. உறவுகள், நண்பர்கள்னு எல்லாரும் வேலை நிமித்தமா பல்வேறு ஊர்கள்ல பிரிஞ்சிருந்தாலும், ஏதோ அருகில் இருப்பது போல ஒரு உணர்வு ஏற்படுது... இந்த ஃபேஸ்புக்கில் உலவும்போது!''vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக