புதன், 5 நவம்பர், 2014

பால் நாரிமன் ஜெயலலிதாவின் வழக்கில் அன்று எதிராக வாதம் இன்று ஆதரவாக வாதம்! மகனே நீதிபதி அப்பன் வழக்கறிஞர்? பழைய ஹிந்தி மசாலா படம்?

ஃபாலி நாரிமன்!
முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மீதான 48 வழக்குகளை விசாரிக்க 1997-ம் ஆண்டு தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. நீதிபதிகள் வி.ராதாகிருஷ்ணன், எஸ்.சம்பந்தம், பி.அன்பழகன் ஆகிய மூன்று பேர் தலைமையில் மூன்று நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன. விசாரணை தொடங்கியது. 98-ம் ஆண்டு மத்தியில் பி.ஜே.பி ஆட்சி அமைந்தது. அந்த அரசில் அ.தி.மு.க இடம்பெற்றது. தம்பிதுரை சட்ட அமைச்சராக ஆனார். இப்படிப்பட்ட தனி நீதிமன்றங்கள் அமைக்கும் அதிகாரம் மாநில அரசுக்குக் கிடையாது என்று சொல்லி ஓர் உத்தரவை பிறப்பித்தார். தனி நீதிமன்றங்களில் பரபரப்பாக விசாரிக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும் வழக்கமான நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டன. அப்படியானால் விசாரணைகள் காலதாமதம் ஆகும் என்பதுதான் இதன் நோக்கம். 98-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் நாள் இந்த உத்தரவு போடப்பட்டது. இந்த உத்தரவை தி.மு.க தலைமையிலான அரசு எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதாடியவர்தான் ஃபாலி நாரிமன்.

இதற்கு மத்தியில், தங்களை வழக்குகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று ஜெயலலிதா உள்ளிட்ட 14 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் போனார் ஜெயலலிதா. வழக்கு போட்டது சரிதான் என்று அன்றைய தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதாடியவர் ஃபாலி நாரிமன். அப்போது தம்பிதுரையின் உத்தரவைக் கடுமையாக விமர்சித்து ஃபாலி நாரிமன் வாதிட்டார்.
''மத்திய அரசு இப்படிப்பட்ட உத்தரவை பிறப்பிக்கும் முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒப்புதலை பெறவில்லை. எனவே, இது சட்டவிரோதமானது. மேலும், தனி நீதிமன்றத்தில் ஏற்கெனவே நிலுவையில் உள்ள ஜெயலலிதாவின் வழக்குகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது'' என்று நாரிமன் வாதிட்டார். இந்த வழக்கில்தான் நீதிபதிகள் ஜி.டி.நானாவதி, எஸ்.பி.குர்துகர் மிகக் கடுமையான தீர்ப்பினைக் கொடுத்தார்கள்.
ஒரு வழக்கறிஞர் யாருக்கு வேண்டுமானாலும் வாதாடலாம். அவருக்கு அந்த உரிமை இருக்கிறது. ஆனால், ஒரே வழக்கில் எதிரும்புதிருமாக வெவ்வேறு காலகட்டத்தில் வாதாடுவது தார்மீக நெறியா? தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பிலும் ஆஜரான நாரிமன், அந்தத் துறை தாக்கல் செய்த வழக்கில் தண்டனை பெற்றவருக்காகவும் வாதாடுவது எத்தகைய முன்னுதாரணம்? தனது மகன் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கும்போது அதே நீதிமன்றத்தில் அப்பா வாதாடுவது தார்மீக மரபும் அல்லவே.  ஃபாலி நாரிமன் காட்டியது பழுதான பாதை அல்லவா? விகடன்,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக